மலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்


சமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது.  பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதாக சரித்திரமே இல்லை. இதனை உலக வரலாறுகள்  நிரூபித்துள்ளன.  எனினும் தந்தைவழி சமூக அமைப்பு என்று கூறப்படும் கருத்தியலின் அடிப்படையில் ஆணாதிக்க தன்மை மேலோங்கியுள்ள நிலையில் பெண்களின் கருத்துக்களை சமூகம் எந்தளவுக்கு உள்வாங்கியுள்ளது என்பதும் சமூக மட்டத்தில் அவர்களது தேவைகள் எந்தளவுக்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியானதாகவே உள்ளது.

   குறிப்பாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51மூ சதவீதமானவர்கள் பெண்களாவர்.  இவர்களில் 83 சதவீதமானவர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள். பெண்களின் மொத்த சனத்தொகையில் 49 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக கல்வி அல்லது உயர்கல்வி அந்தஸ்தினை உடையவர்கள். பெருந்தோட்டங்களில் தற்போது தொழில் செய்கின்ற தொழிலாளர்களின் 54 சதவீதமானவர்கள் பெண்கள். மலையக பெண்களில் 8 சதவீதமானவர்கள் வீட்டு பணிப்பெண்களாகவும், ஆடைத் தொழிற்சாலைகளிலும் பல்தொகுதி அங்காடிகளில் சேவையாளர்களாகவும் பணியில் ஈடுபடுகின்றனர்.

   200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து பெருந்தோட்டத்துறை தொழில் முயற்சிகளுக்காக அழைத்து வரப்பட்ட பெண் தொழிலாளர்கள் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசியல் சமூக, பொருளாதார மட்டத்தில் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.  அண்மைக்கால அபிவிருத்தி அடைவுகளில் இருந்தும் எல்லைப்படுத்தப்பட்டுள்ளனர்.  21 ஆம் நூற்றாண்டின் பெண்ணுரிமை தொடர்பான பெரும்பாலான நியதிகளில் இருந்து மலையகப் பெண்கள் புறந்தள்ளப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

   இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் பெருந்தோட்டத்துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத் தரும் தொழிலாளர்களுள் 65 சதவீதமானவர்கள் மலையகப் பெண்களே.  ஆனால் மாறிவரும் உலகில் இவ்வருமானத்துறை வீழ்ச்சியடைந்தாலும் பெருந்தோட்டத்துறை பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரணகர்த்தாக்களாக மலையக பெண்களே உள்ளனர்.   ஆரம்பக் காலங்களைவிட சமகால சூழ்நிலை ஓரளவு மாற்றமடைந்து இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றகரமான ஒரு போக்கு காணப்படுகின்ற போதிலும் ஏனைய சமூக பெண்களின் அடிப்படை வேகத்துடன் ஒப்பிடும் போது இவர்களது இந்த முன்னேற்றப்பாதை திருப்திகரமானதாக இல்லையென்பதை மறுக்க முடியாது.

    உலக அரங்கில் எந்தவொரு நாட்டிலும் ஆண்களுடன் ஒப்பிடும் அளவுக்கு பெண்கள் சமத்துவ நிலையினை அடைந்ததாக சான்றுகள் இல்லை.  வளர்ந்துவரும் நாடுகளில் ஆண்களைவிட ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாக பெண்கள் குறைந்த வேதனத்தை பெறுகின்ற தொழில்களிலே ஈடுபடுகின்றனர். அதேவேளை குடும்ப வன்முறை, பாலியல் து~;பிரயோகம் என்பவற்றில் பெண்கள் இயலாமை காரணமாக பாதிக்கப்படுகின்றனர்.  எனவே நலிந்து உரிமை இழந்து வாழ்கின்ற மலையக தமிழ் பெண்களை பொறுத்தவரையில் உலகமயமாக்குதலின் பாதிப்பில் உருவாகியுள்ள பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

   ஆணாதிக்க கருத்தியல் சூழலோடு வளர்க்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சமூகம் பெண்களை தொழில் செய்யும் ஒரு இயந்திர பொருளாக கருதுகின்றது.  ஒடுக்கு முறைகளில் இருந்து விடுபட முடியாமல் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  அதேவேளை அதிகமான குடிபோதைக்கு அடிமையான ஆண்களைக் கொண்ட குடும்பங்களில் குடும்ப வன்முறை காரணமாக பாதிக்கப்படுகின்றனர்.

    பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் வருமானம் திரட்டும் உழைப்பாளிகளாக இருக்கும் அதேவேளை குடும்பச் சுமைகளை சுமக்கும் சுமைதாங்கிகளாகவும் உள்ளனர்.  வருமான உழைப்பாளர் மற்றும் குடும்ப பராமரிப்பாளர்கள் என்ற ரீதியில் இவர்கள் இரட்டைச் சுமைகளைக் கொண்டுள்ளனர்.    இவை பெண் தொழிலாளர்களின் நாளாந்த கடமைகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன . இதனால் தொழில் ரீதியாகவும் குடும்பப் பொறுப்புக்கள்  என்ற ரீதியிலும் ஓய்வுநேரம் என்பதை இவர்கள் உணர்வதே இல்லை.  ஆனால் அவர்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் அல்லது உழைப்பின் பெறுமதி எந்தளவிற்கு மதிப்பிடப்படுகின்றதென்பதும் கேள்விக்குறியே.  
    தொடர்ந்து மலையக பெண்களின் கல்வி நிலைமைகளை எடுத்து நோக்கினால் கல்வியறிவு வீதம், பாடசாலை அனுமதி, உயர் கல்வி என்பவற்றில் பெருந்தோட்ட பெண்கள் குறைவான அடைவுகளையே கொண்டுள்ளனர்.  தேசிய மட்டத்தில் பெண்களின் கல்வி அறிவு உயர்வாக காணப்படும் நிலையிலும் பெருந்தோட்ட பெண்களில் 53 சதவீதத்தினர் ஆரம்ப நிலைக் கல்வியையும் 24 சதவீதத்தினர் இரண்டாம் நிலைக் கல்வியையும் 40 சதவீதத்தினர் சாதாரண கல்வியையும் பெற்றுள்ளனர்.  இப்புள்ளி விபரங்கள் பெருந்தோட்ட பெண்களின் கல்வி நிலைமைகள் மிகவும் கீழ்மட்டத்தில் காணப்படுவதை எடுத்துக்  காட்டுகின்றன.

     உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் தோட்டங்களுக்கு வெளியிலேயே காணப்படுவதனால் பெண் பிள்ளைகளைத் தூர இடங்களுக்கு அனுப்பி கல்வி வழங்குவதில் பெற்றோர் நாட்டம் கொள்வதில்லை.  போக்குவரத்து வசதிகள் இல்லாமையும் பெண்களின் கல்வி மேலும் வளரத் தடையாக உள்ளது.  அதுமட்டுமல்லாது வருமானக் குறைவு, கலாசாரக் கட்டுப்பாடுகள் என்பன பெண்கள் வெளியில் சென்று கல்வியை பெற்றுக்கொள்வதற்கு தடையான காரணிகளாக காணப்படுகின்றன.  தற்போது பெருந்தோட்ட பகுதிகளில் பெண்களின் கல்வி நிலை முன்னைய நிலையில் இருந்து முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும் இன்னும் முழுமையாக சாதாரண தடைகளைக் கூடத் தாண்டவில்லை என்ற உண்மையை எவரும் இலகுவாக மறுக்க முடியாது.  பழமைவாத கலாச்சார பண்பாடுகளில் மூழ்கி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் பிள்ளைகளின் முன்னேற்றத்தை தாமதப்படுத்துவதென்பது பெண் பிள்ளைகளுக்கு செய்யப்படும் ஒரு பாரிய சமூக அநீதியாகும்.

   தொடர்ந்து மலையகப் பெண்களின் சுகாதார நிலை குறித்து பார்க்கையில் 290 இலட்சம் உலக ஏழைகளில் அதிக வீதத்தினர் பெண்கள். சுமார் 75 கோடி வறியவர்கள் கொண்ட தெற்காசியாவில் ஏறத்தாழ பாதிப்பேர் பெண்களே. கர்ப்பத்தினாலும், மகப்பேற்றினாலும் ஏற்படும் வியாதிகளில் நாளொன்றுக்கு இறக்கின்ற 1600 பெண்களில் 99 சதவீதமானோர் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வருடமும் 70,000 பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றார்கள்.  51 சதவீதமான கர்ப்பவதிகள் இரும்புச்சத்து போ~hக்கின்மை காரணமாக இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

