மலையகத்தேசியம் -; சிதைக்கப்படும்கலாசாரம்






அறிமுகம்

“உன்னிடத்தில் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அது போலவே நீ அடுத்தவரிடமும் நடந்து கொள்ளவேண்டும்” இதனையே கலாசாரம், பண்பாடு, நாகரீகம் என பெரியார் குறிப்பிட்டுகிறார். இங்கு கலாசாரம் என்பது சமஸ்கிருத சொல்.  அதற்கு மாற்றான தமிழ் சொல் தான் பண்பாடு.  தமிழ் மொழியில் கலாசாரம், பண்பாடு என்ற இரண்டு சொற்களும் பரவலாக பயன்படுத்தப்படினும் ஆங்கிலத்தில் இவை இரண்டிற்கும் பொதுவாக ஊரடவரசந Culture (Cultivating the Society)  என்றே பயன்படுத்தப்படுகின்றது.  கலாசாரம் என்பது பரந்தவிடயமென்றும், அதில் உள்ளடங்கும் ஒரு பிரிவே பண்பாடு என்றொரு கருத்தும் உள்ளது.  அதாவது இக்கட்டுரையில் கலாசாரம்-பண்பாடு இரண்டும் ஒன்று என்ற கருத்து நிலையிலிருந்தே விடயங்கள் நோக்கப்படுகின்றன.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், “பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமூக, வரலாற்று வளர்ச்சியினூடாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதிகப்பொருட்கள், ஆத்மார்த்த கருத்துக்கள், மத நடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள், ஆகியவற்றினது தொகுதியாகும்.  பண்பாடு என்பது ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி நிலை, உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள், ஆகியவற்றின் தொகுதியாகும்” என குறிப்பிடுகிறார்.  மேலும் விளக்க நிலையில் “பண்பாடு என்பது வெளிப்பார்வையில் ஒரு நடத்தை முறையாகவே தோன்றினாலும் உண்மையில் அது ஓர் அறிகை முறைமையே. பண்பாடு என்பது அந்த மக்கட் கூட்டத்தினரிடையே உள்ள சகலரும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், நடைமுறை உத்திகள், வழிநடத்து முறைமைகள் ஆகியனவாகும். அதாவது உண்மையில் பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட குழுமத்திடையே அதன் அங்கத்தவர்கள் கொள்ளும் அர்த்தங்களுக்கான சூழமைவுகளைக் கொண்டதாகும்.  பண்பாடு மனிதர்களைப் பக்குவப்படுத்துவது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறைக்கு அந்தக் குழுமத்தின் மக்களை இணைய வைப்பதுமாகும்”.

அதாவது மனிதனானவன் தன்னை சுற்றியுள்ள மனிதர்களையும், உயிர்களையும் இயற்கைப் பொருட்களையும் தன் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி அவற்றுக்குத் தன் வாழ்க்கையில் இடம் தந்து தன் இருப்பைப் புரிந்து கொள்வதே, வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது ஆகும்.  இந்த வாழ்க்கை அர்த்தப்படுத்தலானது கருத்துகள், நம்பிக்கைகள், நடைமுறைகளின் மூலம் வெளிப்படுத்தப்படும். இந்த வெளிப்படுத்தல்களின் தொகுப்பே விளக்க நிலையில் பண்பாடு என்கிறோம்.

வாழ்வின் அர்த்தம் பண்பாடு நிலையானது அல்ல.  அது காலந்தோறும் மாற்றமடையக் கூடியது. முனிதனைச் சுற்றியிருப்பவை மாறுவதால், அந்த மாறுதல்களோடு மனிதன் தன்னை இணைத்து வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும் மாறுகிறது.  எனவே, மாற்றம் தவிர்க்க முடியாதது. அதாவது பண்பாடு என்பது தொழில்நுட்பம் வளர வளர வளரும்.  அர்த்தங்களும் மாறுபடும்.  தலைமுறை இடைவெளி ஊடாக இதனை அவதானிக்கலாம்.  மாற்றத்திற்கும், நெகிழ்வுத்தன்மைக்கும் உட்பட்டது தான் பண்பாடு என்ற வகையில், வெளிவடிவம் மாறினாலும் அடிப்படைத் தன்மை மாறாமல் இருக்கும் பண்புகளும் பண்பாட்டிற்கு உண்டு.



