அதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்


தமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

அரசியலமைப்பு விடயத்தில் பெரும்பான்மையினர் முகத்தைச் சுளிப்பார்கள் என்பதால் எமது தேவைகளையும், முன்னுரிமைகளையும், அபிலாசைகளையும், நோக்குகளையும் மூட்டை கட்டி வைக்க வேண்டுமா?

அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன். ஒரு மத்திய அமைச்சர் வடமாகாணத் திணைக்களம் ஒன்றிற்குச் சில நிதி உதவிகள் செய்து அந் நிதியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. அதனைத் திறக்க இருக்கும் போது அதற்கு ஒரு சிங்களப் பெயர் வைக்க வேண்டும் என்றார் அமைச்சர். எமது அலுவலர்கள் அதற்கென்ன என்று கூறி அனுமதித்து விட்டனர். அமைச்சர் வந்து கட்டடத்தைத் திறக்க நாள் நேரமும் குறித்தாகி விட்டது. அப்போது தான் இது பற்றி எனக்குத் தெரிய வந்தது. “ஏன் சிங்களப் பெயரை எமது மாகாணத்தில் கட்டிய கட்டடத்திற்கு வைக்கச் சம்மதித்தீர்கள்?” என்று கேட்டேன். “அவர்கள் தந்த பணந்தானே! அதனால் தான்” என்றார்கள். “பணம் தரும் போது உங்கள் கட்டடத்திற்கு சிங்களப் பெயர் தான் வைக்க வேண்டும். இல்லையேல் பணம் தரமுடியாது என்று கூறினார்களா?” என்று வினவினேன். “இல்லை” என்றார்கள். “அப்படியானால் அவர்கள் பணம் தந்தபடியால் அவர்கள் கூறும் பெயரை வைக்க உங்களுக்கு ஒரு கடப்பாடு இருப்பதாகக் கூறுகின்றீர்களே” என்றேன். “முன்னரே சலுசல, ஒசுசல என்று பல பெயர்கள் வழக்கில் இருக்கின்றன தானே?” என்றார்கள். “அப்போது எமது மக்களின் பிரதிநிதிகள் இருக்கவில்லை. உங்களைப் போன்ற அலுவலர்கள் தான் இருந்திருப்பார்கள். நீங்கள் இப்போது சிந்திப்பது போலத் தான் அப்போதும் அலுவலர்கள் சிந்தித்திருப்பார்கள். அதை வைத்து இப்பொழுது எமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும் போது அவ்வாறான ஒரு செயலுக்குச் சம்மதம் தெரிவிப்பது ஒரு பிழையான காரியம் அல்லவா?” என்றேன். பதிலில்லை.

ஆனால் அடுத்த நாள் மத்திய அமைச்சரே தொலைபேசியில் என்னுடன் பேசினார். “நாங்கள் நாடு பூராகவும் இதே பெயரைத் தான் இப்பேர்ப்பட்ட கட்டடங்களுக்கு வைக்கின்றோம். நீங்களும் அதற்கு உடன்பட வேண்டும”; என்றார். “ஏன் அதற்கு உடன்பட வேண்டும்?” என்று கேட்டேன். இது ஒரே நாடு. பெயர்களில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்றார். நான் சிரித்துவிட்டு  “நாடு ஒன்றுதான். ஆனால் நாங்கள் வேறு, நீங்கள் வேறு, உங்கள் மொழி வேறு, எங்கள் மொழி வேறு, உங்கள் மதம் வேறு, எங்கள் மதம் வேறு, உங்கள் வாழ்க்கை முறை வேறு, எங்கள் வாழ்க்கை முறை வேறு. இதற்காகத் தானே நாங்கள் சம~;டி அடிப்படையிலான ஒரு அரசியல் யாப்பிற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்கள் தனித்துவத்தை நீங்கள் மதிக்க வேண்டும”; என்றேன். அவர் ஒன்றும் கூறவில்லை. ஆனால் திறக்க அவர் வரவுமில்லை. அந்தக் கட்டடம் இன்னமும் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவில்லை என்றே நம்புகின்றேன்.

