மலையகத் தேசியம்: அச்சுறுத்தலை நோக்கி மலையகத் தமிழரின் பொருளாதாரம்

       
             

 மலையகத் தமிழரின் பிரதான பொருளாதார வளமானது பெருந்தோட்டத்துறை ஆகும். அப்பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சிக்காக அம்மக்கள் அனுபவித்த மாபெரும் துயரங்களையும் மகத்தான தியாகங்களையும் சென்ற இதழில் பார்த்தோம். இன்று அவர்களின் பிரதான பொருளாதார வளமான பெருந்தோட்டத்துறையானது மிகவும் திட்டமிட்ட முறையில் மலையகமக்களின் கையிலிருந்து பிடுங்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். அதனூடாக மலையகதேசிய இனத்தின் இருப்பை ஆட்டம் காணச் செய்வதற்காக நீண்டகால திட்டமிடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஒரு தேசிய இனமாக அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு முக்கியதூணை அவர்களின் கால்களின் கீழே வெட்டியெறியும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து பதவிக்குவந்த பெருந்தேசிய அரசாங்கங்கள் மேற்கொள்கின்றன. இதன் மூலம் மலையகத் தமிழர் என்ற தேசிய இனத்தை இலங்கைத்தீவிலிருந்து ஒழித்து விடலாமென அவை எண்ணுகின்றன. அவற்றுக்கான திட்டமிடல்களும் நடைமுறைப்படுத்தல்களும் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை இந்த இதழில் பார்ப்போம்.

 1904ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தமாக 1320 தோட்டங்கள் இருந்துள்ளன. இவைபடிப்படியாக குறைந்து முறையே 1980இல் 668ஆகவும், 1992இல் 506ஆகவும் (தோட்டங்கள் மீளவும் தனியார் மயப்படுத்தப்பட்ட வருடம்) 2013இல் 427ஆகவும் காணப்படுகின்றது. இது போன்றே பெருந்தோட்டத்துறையின் ஆளணியானது 1981இல் 497,995 ஆகவும், 1992இல்376,498 ஆகவும் 2013இல் 193,412 ஆகவும் குறைந்து செல்லும் ஒரு போக்கை காணலாம்.

 மலையகத் தமிழரின் பொருளாதாரமானது மிகவும் திட்டமிட்ட முறையில் ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்டு வருவதற்கு மேலே உள்ள புள்ளி விபரம் சிறந்த எட்டுகாட்டாகும். மேலும்1948, 1949 காலப்பகுதியில் மலையகத் தமிழரின் குடியுரிமை இவ்வாறு திட்டமிட்ட வகையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் சட்டங்கள் மூலம் பறிக்கப்பட்டதோ அவ்வாறே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சி காலத்தில்(1970-1977) மலையக மக்களின் பொருளாதார நிலம் பறிக்கப்பட்டது.

 1972ஆம் ஆண்டின் 1ம் இலக்க நிலச்சீர்திருத்தச் சட்டம் (இதன் பிரகாரம் நிலச்சீர்திருத்த ஆணைக்குழு அமைக்கப்பட்டு தனியார் காணி உரிமைக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது. 18வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பெருந்தோட்ட காணி ஆயின் 50ஏக்கர் எனவும், மற்றயை நிலமாயின் 25 ஏக்கர் எனவும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது) 1950ஆம் ஆண்டின் நிலச் சுவீகரிப்புச் சட்டம், 1972ஆம் ஆண்டின் 2ம் இலக்க பெருந்தோட்டச் சட்டம், 1972ஆம் ஆண்டின் நாட்டின் விவசாய கூட்டுத்தாபனச் சட்டம் 1973ஆம் ஆண்டின் 42ம் இலக்க விவசாய நிலச்சட்டம் 1975ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களை பயன்படுத்தியே அப்போதைய அரசாங்கம் நிலச்சுவீகரிப்பை நடைமுறைப்படுத்தியது.