பண்பாடானது கருத்து நிலை தோன்றுவதற்கான தளமாகவும் இருக்கின்றது.  எந்தவொரு பண்பாட்டுக்கும் அதற்குரிய அகஅமைப்பையும், முழுமையையும் தந்து, அதனை உயிர்ப்புள்ள ஒன்றாக்குவது கருத்து நிலையே ஆகும்.  பண்பாடு என்பது வாழ்க்கை முறையினடியாக வருகின்றது.  கருத்து நிலை என்பது பண்பாட்டைத் தளமாகக் கொண்டது.  கருத்துநிலையே மனிதர்களின் மனோ பாவங்களையும் வாழ்க்கை நோக்குகளையும் தீர்மானிக்கின்றது.

தேசியமும் பண்பாடும்

தேசியத்தின் பிரதான தூண்களில் ஒன்று என்ற வகையிலும் கலாசாரம் முக்கியத்துவம் பெறுகின்றது. காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் இக்கலாசாரம் ஒருதேசிய இனத்தின் வேராகவும் உள்ளது. இந்ந தேசியம் தான் கூட்டுக் குழுமம் என்ற உணர்வை பேணுகிறது.

எமது இலங்கை சமூகத்தில் பண்பாடு தான் பிரதானமான தேசியத்தை வடிவமைக்கிறது. நகர, கிராமிய, தோட்டப்புறப ;பண்பாடு, வேறு வேறு பாடசாலை பண்பாடு (இது ஆளுமைமையில் செல்வாக்கு செலுத்துகிறது),  குடும்ப பண்பாடு அரசியல் பண்பாடு, கட்சி அரசியல் பண்பாடு, பால் நிலை சார்ந்த பண்பாடு, ஊடகப் பண்பாடு (திட்டமிட்ட நுகர்வு பண்பாட்டை திணித்தல்) என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

ஒரு சமூத்தினுடைய உயிர்ப்பான அனைத்துக் கலங்களுடைய கூட்டுத் தொகுதிதான் பண்பாடு ஆகும்.  அந்த வகையில பண்பாடானது சமூக இருப்பின் ஒரு அடையாளமாகவும், தேசியத்தை வடிவமைக்கும் பிரதான கூறாகவும் திகழ்கிறது.  கூட்டு வாழ்க்கையும் கூட்டு அடையாளமும் தான் தேசியத்தின் அடிப்படைகளாகும்.  கூட்டு என்னும் போது அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி அவசியமாகும்.  கலாசாரம் பண்பாடு ஒரு தேசிய இனத்தின் அனைவரையும் இணைக்கும் சக்தியாகவும், இனத்துவ அடையாளத்தை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் விளங்குகின்றது.

இந்தக் கலாசாரம் பெரும்பாலும் எழுதப்படாத சட்டமாகவே சமூகங்களில் காணப்படுகிறது.  குறிப்பாக வாழ்க்கை முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்ற காரணிகளான எண்ணங்கள், சிந்தனைகள், மொழி, கலைகள், இலக்கியங்கள், வழக்காறுகள் (வழமை) தொன்மங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆன்மீக தொழிற்பாடுகள், மதம், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், மரபுகள், உடை, அணிகலன்கள், பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள், உணவு முறை, விருந்தோம்பல்,உபசரிப்பு, விளையாட்டுக்கள், பொழுது போக்கு அம்சங்கள், ஓவியம், சிற்பம், இசை, நாடகம், நாட்டியம், ஆடல், பாடல், கல்வி, அரசியல், சமூகம், பொருளாதாரம், மருத்துவம், விழுமியங்கள் என பண்பாட்டு வெளிப்பாடுகளின் பரப்பு விரிந்து காணப்படுகின்றது.

மலையக தேசியமும் பண்பாடும்.

