உழைப்பால் உயர்ந்தவர்கள்: விபத்தே என் வாழ்க்கைப் பாதையை மாற்றியது

இவ்வாண்டு 2017 யாழ். கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற சிறுதொழில் முயற்சியாளர் கண்காட்சியின் போது....

இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள், சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற சூழலில் சில நம்பிக்கை அளிக்கின்ற செயற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பது மன நிறைவைத் தருகிறது.

யாழ்ப்பாணம் - சுன்னாகம் புதுவளவு என்கிற இடத்தில் வசிக்கும் மார்ட்டீன் ஜெயராஜா நிர்மலா என்கிற குடும்ப பெண்ணொருவர் ஜெயா உற்பத்திகள் என்கிற பெயரில் பெண்களுக்கான விதவிதமான கைப்பைகளை 2014 மாசி மாதம் முதல் தயாரித்து வருகிறார்.

அவர் சொந்தமாக தயாரிக்கும் ஒவ்வொரு கைப்பையும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சுயதொழில் முயற்சியாளரின் உற்பத்திகளோ தரத்தில் மிகவும் மேம்பட்டவையாகவே இருக்கின்றன.

உள்ளூர் உற்பத்தி இவ்வளவு தரமாக உள்ளதா என எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. யதார்த்தமான விலையில் விற்கும் உற்பத்திப் பொருட்களை நிர்மலாவின் கணவர் கடைகளுக்கு விநியோகித்து வருகிறார்.

சுயதொழில் முயற்சியாளர் நிர்மலாவுடன் பேசினோம், என் கூட குடும்பத்தில் இரண்டு பொம்பிளை சகோதரங்களும், ஒரு ஆண் சகோதரமும் இருந்தார்கள். அப்பா சின்ன வயதிலேயே இறந்து விட்டார். இரண்டாவது அக்காவும் நோய் வாய்ப்பட்டு ஆசிரியர் கலாசாலையில் படித்துக்கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார். அவர் இறந்த கவலை தாங்காமல் சில நாள் செல்ல அம்மாவும் இறந்துவிட்டார். நான் 96 ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். அன்றிலிருந்து சாதாரண வருமானத்துடன் தான் வாழ்ந்து வருகிறோம்.

நான் இந்த பெண்களுக்கான கைப்பைகள் தயாரிக்கும் தொழிலுக்கு வந்த விதம் கொஞ்சம் விசித்திரமானது. எனது கணவர் பாதையில் நடந்து போகும் போது பின்னால் வந்த வாகனம் மோதி கடுமையான விபத்துக்கு உள்ளாகினார். விபத்தை நேரில் பார்த்த பலரும் அவர் பிழைக்கமாட்டார் எனவே நினைத்தனர். காதால், மூக்கால் எல்லாம் இரத்தம் வழிந்த சீரியஸாக தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பின்னர் ஒருவாறு கடவுளின் கிருபையால் குணமடைந்தார்.

என் கணவர் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் கடையிலேயே வேலை செய்தார். விபத்துக்கு பிற்பாடு ஞாபகசக்தி சற்று குறைந்து விட்டது. இதனால் வேலை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அந்த நேரம் உதவி செய்வதற்கு பல உறவுகள் முன் வந்தனர். ஆனால், எனது கணவர் அந்த உதவிகளை ஏற்க மறுத்துவிட்டார்.

அந்த நேரம் நாங்களே ஏன் ஒரு சிறிய தொழிலை தொடங்க கூடாது என கணவருக்கு ஆலோசனை கூறினேன். அவரும் சம்மதித்தார். நான் ஏற்கனவே பெண்களுக்கான சாறிபிளவுஸ், சட்டைகளை தைத்து வந்தேன். எனவே அது தொடர்பிலான ஒரு தொழிலை செய்வது பற்றியே சிந்தித்தேன். பக்கத்து கடைக்குப் போய் பெண்களுக்கான கைப்பைகள் இரண்டு வாங்கி வந்து அதன் தையல்களைப் பிரித்துப் பார்த்தேன். ஒவ்வொரு தையலாக பிரித்து பார்த்து அதன்படி தைக்க முயற்சித்தேன். இறுதியில் அது வெற்றியளித்தது.