   உலகரீதியில் இத்தகைய பெண்களின் நிலையினை மலையகப் பகுதிகளோடு தொடர்புபடுத்தி பார்க்கையில் ஆறடி அகலத்தையும் பத்து அடி நீளத்தையும் வெளிச்சம் புகமுடியாத லயக் காம்பிராக்களிலேயே 98 சதவீதமான தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  ஐந்து முதல் பத்து குடும்ப உறுப்பினர்கள் அக்குறுகிய நிரல் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர்.   இவ்வாறான சூழல் நாகரீக வளர்ச்சி கண்டுவரும் தற்கால வாழ்க்கை சூழலுக்கு இடையூறாகவும் பெண்களின் தனித்துவத்திற்கு பாதகமாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

   மேலும் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கடின உழைப்பான தொழில் இயல்பு காரணமாக அவர்களின் மத்தியில் பல்வேறு ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகின்றன.  கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் இறந்து பிறப்பதும், சிறுபிராயத்திலேயே குழந்தைகள் இறந்து விடுவதும் அவர்களது தொழில் சூழல் காரணமாக நேரிடும் அவலங்களே.  அதிலும் மழைக்காலங்களில் அட்டைப்பூச்சி, வி~ஜந்துக்களிற்கு மத்தியில் றப்பர் பொலித்தீன்களை தலைகளில் அணிந்து கொண்டு பணிபுரிவது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.  இவர்களுக்கான முதலுதவி வசதிகளும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இது மலையக பெண்களின் சுகாதார நிலை குறித்த நிலைமைகளாகும்.

   தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களின் நிலைமைகளை நோக்குகையில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்று எமது நாட்டுக்கு மிகப் பெரும் அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் இலங்கைத் தொழிலாளர்களின் வாழ்வியலை எவரும் மறைத்து கூற முடியாது.  குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களின் முதலீடு பல அபிவிருத்தி பணிகளுக்கும் பெரிதும் பயன்மிக்கதொன்றாகும்.


  மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை என்ற ஒப்பந்தம் மூலம் எப்படி ஏமாற்றப்படுகின்றார்களோ அதே போன்று இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்று செல்லும் இலங்கை தொழிலாளர்களும் மிகப்பெரும் மோசடி நிலைக்குள் தள்ளி வீழ்த்தப்படுகின்றார்கள்.  அதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களே பிரதான காரணிகளாகவும் விளங்குகின்றனர்.

   குடும்ப வறுமை நிலை காரணமாக வாழ்வின் துயர் நிலைக்கு தள்ளப்பட்டு மிகப் பெரும் கனவுகளுடன் விமானம் ஏறச் செல்லும் எமது நாட்டுப் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை.  இது வெளியில் கொண்டுவரப்படாத உண்மையாகும். பல பெண்கள் உயிரற்ற நிலையில் சடலமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  பல நூற்றுக்கணக்கான பெண்கள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் தாயகம் திரும்பியுள்ளனர்.  வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று சென்றுள்ளவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் முகவரியற்ற முகவர்களால் எமது நாட்டு பெண்களை அடிமை தொழிலிற்கு உட்படுத்தப்படும் விபரீதத்தையும் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   மேலும் மலையகத் தொழிற்சங்கங்கள் வாக்குகளுக்காகவும் மாதாந்த சந்தா பணத்திற்காகவும் மாதர்சங்கங்களை வைத்திருக்கின்றன. உழைக்கும் பெண்களுக்கு சமமான அரசியல் பிரதிநிதித்துவத்தினை வழங்குவதற்குரிய மனப்பாங்கற்றவர்களாக அவை காணப்படுகின்றன.  மலையகத் தொழிற்சங்கங்களுக்கு அதிக விசுவாசமானவர்களும் பெண்களே.  தொழிற்சங்கங்களுக்கு கிடைக்கும் சந்தா பணத்தில் கிட்டத்தட்ட 78 வீதம் பெண்கள் வழங்கும் சந்தாவாகவே உள்ளது.  இந்த நிலையில் பல தொழிற்சங்கங்களில் இருக்கும் ஓரிரண்டு பெண் பிரதிநிதிகளும் படு பிற்போக்கான அடிமைச் சிந்தனை கொண்டவர்களாகவும் உழைக்கும் பெண்களை ஆணாதிக்கத்தின் கோரப்பற்களுக்கு இரையாக்கும் கைங்கரியத்தினை செவ்வனே செய்து வருபவர்களாகவுமே பெரும்பாலும் காணப்படுவது கவலைக்கரிய விடயமாகும்.

