மறந்து விடமாட்டோம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி முன்னெடுக்க வேண்டியவற்றைத் திட்டமிட வேண்டிய கட்டத்தில் உள்ளது.
மனிதாபிமானமற்ற கொடிய யுத்தம் நடந்து 8 ஆண்டுகள் முடிந்த பின்பும் கூட முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை கூட்டாக அனுட்டிக்க முடியவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னால் கூட ஒரு தேசமாக, ஒரே இனமாக சிந்திக்க கூட முடியவில்லை. அனைத்து அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அல்லது அமைப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு நினைவாலயத்தை உருவாக்க முடியவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் காயங்களை கூட குணமாக்க முடியவில்லை. உறவுகளை இழந்தவர்கள் மட்டும் இதுவரை அனுட்டித்து வந்த முள்ளிவாய்க்கால் தினத்தை எப்போது நாங்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டாக அனுட்டிக்கப் போகிறோம்?
அன்றைய நாளில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒட்டுமொத்த தமிழர் அரசியல் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது சாலச் சிறந்ததாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் எல்லோரும் உங்களுடன் தான் இருக்கின்றோம் என ஆத்ம ரீதியில் சொல்லும் உளவுரனுக்கு ஈடிணையாக எதுவும் இல்லை.
நடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூட நாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. தீபம் ஏற்றுதல், மலரஞ்சலி, உணர்ச்சி உரைகளையும் தாண்டி அந்த நாளில் என்ன செய்யலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இனப்படுகொலை நடந்த வேறு வேறு நாடுகளில் கூட்டாக எவ்வாறு இதனை எதிர்கொள்கிறார்கள் என்பதனையும் கற்றுக் கொண்டு எமது தமிழர் தாயகத்துக்கு ஏற்ற மாதிரியான நினைவுகூரல்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
உளவியல் நிபுணரான வைத்தியகலாநிதி சிவதாஸ் கருத்து தெரிவிக்கையில்,
உளவியல் தாக்கங்களுக்கு சரியான சிகிச்சையில்லாத இந்த நிலை இப்படியே நீடித்தால் உரிமை இழப்புடன், உற்பத்தியாக்கமும் இல்லாத சமூகமாக எம் இனம் மாறிவிடும். இதனையும் தாண்டி விழுமியங்களை தொலைத்த வன்முறைச் சமூகமாக எதிர்காலச் சந்ததி உருவாகிவிடும். இதனைக் குணமாக்குகிற ஆரோக்கியமான வெளி அவசியமானது. உறவுகளை இழந்த மக்களோ வாழ்வாதாரங்களையும் இழந்து அகதிகளாகி உளவியல் நெருக்கடிகளிலும் சிக்கி வறுமையில் வாடுகின்றனர் என்றார்.
தமிழ் சிவில் சமூக அமையத்தை சேர்ந்த வைத்தியகலாநிதி குமாரவேல் கருத்து தெரிவிக்கையில்,
பேரவலத்தின் நினைவுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் அனுட்டிப்பதனை விட ஒரே இடத்தில் சரியாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒரே அமைப்பால் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுதல் அவசியமானதாகும். அந்த நாளானது இழப்புக்களை எண்ணி கவலைப்படும் நாளாக அல்லாமல் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் தீர்க்கமான உறுதிமொழி எடுக்கும் நாளாகவும் அமைய வேண்டும். மாவீரர் நாளுக்கு எப்படி குறிப்பிட்ட நாள், நேரம் என்று உள்ளது போல் இதனையும் சரியாக ஒழுங்கமைத்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான பொதுவான நாளாக இதனை மாற்ற வேண்டும். என்றார்.
போரிற்கு கூட்டாக முகம் கொடுத்த தமிழ்ச் சமூகம் இன்று போராட்டங்களை கூட தனித்து தனித்து நடாத்திக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை இலட்சக் கணக்கில் திரண்டு அனுட்டிக்க வேண்டாமா? போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற மக்களை நிராகரிக்கின்ற, அவமதிக்கின்ற போக்கும் இன்று எம் சமூகத்தில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் பயணத்தில் போராட யார் முன்வருவர்?
துருவன்-
நிமிர்வு வைகாசி 2017 இதழ்
Post a Comment