இது சந்திக்கு வரவேண்டிய சங்கதி: சட்டத்தரணி மௌசூர் மௌலானா பேச்சு


   
     

 'ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்' எனும் தலைப்பில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம்   தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

 இதில்  சித்திலெப்பை ஆய்வு மையத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான திரு மௌசூர் மௌலானா 'வடக்கு கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும்'  என்கிற தலைப்பில் திரு. ஜோதிலிங்கம் அவர்களின் உரைக்கு பதிலுரை ஆற்றியிருந்தார். அவ்வுரை அப்படியே வருமாறு,

 வடக்கு-கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும்  என்கின்ற விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமல்ல.  சந்திக்கு வரவேண்டிய சங்கதி என்பதுதான் என்னுடைய பார்வை.  கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும். அந்த யதார்த்தத்தை பேசுவதற்கு  முஸ்லிம் தரப்பிலிருந்து பொறிமுறை உருவாக்கப்படவில்லை என்பது எனது முதலாவது குற்றச்சாட்டு.  'காணிநிலம் வேண்டும் பராசக்தி' என்று பாடினான் பாரதி.  நாங்கள் சமஷ்டி என்று பேசினாலும், வடக்கு-கிழக்கு இணைப்பு என்று பேசினாலும் அவை நிலம் சார்ந்த ஒரு போராட்டத்தினுடைய அரசியல் பரிமாணங்கள் தான். வடக்கு-கிழக்கு என்பது காணியும் நிலமும் சேர்ந்த பிரதேசம்.  அது தமிழ் பேசும் மக்களின் பூர்வீகமும்,  தமிழ்பேசும் மக்களுடைய தாயகமும் என்பதே.

 நாங்கள் 1956ஆம் ஆண்டின் திருமலை தீர்மானத்திலிருந்தே ஒன்றாகத்தான் பயணித்து வந்தோம்.  1977ஆம் ஆண்டு தமிழர்விடுதலை கூட்டணியினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர்களுக்கான வடக்கு-கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழர்களுக்கான சமஷ்டியும் முஸ்லிம்களுக்கான சமஷ்டியும் என்கின்ற விவகாரங்கள் பேசப்பட்டுதான் வந்தன. கங்காருவையும் குட்டியையும் போல் தமிழ் தேசியத்தின் மடியில் தான் முஸ்லிம் தேசியம் அடைகாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் ஆங்காங்கே அந்த தாய்மையை கேள்விக்கு உட்படுத்திய கருத்தியல் ரீதியான சம்பவங்களும் ஆயுதக் குழுக்களினுடைய யுத்தகாலத்தில் ஏற்பட்ட துன்பியல் நிகழ்வுகளும்  எங்களுடைய தாய்மையை கேள்விக்குட்படுத்திவிட்டது.  அந்த தாய்மை கேள்விக்குட்படுத்தப்பட்டதன் விளைவாக வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் என்கின்ற ஒரு பரப்புரையை இந்த அரசாங்கம் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றது என்பதையும் தான் நான் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

 வடக்கு- கிழக்கு இணைப்பு என்கின்ற விவகாரத்தில் இரண்டு பரிமாணங்கள் இருக்கின்றன.  இலங்கையில் முஸ்லிம்களுடைய தேசியம் என்று பார்க்கின்ற போதிலும்  அதில் இரட்டைப் பரிமாணங்கள் இருக்கின்றன.  வடக்கு-கிழக்கு மண்சார்ந்த தேசியம்,  வடக்கு-கிழக்கிற்கு வெளியே இருக்கின்ற  முஸ்லிம்களினுடைய  இன்னொரு வகையான தேசியம்  ஆக வடக்கு -கிழக்கு இணைப்பு என்று வருகின்ற பொழுது இரண்டு தரப்பும் பேசியே ஆகவேண்டும்.  ஒன்று தமிழர்களும் முஸ்லிம்களும் பேசியாக வேண்டும்.  மற்றொன்று வடக்கும் கிழக்கும் பேசியாக வேண்டும்.  இதனை துல்லியமாக பேசுவதற்கு முஸ்லிம் தரப்பில் காணப்படுகிற பொறிமுறைக் கோளாறுகள் என்ன என்பதை குறிப்பாக வடக்கு மாகாண ஆளுமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.  வடக்கோடு கிழக்கு இணைவதை முஸ்லிம்கள் எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இதில் உரித்தோடு கருத்துச் சொல்ல வேண்டியது நாங்கள் வடக்கு-கிழக்கு பாரம்பரியத் தனித்துவதத்திற்காக உருவாக்கிய  முஸ்லிம் தேசியத்தின் பிரதான கட்சி. ஆனால் அதன் தலைமை துரதிஷ்ரவசமாக மாற்றான் தாய் மனப்பாங்கோடு வடக்கு-கிழக்குக்கு வெளியிலிருந்து வந்தது எங்களுக்கு ஒரு சாபக்கேடு என்பதை இங்கு நான் பகிரங்கமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