இங்குதான் நான் முதல் எழுப்பிய கேள்விக்கான பதில் மறைந்துள்ளது. மற்றவர்கள் முகத்தைச் சுளிப்பார்கள் என்பதால் நாம் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்தால் இருபது வருடங்களில் எல்லாமே ஒசுசல, லக்சல, சலுசல ஆகிவிடும். எம்முட்சிலர் இவை யாவும் மரங்கள் தானே என்று பார்க்கின்றோம். ஆனால் இந்த மரங்கள் உள்ள வனத்துள் நுழைந்துவிட்டோம் என்பதை அறியாமல் இருக்கின்றோம். பின்னர் கொடிய காட்டு மிருகங்களுடன் போராட நேர்ந்திடும் என்பதை உணராமல் இருக்கின்றோம். “அதற்கென்ன! இன்று ஒரு சலுசல என்று பெயர் வைத்தால் குடியா முழுகிப் போய்விடும்?” என்று சிலர் கேட்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் “ஆம்! எமது தமிழ்ப்பேசுங்குடியே முழுகிப்போய்விடும்” என்பதே.

அடுத்த கேள்வி பெயரில் என்ன இருக்கின்றது என்பது. எங்களுக்குத் தேவை அதிகாரப்பரவல். அது ஒற்றையாட்சிக்குள் வந்தால் என்ன, சம~;டி என்ற ஒரு பெயர் தாங்காத ஓர் அலகின் கீழ் வந்தால் என்ன என்று சிலர் கேட்கின்றார்கள். இங்குதான் சட்டத்தைப்பற்றியும் உச்ச நீதிமன்றத்தைப் பற்றியும் சற்றுச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

எவ்வளவு அதிகாரப்பரவல்கள் ஒற்றையாட்சியின் கீழ் பெறப்பட்டாலும் அது “கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி” என்ற நிலைக்கு எத்தருணத்திலும் வரமுடியும் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது.

ஒரு தந்தையார் மகனுக்கு கைப்பைக்காசு வாராவாரம் கொடுத்து வருகின்றார். ஏதோ காரணத்திற்காக அவர் கொடுக்காமல் விடுகின்றார். மகன் அப்படி உங்களால் செய்யமுடியாது கொடுத்தே ஆகவேண்டும் என்கின்றான். அது எனது முடிவு என்று தந்தையார் கூறுகின்றார். மகன் உச்ச நீதிமன்றம் சென்றாலும் அதே பதில் தான் கிடைக்கும். அதாவது தனது நல்லெண்ணம் காரணமாகவே கைப்பைக்காசை தந்தை மகனுக்குக் கொடுத்தார். அதை நிறுத்த தந்தைக்குரித்துண்டு என்று கூறுவார்கள். தந்தையார் தாயாரிடம் கொடுத்து தாயார் மகனுக்குக் கொடுக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். இது ஒருவித பெயர் குறிப்பிடாத சமஷ்டி என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் உச்ச நீதிமன்றமோ இது ஒற்றையாட்சியின் ஒரு பரிமாணமே என்று தான் பதில் சொல்லும். எங்களுடைய பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் இந்த வகையைச் சேர்ந்தது. தாயார் போல் ஆளுநர் இருந்தாலும் இயக்குவது தந்தையான அரசாங்கமே.

