இணைப்பில்லாமல் கிழக்குத் தமிழ் மக்களின் இருப்பை ஒருபோதும் பாதுகாக்கமுடியாது


               

  தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 05.09.2017 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 'வடகிழக்கு இணைப்பும் முஸ்லீம் மக்களும்' என்கிற தலைப்பில் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம்  ஆற்றிய உரை வருமாறு,

அரசியல்  விவகாரங்களை உணர்வு நிலையில் அல்லாது அறிவு நிலையில் அணுக வேண்டும் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.  நான் அரசியல்வாதி அல்ல அரசியல் ஆய்வுத்துறையை சேர்ந்தவன்.  எனது கருத்துக்கள் முடிந்த முடிவுகள் அல்ல.  அனைத்துமே ஆய்வுகளுக்கும் பரிசோதனைக்கும் உரியவை.  என்னுடைய கருத்துக்களையும் முடிந்த முடிவாக எடுத்துக் கொள்ளாமல் ஆய்வுகளுக்கும் பரிசோதனைகளுக்குமாக எடுத்துக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 இனப்பிரச்சனை என்பது தமிழ்மக்கள் ஒரு தேசமாக ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிக்கப்படுவது தான்.  அதாவது தேசிய இனத்தைத் தாங்குகின்ற தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம், மக்கள் கூட்டம் என்பவற்றை அழிப்பதுதான் இனப்பிரச்சனை.  அந்த இன அழிப்பின் உச்சம் தான் உயிர் அழிப்பு. தமிழ்மக்கள் உச்சவழியான அழிவை சந்தித்திருக்கிறார்கள்.  சிங்கள தேசம் இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டுமெனக் கருதுவதால் தான் இந்த அழிவு இடம்பெற்றது.

எனவே அரசியல் தீர்வு என்பது இந்த அழிவிலிருந்து தமிழ்மக்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்கு கோட்பாட்டுரீதியாக தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.  அவர்களுடைய ஆட்சி அதிகாரமாகிய இறைமையை அங்கீகரிக்க வேண்டும்.  அவர்களுக்கு இயல்பாகவே உள்ள சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.  சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய  ஒரு ஆட்சிப் பொறிமுறையை உருவாக்குதல் வேண்டும். இது கோட்பாட்டு ரீதியான விடயங்கள்.  இவற்றுக்கு அரசியல் யாப்பு சட்டவடிவம் கொடுக்கின்ற போது நான்கு விடயங்கள் முக்கியமானவை.

 தமிழ்மக்களுடைய கூட்டுரிமையையும் கூட்டிருப்பையும் கூட்டடையாளத்தையும் பேணக்கூடிய வகையில் வடக்குகிழக்கு இணைந்த அலகு என்பது முக்கியமானது.

தமிழ்மக்கள் தங்களுயடைய சுயநிர்ணய உரிமையை தாங்களே பிரயோகிக்கக் கூடிய சுயாட்சி அதிகாரங்கள் முக்கியமானது.

கூட்டும் பகிர்வும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஆட்சிப் பொறிமுறையை உருவாக்கினால் மத்திய அரசில்  தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக பங்குபற்றுவதற்கான வாய்ப்பும் பொறிமுறையும் உருவாக்கப்படுதல் வேண்டும் என்பது மூன்றாவது விடயமாகும்.  மத்தியஅரசை ஒரு சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்த அதிகாரப் பகிர்வு வழங்கினாலும் அது ஒருபோதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பதுதான் எங்களுடைய வரலாற்று அனுபவம்.

 நான்காவது அந்த அதிகாரங்களுக்கான பாதுகாப்பு.  ஒரு கையால் கொடுத்து விட்டு மறுகையால் பறித்த அனுபவங்கள் எங்களுக்கு இருக்கிறன.  ஆகவே இந்த நான்கு விடயங்களும் அரசியல் தீர்வில் உள்ளடக்கப் வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இந்த இடத்தில்தான் முதலாவதாக வருகின்ற இந்த அதிகார அலகு என்பது முக்கியமாக இருக்கின்றது.  நான் ஏற்கனவே கூறினேன் தமிழ்மக்கள் தங்களது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு இந்த வடக்குக்கிழக்கு இணைப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. அது மாத்திரமல்ல கிழக்கில் தமிழ்மக்களினுடைய இருப்பை பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் இந்த வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது மிகவும் அவசியமானதென்று நான் கருதுகின்றேன்.