 சேதாரம் இல்லாத விட்டுக்கொடுப்பு என்கின்ற ஒரு வார்த்தை பிரயோகத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.  அவருக்கு சேதாரம் பற்றியும் புரியவில்லை, செய்கூலி பற்றியும் புரியவில்ல.  செய்கூலி பற்றி உணர்ந்தவனுக்குத்தான் சேதாரம் பற்றிய வலி தெரியும் என நான் அடிக்கடி பல விழாக்களில் குறிப்பிட்டு வந்திருக்கின்றேன்.  இங்குள்ள பிரச்சனை அவர் வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பாக ஒரு சைலன்ட் ஒப்சேவராக இருந்து வருகிறார்.  ஏனென்றால் அவர் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அவர் உரித்தோடு வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக முஸ்லிம் தேசியத்தின் உரத்த தொனியில் கருத்து தெரிவிக்கமுடியாது. அதே போன்று இன்று தமிழ் தேசியத்திற்கு வந்திருக்கிற வினை என்னவென்று பார்த்தால் ஐக்கிய தேசிய கட்சினுடைய விம்பமாக தமிழ்தேசியத்தின் தலைமைகள் தொடர்ந்தும் இருப்பதற்கான பொறிக்குள் தமிழ்த்தேசியத்தை பிரநிதித்துவம் செய்கின்ற ஒரு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று வந்திருக்கின்றது.

  இருபதாவது திருத்தச்சட்டம் ஏற்கனவே எங்களுக்கு உடன்பாடில்லாத எங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாத மாகாணசபைகளிடம் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் பறிக்கிறது.  மாகாணசபையின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொடுப்பதென்றால் இந்த தேசிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன?  தேசிய அரசாங்கம் என்று சொல்வதற்கான கருத்தியல் சார்ந்த வரைவிலக்கணத்திலும் அவர்கள் இல்லை.  நல்லாட்சி என்கின்ற அடைமொழிக்குரிய யோக்கியதையும்  இவர்களுக்கு  இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 இவ்வாறான சூழ்நிலையில் தான் உள்ளூராட்சிசபை சட்டத்திருத்தம் நிறைவேற்றியிருக்கிறது.  அதில் பகிரங்கமாகவே முஸ்லிம் தலைமைகள்  இதில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னர் பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார்கள். ஆகக் குறைந்தபட்சம் தார்மீகரீதியில்  அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்கூட அவர்கள் பகிஸ்கரிக்கவில்லை.  அவர்கள் கபினற் அந்தஸ்துள்ள அமைச்சராக தொடர்ந்து இருக்க வேண்டும். ஒரு அரசியல் என்று வருகின்ற போது கருத்தியலும் இருக்க வேண்டும். உணர்வுபூர்வமான உணர்ச்சிகளும் இருக்க வேண்டும்.  இன்று துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியில் கருத்தியலுமில்லை. உணர்வுமில்லை. வெறுமனே வாய்ச்சவடால்களும் தேர்தல் கால உண்ச்சிபூர்வ அரசியல் கலாசாரமும்தான் இருக்கிறது என்பதை இங்கு நான் மிகவும் கவலையுடன் பதிவுசெய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