ஆகவே பெரும்பான்மையினரின் தற்துணிபின் பேரில் அவர்கள் அடக்கியாளக்கூடிய அதிகாரத்துடன் தயாரிக்கப்படுகின்ற எந்த ஒரு அரசியல் யாப்பும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை அளிக்கமாட்டாது. மாறாக முற்று முழுதாக சட்டப்படி வர்ணிக்கப்பட்டு தமிழர்க்குத் தரப்படும் அதிகாரங்கள் திரும்பிப்பெற முடியாதவையாக இருந்தால்த்தான் நாம் எதிர்காலத்தில் சுதந்திரமாக வாழமுடியும். நாங்கள் பிரிந்து போவோம் என்ற அச்சம் சிலரால் வெளிப்படுத்தப்படுகிறது.பிரிந்து போகாது இருக்க வேண்டுமானால் அதற்கு உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கலாம். இந்தியா, இங்கிலாந்து என்று எந்த நாட்டிடமும் கோரி எம்முடன் உடன்படிக்கையின் மூலம் பிரிவினைக்கெதிரான ஒரு உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் எக்காலத்திலும் எம்மை நாமே ஆள வழிவிடுங்கள் என்பதே எமது கோரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டிக் கோரிக்கை என்பது இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்த ஒரு சில ஆண்டுகளிலேயே தந்தை செல்வநாயகம் அவர்களால் சம~;டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இச் சம~;டிக் கோரிக்கையினை 65 வருட காலமாகத் தொடர்ந்து தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எம்மை நாமே ஆளும் சம~;டித் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது தமிழர் தலைமைகளுடைய கடமையாகும்.

அதைவிடுத்து வெறுமனே அரைகுறைத் தீர்வினை ஏற்றுக் கொள்வது எக்காரணத்தைக் கொண்டும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. பிரச்சினையைத் தீர்ப்போம் எனக் கூறிக் கொண்டு ஒரு பெயரில் என்ன இருக்கின்றது என்று கூறிக் கொண்டு குறைந்தளவு அதிகாரப் பரவலாக்கம் ஒன்றுடன் இணங்கிச் செல்வதை விட தமிழ் மக்களின் அபிலாசைகளையும் அவர்களது நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும் முன்வைத்து உரிய தீர்வு வரும் வரை சளைக்காது முன்னெடுத்துச் செல்வது அவசியமானதொன்று.
   
மேலும் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை அடைவதற்காக இதுவரை விலைமதிப்பற்ற தியாகங்களைச் செய்ததுடன் பல்வேறு இழப்புக்களையும் சந்தித்து வந்துள்ளனர். இத்தகைய நிலையில் தமிழ் மக்களது நீண்ட நாளைய அபிலாi~களையும் கோரிக்கைகளையும் இடை நடுவே கைவிடுவதற்கு எந்தவொரு தனிப்பட்ட தலைவருக்கோ அரசியல் கட்சிக்கோ அல்லது அமைப்புக்கோ உரித்தில்லையென நான் கருதுகின்றேன்.

மூன்றாவது முஸ்லீம்கள் பற்றியது. அண்மையில் மட்டக்களப்பில் “எழுக தமிழ்” கூட்டம் முடிவடைந்த பின்னர் முஸ்லீம் பள்ளிவாசல்கள் பலவற்றின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடந்தது. முஸ்லீம்கள் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிர் என்று சிங்கள மக்களும் தமிழ் மக்களில் சிலரும் கூறிக்கொண்டு திரிந்தாலும் உண்மையான பாரம்பரிய தமிழ் பேசும் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை என்பதை அந்தக் கூட்டத்தின் போது தெரிந்து கொண்டோம். முஸ்லீம் மக்களுக்கு ஒரு போதுமான அலகைக் கொடுத்தால் வடகிழக்கு இணைப்புக்குத்தாங்கள் ஆட்சேபணை இல்லை என்ற விதத்திலேயே அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. இதனை நாம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பூகோள அரசியல் எம்மைத்தாக்குவது பற்றி ஆராய வேண்டும். இது மிக நுணுக்கமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம். மகிந்த இராஜபக்சவை வெளியேற்றியதில் வெளிநாட்டுச் சக்திகளின் பங்கேற்பு வெகுவாக இருந்தது. நாம் எமது உள்@ர் அரசியல் சிந்தனைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்க பிற நாடுகள் தமது நாட்டு நலன் விரும்பி நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

