இலங்கையில் காணாமல் ஆக்கப்படும் நீதி!

       
   
 போர் முடிந்து 8 ஆண்டுகள் கடந்த பின்பும் உண்மையை கண்டறிதல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் விடயங்களில் இலங்கை அரசு எவ்வித முன்னேற்றங்களையும் காணவில்லை என்பது இங்கே நிதர்சனமாகத் தெரியும் உண்மையாகும்.

 தினமும் கண்ணீரும் கம்பலையுமாக இன்றும் தங்கள் உறவுகளைத் தேடிவரும்  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தொடர்ந்தும் எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள், தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த காணிகளில் குடியிருக்கும் இராணுவம் என தமிழ் மக்களின் வாழ்வு நித்தமும் போராட்டத்துடன் தான் கழிந்து வருகிறது. 

 அரசியல் கைதிகளை விடுதலைக்கான போராட்டம் பல்வேறு தரப்புக்களாலும் பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அரசாங்கம் செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

 அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் தென்னிலங்கையில் பேய்கள்  ஆட்சிக்கு வந்துவிடும் என யாழில் வைத்தே மிரட்டுகிறார் நல்லாட்சி அரசின் நாயகர் மைத்திரிபால சிறிசேன.  நாட்டை வழி நடாத்துவது மகாசங்கங்களா அரசாங்கமா எனும் அளவுக்கு குழம்ப வேண்டியுள்ளது. 

  இவ்வாறிருக்கையில், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளமை இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

 உண்மையை கண்டறிதல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் இலங்கையில் 14 நாட்கள் தங்கி நின்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி இறுதியில் கொழும்பில் வைத்து இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

  இலங்கையில் நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் அரசியல்மயப்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

 விரிவான நிலைமாறுகால நீதி திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தாமதம், பல்வேறுமட்டங்களிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

  கடந்த 2015 மார்ச் முதல் இதனுடன் சேர்த்து இலங்கைக்கு நான்கு விஜயங்களை மேற்கொண்டிருக்கிறார் பப்லோ டி கிரெய்ப். ஐநாவின் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இவ்விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

  இலங்கையில் ஐ.நா எவ்வளவு தலையீடுகளை செய்தாலும் தமிழர்களுக்கு நீதி என்பது இழுபட்டுச் சென்று காணாமல் ஆக்கப்படும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இலங்கையில் நீதியே காணாமல் ஆக்கப்பட்ட ஒன்று தான். இதனைக் காலம் காலமாக சிங்கள இனவாதிகள் சச்சிதமாக செய்து வந்திருக்கின்றனர். இதனை உணர்ந்து ஐ.நா தனது நடவடிக்கைகளில் இறுக்கத்தைக் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் ஐ.நா மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழக்க நேரிடும்.
                             
 செ.கிரிசாந்-

நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.