இவர்கள் தமிழ்ப் பழங்குடிகள்
இலங்கைத்தீவில் வேடுவர் என்கின்ற சமூகப்பிரிவினர் தொடர்பாக கவனத்தை ஈர்க்கின்ற ஒரு கால கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.
பொதுவாகவே இலங்கைத்தீவின் பழங்குடியினர் என்கின்ற போது மகியங்கனையில் வாழும் பழங்குடியினரைப் பற்றியே எல்லோரும் அறிந்திருப்பர். அங்கு வாழும் பழங்குடியினர் இலங்கையின் ஆதிவாசிகள் என்ற அடைமொழியில் அடையாளப்படுத்தப்பட்டனர். ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆதிவாசிகள் நாடாளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம், அரச விழாக்கள் போன்றவற்றில் முன்னுரிமை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் லாப நோக்கின் பாற்பட்டே அது நிகழ்ந்திருந்தது. அவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் வாழ்வுரிமைகளும் அரசியலமைப்பு உரிமை ரீதியாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனை பின் நாட்களில் ஆதிவாசிகளின் தலைவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பின்னர் 2015 களில் மகிந்த ராஜபக்ச காலத்தில் ஐ.நா விதைந்துரைத்த பழங்குடியினர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் இலங்கை கையெழுத்திட்டிருந்தது. அந்நிகழ்வை ஒரு விழாவாக வைத்து பிரகடனமாக கொண்டாடியது. இலங்கைத் தீவின் பழங்குடியினர் அனைவரையும் ஒன்றிணைத்து வாகரையில் விழா எடுத்திருந்தது. அந்நிகழ்வுடன் கிழக்கில் வாழ்ந்து வரும் பழங்குடியினரும் தம்பென்னையில் இருக்கும் பழங்குடியினருடன் தொடர்பை பேணுகின்ற நடைமுறை தொடங்கி வைக்கப்படுகின்றது. தம்பென்னை ஆதிவாசிகளின் தலைவர் இப்பழங்குடியினரின் தலைவராகவும் வாகரையில் வாழும் பழங்குடியினரின் தலைவர் அவரோடு இணைந்து நிகழ்வுகளில் கலந்து கொள்பவராகவும் காணப்பட்டார். ஐ.நா பழங்குடியினர் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டாலும் அம்மக்களின் வாழ்வுரிமைகளில் மேம்பாடுகளில் எந்த முன்னேற்றமும் விமோசனமும் கிடைக்கவில்லை. இதற்கு தனியான திட்டங்களும் கட்டமைப்புகளும் தொடங்கப்படவில்லை. ஆனால் ஆதிவாசிகள் அரசாங்கத்தின் விருந்தினராக உலா வரலாம், அது மாத்திரமே ஒரு குறியீடு அரசியலாக பார்க்கப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமே சில உதவிகளை செய்து முடித்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில் தான் ஆதிவாசிகள் என்கின்ற விடயத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிலை தோற்றம் பெறுகின்றது. மூதூர் கிழக்கே வாகரை கரையோரக் காட்டு நிலப்பரப்பு வரை பரந்து வாழும் பழங்குடியினர் தம்மை ஓர் அரசியல் சமூகமாக தம்மை கட்டமைக்கின்ற தேவையை உணர்கின்றனர். இதன் முதல் கட்டமாக இலங்கை அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பாராளுமன்றம் உருவாக்கிய ஆணைக்குழு முன் தோன்றி தமக்கான உரிமைகளும் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் முன் வைக்கின்றனர். ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் எழுப்பிய கேள்விகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இதுவரை காலமும் ஆதிவாசிகள் என்பது மஹியங்கணையை அண்டிய தம்பன்னையில் வாழும் ஆதிவாசிகளையே குறிப்பிட்டிருந்தது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழியையும் தமிழர் கலாசாரத்தையும் மத வழிபாட்டையும் கொண்ட ஒரு ஆதிவாசிகள் சமூகம் இருப்பதாக தாம் இப்பொழுது தான் அறிந்து கொள்வதாக அங்கு அப்பிரதிநிதிகள் பிரஸ்தாபித்திருந்தனர்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மட்டக்களப்பு நகர செயலாளர் செயலகத்தில் ஆணைக்குழுவைச் சந்திக்கச் சென்ற பழங்குடியினரைப் பார்த்து அங்கு கடமையில் இருந்த அலுவலர்கள்(தமிழர்கள்) இவர்களுக்கு இங்கு என்ன வேலை? என்று பரிகசித்து நகைத்தனர் என்பது தான். பழங்குடியினர் என்பவர்கள் அழுக்கான உடை, துர்நாற்றம் வீசுகின்ற உடல் கொண்டவர்களாக காணப்படுவர். அவர்களின் தலைவர் கோடரி போன்ற ஒரு ஆயுதத்தையும் தம்மோடு வைத்திருப்பார். அதனைப் பார்த்தே எல்லோரும் சற்று விலகி ஒதுங்கிக் கொள்வர் அல்லது அவர்களைஒதுங்கி இருக்கும்படி அதிகாரத்தோரணையில் அதட்டுவர்.