பயங்கரவாதச் தடைச்சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இன்னமும் எமது இளைஞர்கள் வழக்குப் பதியப்படாமல் சிறைக்காவலில் இருக்கின்றார்கள். குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றையே வைத்து குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்களும் அரசியல் ரீதியாகக் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு நீண்ட கால சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இராணுவம் குறைக்கப்படவில்லை. போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படவில்லை. காணாமல் போனோர் பற்றி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இப்படி இல்லை இல்லை என்று அரசாங்கம் செய்யாதவற்றைப் பட்டியல் போட்டுக்கூறலாம். ஆனால் மிக முக்கியமான தொன்றுண்டு. சர்வதேச உள்ளீட்டுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதே அது.

எமது இராணுவ வீரர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், அவர்களுக்கெதிராக விசாரணை செய்ய விடமாட்டோம் என்று அமைச்சர்களும் ஜனாதிபதியும் அடித்துக் கூறும் போது தமது இராணுவ வீரர்கள் யுத்த குற்றங்களில் கட்டாயமாக ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார்கள். அது எமக்கு சார்பாக அமைகின்றது.

தற்போது தளபதி சரத் பொன்சேகா அவர்கள் ஜகத் ஜயசூரிய என்ற முன்னைய இராணுவத் தளபதி யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டார் என்பது பற்றி சாட்சியம் அளிக்கப்போவதாக பகிரங்கமாகக் கூறியுள்ளார். ஆகவே குற்றவாளிகள் தாமாகவே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். எனவே தான் சர்வதேச நீதிபதிகளுடன் யுத்தக் குற்ற விசாரணையானது விரைவில் நடைபெற வேண்டும் என்று கோருகின்றோம். ஜனாதிபதி தமது போர்வீரர்களை எப்படியும் காப்பாற்றுவோம் என்று கூறும் போது உள்ளூர் நீதிபதிகள் உரியவாறு நீதியைப் பெற்றுத் தருவார்கள் என்று நாங்கள்எப்படி எதிர்பார்க்க முடியும்? அதேபோல் காணாமல் போனோரின் விடயமும் இதனோடு சம்பந்தப்பட்டதே. குற்றம் இழைத்தவர்கள் தப்பிக்கவிடக்கூடாது. இன்றிருக்கும் நிலையில் காணாமல்ப் போனோர் பற்றி இந்த அரசாங்கம் எந்த ஒரு திடமான நடவடிக்கையையும் எடுக்காது என்பது தெளிவாகத் தெரிகின்றது. எமது மக்களின் தொடர் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் போன்றவை அவர்களிடம் எந்தவிதப் பலனையும் அளிக்கவில்லை. ஆகவே சர்வதேச உள்ளீடல்களுடனான விசாரணை ஒன்றே எமக்கு நீதியைப் பெற்றுத் தரும். உண்மையை வெளிக் கொண்டுவரும்.

அரசியல் யாப்பைப் பொறுத்த வரையில் எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் எமக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். 98 வருடங்களுக்கு முன்னர் 1919ம் ஆண்டில் பிரதேச பிரதிநிதித்துவம் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால்த்தான் சிங்கள மக்களின் பெரும்பான்மைக் குணவியல்பு எம்மை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கவைத்தது. அதுவரையில் இன ரீதியான பிரதிநிதித்துவமே வெள்ளையர் காலத்தில் இருந்து வந்தது. அதாவது ஒவ்வொரு இனத்திற்கும் ஓரிருவர் பிரதிநிதித்துவம் அளித்தார்கள். பிரதேச பிரதிநிதித்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது கூடிய பிரதேசங்கள் சிங்கள மக்கள் சார்ந்து இருந்ததால் அவர்களின் தொகை பெரும்பான்மையாகி அக் காலகட்டத்தில் இருந்து சிங்களப் பெரும்பான்மை ஆதிக்கம் எம்மைச் சூழ்ந்து கொண்டது.