  கூட்டிருப்பு, கூட்டுரிமை, கூட்டடையாளம் என்பவை தேசிய இனத்தினுடைய அடிப்படைகள். இவை இல்லாமல் ஒருபோதுமே ஒரு தேசிய இனம் தேசியமாக எழுச்சியடைவே முடியாது. இவற்றைச் சிதைப்பது என்பது தேசிய இனத்தை சிதைப்பதற்கு சமமானது. மாறி மாறி வந்த சிங்கள ஆட்சியாளர்கள் அதனைத்தான் செய்தார்கள். கூட்டிருப்பு சிதைந்தால் கூட்டுரிமையும், கூட்டடையாளமும் தன்னுடையபாட்டிலேயே சிதைந்து போகும் வாய்ப்புக்கள் உருவாகும். கூட்டிருப்பை சிதைப்பதற்கு ஒரேஒரு வழி அந்த தேசிய இனம் இருக்கின்ற நிலத்தின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதுதான்.  சிங்கள ஆட்சியாளர்கள் சுதந்திரத்திற்கு  முதலே இதற்கான முயற்சிகளில் இறங்கி இருந்தார்கள் என்பதை நாங்கள் வரலாற்று ரீதியாகப் பார்க்கின்றோம்.

ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்லோயத்திட்டத்தில் தொடங்கியிருந்தாலும் கூட  அவர்களுடைய முழுக் கவனமும் தமிழ்மக்களுடைய மையமாக இருக்கின்ற திருகோணமலை மாவட்டத்தை சிதைப்பதுதான்.  எல்லா வகையான நிலப்பறிப்பு முயற்சிகளும் திருகோணமலையில் அரங்கேறியதை நாங்கள் பார்க்கின்றோம்.  திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோதமான விவசாயக்குடியேற்றம், வியாபாரக்குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனித பிரதேசத்துக்;கான குடியேற்றம், முப்படைக்கான பண்ணைக் குடியேற்றம் என அனைத்து குடியேற்ற முயற்சிகளும் பரீட்சித்து பார்க்கப்பட்ட ஒரு மாவட்டம்தான் திருகோணமலை மாவட்டம்.

 அல்லைத்திட்டம், கந்தளாய்த்திட்டம், பதிவியாத்திட்டம், முறவௌத்திட்டம்,  மகாதிவுள்வௌவாதிட்டம்    என பல விவசாயத்திட்டங்கள் மூலம் இந்த நிலப்பறிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஒற்றையாட்சி கட்டமைப்பும் அதன் வழி வந்த நிர்வாக அதிகாரமும் இந்த நிலப்பறிப்பு முயற்சிகளுக்கு உதவியாக இருந்ததை நாங்கள் பார்க்கின்றோம்.  உள்ளூராட்சி திட்டங்களும் தேர்தல் தொகுதிகளும் அந்த குடியேற்றங்களுக்கு அரசியல்ரீதியான அந்தஸ்தினை கொடுத்ததினையும் நாங்கள் வரலாற்று ரீதியாக பார்க்கின்றோம்.  ஆயுதப்போராட்டம் இந்த நிலப்பரப்பை மட்டுப்படுத்தி வைத்திருந்தது.  ஆனால் இன்று திரும்ப அந்த நிலப்பறிப்பு இடம்பெறுவதை நடைமுறையில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

 சிங்கள குடியேற்றத்தின் நிலப்பறிப்புக்கு அப்பால் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் மக்களும் தங்களுடைய நிலத்தை பறிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை கிழக்குத் தமிழர்கள் இன்று எழுப்பி வருக்கின்றார்கள்.  கிழக்கில் இன்று தமிழ்மக்களிடம் அதிகாரம் இல்லை.  அதிகாரத்தை பெற்றிருக்கும் தரப்புக்கள் இன்று கிழக்குத் தமிழ்மக்கள் மீது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை  தொடங்கியிருக்கின்றனர். இதை எதிர்த்து ஒரு தற்காப்பு யுத்தத்தைகூட நடாத்த முடியாத நிலையில் கிழக்குத் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.  கிழக்கில் ஒரு வகையில் கொஞ்சமாவது பலமாக இருக்கின்ற மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் தான்.  மட்டக்களப்பு மாவட்டம் பலமாக இருக்கின்ற போதுதான் திருகோணமலை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் எஞ்சியிருக்கின்ற  தமிழ் பிரதேசங்களையாவது  பாதுகாக்க முடியும். ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டம் தன்னையே பாதுகாக்க திராணியற்று திணறிக்கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.   

 இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும்  இனப்பிரச்சனையை வடக்கோடு மட்டும்தான் முடக்குவதற்கு முயற்சிக்கின்றன.  வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஒருவரும் கிழக்குச் செல்வதில்லை.  எங்களுடைய அரசியல் தலைமைகளும் கிழக்குக்குச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கேட்பதுமில்லை.  தாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும் கிழக்குப் பிரதிநிதிகளைக் கூட்டிச் செல்வதுமில்லை.  தாங்களும் கிழக்கு விவகாரத்தைக் கதைப்பதுமில்லை. மொத்தமாக கிழக்குத் தமிழ்மக்களை  ஒரு இருட்டுக்குள் விட்ட நிலைமைதான் இருக்கின்றது.  இந்த நிலைமையில்தான் வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது அடிப்படையானது. பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டது என நான் கூறவருகின்றேன். 