 இந்த நிகழ்வில் இரண்டு காரணங்களின் அடிப்படையில்  நான் கலந்து கொள்வது அவசியமென்று எனக்குப்படுகிறது.  சித்துலெப்பை ஆய்வு மன்றத்தினுடைய தலைமைப் பொறுப்பை நான் ஏற்றிருக்கின்றேன். எம்.ஐ மொஹைதீன் அவர்கள் எழுதிய Ethnic Conflict and devolution of power என்கின்ற நூலினுடைய தமிழாக்கத்தை எங்களுடைய ஆய்வுமன்றத்தால் வெளியிட்டோம். இணைந்த வடக்குகிழக்கில் தென்கிழக்கு அலகு என்கின்ற விவகாரத்தை கூறிய முக்கியத்துவம் பெற்ற நூல் இது. வெளியீட்டு விழாவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் அவர்களையும் அழைத்திருந்தோம்.  அந்த அழைப்பிற்கு பின்னர் நாங்கள் தொடர்ச்சியாக தமிழ்த்தரப்போடு முஸ்லிம் தரப்பு எவ்வாறான ஆக்கபூர்வமான சினேகபூர்வ அரசியல் கலந்துரையாடல்களை முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாகவும் பேசினோம்.  முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒரு தேசிய முஸ்லிம் சபை வேண்டும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.  அதனுடைய ஒரு வெளிப்பாடாக கிழக்கு மாகாண சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் எங்களுடைய இந்தக் கருத்தை அடியொற்றி கிழக்கு மக்கள் அவையம் என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறோம்.  அதனுடைய இணைச்செயலாளர்களில் ஒருவர் நான் என்கின்ற வகையில் கிழக்கு மக்கள் அவையம் தமிழ்மக்கள் பேரவையை உத்தியோக பூர்வமாக வடக்கு-கிழக்கு விவகாரம் தொடர்பாக நீண்ட கலந்துரையாடலுக்கு பகிரங்கமாக அழைக்கின்றது என்பதையும் இந்நிகழ்வில் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.

 வடக்கு-கிழக்கு இணைப்பு-பிரிப்பு  என்கின்ற விவகாரத்தில்  முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் இருக்கின்ற குழப்பம் என்பது அவர்களுடைய அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்கான மொழியாடல்கள் சார்ந்த விடயங்கள் தான்.  நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1956ஆம் ஆண்டு திருமலைத் தீர்மானமும், 1977ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனமும் அஷ்ரப் அவர்களுடைய  வருகைக்குப் பின்னர் முஸ்லிம் தனித்துவ அரசியல் வந்த பிற்பாடு எட்டப்பட்டதே பாண்டிச்சேரி முறையிலான தென்கிழக்கு அலகு. முதன்முதலில் அதற்கு உரிமை கூறியவர் எம்.ஐ.முகைதீன் அவர்கள்.  80ஐ தாண்டியிருக்கும் அந்த மனிதரை முஸ்லிம் சமூகம் சார்பாக அண்மையில் தான் வாழ்த்தக் கிடைத்தது என்பதையும் குற்றவுணர்வோடு இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 வடக்கு-கிழக்கு இணைக்கப்படுகிற பொழுது முஸ்லீம்களுக்கான தென்கிழக்கு அலகானது முஸ்லிம்களுக்கான சமஷ்டி. வடக்கு-கிழக்கு இணைக்கப்படும் பொழுது தமிழர்களுக்கான சமஷ்டியும் முஸ்லிம்களுக்கான சமஷ்டியும் என்று தமிழ் தேசியத்தில் பாசறையில் வளர்ந்த  அனைத்து தமிழ் முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்ட விவகாரம். இன்று அந்த இரண்டு தரப்பினராலும் அந்த நேர்கோட்டு அரசியல் தத்துவத்தில் பேசுவதற்கான  வடிகால்கள் உருவாக்கப்படவில்லை.  இங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களைப்பற்றி கிழக்கிலும், கிழக்கிலுள்ள அரசியல் தலைமைகளுடைய யதார்த்தத்தை பற்றி பிழையாக வடக்கிலும் தவறாக புரிந்துகொள்ளச் செய்வதற்காகவே இந்த அரசியல் முரண்பாட்டை உருவாக்குகிறார்கள்.  நாங்கள் தமிழர்களாக முஸ்லிம்களாக ஒரு மேசைக்கு வருகிற போது  இது ஒரு பாரிய விவகாரமாக எனக்குத் தெரியவில்லை.