மலையகத் தமிழ் சமூகத்தில் பண்பாடு தான் தேசியத்தை வடிவமைக்கின்றது. மலையகம் இன்று தனி தேசியமாக வளர்ந்து வருகின்ற நிலையில் அதன் பண்பாட்டு விழுமியங்களின் பிரதான வெளிப்பாடாக தமிழ்மொழி உள்ளது.  (மொழியும் பண்பாட்டின் ஒரு பகுதியே).  மலையகத் தமிழ்தேசியத்தின் கலாசார வேர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளது.



சிங்கள பகுதிகளால் சூழப்பட்ட ஒரு தமிழ் மலையாகவே மலையகம் உள்ளது.  மலையகத்தமிழ் தேசியத்தின் அல்லது மலையகத் தேசியத்தின் அடிப்படைகளில் ஒன்று என்ற ரீதியில் கலாசாரம்-பண்பாட்டு விழுமியங்களை விளங்கிக் கொள்ளல் அவசியமாகிறது.  ஏனெனில் மலையகத் தேசியத்தினுடைய அடையாளமும், இருப்பும் இதில் தான் தங்கியுள்ளது.

மலையகப் பண்பாட்டுச் சூழலை ஆராய்கின்ற பொழுது இந்தப் பண்பாட்டை  முன் நிறுத்தும் விழுமியங்களின் தோற்றம் பற்றி தெளிவாக கூற முடியாவிட்டாலும், அவை தென்னிந்திய ஆதிபண்பாட்டு விழுமியங்களின் தோற்றத்துடன் தொடர்புபட்டது என்பதை மட்டும் கூற முடியும்.  மலையக சமூகத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற ரீதியில் இந்தப் பண்பாடும் அவர்களுடன் இங்கு கொண்டு வரப்பட்டது.  அத்துடன் மலையக சமூக உருவாக்கத்திற்கும் பங்களிப்புச் செய்துள்ளது.

இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து மலையகத்தில் குடியேறியவர்கள் என்ற வகையில் அவர்கள் பல்வேறு கலாசாரங்களின் தொகுப்பையே இங்கு கொண்டு வந்தனர். மலையக வாழ்வியல் சூழலில் ஒரு தனித்துவமான பண்பாடு தோற்றம் பெற்றது.  மலையை தெய்வமாக வழிபடும் முறையும் பெரும்பாலான பெருந்தோட்டமட்ட வழிபாட்டுக்குரிய தெய்வங்களின் வழிபாட்டு முறைமையையும் இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.  இந்த இரண்டு பண்பாடுகளும் இணைந்து தான் இன்றைய மலையகப் பண்பாடாக எழுச்சி கொண்டுள்ளது.

ஒரு தேசிய இனமாக வளரும் போது அதன் தனித்துவத்தை பேணும் அரசியல் தேவையின் நிமித்தமும் மலையகப் பண்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது.  கால ஓட்டத்திற்கேற்பவும், சூழலுக்கேற்பவும் மாற்றங்களை உள்வாங்கி இன்று மலையக மயமாகியுள்ள இத்தகையதோர் பண்பாட்டு வடிவத்தை வேறெந்த சமூக கட்டமைப்பிலும் தேட முடியாது.      மலையக பண்பாட்டு-கலாசார விழுமியங்கள் தமது தனித்துவத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளன.  இதுவே மலையகத்தேசியத்தின் முன்னோக்கிய பாய்ச்சலுக்கு இன்றும் துணைநிற்கின்றது.  இந்த தனித்துவமான கலாசார பாராம்பரியத்தின் அங்கமாக இசைக்கருவிகள் (தப்பு, உடுக்கு, உறுமி, பறை, சங்கு, சேகண்டி, செஞ்சனகட்டை, தமுர், ஜல், ஜாலரா, குழித்தாளம், புல்லாங்குழல், ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், கடம், தவில், மோசிங், செண்டை) என்பனவும் காமன் கூத்து, அருச்சுணன் தபசு, பொன்னர் சங்கர், முனியாண்டி கூத்து போன்ற கூத்து வடிவங்களும் இடம்பெறுகின்றன.