அவர்களின் உரையாடல்களில் தமிழ் சொற்கள் அவ்வளவாக வராது. தமக்கிடையே ஓரு வட்டார மொழி போல தமிழை அவர்கள் பேசுவர். தெளிவில்லாத சொற்பிரயோகம், சொல்லாடல் சுருக்கம் என்பன காணப்படும். அவர்கள் தமக்கொரு மொழி இருப்பதாகவும் அதனை பேசுகின்ற நான்கு, ஐந்து பேர் இப்பொழுதும் இருப்பதாக சொல்லுகின்றனர். குலதெய்வ வழிபாடு கொண்டவர்கள். இவர்கள் பின்பற்றி வந்த பெரிய சாமி என்கின்ற குலவழிபாடு மறைந்து வருகின்றது. மாரியம்மாளை வழிபடுகின்றனர். சிலைகள் காணப்படுகின்றன. அவை களிமண்ணால் செய்யப்பட்டவையாகும். வருடாந்த உற்சவம் நடத்தப்படுகின்றது. சமய சடங்குகள் ஆடல், பாடல், பேய்விரட்டல், பழி தீர்த்தல் போன்ற சடங்குகள் நிகழ்கின்றன. நாடோடி வாழ்க்கையாக தொடங்கிய இவர்களின் வாழ்க்கை இன்று மூதூர் கிழக்கிலிருந்து மட்டக்களப்பு பகுதி வரை பரந்து விரிந்து காணப்படுகின்றது. அதாவது மூதூர் கிழக்கு கரையோரக் காடுகளிலிருந்து மட்டக்களப்பு கருவாங்கேணி வரையுமான கரையோர காட்டுப் பகுதிகளை உள்ளடக்கி சுமார் 47 கிராமங்களில் செறிந்தும் சில இடங்களில் குறைந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
பாரம்பரியத் தொழிலாக காடுகளில் தேன் எடுத்தல், உணவுக்காக விலங்கு வேட்டை, குட்டைகளில், ஆறுகளில், குளங்களில் மீன் பிடித்தல், மீன், இறைச்சிகளை உலர்த்தல், நெருப்பில் வாட்டல், காடுகளில் பழங்கள், கிழங்குகள, வேர்கள், பட்டைகள் சேர்த்து வைத்து உண்ணுதல் எனும் செயற்பாடுகள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. இவர்கள் மத்தியில் ஓரு கூட்டுக்குடும்ப வாழ்வு எப்பொழுதும் நிலைகொண்டிருக்கும். ஓரிடத்தில் தங்கி வாழும் ஓர் குடும்பத்தின் வாரிசுகள் அந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் குடி கொள்ளும். உறவினர்களுக்குள்ளேயே திருமண உறவு நிகழ்வதால் பிறக்கும் குழந்தைகள் வீரியம் குறைந்தவர்களாக நலிவடைந்து காணப்படுவர். மெல்லிய தோற்றமும் கறுப்பு உடலும் சூம்பிய உடல் அமைப்பும் இவர்களை அடையாளப்படுத்தும். சிலர் உடல் கட்டுமானங்கள் கொண்டவர்களாக பலசாலிகளாக காணப்படுவர். சிறுவர் திருமணம், பலதார உறவு முறை சர்வசாதாரணமாக காணப்படுகிறன. வெளிநாட்டு பணிப்பெண்களாக பெண்கள் சென்று வந்ததால் சில பொருளாதார முன்னேற்றங்களும் அதேவேளை அதனால் பல சமூக சீரழிவுகளும் காணப்படுகின்றன. இடைத்தரகர்களின் தொடர்புகள் சீரழிவுகளுக்கு காரணமாகவும் விளங்குகின்றது.
கிழக்கு மாகாணத்தில் வாழும் பழங்குடியினர் தமிழர் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தாலும் தமிழரின் சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளால் வேடுவரை ஒரு தரக்குறைவாக, தாழ்வு நிலையில் வைத்துப் பார்க்கின்ற போக்கு உண்டு. வேடுவர் சமூகத்திலிருந்து பொருளாதார ரீதியாக மேல் கிளம்பிய சிலர் கூட தம்மை வேடுவராக அடையாளப்படுத்த விரும்புவதில்லை. பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையினர் சிலர் இருந்து வந்தாலும் அவர்களின் உயர்நிலைக்கு வேடுவர் என்ற முத்திரை ஒரு மரியாதை குறைவாகவே இருந்து வருவதாக கவலைப்படுகின்றனர். எமது சமூக நோக்கு நிலையிலிருந்து இந்த உளவியல் தாக்கம் புரிந்து கொள்ளக்கூடியதே.
ஆனால் பழங்குடியினர் தம்மை ஒருங்கிணைக்க விரும்புகின்றனர். இதன் ஒரு கட்டமாக தமக்கான ஓர் சமூக அமைப்பைக் கொண்டிருக்க கூடிய உரையாடலை தொடங்கியிருக்கின்றனர். முதலில் தமது வாழ்வுநிலையை மீட்டுக் கொள்ளும் முகமாக தமது தேவைகளையும் அபிலாசைகளையும் முன்வைத்து கோரிக்கைகள் வடிவில் அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் விளக்கி வருகின்றனர். கவன ஈர்ப்பு வேண்டி வெகுசன போhராட்டங்களையும் முன்வைத்து போராடுகின்றனர்.
போல்ராஜ், மூதூர்-
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-
Post a Comment