பெரும்பான்மைத் தீர்மானம் என்பது ஒரே விதமான ஒரே மக்களின் நடுவே ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதொன்று. வெவ்வேறு விதமான மக்களினிடையே, பல்லின, பன்மொழி, பல்சமய மக்களிடையே, பெரும்பான்மைத் தீர்மானம் என்பது சிறுபான்மையினரைக் கட்டுப்படுத்தும் கைவிலங்காய் மாறிவிட வாய்ப்பிருக்கின்றது. இதை அறிந்தே ஆங்கிலேயர்கள் முதல் அரசியல் யாப்பில் பிரிவு 29ஐ உள்ளடக்கி சிறுபான்மையினருக்குத் தகாத எந்த ஒரு சட்டத்தையும் பெரும்பான்மையினர் கொண்டுவந்து அவர்களுக்கு இடர் விளைவிக்கக் கூடாது என்று கூறினார்கள்.

ஆனால் 1956ம் ஆண்டில் அந்த சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டுவரப்பட்டது, அது பிரிவு 29ன் ஏற்பாடுகளுக்கு முரணாக அமைந்தது. அந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி “சிங்களம் மட்டும்” சட்டம் சட்ட வலுவற்றது என்று கோடீஸ்வரன் வழக்கில் டிக்ரெட்சர் என்ற நீதியரசர் தீர்ப்பு வழங்கினார். அதனை மேன்முறையீடு செய்து பின்னர் கோமறைக்கழகம் என்ற ப்ரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்து அரசாங்கம் காலத்தைத் தாக்காட்டிக் கொண்டிருந்த போது தான் 1972ம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டது. அதிலே தான் பெரும்பான்மையர் பலம் பதிக்கப்பட்டது. அதற்குதவியவர் மாணவர்களாக நாங்கள் இருந்த போது எமது மதிப்பிற்குரியவராக விளங்கிய கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா அவர்கள். அந்த அரசியல் யாப்புடன் அவர் மீதிருந்த எமது மதிப்பு யாவும் சரிந்துவிட்டது, கரைந்துவிட்டது. ஒரு மொழி என்றால் இரு நாடுகள் இரு மொழி என்றால் ஒரு நாடு என்று 1956ல் கூறிய தீர்க்கதரிசி கலாநிதி கொல்வின்ஆர்டிசில்வா அரசியல் காரணங்களுக்காகப் பெரும்பான்மையினரின் சார்பு நபராக மாறியமை எம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. பதவி மோகமே இதைச் செய்தது என்று கூறலாம். அதே பதவி மோகம் எமது தமிழ்த் தலைவர்களையும் பீடிக்கக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை.

அதைத் தந்து இதைத் தந்து எம்மை வாங்கிப்போடுவது தெற்கத்தையருக்குக் கைவந்த கலை. தந்து தந்து கவிழ்க்கக்கூடியவர்கள் அங்குள்ள அரசியல் வாதிகள். நாங்கள் எமது கோரிக்கைகளில் மிகவும் விழிப்பாக, மிகவும் கெட்டியாக இருக்காவிட்டால் எம்மைத் தம்வசம் மாற்றி விடுவார்கள். அறிவு வேறு, சாமர்த்தியம் வேறு என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எம்மிடம் அறிவு உள்ளது, ஆற்றல் உள்ளது. திறமை உள்ளது. ஆனால் எந்த அளவுக்கு சாமர்த்தியம் உள்ளது என்பதை நீங்களே பரிசீலித்துப்பார்த்து கொள்ள வேண்டும். சிங்கள மக்கட் தலைவர்களிடம் சாமர்த்தியம் உள்ளது. அதே போல் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமானிடம் சாமர்த்தியம் இருந்தது. ஆகவே அதை உணர்ந்து நாங்கள் எங்கள் காய்களை நகர்த்த வேண்டும். அதற்கு எமது அடிப்படைகளில் விடாப்பிடித்தன்மையும் எம்முள் ஒற்றுமையும் அத்தியாவசியம்.

நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.