வலிகளைச் சுமப்போமா…?
கடந்த மாத “நிமிர்வு” இதழில் வெளிவந்த “வலிசுமக்காத மேனியர்” என்ற கட்டுரை தொடர்பாக வாசகர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்களும் விமர்சனங்களும் கட்டுரையின் பேசுபொருளுக்கான தீர்வுகளாகவும் காணப்படுவதைப் பார்க்கும் பொழுது மனதுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. கல்வி அடைந்துள்ள பெறுபேற்று வீழ்ச்சியினால் ஏற்பட்ட வலியை மாற்றும் வகையில் அவர்களது சிறந்த முன்வைப்புக்கள் மற்றும் கருத்துக்கள் ஒளடதமாக இருந்தன. எத்தனையோ பிரச்சினைகள் தொடர்பான கட்டுரைகளும் விமர்சனங்களும் ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன. இருந்த போதும் அவை தொடர்பாக ஆர்வம் காட்டாதவர்கள் “கல்வியிலான வீழ்ச்சிப் போக்கு” என்றதும் அவர்களிடம் எழுந்த துடிப்பையும், மனதில் எழுந்த பதைபதைப்பையும் பார்க்கும் பொழுது, இது நிச்சயமாக மீண்டும் எங்கள் பிள்ளைகளின் கல்வியில் பாரிய அபிவிருத்தியையும் மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும் என்பதைச் சுட்டி நிற்கின்றது.
ஆனால், வலியைச் சுமக்க வேண்டிய கல்விப்புலம் சார்ந்தவர்கள் இது தொடர்பாக எவ்வித ஆர்வமும் காட்டாத நிலையில் முற்றும் துறந்த முனிவர்களாக இருந்து என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று வாளாவிருப்பது தான் மனதுக்கு வேதனை அளிக்கின்றது.
ஆயினும் எமது இழந்த கல்வியை மீட்டெடுக்கும் போராட்டத்தில் மக்களின் உணர்வலைகள் தற்போதைய உண்மை நிலையைப் புடம் போட்டுக் காட்டியுள்ளன. அவர்களுடைய கருத்துக்களில், மாகாணசபைகள், முதலமைச்சர்கள், கல்வி அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கல்விப் பணிப்பாளர்கள், தொழிற்சங்கங்கள என பரந்து பட்டதாகத் தமது குறைபாடுகளை வெளிக்காட்டியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் இழந்து போயுள்ள எமது மாகாணங்களில் கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வி அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்ற ஒரு உந்துதலைக் கொடுப்பதற்காக பொதுமக்கள், கல்வியாளர்கள், முன்னாள் மாகாணக் கல்விப் பணிப் பாளர்கள், முன்னாள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களினால் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் தொகுத்து அவற்றிற்கான தீர்வுகளையும் வழங்கி, அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளையும் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். “நிமிர்வு” இதழில் வெளிவந்த மேற்படி கட்டுரை எனது முகநூலிலும் பின்னர் இடம்பெற்றபொழுது அவை தொடர்பாகக் கிடைத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கருத்துக்களில் இருந்து சிலவற்றை மட்டும் தொகுத்து அவற்றையே தீர்வாக எடுப்போமாக இருந்தால் தற்போதைய நிலையை விட 40 வீதத்தினால் ஆவது வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்விப் பெறுபேற்றை உயர்த்த முடியும்.
