எப்படி இருக்கிறது தமிழர்களின் உளநல வேர்கள்?



“உலகின் அதிகம் தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் இலங்கை  நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்தியா 16 ஆவது இடத்தில் உள்ளது. 2016 இல் இலங்கை முழுவதும் இடம்பெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை 3025 ஆக இருக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்கொலை எண்ணிக்கை 169 ஆக இருக்கிறது. இலங்கையே மோசமான உள நலத்தோடு இருக்கிறது. அதற்குள் தமிழர்களாகிய நாங்களும் மிக மோசமான உள நலத்தோடு இருக்கிறோம் என்பதனை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.”

“மனிதநேய வேர்கள்” எனும் தலைப்பில் யாழ் நாவலர் வீதியில் உள்ள TCT மண்டபத்தில் இடம்பெற்ற  நிகழ்வில் உளவள ஆலோசகர் திருமதி.கோகிலா மகேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.  இந்நிகழ்வு மனித நேயப் பணியாளர் அமரர்.பொன்னுத்துரை பாலகிருஷ்ணனின் (முன்னாள் UNHCR நிறுவன பணியாளர்) நினைவுப் பகிர்வாக கடந்த 16.09.2017 அன்று இடம்பெற்றது. இது மனிதநேயப் பணியாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

திருமதி.கோகிலா மகேந்திரன் அவர்கள் “உளநலவேர்கள்” எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்பு பேருரை வருமாறு: 
   
சர்வதேச நிறுவனமொன்றின் ஆய்வில் மனச் சோர்வு, பதகளிப்பு போன்ற உளப்பிரச்சினைகள் பரந்தளவில் காணப்படும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதில் இலங்கை தொடர்பான தகவல்கள் இல்லை. சில வேளைகளில் இலங்கை தொடர்பில் சரியான தகவல்கள் வழங்கப்படாமல் இருக்கலாம்.  ஆனால், அதிகம் தற்கொலை செய்வோர் பட்டியலை வைத்து நோக்கினால், இந்த விடயத்திலும் இந்தியாவை விட நாங்கள் முன்னுக்கு இருக்கலாம் என்பதனை ஊகித்துக் கொள்ளலாம். போதைவஸ்து பாவனை, வீதி விபத்துக்கள், வாள்வெட்டுக்களால் ஏற்படுகின்ற சமூகப் பிரச்சினைகளை நாங்கள் நித்தமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உள வைத்திய நிபுணர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லி விட்டு நாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்துவிட முடியாது. போதியளவு உள வைத்திய நிபுணர்கள் எம்மத்தியில் இல்லை. இருக்கும் சில நிபுணர்களுக்கும் தீவிர உளப்பிரச்சினைகளுக்கு மட்டுமே சிகிச்சையளிபதற்கு நேரமுள்ளது. அதற்கு அடுத்த படிநிலையில் வேலை செய்யக்கூடிய உளவளப் பணியாளர்களும் போதிய அளவுக்கு இல்லை. இதனால், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் எல்லோரும் கடமைப்பட்டிருக்கிறோம்.

சமூக சேவை செய்வது என்பது ஒருவகையில் நியூட்டனின் மூன்றாவது விதி போன்றது. நாங்கள் என்ன செய்கிறோமோ அது எங்களுக்கு திரும்பி வரும். நியூட்டன் சடப் பொருள்களுக்கு கூறியிருந்தாலும், மனிதனுக்கும் மிகச் சரியாகவே அது பொருந்துகிறது. நாங்கள் என்ன செய்கிறோமோ அதுதான் எங்களுக்கு திரும்பி வரும். நான் இவ்வளவு பேருக்கு உதவி செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றேன் என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய விடயம் இல்லை. இந்த சுய கணிப்பு உளவளத்திலே  மிகப்பெரியதொன்று. அதை பெற்றுக் கொள்கின்றவர்கள் மிக நீண்ட காலம் வாழ்கின்றார்கள். சமூக சேவைப் பணிகளிலே நீண்டகாலம் இருபவர்களது ஆயுள் நீண்டது என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. அதை நிறுவக்கூடியவர்கள் எங்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். அப்படியானவர்கள் வயது போனாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. மனம் இளமையாக இருக்கிறது. சமூக சேவை என்பது சமுதாயத்தின் நல்லெண்ணத்தை பெற்றுக் கொள்கின்ற விடயம்.

