மேதின புரட்டுகளும் மோடி வித்தையும்.

   
           
   
பெருந்தோட்டதுறையில் பாரிய குழுக்களை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொழிலாளர்களை முதலாளிகளாக்க போவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின்  பொதுச் செயலாளரான ஆறுமுகம் தொண்டமானும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரான மனோகணேசனும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைப் பிரதித் தலைவரான  பழனி திகாம்பரமும் ஏனைய வகையறாக்களும் கடந்த மே தினத்தில் நீட்டி முழங்கியுள்ளனர். இவர்கள்தான் கடந்த ஆண்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட போது ஏட்டிக்குப் போட்டியாக சவால்விடுத்து கார்ப்ரேட் வர்க்கத்திற்கும் முதுகெலும்பற்ற அரசுக்கும் வக்காலத்து வாங்கியபடி தொழிலாளர்களை காட்டி கொடுத்தவர்களாவர். 18 மாத சம்பள நிலுவையின்றி சம்பள அதிகரிப்பின்றி ஒரு மோசடித்தனமிக்க கூட்டு(கூத்து) ஒப்பந்தத்தை திணித்தவர்களும் திணிக்க நிர்பந்தித்தவர்களும் இவர்கள்தான்.

பல்கலைக்கழக கல்வியாளர்களின் ஒரு பிரிவினரும் முன்னாள் இடதுசாரி சந்தர்ப்பவாத கூட்டுக்களும் கார்ப்ரேட் முகவர்களிடமிருந்து நிதியுதவி மானியங்கள் பெற்றிருக்கும் அரசு சாரா ஆய்வு நிறுவனங்களும் உலக வங்கியும் ,பன்னாட்டு நாணயநிதியமும் மற்றும் ஆசிய அபிவிருத்திவங்கியும் மலையகத்தமிழ் தொழிலாளர்கள் பெருந்திரளாக வாழும் தோட்டங்களை தொழிலாளர்களிடமிருந்து வேறாக்க முயன்று வருகின்றன. தொழிலாளர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள், வரலாற்று பூர்வமான தொழில்சார்; பாதுகாப்பு சுகாதார பராமரிப்பு, போசாக்கு திட்டங்கள,; குழந்தை பராமரிப்பு, கல்வி, சுகாதார வதிவிட உரிமைகளை சூறையாடவும் நிர்பந்தித்து வருகின்றன.

காணியுடமையோ, வீடமைப்போ இல்லாதபோதும் தார்மீக உரிமையின் அடிப்படையில் தமது தோட்டங்களையும் குடியிருப்புகளையும் மட்டுமின்றி தாம் சார்ந்து வாழும் காடுகள், புல் நிலங்கள், நீராதாரங்களையும் பாதுகாத்துபராமரித்துவரும் மக்களினத்தை உழைக்கும் வர்க்கத்தை ஏழு, எட்டு தலைமுறைகள் வாழ்ந்த மண்ணிலிருந்தும், வாழ்விலிருந்தும் சமூககலாச்சார கட்டுமானங்களிலிருந்தும் துடைத்தழிக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு தொழிலாளர் வர்க்கத்தையே இல்லாது ஒழிக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு சகல மலையகத் தொழிற்சங்க முதலாளிகளும் பாராளுமன்றப் பிழைப்புவாதிகளும் ஒன்றிணைந்து ஆதரவு தருவது என்பதுதான் இவ்வாண்டு மே தினத்தில் மலையகப் பாட்டாளி வர்க்கம் பெற்ற செய்தியாகும்.

தோட்ட கட்டமைப்புக்கு பதிலாக கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்துவதையும் அதனை மக்கள் உடமைகளாக மாற்றுவதையும் பற்றி சிந்திக்காமல் மாற்று உற்பத்திகள் தொழில் துறைகள் அரசவேலை வாய்ப்புகள் உயர் கல்வி வாய்ப்புகள் பற்றி சிந்திகாமல் ஒரு தேசிய இனத்தை மாபெரும் பாட்டாளிகள் வர்க்கத்தை தாங்கி பிடிப்பதற்கான அரசியல் நிறுவனங்கள் கட்டமைப்புகள் அதற்கான சட்ட ஏற்பாடுகள் என்பவற்றை நிறுவ முயற்சிக்காமல், அவற்றுக்குத் தேவையான போராட்டங்களை திசைப்படுத்தாமல் போதை பொருட்களையும் போலி அபிவிருத்தித் திட்டங்களையும் திணித்து மக்களின் இறைமையை பறிக்கும் தூர நோக்கற்ற துரோகதனமிக்கதொரு நிகழ்ச்சிநிரலுக்கு மலையக தொழிற்சங்க முதலாளிகள் தயாராகிவிட்டதை மேதின புரட்டுகள் அம்பலபடுத்தியுள்ளன. போதாக்குறைக்கு இந்திய பிரதமரின்; இலங்கை பயணமே நகைப்பிற்கிடமானதாக நோக்கப்படும் நிலையில் மலையகத்தில் இந்திய காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்ட அரைகுறையான கிளங்கன் வைத்தியசாலையை திறக்கும் நிகழ்வை காட்டி மோடி வித்தை காட்டுவதில் மலையகத்தின் கட்சிகளிடையே வெட்கக்கேடான போட்டி இடம்பெறுவதை காண முடிகின்றது.

 
மோடி வருகைக்காக இரவிரவாக போடப்பட்ட வீதி மிக குறுக்கலானதும் ஆபத்தானதுமான வளைவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளதாக்கைக் கொண்டுள்ளது. அது வடிகால்கள் பாதுகாப்பு தடுப்புகள் எச்சரிக்கை சமிஞ்ஞைகள், விளக்குகள், மக்கள், மாணவர்கள் நடமாட பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி  எதிர்வரும் காலத்தில் ஒருகொலைக்களமாகவே விதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. மோடியால்  திறக்கப்பட்ட  வைத்தியசாலையில் போதிய வைத்தியர்களோ வைத்திய நிபுணர்களோ மருத்துவ கருவிகளோ இல்லை என்பதையும் மத்திய மாகாணசபை அவ்வைத்தியசாலையை பராமரிக்க தம்மிடம் பணம் இல்லை என பிரேரணையை நிறைவேற்றியுள்ளமையும் பெரும்பாலான தருணங்களில் சிறுசிறு நோய்களுக்கு கூட அது ஒரு நிலை மாற்று மையமாகவே செயற்படுகின்றது என்பதையும் மலையக அரசியல்வாதிகள் அறிவார்களா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். 

மலையகம் ஒரு தேசியமாக தம்மை அடையாளம் கொண்ட தனித்துவமான சமூகமாக மேலெழுவதை தடுக்கும் சதியின் ஒரு பாகமாக பேரினவாத அரசகட்டமைப்புகள் கார்ப்ரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி மலையக தொழிற்சங்க தலைமைகளும் ஒன்றிணைந்து நிற்பதும் அவமானத்துக்குரியது. அவற்றுக்கு எதிராக செயற்படவல்லவர்களை நெருக்கும் புலனாய்வுத்துறை குறிப்பாக தமிழ் புலனாய்வாளர் வரலாற்றில் பிழையான பக்கத்தில் நின்றவர்கள் என்ற தீர்ப்பிற்கு ஆளாக்கப்படுவார்கள்.

 மாரீசன்-
நிமிர்வு வைகாசி 2017 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.