ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி


உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று இடம்பெற்ற தமிழ்மக்கள் பேரவையின் கருத்துப் பகிர்வில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைவிரிவுரையாளர் கு.குருபரன் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சி அடிப்படையில் தான் தீர்வு என்று திரும்பத் திரும்ப சொல்கின்றார்கள். ஆனால் எம்மத்தியில் எங்களுடைய தலைவர்கள் அவர்கள் ஒற்றையாட்சியை தாண்டி வந்துவிட்டார்கள் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்வி எழுகின்றது.

பொறுப்புக்கூறலாக இருந்தாலும், அரசியல் தீர்வாக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேனவினால் ராஜபக்~வால் வகுத்த எல்லைகளை தாண்டி வரமுடியவில்லை. ஏனென்றால் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை தக்கவைக்க வேண்டும் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த எந்த நிலைப்பாடுகளை எடுத்தாரோ அதே நிலைப்பாடுகளில் இருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை என்று சொன்னால் தான் தாங்கள் தொடர்ந்தும் அரசியலில் நிலைக்கலாம் என அவர்கள் நம்புகின்றார்கள்.

இங்கு சிறிய நிலம் விடுவிக்கப்பட்டாலும், விடுவிக்கப்படவில்லை என்றே தெற்கில் இன்றைய அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது. இதற்கு காரணம் ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராமல் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் ஆழமாக பார்த்தால் இது ராஜபக்ஸ வகுத்த எல்லை கூட அல்ல, சிங்கள பௌத்த கருத்தியல் காலம் காலமாக வகுத்து வைத்துள்ள எல்லை. ஆகவே ஒற்றையாட்சி என்ற பதத்தில் தொங்கிப் பிடித்து நிற்பது சிங்கள பௌத்த அரசியல்வாதிகள்தான்.

இந்த கட்டத்தில் புதிய அரசியலமைப்பு முயற்சி ஒன்றை செய்து முடித்து விட்டோம் என வெளிநாடுகளுக்கு காட்டும் தேவை உள்ளது. இதனால் தான் புதிய அரசியலமைப்பை “ஒற்றையாட்சி என்றும் சொல்ல வேண்டாம். சமஷ்டி என்றும் சொல்ல வேண்டாம். உள்ளடக்கத்தில் என்ன உள்ளது என்று பார்ப்போம்” என எமது தமிழரசியல் தலைமைகள் கூட கூறுகின்றனர். நாங்கள் போண்டாவை சாப்பிட்டு விட்டு வாய்ப்பன் என்று கூற முடியாது. அதே போன்று வாய்ப்பனை சாப்பிட்டு விட்டு போண்டா என்று கூற முடியாது.

ஒரு பண்டத்தை செய்து அதனை சிங்கள மக்களுக்கு ஒற்றையாட்சியாகவும், தமிழ் மக்களுக்கு இதில் சமஷ்டியின் கூறுகள் உள்ளன என்றும் விற்க நினைக்கின்றனர். படிப்படியாக சமஷ்டிக்குப் போகலாம் என கூறுகின்றனர்.  ஒரே பண்டத்தை இருவேறாக விற்கும் இராஜதந்திரத்தில் தான் எங்களது தமிழ் தலைமைகள் உள்ளன. லேபில்கள் முக்கியமில்லை உள்ளடக்கத்தில் இருப்பதுதான் முக்கியம் என்றால், உள்ளடக்கத்தில் இருப் பதை ஏன் வெளிப்படையாக கூற முடியாது? லேபில் இல்லாமல் சிங்களத்தில் ‘ஏக்கிய’ என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர்நீதிமன்றம் என்ன சொல்லும்? ஒற்றையாட்சியின் கருதுகோளாகதான் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது. இது எங்களுடைய வரலாறு.

சமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்று இரண்டுமே இல்லாவிட்டாலும் அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் என்பது நாங்கள் அறிந்த வரலாறு.  ஆகவே தான் உள்ளடக்கம் நல்லா இருந்தாலும் தலைப்பு அவசியம் என்று வலியுறுத்துகின்றோம். உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டுள்ளது என ஒரு தரப்பு பரப்புரை செய்து வருகின்றது. ஆனால் அந்த தீர்ப்பில் கடைசி பந்தி தான் நீதிபதியின் தீர்ப்பாக உள்ளது.

இந்த வழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் தோன்றிய சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தில் மட்டும் தான் உள்ளக சுய நிர்ணயம் என கூறியுள்ளார்கள். இது கனடா உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளக சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக இல்லை என்பது அந்த தீர்ப்பை பார்த்தால் தெரியும். சமஷ்டி என்று வந்தாலும் உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சி கூறுகள் இருக்கலாம் எனறே தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த தீர்ப்பை கவனமாக பார்த்தால் உள்ளக சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தவறான கருத்தாகும்.  இரண்டாவது, ஒற்றையாட்சி சமஷ்டி என்ற பதங்கள் இல்லாமல் வரக்கூடிய அரசியலமைப்பு கிட்டத்தட்ட 13ஆம் திருத்தசட்டத்தை ஒத்ததே. புதிய  அரசியலமைப்பு  வெறுமனே ஒற்றையாட்சி என்ற பதத்தை கொண்டிருக்கவில்லை என்பதனால் மாத்திரமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா என்பது தொடர்பில் கவனமாக பதில் கூற வேண்டும்.


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.