எலிகளை வைத்து ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவு என்னவென்றால், அவை கூட்டாக இருக்கும் போது ஒரு அதிர்ச்சி கொடுக்கப்பட்டால் அதனை அவைகள் உள்வாங்குகின்ற தன்மை குறைவாக இருக்கிறது. அது எலிக்கு சரியென்றால் எங்களுக்கும் சரி. தனியே இருக்கும் போது எனக்கு வருகிற அதிர்ச்சி, பயம், கஸ்டம், உளநெருக்கடி    போன்றவற்றை தனியே உள்வாங்கிக் கொள்வது கஷ்டமானது. ஆனால், பத்துப்பேர், இருபதுபேர், நூறு பேர் ஒன்றாக சேர்ந்து இருப்போமானால், அந்த அதிர்ச்சி எமக்கு குறைவாக இருக்கும் என்பது நிறுவப்பட்டிருக்கிறது. ஆகவே தான் கூட்டாக சேர்ந்து இயங்குகிறவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

1995 இல் நாங்கள் எல்லோரும் சேர்ந்து யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய போது எங்கள் எல்லோருக்கும் உளப் பாதிப்பு குறைவாகவே இருந்தது. இன்று அப்படியான நிலைமையில் நாங்கள் இல்லை. அன்று செல் எல்லாம் வழியில் விழுந்தது. விமானத்தாலும் தாக்கினார்கள். ஆனால்  அதையெல்லாம் நாங்கள் அன்று கூட்டமாக எதிர்கொண்டோம். அன்று எங்களுடைய பிள்ளைகள் இவ்வாறு போதையில் சீரழியவில்லை. நல்ல பெறுபேறுகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்து விட்டது. இப்போது என்ன பிரச்சினை   என எல்லோரும் கேட்க்கிறார்கள். யார் சொன்னது இப்ப பிரச்சினை இல்லை என்று? நாங்கள் அதனை கூட்டாக எதிர்கொள்ளவில்லை என்பது  தான் பிரச்சினை. அன்று எங்களுக்கு உயிர்வாழ்வதே பிரச்சினையாக இருந்தது. ஆனால் நாங்கள் எல்லோரும் வலு ஒற்றுமையாக இருந்தோம்.  பின்னால் கஸ்டப்பட்டு நடந்து வந்த கிழவியையும் தூக்கிக் கொண்டு போனோம். முன்னால் சென்ற குழந்தைப் பிள்ளையையும் அரவணைத்து சென்றோம். எல்லோரும் ஒன்று என்று நினைத்தோம். இப்ப நாங்கள் தனித்தனியாக பிரிந்து இருக்கிறோம். தனித்து தனித்து வாழ்கிற சமூகம் பிரச்சினைகளை தாங்கிக் கொள்ள முடியாது தான்.

இன்றைய உலகில் நவீனத்துவமான உளவியல் சிகிச்சை முறையை ACT (acceptance commitment therapy) என்று சொல்கிறோம். இப்போது தான் எங்கள் பகுதிகளில் இந்த முறை மெல்ல அறிமுகமாகிறது. முதலில் விடயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தக் கணத்தில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும். முன்னர் நடந்த விடயங்களை திரும்ப திரும்ப யோசிப்பதையும், எதிர்காலத்தில் நடக்கப் போவதனை யோசித்துக் கவலைப்படுவதனை விட்டு விட்டு இன்றைக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை ஒழுங்காக சரியாக செய்வது தான் அந்த சிகிச்சை முறையின் அர்த்த புஷ்டியான விடயம்.

