இனப்படுகொலைக்கு எதிரான நீதியே தீர்வின் அடிப்படை
தமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்து 05.09.2017 அன்று நடந்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் பங்கேற்று அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள்:
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆகிய மூவினத்தவரும் இந்த தீவின் சக நிர்மாணிகள் என்பதை ஏற்றுக்கொள்வதில் இருந்து தான் யாப்பு மீள வரையப்பட வேண்டும். மூவினத்தவரையும் சகநிர்மாணிகளாக ஏற்றுக்கொள்ளும் போது தான் பல்லினத்தன்மை மிக்கதாகவும் இறந்த காலத்தில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் அமையும்.
தமிழ் பேசும் மக்களை சக நிர்மாணிகளாக ஏற்பது அவர்களை தேசிய இனமாக ஏற்றுக்கொள்வதில் இருந்து தான் தொடங்குகிறது. ஒரு தேசமாக சிந்திப்பது என்பது ஒரு தேசிய இனம் தனது அடிப்படை மூலக்கூறுகளை பாதுகாத்துக் கொள்வதுதான்.
மன்னர் அதிகாரத்திலிருந்து மக்கள் அதிகாரம் தோற்றம் பெற்ற பொழுது தேசம், தேசியம் போன்ற சொல்லாடல்கள் தோற்றம் பெற்றன. தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரளைக் குறிக்கும். தேசியம் எனப்படுவது ஒரு பெரும் திரளாக கூடும் மக்கள் கூட்டத்தை குறிக்கும். ஈழத்தமிழரைப் பொறுத்தவரை தேசியம் என்பது ஏற்கனவே இருந்த ஒரு மனோநிலை. தேசியமாக சிந்திக்கும் போது நீங்கள் வேறுநாடு, நாங்கள் வேறு நாடு தான் என்று தான் சிந்திக்கிறோம். இதை நாம் பகை நிலையில் இருந்து சொல்லவில்லை.
ஒரு தேசிய இனத்தின் தேசிய மூலக்கூறுகளை பாதுகாக்கும் நிலைமைகளை அழிப்பது தான் இனப்படுகொலை என்கிறோம். அது வெளிப்படையான இனப்படுகொலையாகவம் இருக்கலாம். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையாகவும் இருக்கலாம். ஈழத்தமிழர்கள் ஒரு வெளிப்படையான இனவழிப்பை கடந்து வந்திருக்கிறார்கள். இப்பொழுது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் நிற்கிறார்கள். இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலைக்கு உள்ளாகிய மக்கள் நாங்கள்.
எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதி தான். அதுவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமைய முடியும.; ஆனால் இந்த அடிப்படையிலிருந்து விலகித்தான் யாப்பு உருவாக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இங்கே யாப்பு உருவாக்கம் முதல் கோணல் ஆகிவிட்டது. இனப்படுகொலைக்கு எதிரான நீதியில் இருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை பிரித்தெடுத்து விட்டார்கள். அதனை வெறுமனே யாப்பு உருவாக்க முயற்சிகளாக சுருக்கிவிட்டார்கள். அந்த அடிப்படையை நாங்களே பிரித்துக் கொடுத்து விட்டோம்.
அதாவது போர்க்குற்ற விசாரணையானது அனைத்துலக விசாரணையில் இருந்து கலப்பு விசாரணையாக இறங்கி இப்பொழுது உள்நாட்டு விசாரணையாக வந்து சில நாட்களுக்கு முன் நமது தளபதிகளில் யாரும் கை விடமாட்டோம் என பேசும் நிலைக்கு வந்து விட்டது. இப்படி யென்றால் இனப்படுகொலைக்கு எதிரான நீதியையும் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் இணைக்க முடியாத ஒரு நிலைமை வந்து விட்டது என்றே கூறலாம்.
