முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழமைபோல் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நடந்து முடிந்துள்ளது. மே 18 க்கு முன்னரான நாட்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலப்பகுதிகளில் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றாலும், மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் எல்லா பொது அமைப்புக்களும், கட்சிகளும் ஓரணியில் நின்று ஒரே இடத்தில் நடத்துவது தான் முறைமை. ஆனால், இம்முறையும் வேறு வேறு நேரங்களில் வெவ்வேறு இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சில நிகழ்வுகளில் குழப்பங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றை உறவுகளை இழந்து வேதனையில் தவிக்கும் மக்கள் துளியளவும் ரசிக்கவில்லை.
தமிழ் மக்களை பாதித்த, பாதிக்கும் விவகாரங்களைக் குறித்து தொடர்ச்சியாக விழிப்போடு வைத்திருக்கவல்ல ஓர் அரசியல் வேலைத்திட்டமோ அல்லது அதற்கு வேண்டிய அரசியல் தரிசனமுடைய பலமான அமைப்போ, அதிகார மையமோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்பது கவலைக்குரியது. அப்படியொரு அமைப்பு அல்லது மையம் இருந்தால் அது தமிழ் மக்களின் அரசியலைத் தீர்மானிக்கும் எல்லா விவகாரங்களையும், நிகழ்வுகளையும் குறித்து ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்டிருக்கும். அப்படியோர் அரசியல் தரிசனம் இருந்தால்தான் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியலைக் குறித்த தெளிவான ஒரு வழிவரைபடமும் இருக்கும். அப்படியோர் ஒட்டுமொத்த அரசியல் தரிசனம் இருந்தால்தான் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அதற்கேயான முக்கியத்துவத்துடனும், அனைத்துலகப் பரிமாணத்துடனும், தீர்க்கதரிசனத்தோடும் திட்டமிடலாம். என அரசியல் பத்தியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
முள்ளிவாய்க்காலில் இழந்த எம் சொந்தங்களை கூட்டாக நினைவு கூர்வதன் மூலம் ஒற்றுமையே பலம் என்பதனை தமிழ் மக்கள் நிறுவ முடியும். பாதிக்கப் பட்டவர்களின் உளவுரணைக் கட்டியெழுப்ப முடியும். கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு பொது நினைவிடத்தை நிறுவி இருக்க வேண்டும். ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. ஆனால் நினைவு கூரும் நாளான மே 18 அன்று அரசியல் தலைவர்கள் வாகனங்களில் சீறிக் கொண்டு வருவார்கள். விளக்கேற்றுவார்கள், மலர் தூவுவார்கள், உணர்ச்சி பொங்க நான்கு வரிகளில் பேசுவார்கள். பின் தங்கள் சொகுசு வாகனங்களில் பறந்து விடுவார்கள். உறவுகளை இழந்த மக்களோ கண்ணீருடனும், ஆற்றாமையுடனும் மண்ணில் புரண்டு கதறி அழுவார்கள்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களில் ஒரு தொகுதியினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு கற்களைப் பதிப்பதற்கு அருட்தந்தை எழில்ராஜன் நடவடிக்கை மேற்கொண்டார். அந்நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடாகும் என முல்லைத்தீவு நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த நிகழ்வை நடத்தவிடாமல் இடைநிறுத்தல் உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றனர். ஆனாலும் இறுதியில் அந்நிகழ்வு நடாத்த அனுமதி அளிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு ஆவணமாக்க முற்பட்டமையால் தான் அருட்தந்தை எழில்ராஜன் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டார். நீதிமன்றத் தடைக்கும் உள்ளாகியிருந்தார். உண்மையில் இந்தப் பொறுப்புள்ள, சிக்கலான பணியை அமைப்புக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தான் செய்திருக்க வேண்டும்.
தமிழ் தேசிய துக்க நாளான அன்று தமிழர் தாயகம் உண்மையில் துக்கத்தை கடைப்பிடித்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எல்லாமே வழமை போல் இயங்கின. தலைமைகள் தனித்து தனித்து செயற்பட்டமையால் மக்களையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்க முடியவில்லை. தமிழ் மக்களின் மாபெரும் இனப்படுகொலை நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கல்வியியலாளர்கள், ஆய்வாளர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல தரப்பையும் உள்ளடக்கிய ஒரு பொதுக் குழு சிறப்பான ஒழுங்கமைப்புடன் ஒரே இடத்தில் நடத்துவதே சாலச் சிறந்ததாகும்.
வழமையாக தமிழ்நாட்டில் மெரீனா கடற்கரையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமையாகும். மெழுகுவர்த்திகளை ஏந்தி அமைதியாக இடம்பெறும் இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் என பலரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்துவது வழமையாகும். வழமைபோல் இம்முறையும் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்ற நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உட்பட 17 பேர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கூட்டான ஒருங்கிணைப்புக்களை இந்தியாவும் விரும்பவில்லை. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு அரசு மேற்படி கைதை செய்துள்ளது தமிழின உணர்வாளர்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
மொத்தத்தில் தமிழினப்படுகொலையை ஆவணமாக்குவதனை இலங்கை அரசும் தடுக்கிறது. பேரெழுச்சியுடன் தாய்த்தமிழகம் இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழ் மக்களை நினைவுகூர்வதை இந்திய மத்திய அரசாங்கமும் தடுக்கிறது.
நாம் அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய வரலாற்றுத் தருணமிது. அடுத்த வருடம் முள்ளிவாய்க்காலில் எம் சொந்தங்களின் தியாகங்களை கூட்டாக நினைவேந்த அர்ப்பணிப்புடன் இப்போதே தயாராகுவோம்.
சிந்து-
நிமிர்வு ஆனி 2017 இதழ்
Post a Comment