நட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்?
இலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய இரு தரப்பாரும் மாறி மாறி கைகாட்டலாம். ஆனால் எவர் காரணமாக இருந்தாலும் முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் நடந்து 2009 துடன் பெரும் அழிவுடன் முடிந்துவிட்டது.
அகதிகள் எதனால் உருவானார்கள் என்றால் போரால் என்பது யாவரும் அறிந்த விடயம். போருக்கு நேரடிக்காரணமானவர்களுடன் ஈழ அகதிகள் விடயத்தில் இந்தியாவும் தொடர்புடையதாக இருக்கிறது. இலங்கைத்தீவுக்கு அருகில் குறிப்பாக தமிழகம் இருப்பதால் , போர் அதிகம் நடந்த காலங்களில் எல்லாம் அகதிகள் தமிழகம் நோக்கி வந்திருக்கிறார்கள். 1983 முதல் 2006 வரை மூன்று இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் முறையாக தாயகம் திரும்பியவர்கள். முறையற்று தாயகம் திரும்பியவர்கள், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் போக இன்று தமிழகதில் எஞ்சியிருப்பவர்கள் (முகாம்களில் 62000 முகாமுக்கு வெளியே 30000 ) சுமார் ஒரு இலட்சம் பேர்கள் மட்டுமே.
2009 போர் முடிந்து எட்டாண்டுகளுக்கு மேலாகியும் எஞ்சிய அகதிகள் குறித்து எந்த அரசுகளும் பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை என்பது அகதிகளுக்கு வருத்தமளிக்கின்ற செயலாகும். இன்று தமிழகத்தில் வாழும் அகதிகளில் 28,000 க்கும் மேற்பட்டவர்கள் மலையக மக்களாக இருந்தாலும் அவர்கள் போர்காரணமாக இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலங்கையில் பெருமளவு சொத்துகள் இல்லை என்றாலும் அவர்கள் இலங்கை குடிமக்கள்.
போர் முடிவுக்கு பின் இலங்கை குடிமக்கள் அண்டைநாட்டில் அகதியாக வாழ்கிறார்கள். அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து மறுவாழ்வு அளிக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்குரியது. போர் முடிந்து விட்டது எல்லாம் சரியாகி விட்டது என்று உலகுக்கு காட்ட நினைக்கும் இலங்கை அரசு, தன் நாட்டு மக்கள் அண்டை நாட்டில் அகதியாக வாழ்கிறர்கள் என்பதை தந்திரமாக மூடி மறைக்கிறது அல்லது பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமில்லை. இலங்கை அரசு அவ்வாறு நடந்துகொள்வது ஆச்சரியமானதில்லை.
ஈழ அகதிகள் விடயத்தில் இந்தியாவை பொறுத்தவரை, தற்போதைய நிலையில் அகதிகளுக்கு எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்பதாலும், மிகக்குறைந்த எண்ணிக்கையில் அகதிகள் இருப்பதாலும், குறிப்பாக அகதிகளால் எந்த பிரச்சனையும் இந்திய பெருந்தேசத்திற்;கு இல்லை என்பதாலும், கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. அகதிகள் தாமாகவே நாடு திரும்பட்டும் என்றும் நினைக்கிறது. தமிழக அரசைப்பொறுத்தவரை அகதிகள் விடயத்தில் எந்த முடிவும் எடுக்கமுடியாது. அகதிகள் விடயம் முழுவதும் மத்திய அரசினுடையது. தமிழக அரசின் அதிகாரத்தின்படி அகதிகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் மட்டுமே முடியும். ஆனாலும் தேர்தல் காலங்களிலும் மற்றும் அரசியல் சூழலுக்கு ஏற்பவும் அவ்வப்போது பேசியிருக்கிறது. கடைசியாக நடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வாங்கிகொடுப்பேன் என்று தேர்தல் வாக்குறிதியை அளித்தார். அவர் தற்போது இல்லை. அவர் இருந்திருந்தால் தாமதமாக என்றாலும் அகதிகளுக்கு விடிவு கிடைக்க வாய்ப்பிருந்திருந்திருக்கலாம்.
தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்பட்ட அகதிகளுக்கும் தமிழக சமூகநலத்திட்டங்களை விரிவுபடுத்தியது தமிழக திராவிட கட்சி அரசுகள் செய்த நல்ல காரியமாக கூறலாம். ஆனால் குடியிருப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் விடயத்தில் சரியாக செய்யவில்லை என்றே கூறவேண்டும்.
ஆனால் அகதிகள் தொடர் கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டமைக்கு என்ன காரணம் என்பதை ஆராயவேண்டும். அதற்கு தமிழக, இந்திய அரசை மட்டும் குறைகூறுவது சரியா என்பதையும் ஆய்விற்குட்படுத்த வேண்டும்.
