இறுதியில் நிலைக்கப் போவது ஈழ மொழி பேசும் தனித்துவ சினிமாக்கள் தான்
உண்மையான ஈழத்து சினிமாவை படைக்க வேண்டும் என்கிற வெறியுடன் பயணிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளியே மதிசுதா.
இவரது முன்னைய குறும்படங்கள் பலரால் பேசப்பட்டவை. பல்வேறு விருதுகளையும் பெற்றவை. சினிமா முயற்சிகள் மட்டுமல்ல போர்க்காலத்தில் தன்னால் முடிந்த மருத்துவப் பணிகளையும் மக்களுக்காக செய்தவர். இவரின் அண்ணாவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்தும் சிறைக் கொட்டடியில் இருக்கும் சாந்தன் ஆவார். அண்ணாவை மீட்க போராடும் தம்பியாக மட்டுமல்லாமல் தொடர்ந்தும் நமக்கான சினிமாவை படைக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கோடு தளராது பயணித்து வருகிறார். தற்போது 'உம்மாண்டி' என்கிற முழுநீளத் திரைப்படத்தை வெளியிடும் மதி சுதாவுடன் ஒரு சிறு நேர்காணல்,
உங்களைப்பற்றி சிறு அறிமுகம்?
பெரிதாய் அறிமுகப்படுத்தும் அளவுக்கு இன்னும் சாதிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் தென்னிந்திய சினிமா ரசிகர்கள், தென்னிந்திய சினிமாவை பிரதி செய்யும் திரைப்பட உருவாக்குனர்கள் ஆகியோருக்கு மத்தியில் எங்களுக்கென்றொரு சினிமா வேண்டும் என போராடும் ஒரு சில படைப்பாளிகளுக்கும் நானும் ஒருவன்.
ஈழம் சினிமா முயற்சிகள் பரவலாக எந்த நிலையில் இப்போது உள்ளன?
மேற்சொன்ன பதிலுக்குள் இருந்தே இக் கேள்விக்கான பதிலும் ஆரம்பிக்கிறது. ஈழ சினிமா இரு வேறு திசைகளில் மிக வேகமாகப் பயணிக்கிறது. ஒன்று ஈழத்துக்கான மொழி வாழ்வியல் கொண்ட தனித்துவ சினிமா; இன்னொன்று மக்களுக்கு இது தான் பிடிக்கும் எனக் கூறிக் கொண்டு எடுக்கப்படும் தென்னிந்திய பிரதி சினிமா. ஆனால், இதிலும் இரண்டாவது சினிமா தான் மிக வேகமாக பயணிக்கிறது. காரணம் அவர்களிடம் தான் தாராளமான தயாரிப்பாளர்களும் பணமும் இருக்கிறது. அதே போல் தனித்துவ சினிமாக்களை குற்றம் குறை கூறி முடக்குவதற்கான ஆளணியும் அவர்களிடம் தான் உள்ளது. இத்தனையும் கடந்து இறுதியில் நிலைக்கப் போவது ஈழ மொழி பேசும் தனித்துவ சினிமாக்கள் தான் என்பதும் உறுதியாகும். ஏனென்றால் அச்சினிமாவில் இருந்து சிலர் இப்போது இதற்கு தாவி விட்டார்கள் சிலர் விலத்திப் போய் விட்டார்கள்.
உங்களது படைப்பாக்க முயற்சிகள் குறித்து சொல்லுங்கள்?
சினிமா என்பது பணங்களின் மேல் ஆடும் ஒரு வகை நடனம். ஆனால் எனக்கு என்றைக்குமே பணத்தை ஒரு தடையாக நான் பார்த்ததில்லை. அதே போல் தயாரிப்பாளர்களிடமும் இறைஞ்சி நின்றதில்லை. என் ஆரம்ப காலப்படங்களை மொபைல் போனில் தான் செய்தேன். மொபைல் போனில் செய்த படத்துக்கு ஒரு நாட்டின் தேசிய அளவிலான விருது கிடைத்தது என்பதும் நம்ப முடியாத ஒன்று தான். ஆனால் என்னிடம் இருக்கும் ஒரு வகை கிறுக்குத்தனமான மன ஓர்மம் அதையும் செய்து காட்டியது.
இப்போது செய்த முழு நீளத் திரைப்படமான உம்மாண்டிக்கும் வந்த தயாரிப்பாளர்களுடன் ஒத்திசைய முடியாமையால் நானே வங்கிக் கடன் ஒன்றின் மூலம் பணம் இட்டுத் தான் எடுத்து முடித்திருக்கிறேன்.
உம்மாண்டி எப்படி வந்திருக்கிறது? தயாரிக்கும் போது எதிர்கொண்ட சவால்கள்?
என்னைப் பொறுத்தவரை நான் ஆசைப்பட்ட கதை ஒன்றை எந்தவொரு விட்டுக் கொடுப்புக் கூட இல்லாமல் அப்படியே வெளிக் கொணர்ந்திருப்பதில் முழு மனத்திருப்தியோடு இருக்கிறேன். இதே கதையை ஒரு தயாரிப்பாளரிடம் கொண்டு போயிருந்தேன். அதில் பல மாற்றங்கள் அவரால் சொல்லப்பட்டது. அந்த நேரம் தான் யோசித்தேன். இது என்படமா? இவர் படமா? இவருக்கு போட்ட பணத்தை இலாபத்தோடு எடுத்துக் கொடுத்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது. ஆனால் அவருக்கு அதை விட மேலாக ஒரு எண்ணம் இருந்தது.