கருத்து-1: “இலங்கையில் முதலாவது இடத்தில் இருந்து அனைவருக்கும் பாடம் கற்பித்தவர்கள் எம்மவர்கள். ஆனால் இன்று, தமக்குள்ளேயே பிரச்சினைப்பட்டு முரண்பட்டு நிற்கின்ற கல்விச் சமூகத்தின் நிலையைப் பாருங்கள். எனவே எமது சொந்தங்களே ஒன்றுபட்டு எங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கட்டி எழுப்ப வாருங்கள்;”
மனவேதனையின் வெளிப்பாட்டைக் காட்டியுள்ள ஒருவரின் உள்ளக் குமுறலைக் கேட்ட பின்னராவது, எம்மவர்களைச் சிந்திக்க வைக்கவேண்டும். தமிழ் மக்களுக்கென்றெ உள்ள தனியான சிறப்பு வாய்ந்த குணமாக இருப்பதே இந்த ஒற்றுமை இன்மை தான். தமிழர்களிடையே புரையோடிப்போயுள்ள காட்டிக் கொடுப்புக்களும் ஒற்றுமையின்மையையும் கண்டு, இன்று உலகமே எள்ளி நகையாடுகின்றது. எங்களிடம் உள்ள ஒற்றுமையின்மையினாலேயே இன்று எமது இனம் பாரிய அழிவைச் சந்தித்தது நிற்கின்றது என்பதையும் நாம் உணரத் தவறிவிட்டோம். அதே போன்று தான் பாடசாலைப் பிள்ளைகளிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டிய கல்வித் துறையிலும் கூட இன்று ஒற்றுமையின்மையையும், முரண்பாடுகளையும் சாதாரணமாகக் காணமுடிகின்றது. பாடசாலைகள், வலயக் கல்வித் திணைக்களங்கள், மாகாணக் கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களங்களில் இத்தகைய பதவி வழியாக ஏற்படும் அதிகாரப் போட்டிகளும், முரண்பாடுகளும், விட்டுக் கொடுப்புக்களின்மையும் காணப்படுவதை, அவர்களது ஒன்றுக்குப் பின் ஒன்று முரணான தகவல்கள், தீர்மானங்கள் மற்றும் அறிக்கைகள் மூலமும் அறிய முடிகின்றது. உதாரணமாக மாகாணங்களின் கல்வி அமைச்சின் செயலாளர்களுக்கும், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வின்மையே பாடசாலை மட்டம் வரை எடுத்துச் செல்லப்படுகின்றது. கல்விச் செயலாளர் கல்வி அபிவிருத்தி சார்ந்த ஒரு தீர்மானத்தைச் செயற்படுத்த முன்வரும் பொழுது, மாகாணக் கல்விப் பணிப்பாளர் அதற்கு உடன்படாத ஒரு முரண்பாட்டு நிலையை எடுப்பதைப் பார்த்திருக்கின்றோம். எனவே மாணவர்களின் கல்வி உயர்வை இலக்காகக் கொண்டு கல்வித்துறை சார்ந்த ஒவ்வொருவரும், தராதரம், வயது, பிரதேசம், பதவி என்ற வேறுபாடுகள் இன்றி ஒரே வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்அவற்றை நடைமுறைப் படுத்துவதுடன், கண்காணிப்புக்களையும், பின்னூட்டல்களையும் மேற்கொள்ள வேண்டும் இடையிடையே எழுமாற்றாகப் பாடசாலை மட்டத்திலான பின்னூட்டல்களையும, வழிகாட்டல்களையும்; செய்துவர வேண்டும். இதற்கு அனைத்துக் கல்வி அதிகாரிகளும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட முன்வர வேண்டும்.இங்கு கல்வித் துறை என்ற கட்டமைப்பின் கீழ் கல்விச் செயலாளரே அதிகாரத்தின் மேல் நிலையில் இருப்பவராதலால், அவரது தலைமைத்தவததின் கீழ் அனைத்துக் கல்வி அலுவலர்களும் ஒன்று பட்டுச் செயற்பட முன்வர வேண்டும்.
கருத்து-2: சரியானதைச் சரியான நேரத்தில் சரியாகச் செய்து வந்ததால், அன்று பரீட்சைப் பெறுபேறுகள் மட்டுமல்லாது பாடசாலைகளின் மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாடுகளும் மிகச் சிறப்பாகப் பேணப்பட்டிருந்தன. ஆனால், இன்று என்ன தவறுகள் விடப்பட்டாலும், பாடசாலைகளின் கல்வித் தரம் எப்படித்தான் கீழ்நோக்கிப் போனாலும், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் எப்படித்தான் சீரழிந்து போனாலும், எமக்கென்ன என்று கண்டும் காணாதது போல் இருக்கின்ற நிலை மாறவேண்டும்.