 ஒரே ஒருவிடயத்தை நான் குறிப்பாக கோடிட்டு காட்ட விளைகிறேன்.  தற்பொழுது முதலமைச்சர் அவர்களும், சட்டத்தரணி சட்டவிரிவுரையாளர் குருபரன் அவர்களும் குறிப்பிட்டது போல் இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற பூகோள அரசியல், சர்வதேச அரசியல் இவர்களுடைய உள்ளீடுகள், இவர்களுடைய தலையீடுகள் இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவும் இங்கு ஆடுகிற சித்து விளையாட்டுக்கள் தமிழ் முஸ்லிம் உறவை பல துருவங்களாக தொடர்ந்தும் விரிசல் நிலையில் வைத்திருக்கவே நடத்தப்படுகின்றன.  இதற்கு முதலில் நாங்கள் தீர்வுகாண வேண்டும்.  குறிப்பாக முஸ்லிம் தரப்பில் தமிழர்களுடைய அறிவியல்  மையம் வடக்கில் இருப்பதுபோல் வடக்கு-கிழக்கில் முஸ்லிம்களுடைய அறிவியல் மையம் கிழக்கிலிருக்கின்றது.  இந்த யதார்த்தத்தை நாங்கள் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். 
   
 இங்கு மிகவும் உணர்வு பூர்வமான ஒரு விடயம் இருக்கின்றது.  இன்று வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் நிலத்தொடர்பற்ற முறையில் இணைந்து வாழ்கிறோம்.   ஆனால் அமெரிக்காவில் நடந்த செப்ரம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களை சர்வதேச ரீதியில் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க வேண்டிய ஒரு சர்வதேசிய அரசியல்பொறி இன்று பிராந்திய ரீதியில் இறுகி இருக்கிறது.  இதனால்  வடக்கு-கிழக்கு இணைப்பு என்று வருகிற பொழுது முஸ்லிம்கள் அவர்களுடைய இயற்கையான பீதியினை  வெளிக்காட்டுகிறார்கள்.  குறிப்பாக இந்திய வல்லாதிக்கத்துக்குள் இணைந்த வடக்குகிழக்கு ஒரு பூரண கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற பொழுது ஏற்கனவே இந்தியாவில் காப்பீடு இல்லாத முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற அந்த பூகோள அரசியல் பிரச்சினை இலங்கையிலும் தோன்றிவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்கின்ற அங்கலாய்ப்பு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.

  இன்று பொதுபலசேன விவகாரம் சூடுபிடித்த போது சில அப்பாவி அறிவியலுக்கு அப்பாற்பட்ட சிலர் கிழக்கில் வந்து இந்த முஸ்லிம்களுக்கு எதிராக இந்த பொதுபலசேன அவர்களுடைய காணிநிலங்களை அபகரித்தால் நல்லது தானே என்று பேசுகின்ற அளவுக்கு சில தரப்பினர் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.  இது  தொடர்ச்சியான ஒரு புரிந்துணர்வில் தமிழ்தேசியமும் முஸ்லிம் தேசியமும் பயணிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. வடக்கும்-கிழக்கும் பேசிக்கொள்ளவில்லை, எங்களுடைய விவகாரங்களில் உள்ளகப் பொறிமுறையை நாங்கள் உருவாக்கவில்லை. இவற்றால் வந்த பிரச்சனையாகவே நான் இதைப் பார்க்கின்றேன்.  அதனால்தான் தமிழ் மக்கள் பேரவை கிழக்கு மக்கள் அவயத்தோடு பேச வேண்டும். தமிழ்த்தரப்பும் முஸ்லிம் தரப்பும் பேச வேண்டும் என்கின்ற விடயத்தை நான் இங்கு குறிப்பிட வருகிறேன்.  இன்று தமிழ்த்தேசியத்தினுடைய எதிர்காலம் என்பது அனைத்தையும் தாண்டி ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையே ஏற்படுகின்ற உள்ளக மோதலினால்தான் சிதைக்கப்படுகின்றது.  தேர்தல்களில் வெல்வதற்காக தமிழ்த்தேசியத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பது அங்கு சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய அரசியல் அரிச்சுவடியாக இருப்பதனால் அது எங்களைப் பாதிக்கின்றது.  அவர்கள் காலத்துக்கு காலம் திருத்தம், அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்ற பேசுவார்கள். தீர்வுப் பொதி என்று பேசுவார்கள் கடைசி நேரத்திலே எங்களை கைவிட்டு விடுவார்கள்.  இதற்கு முதலில் நாங்கள் தீர்வு கண்டாக வேண்டும்.