இனப்படுகொலைக்கு எதிரான நீதி என்பது என்ன? தமிழ் மக்களை ஒரு தேசமாகச் சிந்திப்பதுக்குரிய அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது. ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய மூலக்கூறுகளை பாதுகாப்பது அந்தத் தீர்வுதான். இனப்படுகொலைக்கு எதிரான நீதி நாங்கள் இனிமேலும் கொல்லப்படமாட்டோம், காணாமல் ஆக்கப்படமாட்டோம், காரணமின்றி கைது செய்யப்படமாட்டோம் என தமிழ் மக்கள் நம்பவேண்டும். ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் நாங்கள் சிறிதுசிறிதாக கொண்டு அழிக்கப்படமாட்டோம் என தமிழ் மக்கள் நம்பவேண்டும். அப்படி நம்பக் கூடிய ஒரு தீர்வு வரும் பொழுது தான் இந்த தீவின் சக நிர்மாணிகளாக நாம் பலம் அடைய முடியும். எனவே தமிழ் மக்களுடைய அடிப்படை கூறுகளைப் பாதுகாக்கும் ஒரு தீர்வு வேண்டும்.
ஒரு யாப்பை உருவாக்குவதற்கு முதல் சம்பந்தப்பட்ட மக்களுக்கிடையே சமாதான உடன்படிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான சமாதான உடன்படிக்கை எதுவும் செய்யப்படவில்லை. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான வலுசமநிலை தான் நாட்டில் இருந்தது. அந்தவலுச் சமநிலை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலோடு மாற்றக்கூடிய ஒரு நிலைமை வந்தது. தமிழ் மக்களின் வாக்குப் பலத்துடன் தான் அந்த வலுசமநிலை குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடைந்தது. அதை தெரியப்படுத்தும் வகையில் மூவின மக்களுக்கும் இடையில் முக்கூட்டு உடன்படிக்கை மீது யாப்பைக் கட்டி அமைத்திருக்கலாம்.
ஆனால் அவ்வாறான ஒரு உடன்படிக்கை செய்யப்படவில்லை. அவ்வாறான ஒரு பின்னணிக்குள் தான் தமிழர்களுடைய தேசிய மூலக்கூறுகளை நீர்த்துப்போகச் செய்கின்ற யாப்பு உருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் யாப்பு உருவாக்கம் தமிழ் மக்களுடைய தேசிய அடிப்படைகளை பலப்படத்தும் ஒன்றாகத் தெரியவில்லை. அது வெளிப்படையாக நடக்கவில்லை. இந்த யாப்பு முயற்சிகள் ஒரு கற்பனைக் கதையாகவம் இருக்கலாம்.
எங்களை சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொள்ளாத யாப்புக்கு வாக்களிப்போமாக இருந்தால் நாங்கள் அதிலிருந்து மீண்டெழுவதற்கு பல காலம் எடுக்கும். அதுவே இன்னும் ஒரு பொறியாக மாறும். இதை தடுக்க மக்கள் விழிப்படைய வேண்டும். உங்களை ஒரு தேசமாக உணர வேண்டும். தேசிய மூலக்கூறுகளைப் பலப்படுத்த வேண்டும்.
நாங்கள் சக்தி மிக்க மக்கள். மிகப்பெரிய தமிழகம் எமது அருகில் உள்ளது. நிதிவளம் பொருந்திய புலம் பெயர் எமக்கிருக்கிறது. வலிமை மிக்கவர்கள் நாங்கள். ஆயிரமாக எங்கும் வளர்ந்துள்ளோம். இனப்படுகொலைக்கு பின்னரும் எழுந்திருக்கும் தையிரியம் எமக்கு உண்டு. நாங்கள் எழுவோம்.
எங்களுக்குத் தேவை எமது பலத்தை ஒருங்கிணைக்கும் தலைவர்கள். தமிழ்த் தேசியத்தை, தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ளாத இடத்தில் முழு இலங்கை தேசத்தையும் கட்டியெழுப்ப முடியாது. தமிழ், முஸ்லிம் மக்களை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் முழு இலங்கைக்குமான தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.
தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கும் ஒருநிலையில் சிங்கள மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. தமிழ் மக்களின் கூட்டுரிமை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் சிங்கள மக்களும் தமது கூட்டுரிமையை அனுபவிக்க முடியாது. இலங்கைத்தீவில் அமைதியை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் தமிழ் மக்களை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தொகுப்பு: விக்னேஸ்வரி-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-
Post a Comment