• இதற்கு இன்றைய சூழலில் அதிபர், ஆசிரியர்களுக்கு இருக்கும் பாதுகாப்பற்ற நிலைமையும், கட்டுப்பாடுகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இன்று மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ எந்தத் தவறை விட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்குச் இறுக்கமான சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. இதனால் அதிபர், ஆசிரியர்கள் அச்சம் காரணமாக தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏனோ தானோ என்று இருக்கின்றனர். இதனால் மாணவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் பேணப்படாத நிலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மந்தமடைகி;னறன. தவறுகள் விடப்படும் மாணவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்ற புறநிலைச் சட்டங்கள் அகற்றப்பட்டு அதிபர்கள் ஆசிரியர்களுக்கான முழுமையான சுதந்திரம் வழங்கப்படவேண்டும். கல்வி அமைச்சின் சுற்றறிக்கையிலுள்ள தண்டனைகள் வழங்குவது தொடர்பாகக் குறிப்பிடப்பட்ட சரத்துக்களையாவது நடைமுறைப் படுத்தும் அதிகாரங்களை அதிபர்களுக்கு வழங்கவேண்டும்.
• அதேவேளை ஆசிரியர்கள் அதிபர்களின் கட்டுப்பாடுகள் வரம்பு மீறும் வகையில் செல்லாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மிக இறுக்கமாக இருக்க வேண்டும்.
• க.பொ.த. உயர்தரப் பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்த பொழுது, மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் அவர்களது ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதற்காகவும், உயர்தர மாணவர்களைக் கூட நான் தண்டித்திருக்கின்றேன். அதேவேளை பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களுடன் நல்லுறவைப் பேணி வந்ததனால், எவருமே எனது நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்க முன்வர வில்லை. அன்று இவ்வாறான ஒரு சூழலில் கற்ற மாணவர்களே இன்றும் கீழ்ப்படிவுள்ளவர்களாகவும், நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் இருப்பதுடன் உயர் நிலையிலும் இருந்து தமது ஆசிரியர்களை மாதிரி உருக்களாகப் பாவனை செய்து வாழ்க்கையில் பிரகாசிக்கின்றார்கள்.
கருத்து-3 : 2009க்குப் பின்னர் அரசியல் தலையீடுகள் பாடசாலைகளிலும் கல்வி நிர்வாகத்திலும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இது பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன:
• அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக ஆசிரியர், அதிபர், கல்வி அதிகாரிகள் என எல்லா வள ஆளணியினரும்; சமமாகப் பகிரப்படாத நிலையில் இருப்பதால் பாடசாலைகள் கல்வி அலுவலகங்களில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன.
• ஒரே பாடசாலையில் நீண்ட காலமாக கடமையாற்றும் அதிபர்களும் ஆசிரியர் களும் மந்த நிலைக்குள்ளாகியிருக்கின்றார்கள். அவர்களை இடமாற்றம் செய்து புது இரத்தம் பாய்ச்சும் திராணி வலயக் கல்வி அதிகாரிகளுக்கு கிடையாது.
• ஆளுமையற்ற அரசியல்வாதிகளிடம் சிக்கி எந்தத்துறையும் சின்னாபின்னமாகலாம் ஆனால் கல்வித்துறை சிதைவடைந்தால் எமது இனத்திற்கான எதிர்காலமே இல்லாமல் போய்விடும்.
இவ்வாறான கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளதைக் கொண்டு அரசியல்வாதிகளின் செல்வாக்கு பாடசாலைகளில் எந்த அளவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறியலாம்.