 இங்குதான் முஸ்லிம் விவகாரம் முக்கியமானதாக இருக்கின்றது. வடக்கு-கிழக்கு முஸ்லிம்களினதும் தாயகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் வடக்கு-கிழக்குக்கென தமிழ்மக்களால் நகர்த்தப்பட்ட அரசியலுக்குள் முஸ்லிம் மக்கள் இணையவில்லை. அவர்கள் அதற்கு வெளியேதான் நின்றனர். நபர்களாக ஒருசிலர் பங்கு கொண்டனரே தவிர முஸ்லிம் சமூகம் அந்த அரசியலுக்கு வெளியே தான் நின்றது.  தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்துக்குள் வருவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கவில்லை.  அவர்கள் தங்களை மத அடிப்படையிலான ஒரு தனியான இனமாகவே அடையாளப்படுத்தியிருந்தனர்.   அவ்வாறு தனியாக தங்களை அடையாளப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது என்பதையும் நான் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

 தமிழ் அரசியல் மட்டும் தான் முஸ்லிம்களையும் தமிழ்பேசும் மக்கள் என்று உள்ளடக்கும் ஒரு  கோட்பாட்டைத் தூக்கிப்பிடித்த நிலைமை காணப்பட்டது.  ஒருவகையில் தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாடு முஸ்லிம் அரசியலைக் கொச்சைப்படத்துகின்றது.  ஏனென்றால் அவர்கள் அதுக்கு இணையவுமில்லை, வரவுமில்லை. தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் அதுவே கை விலங்காகிவிட்டது.  தமிழ் பேசும் மக்கள் கோட்பாட்டை பேண வேண்டும் என்பதற்காகவே அங்கு வருகின்ற விடயங்களை கையாளுகின்ற  மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும்  எமது அரசியல் தலைமைகள் வகுக்க தவறியிருக்கின்றன என்பதையும் நாங்கள் வரலாற்றில் பார்க்கின்றோம்.  இந்த இடத்தில் தான் இணைப்பை ஏற்றுக்கொள்வதில்  முஸ்லிம் மக்களுக்கு பல நெருக்கடிகள் இருக்கின்றன. நான் அதை மறுக்கவில்லை.

 முதலாவது வடக்கு-கிழக்குக்கென  தனியான அரசியல் முஸ்லிம் மக்கள் மத்தியல் கட்டியெழுப்பப்படவில்லை.  அவர்கள் முழு இலங்கைக்குமான அரசியலைத்தான் கட்டியெழுப்பியிருந்தார்கள்.  இதனால் வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது தென்னிலங்கை முஸ்லிம்களை பாதிக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.

 இரண்டாவதாக வடக்குக்கிழக்கு இணைந்தால் தங்களுடைய விகிதாசாரம் குறைந்துவிடும் அதனால் தங்களுடைய அதிகாரம் குறைந்துவிடும் என அவர்கள் நினைக்கின்றார்கள். 

 மூன்றாவது கிழக்கில் இரண்டாவது பெரும்பான்மையாக இருப்பதால் இன்னமும் சில வருடங்களில் முதலாவது பெரும்பான்மை இனமாக நாங்கள் மாறிவிடுவோம் எனவே கிழக்கின் அதிகாரம் தங்களிடமே நிலைத்து நிற்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

 நான்காவது வடக்குகிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டால் எதிர்ப்பு அரசியலுக்கு முஸ்லிம்களும் தயாராக வேண்டும்.  அதன் வளர்ச்சியாக போராட்ட அரசியலுக்கும் தயாராக வேண்டும். முஸ்லிம்களிடம் அந்த அரசியல் கலாசாரம் வளரவேயில்லை.  அதனால் அதுவும் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கின்றது.

ஐந்தாவது நீண்ட போர் காரணமாக சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம் மக்களுக்கு சில சலுகைகளை வழங்கியிருந்தனர்.  இந்த சலுகையினால் கிழக்குத் தமிழ் மக்களைவிட பொருளாதார ரீதியில் முஸ்லிம்கள் மேல்நிலையில் இருக்கின்றனர்.  இந்த சலுகைகள் நிரந்தரமானவையென அவர்கள் நினைக்கப் பார்க்கின்றார்கள்.