இலங்கை அரசு, தமிழகம் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் அகதிகள் நிலைப்பாடு பலவாறாக இருந்திருக்கலாம். அது காலத்துக்கு காலம் மாறுபட்டும் இருந்திருக்கலாம். இலங்கை அரசுடன் நேரடிப்போரில் ஈடுபட்ட தமிழர் தரப்பு அகதிகள் விடயத்தில் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வியை நாம் மறந்துவிடலாகாது. அகதிகளை புறக்கணித்து விட்டார்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது
1983 ம் ஆண்டு அகதிகள் தமிழகம் வந்தார்கள் இந்திய இராணுவம் இலங்கை சென்றதுடன் அவர்களும் தாயகம் திரும்பிவிட்டார்கள். அதன்பின்பு இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியதும் 1990 இன் நடுப்பகுதியில் யாழ்கோட்டையில் இரண்டாம்கட்ட போர் ஆரம்பமானது. அதைத்தொடர்ந்துதான் பெருவாரியான அகதிகள் முன்பைவிட அதிகமாக தமிழகம் வர ஆரம்பித்தார்கள். இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்தும் அகதிகள் வந்திருந்தாலும் அதிகமாக வடபகுதியிலிருந்துதான் அகதிகள் வந்தார்கள். அந்தகாலகட்டத்தில் புலிகளின் அதிகாரம் தமிழர்பகுதியில் கணிசமாக இருந்தது. இலங்கை அரசு அகதிகள் வெளியேறுவதை விரும்பவில்லை. அதனால் கடலில் அகதிகள் வந்த படகுகளை கடலில் மூழ்கடித்தது. ஆனால் புலிகள் அகதிகள் இந்தியாவை நோக்கி போவதை தடுக்கவில்லை.;
அதேவேளை இந்தியா அரசியல் காரணத்திற்காகவோ, மனிதாபிமான அடிபடையிலோ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. நடுக்கடலில் தத்தளித்த அகதிகளையும் காப்பாற்றி இருக்கிறது. இந்தியா அவ்வாறு நடந்ததுக்கு காரணம் இருக்கலாம். புலிகள் அகதிகளைத்தடுக்காமல் விட்டதுக்கும் காரணம் இருக்கலாம். ஆனால் அகதிகளாக வந்தவர்களுக்கு உயிர்பாதுகாப்பு என்பதைத்தவிர வேறுகாரணம் இருக்கவில்லை.
அகதிகள் வெளியேறுவதை விரும்பாத இலங்கை அரசு அகதிகள் பற்றி அக்கறை காட்டாதது ஆச்சரியம் இல்லை. ஒருவகையில் அகதிகள் இந்தியா செல்வதை விரும்பிய புலிகள் தமிழகம் வாழ் அகதிகள் பற்றி அக்கறைகொண்டதாகவோ, பேசியதாகவோ எந்த தகவலும் அறியமுடியவில்லை. இந்தியா தவிர்த்து ஏனைய மேற்கத்தியநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களிடம் புலிகள் காட்டிய நெருக்கத்திற்கு மாறாக தமிழக அகதிகள் பற்றி பெருத்த மௌனமே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.
மேற்கத்திய நாடுகளுக்கு அகதியாகப்போனவர்கள், படித்த பொருளாதரம் உள்ள மேல்தட்டு மக்கள். அங்கிருந்துதான் போரை நடத்துவதற்கான பொருளாதார வளம் புலிகளுக்கு கிடைத்தது. தமிழகம் வந்தடைந்தவர்கள் பெரும்பாலும் படிக்காத பொருளாதாரத்தில் பின்தங்கிய கீழ்த்தட்டு மக்கள் என்பது எவ்வளவு முக்கிய காரணமோ அதைவிட முக்கியமானது 1991 நடந்த ராஜீவ்காந்தி படுகொலை. இது ஒட்டுமொத்த ஈழத்தமிழருக்குமே சாபக்கேடாக அமைந்தது. அதனால் வெளிப்படையான புலிகளின் தமிழக இந்திய தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது
அதே படுகொலைதான் அகதிகளின் குரல்வளையை மூச்சுமுட்டுமளவுக்கு நெரிக்கவும் செய்தது. சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவம், பாண்டிபஜார் துப்பாகி சூடு சம்பவத்தின் தொடர்ச்சியாக, உச்சமாக ராஜீவ் படுகொலை நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக அகதிகள் போர்வையில் ஆயுதக்கலாச்சாரம் தமிழகத்தில் இந்தியாவில் இனிமேலும் நடந்துவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு கவனம் செலுத்தியது. அதனால் அகதிகள் போர்வையில் தீவிரவாதம் தலைதூக்கக்கூடாது என்பதால் அகதிகளை முகாம்களுக்குள் முடக்கியது.
இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்தது, இந்திய இராணுவம் இலங்கை சென்றது, ராஜீவ் காந்தி யாரால் கொல்லப்பட்டார் போன்ற விடயங்கள் இன்றும் முடிவில்லாத விவாதங்களாக நடந்துகொண்டிருக்கும் விடயங்கள். அது சரியா, தவறா என்பதல்ல இக்கட்டுரையின் மையம். இலங்கைப் போரைத் தொடர்ந்து அந்த அந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகள் அகதிகளை எவ்வாறு பாதித்திருக்கின்றன என்பதே இதன் சாராம்சம். புலிகள் தமிழகம் வாழ் அகதிகள் பற்றி எப்போதாவது பேசியிருக்கிறார்களா என்று இலங்கையில் உள்ள எழுத்தாளரிடம் கேட்டேன்.