மேற்படி கருத்துக்கு அமைவாக அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக முறையற்ற இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் பல்வேறு மட்டங்களிலும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இவையும் ஒன்றாகக் காணப்படுகின்றது.
“சில அரசியல்வாதிகளின் அதீத தலையீடுகள் காரணமாக அதிபருடன் இணைந்து பாடசாலையின் வளங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன், பாடசாலைச் சமுகத்தினரிடையே முறுகல் நிலையும் அமைதியின்மையும் காணப்படுதல்.” இந்தக் கருத்து தொடர்பாக அண்மையில் வடமராட்சியில் உள்ள ஒரு உயர்தரப் பாடசாலையின் கல்விச் சமூகத்தினாரால் ஊடகங்களிலும் நேரிலும் தெரிவித்த கருத்துக்கள் அரசியல்வாதிகளின் அதீத தலையீடுகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். வுடமராட்சியில் உள்ள ஒரு 1யுடீ பாடசாலையில் ஒரு அரசியல்வாதியின் தலையீடு காரணமாக அவருக்கும் பாடசாலை அதிபருக்கும் எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டமே நடைபெற்றது. அங்கு பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள், ஆசிரியர் குழு ஆகியோரினதும் தீர்மானத்தையும் மீறி 150 வருடங்கள் பழைமை வாய்ந்த சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட பெரு விருட்சங்கள் இரவோடிரவாகத் தறித்து வீழ்த்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பாடசாலைச் சமூகம் கல்விச் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் வன இலாக்கா பகுதியினர், அரசாங்க அதிபர் ஆகியோருக்குப் பல முறைப்பாடுகள் செய்தது. இது தொடர்பாக அதிபர் மீதும் இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி மீதும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புக் காட்டிவந்த எட்டு ஆசிரியர்களில், இருவரையும் எச்சரிக்கும் வகையில்இடமாற்றமே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடசாலை வளவினுள் எந்த ஒரு அரசியல் வாதியும் உள் நுழையக் கூடாது என்ற சட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்துவதுடன், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அதிபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். இன்று பல அரசியல்வாதிகள் தம்மை விழாக்களுக்கு முதன்மை விருந்தினராக அழைத்தால் தான் நிதி உதவி செய்வோம் என்று மிரட்டுகின்ற நிலை மாறவேண்டும். மாகாண நிதியோ அல்லது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழான நிதியோ அவர்களது சொந்த நிதியல்ல. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் என்னென்ன விடயங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று நியாய மாகப் பகுப்பாய்வு செய்து தேவை அடிப்படையில் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்பட வேண்டியது கட்டாயமானது. அதையும் மீறி அரசியல்வாதிகள் செயற்பட்டால், அந்த சிறு தொகைப் பணத்தையே தூக்கி எறிந்து விட்டு மக்களின் பலத்தில் ஒரு அதிபர் நிற்கும் மனோபலம் உள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். இன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தமக்கு வருகின்ற நிதி ஒதுக்கீடு தொடர்பாக வெளிப்படைத் தன்மையைக் காட்டவேண்டும். இவை தொடர்பான கணக்கறிக்கைகள், அவர்களைத் தெரிவு செய்த மக்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டும். இதனை மக்கள் தான் தட்டிக் கேட்க வேண்டும்.
கருத்து- 4: பாடசாலைகள் மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கான அடித்தளக் களச் சூழல்களாக இருக்கும் போது இடர்ப்பாடுகள், இயலாமை, மட்டுப்பாடுகள், தேவைகள் என்பன களத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும். அப்படியிருக்கும் போது , அபிவிருத்திச் செயற்பாடுகள் போன்ற விடயங்களுக்கான திட்டமிடல்களும் தயாரிப்புகளும், மிகவும் பெருமளவிலான நிதியைச் செலவு செய்து, கல்வி அபிவிருத்தியுடன் தொடர்பற்வர்களையும், வெளிநாட்டு நிபுணர்கள் என்று கூறப்படுபவர்களையும், ஓய்வு பெற்றவர்களையும் அழைத்து AC அறைகளினுள் வைத்து மேல்தளத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விப் பிரதிநிதிகள், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் என்பவற்றின் கருத்துக்கள் பெறப்படுவதில்லை”.