 இதன் பிரகாரம் 166,405 ஹெக்டேயர் தேயிலை நிலங்கள் உள்ளடங்கலாளாக மொத்தமாக 419,101 ஹெக்டேயர் நிலம் அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டு வரப்பட்டது. இவ்வாறுபெறப்பட்ட பெருந்தோட்டப் பயிர் நிலங்கள் 230.000 ஹெக்டேயர் மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் நிருவாகத்திலும் 105.00 ஹெக்டேயர் நிலம் வேறுபட்ட கூட்டுறவு நிறுவனங்களின் நிருவாகத்திலும் விடப்பட்டது. மேலும் 45.000 ஹெக்டேயர் நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

 1977பொதுத்தேர்தலின் பின்னர் பொதுத்துறை நிறுவனம் ஒன்று வாபஸ் பெறப்பட்டதுடன், கூட்டுறவு நிறுவனங்களும் நீக்கப்பட்டன. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்ததாபனமும்(SriLanka state Plantation Corporation-SLSPC) மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையும் (Janatha Estate Development Board JEDGB) தொடர்ந்து பொதுத்துறை சார்ந்த பெருந்தோட்டங்களை நிருவாகம் செய்தன. பொதுத்துறை சார்ந்த பெருந்தோட்டங்களின் நிருவாகம் 1992இல் மீண்டும் 23 பிராந்திய தனின்யார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

 1930-1987 வரை 57 வருடங்களில் விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு 105ஆற்று வடிநில அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் 2இலட்சத்து 50ஆயிரம் ஏக்கர் நிலம் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. 1980களில் மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் கீழும் 55ஆயிரம் குடும்பங்களுக்கு 165.00ஏக்கர் நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இந்த 4இலட்சத்து 15ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மலையகத் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தின் கீழும் நிலம் வழங்கப்படவில்லை. அங்கும் இங்குமாக ஒரு சிலர் துண்டுகாணியை பெற்றிருக்கலாம்.

 இன்றைய நிலையில் பெருந்தோட்டத்துறை பொருளாதாரமானது திட்டமிட்ட பெரியகுடியேற்றதிட்டங்கள், முறையான பராமரிப்பின்மை, நகரகிராம மயப்படுத்தல், காடாக விட்டுபிரித்து கொடுத்தல் மீள் நடுகை இல்லாமை, தொழிற்சாலைகளை மூடுதல், வளங்கள்(மரங்கள், கற்கள்) சூறையாடப்படல், மாற்றுப்பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் வளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்படுகின்றது. மேலும் சிறுதோட்டத்துறை ஊக்குவிப்பு மூலமாக பெருந்தோட்டத்துறை பொருளாதாரமானது மலையகமக்களின் கைகளிலிருந்து பிடுங்கி எடுக்கப்படுகின்றது.

 தென்னைச் செய்கையின் ஆதிக்கத்தை ஏற்கனவே இழந்துள்ள நிலையில் இறப்பர் துறையும் மலையக மக்களின் கைகளை விட்டு முழுமையாக பிடுங்கி எடுக்கப்படும் நிலையிலுள்ளது. இறப்பர் தோட்டங்களை பொறுத்தவரை களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலேயே அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று பெருமளவிலான இறப்பர் பயிர்ச் செய்கை நிலம் சகோதர சிங்கள இனத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு அல்லது அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மலையகத் தமிழரின் தொழில் பாதிக்கப்பட்டு இன்று பெருமளவிலான தொழிலாளர்கள் தொழில் இழந்து அன்றாட வாழ்விற்காக போராடும் ஒரு நிலையே காணப்படுகின்றது. 2013ஆம் ஆண்டு தகவல்களின் படி இறப்பர் செய்கையானது 81,863ஹெக்டேயர் காணியில் சிறு உற்பத்தியாளர்களினால் செய்கைப் பண்ணப்படுகின்ற நிலையில் 48,917 ஹெக்டேயர் காணியிலேயே பெருந்தொட்ட நிறுவனங்களால் செய்கைப் பண்ணப்படுகின்றது.