“அவர்கள் சாதிகுறித்து எப்படி வெளிப்படையாக பேசவில்லையோ அதுபோல் அகதிகள் பற்றியும் எதுவும் பேசவில்லை. தமிழக அகதிகள் தாயகம் திரும்பினால் அதனூடாக இந்திய புலனாய்வுப்பிரிவு உள்ளே வந்துவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. ஓர் அமைப்பு தமது மக்கள் குறித்து கவலைப்படுவதாக இருந்தால் அந்த மக்களின் நல்வாழ்விற்கும் எதிர்காலத்திற்கும் என்ன செய்திருக்கிறது என்று பார்க்க வேண்டும் அதுதான் முக்கியம்” என்றார்.
அதே கேள்வியை வேறு ஒரு எழுத்தாளரிடம் கேட்டேன். “அகதிகளை அனுப்புவதில் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார்கள் கடலில் பாதுகாப்பெல்லாம் கொடுத்தார்கள். அகதிகள்மீது அதிக ஈடுபாடு காட்டினால் அதனால் அகதிகளுக்கு பிரச்சனை வரலாம் என்பதால் அகதிகள் பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். அல்லது தமிழகம் வாழ் அகதிகளால் இனிமேல் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைத்திருக்கலாம். 2002 இல் தாயகம் திரும்பிய அகதிகளால் எயிட்ஸ் பரவுகிறது என்று விழிப்புணர்வு முகாம்களை புலிகளின் மருத்துவப்பிரிவு நடத்தியது.” என்றார். புலிகள் மட்டுமில்லை புலி ஆதரவு எழுத்தாளர்களும் அகதிகள் பற்றி பேசியதாகத்தெரியவில்லை
பிரயோசனம் இல்லாத எயிட்ஸ் நோயாளிகளை போர்க்களத்தில் வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும் ? அகதிகள் போர்வையில் புலிகள் இந்தியாவுக்குள் வந்துவிடகூடாதென்று இந்தியா நினைத்ததுபோல் தாயகம் திரும்பிய அகதிகளினூடாக இந்திய புலனாய்வுத்துறை வந்துவிடக்கூடாது என்று புலிகள் மருத்துவமுகாம் என்ற போர்வையில் ஆய்வு செய்திருக்கக்கூடும். மதுரை காமரஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஒரு கொலை நடந்தால் கொலை செய்தவரை சட்டப்படி தண்டிகிறது சட்டம். அதேவேளை கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் பற்றி எவரும் பேசுவதுகூட இல்லை.” என்றார். அதுபோல் போர்பற்றி அவ்வளவு பேசின நாம் அந்த போரால் பாதிக்கப்பட்ட அகதிகள் பற்றி சிறிதும் பேசுவதில்லை.
2009 போர் முடிவுக்குப்பின் ஜனநாயக முறைப்படி வடக்கில் அரசு இருக்கிறது முதல்வர் இருக்கிறார். இலங்கையின் எதிர்கட்சித்தலைவராக தமிழர் இருக்கிறார். இவர்கள் தமிழகம் வாழ் ஈழ அகதிகள் பற்றி பேசியிருக்கிறார்களா? போர் முடிந்து பத்தாண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இவர்களும் புலிகளின் வழியை பின்பற்றுவார்களேயானால் தமிழக அகதிகளின் நிலை என்ன?
எழுத்தாளர் தொ.பத்திநாதன்-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-
ஆசிரியரின் பார்வை முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் இருப்பது தெளிவானாலும், பாதிக்கப்பட்டவர்களில் முகாம்வாசிகள் அத்துனை பேருமே படிப்பறிவற்றவர்களாக சித்தரித்துள்ளமை ஒருபுறம் மனவேதனைக்கு தள்ளினாலும், கால் நூற்றாண்டுகளில் தமிழகம் உருவாக்கிய பட்டதாரிகளையும், அதனால் இன்று மேலைநாடுகளில் தங்கள் வளமான வாழ்வை ருசிப்போரையும் சற்றே குறிப்பிட்டிருந்தால், என்போன்றோருக்கு ஆசிரியரின் கட்டுரையால் மேலும் திருப்தி அளித்திருக்குமெனவும் கேட்பாரற்ற நிலையில் இலங்கையில் நான் இந்தியன், இந்தியாவில் நான் இலங்கையன் என்றநிலை உடையோருக்கு ஆசிரியரின் கட்டுரையின் இறுதியிலாவது எமக்கு ஆறுதல் அளித்திருக்குமென எதிர்பார்ப்பே அதிகமும் ஆவலுமாக முடிந்தது.
ReplyDeleteஎவ்வாறு யோசித்தாலும் ஆசிரியருக்கு நன்றிகள் பல.
ReplyDelete