இது மத்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தாலும் ஒவ்வொரு பாடசாலையும் தமக்கே உரிய தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளன. அந்த வகையில் மாணவர்களின் தேவைகள் வசதிகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கல்வி அபிவிருத்தி சார்ந்த சில செயற்றிட்டங்களை பாடசாலைகளே தயாரித்து அவற்றை நடைமுறைப் படுத்தவேண்டும். இதற்கு உள்ளுரில் உள்ள அல்லது அயலில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் நிபுணத்துவ ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காகவே பாடசாலைகளுக்குத் தர உள்ளீடுகளினூடாகப் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆனால் அவை சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை. இவற்றைப் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் பொழுது மதிப்பீடுகளையும் பின்னூட்டல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் முக்கிய பங்காற்றவேண்டும். ஏனெனில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களே கல்வி அபிவிருத்தியைப் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கக்கூடிய முக்கியமான வள ஆளணியினர். இருந்த போதிலும், அவர்கள் முறையான ஒரு கண்காணிப்பத் திட்டத்தின் கீழ் நெறிப்படுத்தப்படுவதில்லை.
கருத்து-5: வடமாகாண சபை தோற்றம் பெற்ற பின்னரே கல்வி மிக மோசமான நிலையை அடைந்தது.
இக் கருத்தைப் பலர் முன்வைத்திருந்ததுடன் கல்வி அமைச்சரின் பாராமுகத் தன்மையையும், முதலமைச்சரின் அக்கறையின்மையையும் சுட்டிக் காட்டியிருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் கல்வி அமைச்சர்களும் முதலமைச்சர்களுமே என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. இந்த நிலையில் ஒவ்வொரு வலயங்களுக்கும் நேரடியாகச் சென்று கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதுடன் கல்வியில் பின்னடைவைக் காட்டுகின்ற வலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது. வினைத்திறன் அற்றவர்களை உடனடியாக அந்தப் பொறுப்பில் இருந்து வெளியேற்றி அவர்களுக்கு மீள்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவர்களது சம்பள ஏற்றங்களையும் இடை நிறுத்தவேண்டும். இதற்காகவே இன்று பாடசாலைகளில் “ஆசிரியர் தரங்கணிப்பு” என்பது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால், உண்மையில் அவை கல்வி அதிகாரிகளினாலோ அல்லது அதிபர்களினாலோ மீளாய்வு செய்யப்படுவதுமில்லை,உரியமுறையில் வழிகாட்டப்படுவதுமில்லை.
கருத்து-6 “மாணவர்களின் கற்றலிலும் ஒழுக்கத்திலும் கண்டிப்பாக பெற்றோரின் வகிபாகம் முக்கியமானதாகும்”.
ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது மூன்று கல் அடுப்புக்குச் சமமானது. இதில் ஒரு கல் சறுகினாலும் பானையில் உள்ள அரிசி வேகாது. அதேபோன்று தான் பாடசாலையின் வளர்ச்சியும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்போர் மூன்று கற்களைப் போன்றவர்கள். இதில் பெற்றோர் காட்டுகின்ற அக்கறை என்பது பிள்ளைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எங்கே பெற்றோர் பாடசாலையின் மீது அக்கறை காட்டாது இருக்கின்றனரோ அங்கே நல்ல தரமான கல்வியையோ ஒழுக்கவிழுமியங்களையோ பேண முடியாது. இதில் ஒவ்வாரு பெற்றோரையும் ஈடுபடுத்தும் வகையில் அதிபர்கள் சில ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
கருத்து- 7: மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நிலையறி பரீட்சை மூலம் இனங்கண்டு, அதற்கமைய சரியான திட்டமிடலின் மூலம் பரிகாரக் கல்வியை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒழுங்கான திட்டமிடலின் கீழ் மேற்பார்வை இடம் பெற்று உரிய வழிகாட்டல்கள் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய கலைத் திட்டத்தில் க.பொ.த. சாதாரண தரத்திற்கும், உயர்தரத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. இவ்வாறான இடைவெளியைக் குறைப்பதற்கு கல்வி மேம்பாட்டை நோக்கிய செயல்திட்டத்தை ஒவ்வொரு பாடசாலையும் தமது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும்.
