இரண்டே வருடங்களில் அடர் காடு: மியாவாக்கி முறைக்கு மாறுவோமா?
இன்றைய காலத்தில் வேகமாக மரங்களை வளர்ப்பதில் ஒரு சிறப்பு பொறிமுறையை கையாள வேண்டிய தேவையுள்ளது. அளவுக்கதிகமாக காடழிப்பு, சூழல் மாசடைவுகள் நிகழ்கிறன. இதனால் சுற்றுச் சூழல் வெப்ப நிலை வேகமாக உயருகிறது. பனிப்பாறைகளும் வேகமாக உருகுகின்றன. இன்னொரு பக்கம் ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகளும் ஏற்படுகின்றன. இதனால் மிக குறுகிய காலத்தில் அதிகளவு மரங்களை எமது தாயகப் பிரதேசங்களில் நட்டு உருவாக்கினால் தான் சூழல் சமநிலையை ஓரளவாவது பேண முடியும். இதற்கு எமக்கு கைகொடுக்க சிறந்த வழி ஜப்பான் நாட்டு மியாவாக்கி முறைதான். அதென்ன மியாவாக்கி? நீங்கள் ஆர்வமாக கேட்பது புரிகிறது.
யப்பான் நாட்டு சூழலியலாளரான கலாநிதி அகிராமியாவாக்கி, குறிக்கப்பட்ட காலப்பகுதியில் 15 நாடுகளில் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு இயற்கை முறையில் காடுகளை உருவாக்கியுள்ளார்.
குறுகிய நிலப்பரப்பில் இடைவெளியில்லாமல் அடர் காட்டை உருவாக்க முடியும் என்பதை நிருபித்துக் காட்டியுள்ளார் மியாவாக்கி. 10 வருடங்களில் வளரவேண்டியஉயரத்தை இந்த முறையில் வளரும் மரங்கள் 2 வருடங்களில் தொட்டு விடுவதுதான் ஆச்சரியம்.
இப்படி ஆயிரக்கணக்கில் குட்டிக் குட்டியான காடுகளை உருவாக்கியதற்காக 2006 ஆம் ஆண்டு சர்வதேச சுற்றுச் சூழல் அமைப்பு அகிரா மியாவாக்கிக்கு புளூ பிளனெட் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது.
மியாவாக்கி அடர்வன முறையில் மரங்களை நட்டு முதல் 3 வருடங்களுக்கு தண்ணீரூற்றி பராமரிக்க வேண்டும். எமது தேசத்துக்கே உரிய மரவகைகளை தெரிவு செய்து நாட்டினால் இரு வருடங்களில் படிப்படியாக வனமாகிவிடும். 2 அடி ஆழ குழிகளில் ஆட்டெரு, மாட்டெரு, இலைதளைக் கழிவுகள் போன்றவற்றை கலந்து போட்டு அதனுள் மரங்களை நாட்டி நீர் பாய்ச்சி வந்தால் சிறப்பான வளர்ச்சியை அடையும். நெருக்கமாக மரங்களை நடுவதன் காரணமாக ஒளிச் சேர்க்கைக்காக மரங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வேகமாக வளரும். பழமரங்களை நட்டாலும் விரைவில் பயனைப் பெறக் கூடியதாக இருக்கும்.
இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் ஆச்சரியமானது. 1000 சதுரஅடியில் 400 மரங்களுக்கு மேல் நாட்டமுடியும்.
நாம் வாழும் மண்ணுக்கும், எம் குழந்தைகளுக்கும் மனிதர்கள் செய்யும் கைமாறு மரங்கள் வளர்ப்பது ஒன்றாகத் தான் இருக்க முடியும். காற்று மாசு, நீரில் உப்புத்தன்மை நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், மரங்களைப் பேணிப் பாதுகாத்து, மண்ணின் தன்மையைப் சிறப்பாக பாதுகாக்க முடியும். காற்றில் ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதுடன், பூமியின் வெப்பமும் குறையும். இந்த மியாவாக்கி முறையானது இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிரபலமாகி வருகிறது.
யப்பானில் கடற்கரையோரமாக மியாவாக்கி முறையில் மரங்கள் நடுவதன் மூலம் ஆழிப்பேரலை போன்ற இயற்கை அனர்த்தங்களையும் தடுக்க முடியும் எனக் கூறுகின்றார்கள். மரங்களை நெருக்கமாக நடுவதன் மூலம் உருவாகும் அடர்காடு பறவைகள் உட்பட பல்லுயிரிகளினதும் சரணாலயமாக மாறும்.
இந்த எளிமையான இயற்கை முறையில் ஒவ்வொரு தனிமனிதனும் தான் வாழும் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒவ்வொரு குட்டிக் காடுகளை உருவாக்குதன்; மூலம் மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
எமது பிரதேசங்களிலும் கோவில்கள் போன்ற மதவழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும், மயானங்களுக்கு அருகிலும், கைவிடப்பட்ட காணிகளாக ஏராளம் இடங்கள் காணப்படுகிறது. அங்கே எல்லாம் இந்த முறையில் மரங்களை நட்டால் எதிர்காலத்தில் நிச்சயம் மழைவீழ்ச்சி அதிகரிக்கும். சூழல் சமநிலை பேணப்படும். இயற்கையை அடுத்த சந்ததிக்கு பாதுகாப்பாக விட்டுச் சென்றோம் என்கிற மன நிம்மதியும் ஏற்படும்.
தீசன்-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-
Post a Comment