 தேசிய அரசாங்கம் என்று சொல்லுகிறவர்கள் எந்த தார்மீக அடிப்படையில் தங்களை தேசிய அரசாங்கமென்று அறிவித்தார்கள் என்று எனக்கு புரியவில்லை.  இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் முதன்முறையாக உத்தியோகபூர்வ எதிர்கட்சி, உத்தியோகபூர்வமற்ற எதிர்க்கட்சி ஆகியவை       ஒரே பாராளுமன்றத்தில் இருக்கின்ற வரலாற்று நிகழ்வு இதுதான்.   உத்தியோகபூர்வ எதிர்கட்சி  தமிழ்த் தேசியத்தின் தலைமையாக இருந்தும் கூட  இந்த பொன்னான வரலாற்றுத் தருணத்தில் பாராளுமன்றத்தில் வாதத்திற்கு உட்படுத்த வேண்டிய அநேக விடயங்களை எதிர்க்கட்சித் தலைவர் நிறைவேற்றவில்லை என்பதையும் தமிழ் முஸ்லிம் தரப்பு சார்பாக நான் பகிரங்க குற்றச்சாட்டாக முன்வைக்க விரும்புகிறேன்.

அண்மையில் பௌத்த தேசியவாதிகளால் முஸ்லிம்களுடைய இருப்பு வடக்கு-கிழக்கிலும், வடக்கு-கிழக்கிற்கு வெளியிலும் கேள்விக்குட்படுத்தப்பட்ட பொழுது ஆகக் குறைந்தது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டிய பொறுப்பினை  எதிர்க்கட்சித்தலைவர்  கொண்டிருந்தார். ஒரு தெளிவான அரசியல் வாதத்தினை முன்வைக்கத் தெரியாத தமிழ்த்தேசியத் தரப்பினரும், முஸ்லிம் தேசியத் தரப்பினரும் பாராளுமன்றத்தில் இருப்பது என்பது வரலாற்றில் ஒருபோதும் நிகழாத சாபக்கேடு என்பதை இங்கு நான் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.

 இவ்வாறாக குற்றம் சாட்டுவது என்பதை தாண்டி எங்களுடைய கருத்தியல், எங்களுடைய அரசியல், எங்களுடைய இருப்பு, எங்களுடைய வரலாறு, எங்களுடைய பூர்வீகம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்கிற அடுத்த சந்ததி இன்னும் எவ்வாறு வந்துவிடப் போகிறது என்ற அங்கலாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது.  என்னுடைய தந்தையார் காலத்திலிருந்து தமிழ் முஸ்லிம் உறவும் என்னுடைய காலத்திலிருந்த தமிழ் முஸ்லிம் உறவும் என்னுடைய பிள்ளைகள் காலத்தில் வரப்போகின்ற தமிழ் முஸ்லிம் உறவும் ஒரே நேர் கோட்டுப்பாதையில் பயணிப்பதற்கு நாங்கள் மிகத் தெளிவான நீண்ட கால செயற்பாட்டுடன்  கூடிய பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பதை தமிழ்த் தரப்பிடம் மிக வினயமாக வேண்டிக்கொள்ள விரும்புகிறேன்.