இக் கருத்தானது முன்னாள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ஒருவரினால் தெரிவிக்கப்பட்ட ஆரோக்கியமான கருத்தாக அமைந்துள்ளது. ஒரு பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் உள்ள குறைபாடுகளும், தேவைகளும் பாடசாலைக்குப் பாடசாலை வேறுபடும். அவற்றைச் சரியான முறையில் இனங்கண்டு ஒவ்வொரு பாடசாலையும் தமது பாடசாலைச் சூழலுக்கு எற்றவகையிலான செயல் திட்டம் மற்றும் பரிகாரக் கல்வி நடவடிக்கைகளையும், செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கருத்து-8 : “தொழிற் சங்கங்களின் சில தேவையற்ற தலையீடுகள் காரணமாகப் பாடசாலையின் ஆசிரியர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன”.
இது தொடர்பாகச் சிலர் கருத்துக்களைத் தெரிவித்தபோது ஆசிரியர்களுக்குத் தொழிற்சங்கம் என்பது அவசியமானதுதான். ஆனால் ஆசிரியர்களின் வேலை நேரம் தொடர்பாகவும் அவர்களின் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக வைக்கப்படுகின்ற செயலமர்வுகள் பாடசாலை நேரங்களிலேயே நடத்தப்பட வேண்டும் என்று கோருவது முறையாகாது என்ற கருத்தையும் முன்வைத்தனர். ஒரு ஆசிரியரோ அல்லது அதிபரோ 24 மணித்தியாலமும் தனது பிள்ளைகளின் கல்வி பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள். இந்த நிலையில் பாடசாலை நேரங்களில் கருத்தரங்குகள் வைப்பதால், மாணவர்களின் கற்றல் செய்பாடுகள் தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும். இது நீண்டகால நோக்கில் பாரிய பாதிப்பை எமது குழந்தைகளின் கல்வியில் ஏற்படுத்தும். எனவே இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து கல்வி அபிவிருத்தியை மேம்படுத்த உழைக்க வேண்டும். அதேவேளை ஒரு ஆசிரியருக்கு தொழில் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்டால், அதற்காக அவர்கள் ஒன்றிணைந்து போராடவும் வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில் பொது மக்களின் ஆதரவும் கிடைக்கும். அன்று நாங்கள் அதிபர்களாக இருந்த காலத்தில் செயற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் பாடசாலைச் செயற்பாடுகளில் ஒத்துழைத்து நடந்தமையினாலேயே எங்களால் உயர்ந்த பெறுபேறுகளைப் பெறக்கூடியதாக இருந்தது.
இந்த இதழில் ஒரு சிலருடைய கருத்துக்களை மட்டும் முன்வைத்து அவற்றைத் தீர்வுகளாக அவற்றை எவ்வாறு பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தலாம் என்ற விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. மேலும் சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பான விடயங்கள் அடுத்த இதழிலும் தொடரும். அதேவேளை இது தொடர்பாக வடக்குக் கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள கல்வியாளர்கள் தமது கருத்துக்களையும் முன்வைத்தால், இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களைக் கொண்ட ஒரு வழிகாட்டிக் குறிப்பைக் கல்வி உலகத்திற்குக் கையளிக்க முடியும்.
வல்வை ந. அனந்தராஜ்-
நிமிர்வு ஆனி 2017 இதழ்
Post a Comment