 இந்திலையில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விடயத்தையும் சுட்டி காட்டுதல் வேண்டும். அதாவது எந்தளவிற்கு தேயிலையை முதன்மைப்படுத்தி மலையகம் முன்னிறுத்தப்படுகின்றதோ அந்தளவு முக்கியத்துவம் இறப்பர் துறைக்கு கொடுக்கப்படுவதில்லை. இதன் விளைவு இன்று இறப்பர் பயிரடப்படுகின்ற மலையக பிரதேசங்களில்  வாழும்மலையகத் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து சிங்கள பௌத்த இன தன்மையை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மலையகத் தமிழர்களின் நிலையிலிருந்து நோக்குகின்ற போது அவர்களின் பிரதான பொருளாதார வளமான தேயிலை செய்கையை பொறுத்த வரையில் இன்று அத்துறை எதிர்நோக்கும் பிரதான சவால் சிறு தேயிலை காணிகளின் திட்டமிட்ட முறையிலான வளர்ச்சி ஆகும். பெருந்தோட்ட தேயிலை காணி திட்டமிட்ட முறையிலான சிறு உற்பத்தியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதோடு, பெருந்தோட்டங்களின் வளர்ச்சிக்கென பெறப்படுகின்ற நிதி உதவிகள் அனைத்தும் சிறு உற்பத்தியாளர்களுக்கே கொடுக்கப்படுகின்றது. 2013ஆம் ஆண்டு தகவல்களின் படி இலங்கையில் தேயிலை பயிரிடப்படும் மொத்த நில பிரதேசமான 203, 020 ஹெக்டேயரில் 120,955 ஹெக்டேயர் சிறு உற்பத்தியாளர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலையில் பெருந்தோட்ட நிறுவனங்களால் 82,065 ஹெக்டேயரில் மட்டுமே பயிரிடப்படுகின்றது. சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் எனும் போது 0.5 ஏக்கரிலிருந்து 50 ஏக்கர் வரையிலான நிலபிரதேசத்தில் தேயிலை பயிர்ச் செய்கையினை மேற்கொள்வோரையே குறிக்கின்றது. இன்று இவ்வாறான உற்பத்தியாளர்களும் 4இலட்சம் பேர் (2013ம் ஆண்டு தகவல்) என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இச் சிறு உற்பத்தியாளர்களிடமும் மலையகத் தமிழர் தொழிலாளர்களாகவே உள்ளனர்.

 மலையகத் தமிழர்களின் ஆதிக்கத்தில் பிடுங்கி எடுக்கப்பட்டு சிறு உற்பத்தியாளர்களிடம் கொடுக்கப்படும் இந்த தேயிலை காணியின் 90 வீதமூத்திற்கு மேற்பட்ட தேயிலை வளம் சகோதர சிங்கள இனத்தவர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அனைத்து விதமான மானியங்களும், ஆலோசனைகளும், சந்தைப்படுத்தல் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்கென சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கமும் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் இவ்வாறான திட்டமிட்ட வளர்ச்சியானது மலையகத் தமிழரின் கூட்டிருப்பை சிதைப்பதனால் மலையக தேசியம் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றது. மலையகத்தமிழர் கூட்டாக வாழும் நிலை சிதறடிக்கப்படுவதால் பொருளாதாரம் மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதார பிரதேசம் பறிக்கப்படுவதோடு மொழி, கலாசார விழுமியங்களும் அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன. பொருளாதார வளமானது நேரடியாகவே பறிக்கப்படுகின்றது.

இந்நிலையானது தேசியத்தின் பிரதான கூறுகள் அனைத்தையும் பாதிப்பதால் ஒட்டுமொத்த மலையக தேசியமும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இவற்றுக்கு அப்பால் பெருந்தோட்டத்துறை மறைமுகமாகவும் அச்சுறுத்தப்படுகின்றது. பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குவதாக கணக்கறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால் இந்நிறுவனங்கள் அதை எவ்வாறு தந்திரமாக செய்கின்றன என்பதை யாரும் கவனிப்பதில்லை. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கென தனியான சந்தைப்படுத்தல் நிறுவனங்களை வைத்துள்ளன. உற்பத்தி நிறுவனங்களால் நேரடியாக சந்தைப்படுத்தாமல் உற்பத்தி செலவுடன் குறைந்த இலாபத்துடன் தங்களது சந்தைப்படுத்தல் நிறுவனத்திற்கே விற்பனை செய்யப்படுகின்றன. குறித்த சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் பெருத்த இலாபத்துடன் வெளியில் விற்பனை செய்கின்றன. ஆனால் உற்பத்தி நிறுவனம் ஈட்டு இலாபம்மட்டுமே பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாபமாக காட்டப்பட்டு குறித்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாபத்தில் தொழிலாளர்களுக்கான பங்கு இல்லாமல் செய்யப்படுகின்றது.