ஆறாவது ஆயுதப்போராட்ட காலத்தில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக கிழக்கில்  இரு சமூகங்களும் ஒருவரை ஒருவர் நம்பத்  தயாரில்லாத நிலைமையே காணப்படுகிறது.  இந்தக் காரணங்களினால் வடக்குகிழக்கு இணைப்பைவிட வடக்குகிழக்கு பிரிந்து இருப்பதுதான் தமது நலன்களுக்கு உகந்தது என முஸ்லிம் மக்கள் தற்போது கருதுகிறார்கள்.  இது முஸ்லிம் பெரும்பான்மையுடைய உளவியல்  விருப்பமே. இன்று வடக்குகிழக்கு இணைப்புக்கு சார்பாக முஸ்லிம் கட்சியோ, முஸ்லிம் தலைவரோ அல்லது ஒரு முஸ்லிம் வெகுஜன அமைப்கோ இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை.  முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகு தரப்படும் அதற்கான ஒத்துழைப்புக்களை நாங்கள் வழங்குவோமென பல தடவை கூறியிருந்தும் நல்லெண்ண நடவடிக்கையாக கிழக்கு மாகாண அதிகாரத்தை விட்டுக்கொடுத்தும் கூட  அவர்கள் சாதக முடிவு எடுக்க பின் நிற்கின்றார்கள்.

 இந்த நிலையில்தான் முஸ்லிம்களும் இணைந்த வடக்கு-கிழக்கில் ஒரு அதிகார அலக உருவாக்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை என நான் நினைக்கின்றேன்.  அவர்கள் இணைந்தால் எங்களுக்கு சந்தோசமான விடயம்.  ஆகவே  அவர்களுக்கு எந்தவகையான இடம் என்பதை அவர்களோடு பேசி தீர்க்கலாம்.  ஆனால் நடைமுறை உண்மை அவர்கள் இந்த இணைப்புக்கு  முன் வர தயாரில்லாத நிலைமைதான் காணப்படுகின்றது.  ஆனால் இது கிழக்கு தமிழ் மக்களுக்கு வாழ்வா? சாவா? பிரச்சனை.  அவர்கள் இன்று அரசியல் தலைமைகளில் நம்பிக்கை இழந்து பௌத்த பிக்குகளுக்கு பின்னால் போகின்ற நிலைமை காணப்படுகின்றது.  இணைப்பு இல்லாமல் கிழக்குத் தமிழ் மக்களின் இருப்பை ஒருபோதுமே பாதுகாக்க முடியாது.

 இந்ந நிலையில்தான் மாற்று யோசனை நோக்கி நாங்கள் நகர வேண்டுமென நான் நினைக்கின்றேன்.  அந்த மாற்று யோசனை என்பது வடகிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களை நிலத்தொடர்பு அற்றவகையிலாவது இணைத்து ஒரு இணைந்த அதிகார அலகை  உருவாக்குவதுதான்.  இந்த நிலத்தொடர்ச்சியற்ற அதிகார அலகு என்பது உலகிற்கு புதியது அல்ல.  எங்களுடைய அண்மையிலுள்ள நாடான இந்தியாவிலையே அது நடைமுறையிலுள்ளது.  பாண்டிச்சேரி மாநிலம் இந்த நிலத் தொடர்ச்சியற்ற மாநிலத்துக்கு  ஒரு உதாரணம்.  பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலம் மட்டும் தமிழ் நாட்டிலுள்ளன.  ஏனாம் என்கின்ற பகுதி ஆந்திராவில் உள்ளது.  மாசி என்ற பகுதி கேரளத்தில் உள்ளது.  நான்கு நிலத்தொடர்ச்சியற்ற பகுதிகளை இணைத்து அவர்கள் ஒரு அதிகார அலகை உருவாக்கியிருக்கிறார்கள்.  ஆகவே அப்படியான ஒரு அதிகார அலகுதான் எங்களுக்குத் தேவையென நான் நினைக்கின்றேன்.

 எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களும் மாறலாம். முஸ்லிம் மக்கள் மாறுகின்ற போது அவர்களோடு இணைந்த வகையில் வடக்கு கிழக்கு இணைப்பை மேற்கொள்வது எங்களுக்கு சுலபமாக இருக்கலாம்.  ஆனால் இன்றைக்குள்ள நிலைமையில் நாங்கள் செய்யவேண்டியது எது என்பதுதான் இன்றைக்குள்ள முக்கியமான விடயம்.  ஆகவே இந்த விடயத்தையும் கவனத்தில் எடுத்து அரசியல் சக்திகள், அரசியல் தரப்புக்கள் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென நான் நினைக்கின்றேன்.  தமிழ்மக்கள் பேரவை இது தொடர்பான ஆய்வுகளையும் விவாதங்களையும் நடாத்துவது நல்லது என்பதுதான் என்னுடைய கருத்து. காலத்தை நாங்கள் விரயமாக விடுவது கிழக்கு தமிழ் மக்களின் சிதைப்பிலேதான் முடியும்.

தொகுப்பு-விக்னேஸ்வரி-
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.