இன்னமும் நிறைவேறாத தியாக தீபத்தின் கோரிக்கைகள்
தியாக தீபம் திலீபன் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்து 30 வருடங்கள் பறந்தோடி விட்டன. ஆனால், அவர் என்ன நோக்கங்களுக்காக தனது இன்னுயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது தான் காலத்தின் துயரம். இன்று வரை நிறைவேறாத திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்,
1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்காலஅரசுநிறுவப்படும் வரைபுனர்வாழ்வுஎன்றுஅழைக்கப்படும் சகலவேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
இதில் முதலிரண்டுகோரிக்கைகளையும் கூட இன்றும் நிறைவேற்றமுடியாமல் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக தாயகப் பிரதேசங்களில் போராடி வருவது கவனிப்புக்குரியது.
ஆயுதப் போராட்டத்துக்கு எவ்வாறு ஒரு முடிவும் கிட்டவில்லையோ அதே போல் அகிம்சைப் போராட்டத்துக்கும் இந்த மண்ணில் ஒரு தீர்வு கிடைக்காதது தான் வேதனையானது.
இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் திலீபனின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசும் உதாசீனம் செய்துள்ளது.
அன்று இந்தியப் படைக்கெதிரான திலீபனின் கோரிக்கைகள் இன்று இலங்கை அரசுக்கு எதிரானவையாக மாறியுள்ளன.
மக்கள் விழிப்புணர்வு பெற்று ஒன்றுபட்டு எமது உரிமைகளுக்காக போராடும் நிலையில் தான் எமது விடுதலை சாத்தியம் என்பதை திலீபன் அன்று நடாத்தப்படும் மக்கள் சந்திப்புக்களில் அடிக்கடி கூறி இருந்தார்.
பெண்கள் மீது மதிப்பும் அன்பும் எப்போதும் கொண்ட திலீபன், புகைத்தல், மதுப்பழக்கத்தை என்றுமே தீவிரமாக எதிர்த்து வந்துள்ளார். 23 வயதில் திலீபன் உயிர்நீத்த மண்ணில் இன்று பல இளைஞர்கள் போதைப்பொருளுக்கும், மதுப்பாவனைக்கும் அடிமையாகியுள்ளமை தான் மிகவும் துயரமானது. முதலில் இதனை ஒழிக்கவாவது தமிழ்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
Post a Comment