மேலும் அரச தோட்டங்கள் மிகவும் மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளது. இன்று அனைத்து தோட்டங்களிலும் உத்தியோகஸ்தர்களாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை கூடுதலாக நியமிக்கின்றனர். முகாமைத்துவ மட்டத்திலும் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கமே காணப்படுகின்றது. இதனால் பெருந்தோட்டத்துறையில் படித்த மலையக இளைஞர்கள், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதோடு அவர்களை தொழில் நிமித்தம் பெருந்தோட்டங்களிலிருந்து வெளியில் தள்ளும் போக்கும் காணப்படுகின்றது.

 பெருந்தோட்டத்துறையானது நவீன மயப்படுத்தப்படாமையானது தொழில் அந்தஸ்து பற்றிய வினாவையும் மலையக படித்த இளைஞர், யுவதிகளிடையே எழுப்பியுள்ளது. இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் வேலைவாய்ப்புத் தேடி மலையகத் தமிழர் தலைநகர நோக்கியும் குடிபெயர்ந்து செல்ல அவ்விடயங்களை கிராமப்புற சகோதர சிங்களவர்களை கொண்ட நிரப்பும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன. இந்தக் குடி பெயர்வுகள் குடும்பமாக இடம்பெறும்போது மலையகத்தில் நிலத்துடனான சொந்தத்தை இழக்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இந்நிலையானது மலையகத் தேசியத்தை தீவிரமாக பாதிக்கத் தொடங்கியுள்ளது.

     மலையகத் தமிழரின் துணைப்பொருளாதார வளங்கள் 
   
 மலையகத்தமிழரின் துணைப்பொருளாதார வளங்களாக சிறு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகம், அரச வேலைவாய்ப்பு, மாணிக்கக்கல் அகழ்வு, சுற்றுலாத்துறை என்பன காணப்படுகின்றன. சிறு வர்த்தகமானது மலையகத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டாலும் இன்று பல நெருக்கடிகளை சந்திக்க தொடங்கியுள்ளது. விவசாய உற்பத்திகளுக்கான உள்ளீடுகளின் அதிகரித்த விலை, உற்பத்திகளுக்கு போதிய விலை கிடைக்காமை, இடைதரகர்களின் அபரிமிதமான இலாப உழைப்பு என நெருக்கடிகள் தொடர்கின்றன. கால்நடை வளர்ப்பும் நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கு கிடைப்பது போன்ற வசதிகளும், சலுகைகளும் மலையக தோட்டப்புற மக்களுக்கு கிடைக்காமையால் (பாலிற்கு உரிய விலை கிடைக்காமை, கால்நடை தீவனம் மற்றும் மருத்துவ வசதிகளை பெறுவதிலுள்ள நெருக்கடிகள்) இன்று கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை குறைந்து செல்வதை காணலாம்.

 அரச வேலைவாய்ப்புக்களில் ஆசிரியர்களே அதிகமாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை இன்று பத்தாயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலைக்கு யதன்சைட் ஆசிரியர் கலாசாலையும், ஸ்ரீபாத கல்வியியதர் கல்லூரியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஐம்பது கோடி ரூபா செலவில் முழுக்க மலையகத் தமிழர்களுக்கென ஜேர்மன் நாட்டு மக்களின் நிதி உதவியில் கட்டிக் கொடுக்கப்பட்ட ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியும் இன்று முழுமையாக மலையக மக்களுக்கு கிடைக்கவில்லை. இங்கும் கட்டாயமாக 25% கட்டாய இட ஒதுக்கீடு சகோதர சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 மேலும், பெருந்தோட்ட தபால் ஊழியர்களாக (400பேர் வரையும்) கிராம உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், அரசாங்க அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் என சிறுதொகையினரும் உள்ளனர். அரசாங்க தொழில்களை பொறுத்த வரையில் மலையக பிரதேசத்திற்கு வரும் தொழில்கள்கூட மலையகத்தவர்களுக்கு கிடைக்காத நிலையே உள்ளது. சிற்றூழியர்களாக (சுத்திகரிப்பு தொழிலாளர்கள்) ஓரளவுக்கு கிடைக்கின்றதே தவிர ஏனைய தொழில்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.