இந்த சிகிச்சை முறை 1982 ஆம் ஆண்டு  Steven C. Hayes  ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது.  1988 களில் இது நவீன வடிவத்தை அடைந்திருந்தாலும் இன்று வரை பிரபலமடையவில்லை. நாங்கள் உளவளத்துறை படித்த காலத்திலேயே இந்த தியரி வந்துவிட்டது. அந்த நேரம் எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. நாங்களும் விரிவாக அதனை படிக்கவில்லை. ஆய்வுகளும் இதனைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை.  2015 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட இந்த ஆய்வானது எல்லா உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த சிகிச்சை முறை நல்ல பலனை வழங்கியிருப்பதாக அறிய வருகிறது. 2016 ஆம் ஆண்டில் இருந்து வளர்ச்சியடைந்த நாடுகள் எல்லாம் இந்த முறைமையை பாவிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த சிகிச்சை முறையானது உளநலப் பிரச்சினைகளோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல நல்ல உள ஆரோக்கியத்தோடு இருப்பவர்களுக்கும் பின்பற்றக் கூடிய ஒரு நடைமுறை.  இந்த சிகிச்சை முறையில் முக்கியமாக, கஷ்டமான உணர்வுகளை தூக்கி எறிய வேண்டாம். துன்பமாயிருக்கு, கவலையாயிருக்கு, பயமாயிருக்கு என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வோம். அதே நேரம் எங்களுடைய இலக்குகளை விழுமிய திசையில் அமைத்துக் கொண்டு எங்களுடைய செயற்பாடுகளை செய்வோம். விழுமிய திசை (Value direction) தான் இங்கே மையக் கருத்தாக வரும். நாங்கள் எதைச் செய்தாலும் எம்மை அவதானிக்கும் மனத்தை நன்றாக வலிமைப்படுத்திக் கொண்டு விழுமிய திசையில் எங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு நடப்போமாக இருந்தால்  எங்களது உள ஆரோக்கியம் பற்றி என்றுமே கவலைப்பட வேண்டியதில்லை. இதுவே இந்த தியறியினுடைய மையக் கருத்தாகும்.

எந்த இடத்தையும் நாங்கள் தவிர்க்க வேண்டியதில்லை. இந்த இடத்துக்குப் போனால் கோபம் வரும். பயம் வரும் என்று இடங்களைத் தவிர்த்தல், ஆட்களைத் தவிர்த்தல் போன்றவற்றுக்கு இடம்கொடுக்காமல் எம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வாழ்க்கை நேர் வட்டம் கொண்டதாக அமையும். இல்லாவிடில் நாங்கள் வி~ வட்டங்களுக்குள் அகப்பட்டு கீழே கீழே போய்க் கொண்டிருக்கிற சமூகமாக ஆகிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக பிள்ளைகளின் கல்விப் பெறுபேறுகள் சரியில்லை என்கிறோம். பிள்ளைகளுக்கு அடிக்கிறோம். படிக்க அதிக நேரத்தை கொடுக்கிறோம்.   ஆனால், திரும்பவும் பெறுபேறு குறைகிறது. திரும்பவும் இதையே செய்கிறோம். தொடர்ந்தும் விச வட்டங்களுக்குள் திரும்ப திரும்ப அகப்படுகிறோம். பிள்ளைகளிடத்தில் ஒரு நல்ல விடயம் தென்பட்டாலும் அதனை மனதார பாராட்டுகிற தன்மை இருக்க வேண்டும். நீ நன்றாக செய்திருக்கிறாய், அழகா இருக்கு, சரியா இருக்கு, ஆச்சரியமா இருக்கு என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்லுவோமாக இருந்தால்   அந்தப் பிள்ளை அதனை விட இன்னும் சிறப்பாக இன்னொன்றை செய்யும். பெறுபேறுகளும் நன்றாக வரும். அத்தகைய ஒரு நேர்வட்டத்துக்குள் அகப்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அது எங்களுக்கு ஒரு கட்டாயத் தேவையாக இருக்கிறது. இப்படியாக இருந்தால் தான் இந்த உலகத்தில் நாங்கள் நல்லதொரு சமூகமாக நிலைத்திருக்க முடியும்.

