அலைகடல் நடுவே உழலும் மீனவர்களின் நிலை அன்றும் இன்றும்




“கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ”
என்று படகோட்டி படத்தில் மீனவர்களின் துயர வரிகளை அழகாக எழுதியிருப்பார் வாலி.

அந்த வகையில் அன்றும் இன்றும் மிகுந்த வலியோடு தான் மீனவர்களின் ஓவ்வோர் நாளும் நகர்கிறது. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சியின்   கடற்கரையோரமாக கடல் தொழிலையே சீவனோபாயமாக நம்பி வாழுகின்ற ஏறக்குறைய முப்பது கிராமங்கள் இருக்கின்றன. கடல் வளங்களை அதிலிருந்து வருகின்ற வருமானங்களை அடிப்படையாக வைத்து வாழ்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. இதன் எல்லை தொண்டைமனாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான பகுதியாக இருக்கின்றது.

    அதில் உள்ள முக்கியத்துவம் என்னவெனில் வடமராட்சியின் வடக்கே உள்ள கடல் பகுதியில்தான் இலங்கையின் முக்கிய மீன் பிடித்தளமான கண்டமேடை ஒன்று அமைந்துள்ளமை யாவரும் அறிந்ததே. அதன் பெயர் பீற்றூபாங். அங்கு அறக்குளா, கட்டா, பாறை கெலவல்லா, சூரை, வரிசூரை, விளை, கலவாய் மற்றும் சுறா போன்ற உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணி உழைக்கக் கூடியதுமான மீன் வகைகள் உள்ளன.

பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு முன்னைய காலங்களில் எமது சமூகத்தினர் மீன்பிடித்த காலத்தில் கண்ட மேடையில் உற்பத்தியாகி வருகின்ற மீன்கள் கரையை நோக்கி வந்து போகும் போது அதனை பிடிக்கக்கூடியதாக இருந்தது. பின்னர் அது மாறி மீன் இருக்கின்ற இடத்திற்கு தேடிச் சென்று பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது கிட்டத்தட்ட அறுபதுகளில் இருக்கும். அந்த காலங்களில் தான் நைலோன் வலைகளும் பெரிய இயந்திரப்படகுகளும் (28அடி)
அறிமுகப்படுத்தப்பட்டன. இவை யப்பான், கனடா போன்ற நாடுகளில் இருந்து
இறக்குமதி செய்து மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.

அந்தக் காலத்தில் பணபலம் இல்லாத காரணத்தினாலும் பரஸ்பரம் ஒன்றுபட்டு கூட்டாக வாழ்ந்த காரணத்தினாலும் சிலர் குழுக்களாக சேர்ந்து இந்தவகையான தொழில் உபகரணங்களை கொள்வனவு செய்து பாரம்பரிய தொழில் முறையினின்றும் மாறி நவீனமயமாக்கப்பட்ட (இயந்திரமயம்) தொழில் முறைக்கு மாறியுள்ளனர். (இதனை சங்க வள்ளம் என்று கூறுவர்). இவர்கள் வளர்ச்சியடைந்து பணபலம் வளர தனித்தனியாக தொழில் செய்ய முற்பட்டனர். இதற்கு அரசும் மானியங்கள்; கொடுத்து ஊக்குவித்தது. தொழிலை வளர்த்து கடல் தொழிலாளர்களை வளப்படுத்தியது.

 இதற்கிடையில் 1964ம் ஆண்டு சூறாவளி எனும் புயல்காற்று வீசி நம்மவர் பலரை (குடும்ப தலைவர்கள்) காவு கொண்டது. மீன்பிடித்தொழில் பலமாகவும் அடி பட்டது. மீனவக் குடும்பங்கள் மீண்டும் அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டன.  அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல ஆண்டுகள் எடுத்தது.

 1975, 1980களில் கிட்டத்தட்ட வடமராட்சிப்பகுதியில் 250ற்கு மேற்பட்ட பெரிய இயந்திரப்படகுகளும் 1000ற்கு மேற்பட்ட வெளியிணைப்பு இயந்திரப்படகுகளும் அதிகமான மரபு வழி தொழில்முறை கலங்களும் இருந்தன. அவைகளுள் அனேகமானவை போர்காலத்தில் அழிவடைந்துவிட்டன. மிச்சம் மீதியாக இருந்தவைகளையும் எம்மவர்களில் பலரையும் சுனாமி பேரலை வந்து காவு கொண்டு சென்றுவிட்டது. தொடர்ந்தும் போரினால் துவண்டு போன நம்மவர்கள் 2010ம் ஆண்டு 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் ஒரு தெளிவு நிலையினை அடைந்துள்ளனர்.

 தற்போது எமது பகுதியில் தொழில் செய்யக்கூடிய நிலையில் ஒரு சிலரிடம்
தான் நவீன வசதிகளுடனான பல நாட்கலத் தொழில்  இருக்கின்றது. இவைகளை கொண்டுதான் தற்காலத்தில் எழுகின்ற சவால்களுக்கு முகம் கொடுத்து தொழில்செய்யக்கூடியதாக இருக்கும். இந்நிலை அரசுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ மற்றவர்களுக்கோ தெரியாத ஒன்றல்ல.

 இதை புரிந்து கொண்ட எம் அரசு மானிய அடிப்படையில் நவீன பல நாட்கலங்கள் தருவதாக கூறி கடல் தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடிதமூலம் அறிவித்துள்ளமை அனேகமான அங்கத்தவர்களுக்கு தெரியாது. இதற்கான போதிய அறிவித்தல் வழங்கப்படவில்லை. அத்துடன் இதில் உள்ள பல விடயங்களும் நம்மவர்களுக்கு விளங்காத நிலையில்விளங்கப்படுத்தப்படவும் இல்லை. இது மிகவும் மனம் வருந்த வேண்டிய ஒரு முக்கிய விடயமாகவுள்ளது.

மேலும் இந்த பல நாட்கலங்களின் விலையானது இரண்டு கோடி அறுபது இலட்சம் ரூபாயாகும். இதில் மானியத் தொகையானது (50மூ) ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய் ஆகும். இது ஒரு கடல் தொழிலாளிக்கு அரசாங்கத்தினால் செய்யப்படுகின்ற ஒரு பாரிய கொடைதான். சுனாமியால் பாதிக்கப்பட்டு போரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நம் மீனவ சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய் பணத்தினை செலுத்தி இந்த பல நாட்கலத்தை பெற்று தொழில் செய்வது என்பது நினைத்துப்பார்க்க கடினமாகவுள்ளது.

அரசாங்கம் மானியம் கொடுக்க முன் வந்தமையானது வரவேற்கத்தக்கது. மீதித் தொகையினையும் மாதாந்தம்  உழைத்துக் கட்டக்கூடிய வழியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னர் கடலுக்குள் காலடி வைத்த தாயக மீனவர்கள் மீன் பிடிப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது தென்னிலங்கை மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி காரணமாக நமது மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை நித்தமும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

மீனவர்களின் வாழ்வு என்பது இன்று பெரும் சவாலாக தான் உள்ளது.  மீனவ அமைப்புக்கள், வடக்கு மீன்பிடி அமைச்சு ஆகியன தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி மீனவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்புமாகும்.

திரு. செல்லத்துரை நற்குணம் 
(தலைவர், வடமராட்சி கடலோடிசார் ஐக்கிய சமூகசேவைகள் அமைப்பு)
நிமிர்வு வைகாசி 2017 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.