 மலையகத்தின் எல்லா பிரதேசங்களும் சுற்றுலாத்துறைக்குப் பொருத்தமான அழகான பிரதேசம். இதனால் இதன் மதிப்பு அதிகம், ஆனால் சுற்றுலாதுறையின் ஆதிக்கம் மலையகத் தமிழரின் கைகளில் இல்லை. இது போன்றே உலகின் சிறந்த மாணிக்கற்கள் இரத்தினபுரி, பதுளை, நுவரேலியா போன்ற மலையக மாவட்டங்களிலேயே கிடைக்கின்ற போதிலும் அதன் ஆதிக்கமும் மலையகத் தமிழரின்கைகளில் இல்லை. வெறும் தொழிலாளர்களாகவே இவர்கள் உள்ளனர்.

 மலையகத்தில் போதிய வளங்கள் இருந்த போதிலும் ஒழுங்கான திட்டங்கள் இல்லாததினால் மலையக மக்கள் வாழ்வாதாரத்திற்காக மலையகத்துக்கு வெளியே குடிபெயர்ந்து செல்லும் நிலையிலேயே உள்ளனர். இந்நிலையானது மலையகத்தமிழரின் தேசிய இருப்பை பெரிதும் பாதித்துள்து.

முடிவுரை

 மலையக மக்களுடைய அடிப்படைப் பொருளாதாரம் பெருந்தோட்டத்துறைப் பொருளாதாரமே! இதைப் பாதுகாப்பதன் மூலமே மலையக தேசியத்தின் இருப்பை பாதுகாக்க முடியும். அதன்படி மலையக மக்களின் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் தக்க வைக்க முடியும். இதற்கு மலையகத் தமிழரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக பெருந்தோட்டத்துறை கூட்டுறவு பொருளாதார முறைமைக்குள் கொண்டு வரப்படல் வேண்டும். இத்தொழிற்துறைக்குள் புலமைசார் ஆற்றலை உட்படுத்தி நவீன மயப்படுத்தல் வேண்டும். இது போன்று துணைப்பொருளாதார வளங்களையும் முழுமையாக மலையகத் தமிழரின் கைகளை விட்டு போகாத வகையில் பாதுகாத்தல் வேண்டும்.

 கூட்டுறவு முறை ஊடாக ஒரு சமூக அதிகார மையத்தை கட்டியெழுப்புதல் வேண்டும். இதற்கு சிறந்த முன் உதாரணமாக யூத மதகுரு தியோடர் ஹர்சலினால் ஏற்படுத்தப்பட்ட 'யூத நிதியம்' காணப்படுகின்றது. இந்நிதியத்தினூடாகவே சர்வதேச ரீதியாக நிதி திரட்டப்பட்டு இஸ்ரேலில் யூதர்கள் குடியேற்றப்பட்டு யூத ராஜ்ஜியம் கட்டியெழுப்பப்பட்டது. பெருந்தோட்டத்துறையை பொறுத்தமட்டில் முதலில் தற்காப்பு நடவடிக்கையே அவசியமாகும். அதாவது இருப்பதை பாதுகாப்பதாகும். பெருந்தோட்டத்திலிருந்து குடிபெயர்வைத் தடுத்து தோட்டத்துறைக் குடியிருப்புக்களை கிராமங்களாக மாற்றியமைத்து பெருந்தோட்டங்களில் உள் வாழ்வை சீரமைக்கும் நிலையை உருவாக்குதல் வேண்டும். இதனூடாக வெளியார் ஆக்கிரமிப்பை தடுத்து முடியும்.

 இவற்றுக்கெல்லாம் கையில் அதிகாரம் வேண்டும். முதலில் படிப்படியாக அதிகாரத்தை பெறுவதனூடாகவே இதனை அடைய முடியும். இதற்காக பிரதேச சபைகளை அதிகரித்தல் பிரதேச சபைகள் பொறுப்புக்களை எடுத்தல். பெருந்தோட்டத்துறைக்கும் செல்லுபடியாகும் வகையில் உள்ளூராட்சி அதிகார சபை சட்டமூலத்தின் 33வது பிரிவை மாற்றியமைத்தல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை மீள செயற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இன்றுள்ளது. இவை தொடர்பான ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக்க வேண்டியது உடனடித் தேவையாகும்.
வோல்டர் டெரி-
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.