தமிழர்கள் என்ற ஒரு இனமே இல்லை, அதற்கான சுவடே இல்லை என்கிற நிலைமை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக தான் இப்பொழுது படுகிறது. ஆனால், அப்படித்தான் இருக்கும் என்றில்லை. உதாரணமாக பதின்ம வயது கர்ப்பம், போதைப் பாவனை என்பன 2011, 2012 களில் தான்  உச்சமாக இருந்துள்ளது.   இந்த விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 2016 இல் கீழ் நோக்கி வரத் தொடங்கி விட்டது என்பது கொஞ்சம் ஆறுதலான விடயம். இனி வரும் ஆண்டுகளிலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வந்துவிடுவோம். தாக்குப் பிடிப்போம் என்கிற மன உறுதி எங்களுக்கு வந்துவிட்டமை ஆரோக்கியமானது. இதனை சிகிச்சை முறைமை என்று சொல்வதனை விட எல்லாரும் சேர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைமை என்றும் சொல்லலாம்.

நான் செய்தது சரியா? விழுமிய திசையில் தான் செல்கிறோமா? என்று அடிக்கடி திரும்பி பார்த்துக் கொள்வது என்பது முக்கியமானது. இதனை நாங்கள் சரியாக அமைத்துக் கொண்டால் நாங்களும் சந்தோசமாக இருப்போம், எங்கள் குடும்பமும் சந்தோசமாக இருக்கும், எங்கள் சமூகமும் சந்தோசமாக இருக்கும். நாங்கள் விழுமிய திசையில் சென்று கொண்டிருந்தால் எல்லோரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியும். யாரைக்கண்டும் ஓடி ஒழிய வேண்டியதில்லை.    அந்த தவறை கண்டுபிடித்து விடுவார்களோ என்றும் பயப்பட வேண்டியதில்லை.

முதல் இரண்டு வரிசைக்கும் ஆக்களையே காணவில்லை. ஏன் பின்வாங்குகின்றீர்கள்? யாழ்ப்பாண சமூகத்தின் உளவியல் எப்படி இருக்கின்றது என்பதனை இதனைப் பார்த்து அறிந்துகொள்ளலாம் என வெளிநாட்டு அறிஞர் ஒருவர் யாழில் இடம்பெற்ற கருத்தரங்கில் கூறிய விடயம் கவனிப்புக்குரியது.   இங்கே பொதுவாக சிறிய பிள்ளளைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் பின்வாங்குகின்றவர்களாக, ஐயோ என்னை விட்டால் காணும் என ஓடுபவர்களாகவே இருக்கிறோம். ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் நாம் பொதுவாக மனத்தால் பின்னுக்கு போகின்றவர்களாக இருக்கின்றோம்.

ACT  என்கின்ற இந்த சிகிச்சையானது ஆறு படிநிலைகளைக் கொண்டதாக இருக்கிறது.  முதலாவது படி, எண்ணப் பரவல், அதாவது எங்களிடம் வருகிற மறை எண்ணங்களை ஆழ் மனதுக்கு போக விடாமல் நன்றாக பரவி வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கொரு பாரிய அனர்த்தம் நடந்து விட்டது. இவ்வளவு விடயங்களை நாங்கள் இழந்து விட்டோம். இனி இது திரும்ப வரப்போவதில்லை. இன்று நடப்பதனை மாற்றலாம், நாளை என்ன நடக்குமென்று தெரியாது.