அப்போது தயாரிப்பாளர்களிடம் ஒரு ஒப்பந்தம் கேட்டேன். இதில் நீங்கள் இடும் பணத்தில் எவ்வளவு நட்டம் வருகிறதோ அதை நான் பொறுக்கிறேன். ஆனால் வரும் இலாபத்தில் 50 வீதம் எனக்குத் தரப்பட வேண்டும் எனக் கேட்டேன். முதலாவது நிபந்தனைக்கு தயாராக வந்த சிலர் இரண்டாவது நிபந்தனைக்கு சம்மதிக்க மறுத்து விட்டார்கள். அப்போது தான் முடிவெடுத்தேன், என் முதலில் ஏன் அவன் பணக்காரன் ஆவான், நானே போட்டு எடுப்போம், நட்டப்பட்டால் பின்னர் பார்த்துக் கொள்வோம் என.
ஆனால் ஆரம்பத்தில் வங்கிக் கடனும் கிடைக்கவில்லை கையில் சேரும் பணத்தை வைத்துத் தான் படப்பிடிப்பை நகர்த்தினேன். ஒரு கட்டத்தில் முன்னோட்டத்தை விட்டு அதை விரும்பியவருக்கு ரிக்கெட்டுக்களை விற்றுத் தான் சில வேலைகளை முடித்தேன்.
எதிர்கால ஈழம் சினிமா பெரும்பாலான கலைஞர்களை ஆவது ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து பயணிக்கும் வாய்ப்பு எப்படி இருக்கிறது?
அப்படி ஒருங்கிணைப்பதற்கு எமக்குத் தேவைப்படுவது ஒரு அமைப்பு அல்லது சங்கமாகும். அப்படி ஒரு கட்டமைக்கப்படாத வரைக்கும் இது சாத்தியமற்ற ஒன்றாகும். அதே போல சினிமாத்துறைக்குள்ளும் இருந்தும் கூட இதைக் கட்டமைப்பது என்பது மிகப் பெரும் சிரமமான ஒன்றாகும். எங்களுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல இங்கு யாருக்கு யார் போட்டி என்றால் இயக்குனருக்கு கமராமென் மேல் போட்டியிருக்கும் நடிகருக்கு இசையமைப்பாளர் மேல் போட்டியிருக்கும் இப்படி சம்மந்தமே இல்லாமல் எமக்கான துறை எதுவோ அதை விட்டு விட்டு வேறு பக்கத்தில் போய் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு என் பட அறிவிப்பு விட்ட போது ஒரு இசையமைப்பாளர் எனக்கு எதிராக பேஸ்புக்கில் பதிந்து கொண்டு திரிந்தார். இப்போது அடங்கி விட்டார். இப்படி பல பிளவுகள் இருக்கும் இடத்தில் இப்போது ஒரு குடைக்குள் வருவது என்பது சாத்தியமே இல்லை.
ஈழத்தமிழருக்கு என்று இசை, சினிமா முயற்சிகள் கூட தென்னிந்தியாவில் இருந்து தான் பிரதி செய்யப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?
உதாரணத்துக்கு வயல் வெட்டு நேரம் புதுக்குடியிருப்புப் பக்கம் போய் பாருங்கள். எப்படி விதம் விதமான பாடல்களை விதம் விதமான இசையில் படிப்பார்கள் என்று. இளையராஜா, ரகுமான் எல்லாம் இசையைத் தேடி எத்தனை நாட்டுக்கு போனார்கள்? நாம் ஏன் பக்கத்து ஊருக்குப் போய்த் தேடக் கூடாது? மற்றையபடி தென்னிந்திய சினிமாவின் தாக்கம் இல்லாமல் நானோ நீங்களோ இருக்க முடியாது. காரணம் நானும் நீங்களும் முதல் முதல் பார்த்தது தென்னிந்திய சினிமாப் படங்களாகவே இருக்க முடியும். ஆனால் இன்று அவர்கள் எம் கதைகளை கடன் வாங்கும் அளவுக்கு வந்து விட்டார்கள் என்பதைக் கூட தெரியாமல் அவர்களுக்காகப் படம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஈழம் சினிமா குறித்து வேறு எதாவது கூற விரும்பின்?
ஈழ சினிமா பற்றி கூறுவதானால் அதை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்கான வரையறையுடன் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஈழம் என்பது இலங்கைக்கு இன்னொரு பெயர். 1970 கடந்த காலங்களில் அடக்குமுறைகளுக்குள் இருந்து மீள்வதற்காக இயக்கங்கள் அப்பெயரைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதால் அது பிரதேசம் சார்ந்து வரையறுக்கப்பட்டாலும் ஈழ சினிமா என்பது இலங்கையில் உருவாக்கப்படும் தமிழ் சினிமாவுக்குரிய தனிப்பதமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
துருவன்-
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-
Post a Comment