வடக்கு- கிழக்கு இணைப்பு உரையாடல்கள் யாழ். பல்கலையில் தொடர வேண்டும்
எங்களுடைய அரசியல் தலைமைகள் இதுவரை வடக்கு-கிழக்கு இணைப்புக் குறித்தான எந்த உரையாடல்களையும் வெளிப்படுத்தாமை வருத்தமளிக்கிறது. இந்த விடயம் அரசியல் தலைமைகளுக்குரிய முக்கியமான பொறுப்பாகும். ஆனால், புலமை சார்ந்த தளத்திலிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவரும், சிரேஷ;ட அரசியல் ஆய்வாளருமான கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் 11.10.2017 புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரகுராம் ஆகியோரும் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.
மாணவர்கள், புத்திஜீவிகள் பரவலாக பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். அதனைத்தொடர்ந்து வடக்கு-கிழக்கு இணைப்புக்கு ஆதரவாகப் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்தான உரையாடல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர வேண்டும் என்பதே நிகழ்வில் பங்கேற்ற பலரதும் விருப்பமாக இருந்தது.
கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு- கிழக்கு இணைப்புத் தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாக அடையாளப்படுத்துவதற்கான அடிப்படை என்பதை நாம் மறத்தலாகாது. உலகத்தில் ஐரோப்பியர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து விட்டார்கள் எனப் பேசப்பட்டு வருகிறது. உலகமயமாதலின் பின்னர் உலகத்தின் அனைத்து எல்லைகளும் தகர்ந்து விட்டன என உரையாடுகிறார்கள். ஆனால், இது பொய்யானதொன்று.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வருகின்ற போது அமெரிக்கா அமெரிக்கனுக்கு வேண்டுமென்றார். இதனைத் தான் பிரித்தானியனும் கூறினான். ஐரோப்பிய யூனியனுடைய கட்டளைகளும், விருப்புக்களும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் பிரித்தானியர்களாகவே இருக்க விரும்புகின்றோம் என்பது அவர்கள் நிலைப்பாடு.
குர்திஸ் இன மக்கள் 20 நூற்றாண்டுகளுக்கு மேல் போராடிய நிலையில் தற்போது பொதுவான வாக்கெடுப்பிற்கு வந்து ஈராக்கில் புதிய அரசை அமைப்பதற்கான அணுகுமுறைக்கு வரலாம் என்றால் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் ஏன் வடக்கு-கிழக்கு இணைப்புக் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாது? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
வட- கிழக்கு இணைப்புத் தொடர்பாக யாழ். பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி- குமாரவடிவேல் குருபரன் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண மக்கள் வடக்கு- கிழக்கு இணைப்பை சாதாரண உணர்வு ரீதியான சிந்தனையில் அணுகுகிறார்கள். ஆனால், கிழக்கு மாகாண மக்கள் தாங்கள் கிழக்கு மாகாணத்தில் நிலைத்து வாழக் கூடிய அடிப்படை குறித்தே சிந்திக்கிறார்கள்.
நிலத் தொடர்புள்ள சுயாட்சி அலகுள்ள ஒரு பகுதியாக காணப்படக் கூடாது என்பதற்காகவே வடக்கு கிழக்கு இணைப்புக்கெதிராகப் பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குரிய நிலப்பரப்பிலே தாங்களே தங்களுக்கான உரிமைகளைத் தீர்மானிக்கும் வகையில் ஒரு நிலப்பரப்பை அடையாளப்படுத்துகிறார்கள். அந்த வகையில் தான் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு அமைந்துள்ளது.
நிலத் தொடர்புள்ள வடக்கு- கிழக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. இவ்வாறு அரசாங்கம் செயற்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
வடக்கு- கிழக்கில் வாழும் மக்கள் பன்மைத் தன்மை கொண்டவர்கள். அவர்கள் சேர்ந்து வாழ முதலில் பழகிக் கொள்ள வாய்ப்பை வழங்குங்கள். வாங்க பழகிப் பார்க்கலாம். அதன் பின்னர் வடக்கு- கிழக்கு இணைப்பைப் பற்றி அரசாங்கம் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
தமிழ்மக்கள் மத்தியில் முஸ்லீம் மக்களுக்கெதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. எதிர்கால வடக்கு கிழக்கில் தங்களது உரிமைகள் பாதுகாக்கப்படும், தங்களுக்கான சுயாட்சி ஏற்பாடுகள் காணப்படும் போன்ற விடயங்களை நாங்கள் முஸ்லீம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். சமூகமாக உங்களுடைய கூட்டு எதிர்காலம் இணைந்த வடக்கு- கிழக்கில் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான சூழலில் தான் வடக்கு- கிழக்கு இணைப்புச் சாத்தியப்படும்.
வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது ஒரு மக்கள் கூட்டம் தங்களுடைய ஆட்புலத்தை அடையாளப்படுத்துவது ஆகும். அந்த ஆட்புலத்தை அடையாளப்படுத்துவதற்கான காரணம் வரலாறு மாத்திரமல்ல எங்களுடைய அரசியல் ரீதியான எதிர்காலத்திலும் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாகவுள்ளது என்றார்.
சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரகுராம் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்களுடைய அரசியல் கட்டுமானமே வடக்கு, கிழக்கு இணைப்பிலேயே தங்கியுள்ளது. தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் வடக்கு- கிழக்கு இணைப்பில் நாங்கள் உறுதியாகவிருக்க வேண்டும்.
வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் பல்வேறு விடயங்களை உறுதிப்படுத்தக் கூடியதொரு முக்கியமான விடயம். வடக்கு- கிழக்குப் பிரிந்திருக்க வேண்டும் என்று சிந்திப்பது எங்களுடைய எதிர்காலத்திற்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ; பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளரும், ஓய்வு நிலை அதிபருமான க.அருந்தவபாலன், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் உட்பட மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
தொகுப்பு -செல்வநாயகம் ரவிசாந்-
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-
Post a Comment