  இறுதியாக இலங்கையில் குறிப்பாக வடக்கு-கிழக்கிலே ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பதை நோக்கி தமிழ் தேசியம் தொடர்ந்தும் பேசிக்கொண்டு வருகிற போது  முஸ்லிம் தேசியம் தமிழ் தேசியத்தின் சமஷ்டிக்கு எதிரானது என்கின்ற பரப்புரை மிகப் பிழையானது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.  ஏனென்றால் முஸ்லிம் தேசியம் அதனுடைய கருத்தியல் கோட்பாட்டை 1989ஆம் ஆண்டு தனித்துவ அரசியலில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் தலைமையில் முன்வைத்தது. 1994ஆம் ஆண்டு அமைச்சரவையில் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சராக அவர் மாறிய பொழுது அதனுடைய நேர்கோடு சிதைக்கப்படுகிறது.  அதற்குப் பின்னர் இன்றைய முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் வந்ததன் பிற்பாடு முஸ்லிம் தேசியம் என்கின்ற கருத்தியலுக்கு உரம் போடுகிற எந்த  திராணியும் இல்லாமல் இருக்கின்றார். அந்த கருத்தியலுக்கு உள்ளீடுகளை வடக்கு-கிழக்கு தாயகத்தில் இருக்கின்ற மண்ணின் மைந்தர்களிடம் பெற்றுக்கொள்ளாமல் அவர்களை அச்சுறுத்தலாகப் பார்க்கின்ற ஒரு சாபக்கேடும் நிலவுகிறது.  இதனால் இந்த முஸ்லிம்கள் சமஷ்டி சார்பாக என்ன நினைக்கிறார்கள் என்பதை தமிழ் தரப்புக்கு சொல்லுவதில் சில சங்கடங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.


 அஷ்ரப்  அவர்கள் என்னுடைய பிறந்த ஊராகிய நிந்தவூரில் 1991ஆம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டதில் கலந்து கொள்ள வருகிறார்.  நான் இதை பல மேடைகளில் சொல்லியிருக்கிறேன்.  அந்தக் கூட்டத்திலே அன்று இருந்த முன்னாள் அமைச்சர் எம்.எம். முஸ்தபா அவர்களை தனது கட்சியில் உள்ளீர்ப்பதற்காக அவர்ஒரு உத்தியை கையாளுகிறார்.  முஸ்லிம்களுக்கு சமஷ்டி ஆட்சி வேண்டும் என்று குரல் கொடுத்த மைந்தனைப் பெற்ற மண் இந்த நிந்தவூர் மண் என்று அஷ்ரப்  குறிப்பிடுகின்றார்.   ஒரு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரையும் முஸ்லிம் சமஷ்டியைப் பற்றிப் பேசிய இன்னொரு தலைவரையும் நான் பத்து அல்லது பதினொரு வயதாக இருந்த பொழுது அறிந்து கொண்டேன்.  ஏற்கனவே நான் கூறிய திருமலைத் தீர்மானத்தின் போது முஸ்லிம் தரப்பினரிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது.  அப்பொழுதுதான் முஸ்லிம் சமஷ்டி என்கின்ற விவகாரம் தோற்றம் பெற்றிருக்கின்றது.  இன்று முஸ்லிம் சமஷ்டி பற்றி பேசுகிற அரசியல் தலைவர்களும் புத்தியீவிகளும் இல்லாமல் இல்லை.  ஆனால் எங்களுக்கிடையே தோற்றம் பெற்றிருக்கின்ற ஐயப்பாடுகளும் ஒரு பொறிமுறையில்லாத விரிசல்களைச் சந்திக்கின்ற இரண்டு சமூகங்களாக இருக்கின்ற காரணத்தாலும் இதனுடைய தெளிவான கருத்தியல் வாதங்கள் முன் வைக்கப்படுவதில்லை.  அதுவரை ஒன்றை மாத்திரம் நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

 வடக்கு-கிழக்கு இணைக்கப்படுகிற பொழுது முஸ்லிம்களுக்கான  தென்கிழக்கு அலகினுடைய தலைநகரமாக கல்முனையை மையப்படுத்திய சூழல் அமைய வேண்டுமென்று ஏற்கனவே முஸ்லிம் தேசியமும் தமிழ்தேசியமும் இணக்கப்பாடு கண்டுள்ளன.  அதன் பிற்பாடும் இன்று பிரதேச சபைகளை பிரித்துக் கொள்வதில் முஸ்லிம்களுக்கிடையே பிரதேசவாத ரீதியில் அடிபாடுகளும், கல்முனை பிராந்தியத்தில்  தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையேயான அடிபாடுகளும் தற்பொழுது ஆரம்பம் பெற்றிருக்கின்றன. இதில் மிகவும் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய தேவைப்பாடு வடக்கு மக்களுக்கு இருக்கின்றது.  இது இரு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் முஸ்லிம் இனத்துக்குள் விரிசல்களையும் ஏற்படுத்தி எங்களுடைய அதிகார பரவலாக்கத்திற்கான போராட்டத்தை திசை திருப்புவதற்கான ஒரு சிங்களதேசியவாத நிகழ்ச்சி நிரலாகவே நான் இதைப் பார்க்கிறேன்.