  மலையக தொழிற்சங்கங்களின் சில முக்கிய பிரமுகர்கள் சிறுமிகளை தலைநகர பணக்காரர்களின் வீடுகளில் வேலைக்கு சேர்க்கும் கீழ்த்தரமான செயலையும் செய்து வருகின்றனர்.  மலையக பெண்களின் போராட்டக் குணாம்சம் மலையக ஆண்களைவிட மிக உயர்ந்ததாகவே காணப்படுகின்றது.  இதற்கு சிறந்த உதாரணமாக இலத்திரனியல் ஊடகங்களில் கருத்துக்கூறும் பெண்கள் சரியானதையும் உண்மையையும் எதுவித அழுத்தங்களுக்கும் பயப்படாமல் தாங்களாகவே முன் வந்து கூறுவதனைக் காணலாம்.  தங்கள் குறைபாடுகளை உலகிற்கு தெரிவிப்பதில் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர்.  மலையக பெண்களின் போராட்ட குணம் கலந்த சக்தி ஒன்றிணைக்கப்பட்டு அதனை மக்களின் தேவைக்காக குரல் கொடுக்கவும் சுயமாய் சிந்திக்கவும் போராடவும் தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

  உலகில் 40 சதவீதமான பெண்கள் தொழிற்சங்க அங்கத்தவர்கள். ஆனால் 1 வீதமான பெண்களே தொழிற்சங்க தலைவர்கள்.  இலங்கையில் 1929ம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது.  ஆனால் இதுவரை பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது ஐந்து விழுக்காட்டையும் கடக்கவில்லை.  இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் ஏறத்தாழ 50 பெண்களே நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளனர்.  இனரீதியாக எடுத்துக் கொண்டால் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற அடிப்படையில் தங்களின் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெண்கள் அரசியலில் பங்கெடுத்துள்ளனர்.  ஆனால் மலையக தமிழ் பெண்களின் சார்பாக எந்தப் பெண்ணும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெறவில்லை.

  எனவே மலையக பெருந்தோட்ட பெண்கள் பெருந்தோட்ட உற்பத்தி துறையிலும் குடும்பத்திற்கான உழைப்பிலும் முழுச்சக்தியை செலவிட நேரிடுவதால் தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகளில் தம்மை இணைத்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். பொருளாதாரத்துறையில் சுதந்திரமாக இயங்க முடியாதவர்களாகவும், சொத்துரிமை அற்றவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய சமூகத்தடைகள் உடைத்தெறியப்பட வேண்டும்.  இல்லையென்றால் முதலாளித்துவ அரசியலில் மலையக பெண்களுக்கு விடிவு என்பது கிடையாது.  எனவே தமக்கென மரபு ரீதியான ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டினை கொண்டு வாழ்கின்ற இப் பெண்களில் நூற்றுக்கு 20 சதவீதமானவர்களே தமது உரிமை தொடர்பான அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர்.  இதற்கான காரணம் வறுமை மட்டுமல்லாமல் விழிப்புணர்வான கல்வி அறிவு, வலிமை என்பவற்றை தகுந்த காலத்தில் பெற்றிருக்காமையுமாகும்.  அதேவேளை பயம், கட்டுப்பாடு, கலாசாரம், ஆணாதிக்கம், மற்றும் அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்த தெளிவின்மை போன்றவையுமாகும்.  எனவே அதற்காக மகளிர் அமைப்புக்களை உருவாக்க வேண்டும். அவற்றின் மூலம் அவர்களது ஆளுமையை விருத்தி செய்து மலையகப் பெண்களாலும் சாதிக்க  முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி அவர்களுக்கு மனரீதியான தைரியத்தை கொடுக்க வேண்டும்.


சிமியோன் புளோரிடா 

அரசறிவியல்துறை,
யாழ்பல்கலைக்கழகம்.

நிமிர்வு ஆடி 2017 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.