வன்னியில் 195 மில்லியன் ரூபா நாய்வீடு


       


வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கூட முழுமையாகப் பூர்த்தியாகாத நிலையில், எவ்விதப் பயனுமின்றி மூடியே காணப்படுகிறது.  இதற்கு யார் காரணம்?  மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட  மக்களின் வரிப்பணத்தில்  கட்டப்பட்ட   இந்த பஸ் நிலையம் வீணாக்கப்படுவதை பார்த்துக் கொண்டு அரசியல் தலைமைகள், உரிய அதிகாரிகள் கண்டும் காணதவர்கள் போல் திரிவது ஏன்?

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையானது வவுனியா  நகரில் உள்ள பஸ் நிலைத்திலும் தனியார் பஸ் சேவை வவுனியா நகரின் முதலாம் குறுக்குத்தெரு,   இரண்டாம் குறுக்குத்தெரு, இலுப்பையடி கந்தசாமி கோவில் வீதி, பண்டாரவன்னியன் வீதி உள்ளிட்ட 5 இடங்களில் இருந்தும் சேவையை முன்னெடுத்து வந்தன. ஆனால்        வவுனியாவில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு பஸ் தரிப்பிடமில்லாத காரணத்தால், கடந்த 2012 ஆம் ஆண்டு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான தீர்மானம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வவுனியா நகரில் இருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் 4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக 2013 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.         

 இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவையும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், புதிய பஸ் நிலையத்திலிருந்து தனியார் பஸ்களும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் சேவையில் ஈடுபடும் என தெரிவித்தே கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. 195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பஸ் நிலையம்  இலங்கையில் முதல் தர பஸ் நிலையமாகும். இங்கு கட்டுநாயக்கா விமானநிலையத்தை ஒத்ததாக சுகாதாரமான வசதிகளும் பாதுகாப்பு முறைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

அதனையடுத்து, இரண்டுசேவைகளும் ஒரே பஸ் நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டன. எனினும், நேர சூசி முறையாக இன்மையினால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது. இரண்டு தரப்பினருக்குமிடையில் இந்த பிரச்சினை தொடர்பில்  பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர் பழைய இடத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் இயங்க ஆரம்பித்ததுடன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் அவர்களிக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

குறித்த பிர்ச்சினைக்கு தீர்வு வழங்கும் முகமாக மார்ச் 31 ஆம் திகதி வரை புதிய பஸ் நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கான புதிய இணைந்த நேரஅட்டவணையை அமைப்பதாக மாகாண போக்குவரத்து அமைச்சரால் வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும், கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவுற்ற நிலையில் எவ்விததீர்வும்   எட்டப்படாமல்  195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பஸ் நிலையம்  இன்று  ஆடு, மாடு, நாய்கள் தங்கும் கூடாரமாக பயன்படுகின்றது.


பஸ் நிலையத்தின்  இந்த அவல நிலையை நொந்து கொண்டு பொருளாதார மத்திய நிலையப் பிரேரணைக்கு நடந்த சீர்கேட்டைப் பார்ப்போம்.  மைத்திரி அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும்.  குறித்த பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகரில் இருந்து 2கிலோமீற்றர் தூரத்துக்குள் அமைக்கப்பட வேண்டும் என்பது கிராமியபொருளாதார அமைச்சரின் கோரிக்கையாகும்.  இதற்கு அமைவாக தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.  பொருளாதார மத்திய நிலையம் சந்தைப்படுத்தல் வர்த்தக நோக்கங்களைக் கொண்டது. போக்குவரத்து வசதிதொழில,; நுட்பவளர்ச்சி என்பவற்றுடன் பெருமளவு மக்கள் வாழும் வவுனியா நகருடன் அண்டிய பகுதி என்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 இது இவ்வாறு இருக்கும் பொழுது எமது அரசியல்வாதிகளின் ஒற்றுமை இன்மையால் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள தாண்டிக்குளத்தில் அமைக்கப் பட வேண்டுமா அல்லது நகரில் இருந்து சற்றுத் தொலைவிலுள்ள ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டுமா என பல சர்ச்சைகள் கிளம்பின.

வாதப்பிரதிவாதங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என ஏட்டிக்கு போட்டியாக தொடர்ந்த வண்ணம் இருந்தன.  இவ்வாறு பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையின் ஏகமனதான தீர்மானத்தின் படி தாண்டிக்குளத்தில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. எனினும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடையே ஒற்றுமை இன்மையால் இது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபட்டுக் கொண்டே போனது.  இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் தமது சுயநலனை மட்டும் கருத்தில் கொண்டார்களே தவிர யாரும் பொதுமக்களதும் இது சார்ந்த அமைப்புக்களினதும் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை.  அனைவரும் அரசியல் சார்ந்து மட்டுமே சிந்தித்தார்கள்.

 எமது அரசியல் தலைவர்களின் விட்டுக்கொடுப்பற்ற தன்மையால் வடக்கின் முதலாவது பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடத்தின் இறுதி முடிவினை மத்திய பொருளாதார அமைச்சர் எடுக்கும் நிலை வந்தது.  நீண்டகால இழுபறிக்கு உள்ளாகியிருந்த வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா ஓமந்தையில் அமைப்பதற்கான தீர்க்கமான முடிவு வவுனியா கச்சேரியில் அரசாங்க அதிபர் புஸ்பகுமார தலைமையில்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பத்யூதீன், முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் 2016.08.15 அன்று எடுக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 200கோடி ரூபாய் பணம் மதவுவைத்த குளத்துக்கு 100கோடியும் மாங்குளத்திற்கு 100கோடியும் என பிரிக்கப்பட்டது.  இவ்வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

தமிழ் தலைவர்களின் ஒற்றுமையின்மையும் அவர்களின் செயற்திறனற்ற நிலையும், அவர்களின் குழுநிலைவாதமும் தான்   இன்று வன்னி மாவட்டத்துக்கு வரும் வரப்பிரசாதங்கள் எல்லாம் அவற்றின் பலனைத் தராமல் வீண்போகக் காரணமாக உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் தாம் மக்களுக்கு சேவை செய்யப் போவதாகக்கூறி வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்களிற்கு வாக்களித்து மக்களின் நலநன மறந்துவிடுகின்றனர்

இவர்கள் தமது பதவி தரும் அகங்காரத்தாலும் சுயநலக் கொள்கைகளாலும் ஏனோ மக்களால்  மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து விடுகின்றார்கள்



இவர்களின் அசமந்தப்போக்கினால் இவர்களால் மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட முடியாதுள்ளது என்பது வேதனையான விடயம்.   மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட வவுனியா புதிய பஸ்  நிலையத்திற்கு நடந்தது என்ன, பொருளாதார மத்திய நிலையம் மற்றும் வவுனியா நகரசபைக்காக யுனொப் நிறுவனத்தினால் வழங்கப்படட 900 கோடி ரூபாய் என்பவற்றுக்கு எல்லாம் நடப்பது என்ன என்கிற கேள்விகளை சாதாரண மக்கள் நித்தமும் கேட்கிறார்கள். மக்கள் நலனுக்காக அபிவிருத்திப் பணிகளை கூட ஒன்றாக இணைந்து முன்னெடுக்க முடியாத அரசியல்வாதிகள் இருந்தென்ன பயன்?

சி.திவ்யந்தினி-
நிமிர்வு வைகாசி 2017 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.