வீட்டில் தையல் மிஷினின் உதவியுடன் கைப்பைகள் தயாரிக்கும் காட்சி... 


இப்பொழுது நாம் பல்கலைக்கழக, பள்ளிக்கூட மாணவிகளுக்கும், வேலை செய்யும் பெண்களுக்கும், வீட்டுப் பெண்களுக்கும் பொருத்தமான கைப்பைகளையே அதிகம் தயாரித்து வருகிறோம். 25 வகைக்கும் மேலான கைப்பைகள் தயாரித்தாலும் சந்தையில் 5 வகையான கைப்பைகளே அதிகம் விற்பனையாகிறது.

எமது உடுவில் பிரதேச செயலகமும் எங்களை பல்வேறு வழிகளிலும் ஊக்குவித்தது. முதலில் நிலத்தில் வைத்து தான் கைப்பைக்கான அளவுகளை வெட்டுவேன். எனது நிலையைப் பார்த்த பிரதேசசெயலக அதிகாரிகள் அலுமாரி, தையல்மிஷின், றாக்கைகள் போன்றவற்றை தந்துதவினார்கள். கண்காட்சிகள் நடாத்தும் போது எனக்கும் அறிவிப்பார்கள். அவை தான் எனது உற்பத்திப் பொருட்களை பலரிடம் சென்றடையவும் வைத்தது. இறுதியாக நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் கலந்து கொண்டேன். அதிலும் பல்வேறு வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் கிடைத்தன. குறிப்பாக எங்கள் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் மக்களும் எனது கைப்பைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

எங்களுக்கு இப்போது பிரதான பிரச்சினையாக உள்ளது இடவசதி தான். சீமெந்திலான கொட்டகையும், தையல் உபகரணங்களும் ஏற்பாடு செய்து கொடுத்தால் இன்னும் இரு மடங்கு கூடுதலாக பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். நான் சாதாரண தையல் மெசினில் தான் இவ்வளவு
கைப்பைகளையும் தயாரித்து வருகின்றேன். கைப்பைகள் தைப்பதற்கென்று சிறப்பு மெசின்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கினால் இன்னும் வினைத்திறனுடன் இந்தத் தொழிலைக் கொண்டு
நடத்தலாம்.

சரியான விலைக்கு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தலிலும் சிக்கல்களை எதிர்நோக்கிறோம். எனது கூலியையும் சேர்த்து இலாபத்துடன் வருமானம் சற்றக் குறைவாகத்தான் கிடைக்கிறது. அதனை வைத்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது. ஆனால்
உற்பத்தியை இன்னும் பெருக்கி அதிக லாபத்தை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

என் போன்று கஷ்டப்படும் ஏனைய பெண்களுக்கும் இதனைக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். என சமூக அக்கறையுடன் கூறி முடித்தார்.

சிறுதொழில் முயற்சியாளர் நிர்மலா தயாரிக்கும் கைப்பைகளில் சில.... 


எமது தேசத்தில் இப்படி ஆயிரம் நிர்மலாக்கள் இருக்கிறார்கள். உள்ளூரில் எமது பெண்கள் இந்த உற்பத்திகளை வாங்கிப் பயன்படுத்துவதால் எமது தொழில் துறைகள் பன்மடங்கு வளர்ச்சியடையும்.

போர் முடிந்த இந்த காலப்பகுதியில் அதிகம் உருவாகியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இப்படியான சுயதொழில் முயற்சிகள் நிறைந்த பலனைத் தரும்.

அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க சிறிய முதலீடுகளே இன்று தேவைப்படுகின்றன.

அவற்றை வழங்கி ஊக்குவித்தால் சிறுகைத்தொழில் முயற்சிகள் வளரும் போது எமது தேசத்தின் பொருளாதார பலம் அதிகரிக்கும். தமிழர்கள் பொருளாதாரத்தில் மேலும் பலமடைவர்.

உற்பத்திகளை வாங்க, ஆலோசனைகளுக்கு நிர்மலாவின் கைபேசி எண்: 0094 774 585094

துருவன்-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-




No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.