மூன்றாவது, இந்தக் கணத்தில் ஒன்றித்திருத்தல். ஜென் துறவிகளை பற்றி சொல்வார்கள். தேநீர் குடிக்கும் போது மிகவும் ரசித்து ருசித்து குடிப்பார்களாம். இப்போது இந்தக் கணத்தில் தேநீர் தானே குடிக்கிறோம்.   ஒரு திட்டத்தை முன்வைக்கிறோம் என்றால் அதில் தான் எங்கள் மனமும் ஒன்றித்து இருக்க வேண்டும். வேலை செய்யும் போது வீட்டு எண்ணமும், வீட்டில் குடும்பத்தோடு இருக்கும் போது வேலை எண்ணமும் வரக் கூடாது.

நான்காவது, எங்களை நாங்களே எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்போம். எங்களை நாங்களே எப்போதும் பார்த்துக் கொண்டே இருந்தால் எங்களை வேறு யாரும் பார்க்க வேண்டியதில்லை. நாங்கள் எங்களை சரியாக பார்த்து நடப்போமாக இருந்தால் எங்களுக்கு ஒரு மேலதிகாரியோ, மேற்பார்வையாளரோ ஒருநாளும் தேவைப்படாது. அதனால் தான் சொல்கிறார்கள், இது உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறை அல்ல. எல்லோருக்குமான சிகிச்சை.

ஐந்தாவது நாங்கள் ஏற்கனவே பார்த்த விழுமிய திசை. இது சரியாக இருந்தால் ஐந்து வயது பிள்ளையை பார்த்தோ அல்லது வளர்ந்த ஒருவரை பார்த்தோ நீங்கள் நேர்மையானவரா அல்லது நேர்மையீனமானவரா எனக் கேட்டால் ஒருவரும் தாங்கள் நேர்மையீனமானவர் எனச் சொல்ல மாட்டார்கள். எல்லாரும் நேர்மையாக நடப்போம் என்று தான் சொல்லுவோம். ஆனால் அதனை எல்லோரும் நடைமுறைப்படுத்துவதில்லை.

ஆறாவது படிநிலையில் விழுமிய திசைக்கான செயற்பாடு. நாங்கள் மேற்கு நோக்கி போகிறோம் என்றால் அந்தப் பயணம் முடியாது. சாகும் வரை மேற்கே தான் போவோம். அது மாறாது. அந்த விழுமிய திசையில் நாங்கள் இலக்குகளை நிர்ணயிக்கலாம். வழியில் ஒரு நதி வருகிறது. அதனை கடந்தாச்சு. ஆனால் என்னுடைய திசை எங்கே போகிறது. மேற்கே தான் போகிறது. உதாரணமா என்னுடைய பிள்ளையை மருத்துவராக்க வேண்டும் என்கிற இலக்கோடு வாழ்ந்து கொண்டிருப்போம். பிள்ளை படிச்சுக் கொண்டிருக்கு. ஆனால், மருத்துவபீடத்துக்கு தெரிவாக்கவில்லை. உடனே எங்களின் விழுமிய திசை திரும்பிவிடும். எப்படியாவது கடன்பட்டாவது ர~;யாவுக்கு அனுப்புவோம்.  மேற்கு நோக்கிய பயணம் எப்படி வடக்கு நோக்கி திரும்புது என்றால் இடையில் எங்கள் இலக்கு பிழையாகிறது.      பயணம் தொடர்ந்து மேற்கு நோக்கியதாகவே இருந்தால் நல்லது. பிள்ளை மருத்துவராக தான் வேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லையே. மருத்துவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்களா? இல்லையே.

எண்ணங்கள் எப்போதும் புத்திசாலித்தனமானதாகவோ, சரியானதாகவோ இருக்கும் என்றில்லை. அதனால் எண்ணத்துக்கு  பெரிய  முக்கியத்துவத்தை கொடுக்க தேவையில்லை என இந்த சிகிச்சை சொல்கிறது. நாங்கள் திட்டமிடுவோம், ஒழுங்குபடுத்துவோம், தீர்மானம் எடுப்போம்.  எண்ணங்கள் எங்களை திசை திருப்பி விடாமல் பார்த்துக் கொண்டால் நல்லதே நடக்கும்..

தொகுப்பு: சிந்து-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.