 இவ்வாறான விவகாரங்களில்தான் முஸ்லிம் தரப்பின் அரசியல் பிழைகளை ஒரு தமிழ் பேசும் தாயக கோட்பாட்டின் மொழியாடலுக்குள் பரிந்துரை செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் எழுகிறது.  குறிப்பாக வடக்கு-கிழக்கு இணைப்பு என்கின்ற விவகாரம் வருகின்ற பொழுது ஆரம்பத்தில் நாங்கள் செய்து முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கின்றன.  ஏற்கனவே கூறியது போல் வடக்கும் கிழக்கும் பேச வேண்டும்.  தமிழ்தரப்பும் முஸ்லிம் தரப்பும் பேச வேண்டும். அதற்கு முதல் அந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சிவில் நிர்வாக ரீதியாக எங்களுடைய அயல் கிராமங்களுக்கிடையே காணப்படுகின்ற விரிசல்களை ஒவ்வொரு பிராந்தியம் பிராந்தியமாக நாங்கள் களைந்து கொள்ள வேண்டும் இந்த விரிசல்கள் எங்களுடைய போராட்டத்தை சிதைக்கின்ற ஒரு விரிசலாக தொடர்ந்தும் இடம்பெற்றுவிடக்கூடாது. ஆகவே நாங்கள் இரண்டு மாகாணங்களை இரண்டு மாநிலங்களை இணைக்க வேண்டுமென்று பேசுகின்ற பொழுது எங்களுடைய அயல் கிராமங்களுக்கிடையில் ஒற்றுமை காண வேண்டும். ஒற்றுமை காண முடியாமல் உடன்பாடு காணமுடியாமல் பல தசாப்தங்களை கடந்து போவோமாக இருந்தால் இது தொடர்ந்தும் சாத்தியமற்ற ஒரு விடயமாகப் போவற்கு வாய்ப்பிருக்கிறது.

 அதே போன்று முஸ்லிம்கள் மீது இன்று திட்டமிட்ட ரீதியில் தொடுக்கப் படும் சதிகளை முறியடிக்க வேண்டும். குறிப்பாக சொல்லுவதாக இருந்தால் அளுத்தகமை  கலவரம் என்பது இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச சதி.  முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கு பல சர்வதேச அரசியல் சதிகள் இருந்தன.  அதற்காக அவர் புனிதமானவர் என்று சொல்வது எனது கருத்தல்ல.  அதற்குப் பின்னர் முஸ்லிம் தனியார் சட்டத்தை புதிய அரசாங்கம் வந்த வரத்திலையே கேள்விக்கு உட்படுத்தியிருந்தது.  அதற்குப்பின்னாலுள்ள காரணம் என்னவென்றால் முஸ்லிம் தரப்பிலிருந்து ஒரு வகையான உணர்ச்சிமயமாக்கப்பட்ட ஒரு இளைஞர் சமுதாயத்தை உந்துவது.  அதற்கு அடுத்த கட்டம் அவர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்துவது.  வடக்கு கிழக்கில் குறிப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்துகின்ற ஒரு கலாசாரம் பிராந்திய சர்வதேச நிகழ்ச்சி நிரலோடு இணைந்து இடம்பெறுமாக இருந்தால் அது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினுடைய  இருப்பை கேள்விக்குட்படுத்தும்.  ஆகவே இந்த சதி திட்டமிட்ட வகையில் இந்த தேசத்தில் இடம்பெறுகின்றது.  இது பல்வேறு சர்வதேச அரசியலோடு சம்பந்தப்பட்டிருக்கின்றது.  ஆகவே தமிழ் முஸ்லிம் தரப்பும் இதனை நிதானமாகவும் பொறுப்புணர்ச்சியோடும் நடந்து கொள்ள  வேண்டும். அதற்காக எங்களாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் நல்க தயாராக இருக்கிறோம்.

தொகுப்பு-தேனுகா-
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.