இந்த வலிமைமிகு கலாசார பாரம்பரியத்தில் தென்னாலிராமன், தேசிங்குராஜா, கட்டபொம்மன், கட்டபொம்மன் கதைப்பாடல், வள்ளிராசன் கதை, நல்லதங்காள் கதை, சித்திர புத்திர நாயனார் கதை, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, நளமகராசன் கதை, விக்கரமாதித்தன் கதை, ராஜாதேசிங்கு அல்லி அரசானி மாலை, பாண்டவர் வனவாசம், மின்சார மாயன், மன்னன் சின்னான்டி போன்ற கதைகளும், சிலம்பாட்டம், கிளித்தட்டு, சடுகுடு, புள்ளையார் பந்து, பல்லாங்குழி, பட்டாக் கத்தி வீச்சு, பிடி வரிசை போன்ற விளையாட்டுக்களும் இடம்பெறுகின்றன.

கரகம், காவடி, அன்னக்காவடி, பரவக்காவடி, பன்னீர்காவடி, பு~;ப காவடி, சந்தனக்காவடி, வேல்காவடி, கோவில்காவடி, கும்மி, ஒய்ல்கும்மி, ஒயிலாட்டம், கோலாட்டம், மொம்மலாட்டம், தோட்பாவை ஆட்டம், வேடன் புலி ஆட்டம், பொய்க்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பபூன்-கோமாளி ஆட்டம், டிங்கி டிங்கி ஆட்டம், என்பன ஆட்டக்கலை பிரிவில் இடம்பெறுகின்றன.  பின்வரும் பாடல் வடிவங்களையும் கலாசார விழுமியங்களில் காணக்கூடியதாகவுள்ளது.  தாலாட்டு-ஒப்பாரி (பிறப்பு முதல் இறப்பு வரையான பாடல்கள்) லாவணி, மாரியம்மன், தாலாட்டு, உடுக்கடிப்பாடல், தேர்ப்பாடல், பூசாரிப்பாடல், காமன் கூத்து பாடல், மாரடிப்பு பாடல், பபூன்-கோமாளி பாடல், தெம்மாங்கு பாடல், வெட்டியான்-வெட்டியச்சிப் பாடல், தொழில் பாடல் என பாடல் வடிவங்கள் விரிந்து செல்கின்றன.

லங்கா தகனம் (கண்டி ராசன் கதை), ராமாயணம், சத்தியவான் சாவித்திரி, குலேபகாவலி, அரிச்சந்திரன் மயான காண்டம், அர்ச்சுணன் தபசு, நந்தினி சரித்திரம், மதுரை வீரன், பொன்னர் சங்கர் போன்ற நாடக வடிவங்களும், பூ கட்டி பார்த்தல், பூப்பு சடங்கு, சாவு சடங்கு, பேய்-பிசாசு விரட்டுதல், மந்திர சடங்கு, நேர்த்திக்கடன், திருஸ்டி சுத்துதல், திருமணச் சடங்கு, காதுகுத்து போன்ற சடங்கு முறைகளையும் இங்கு காண முடியும்.

மலையகத்தில் வழிப்பாட்டிற்குரிய கடவுள்களை பொதுவான வழிபாட்டிற்குரிய தெய்வங்கள், பெருந்தோட்ட வழிபாட்டு தெய்வங்கள், (தொழில் சார்ந்தது, தொழில் சாராதது)  கொடூரமான தெய்வங்கள், அவமதிப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் தெய்வங்கள், என்ற பிரிவுகளுக்குள் அடக்கலாம்.    பொதுவான வழிபாட்டுக்குரிய கடவுள்களாக முருகன் (வேறுபெயர்களிலும் அழைப்பர்) மாரியம்மன், (வேறுபெயர்களும் உள்ளன). கிருஸ்ணன், மதுரைவீரன், விநாயகர், காளியம்மன், பத்தினிராமர், அனுமான், பாலதண்டாயுதபாணி, வி~;ணு, காயத்திரி, வைரவர், புத்தர், இயேசு, அன்னை மரியாள் போன்ற தெய்வங்கள் விளங்குகின்றன.

பெருந்தோட்ட மட்டத்தில் தொழில் சார்ந்த தெய்வங்களாக ரோதமுனி, தவறணை முனி, கம்பி முனி, தன்னை முனி, கொழுந்து சாமி, மட்டத்து சாமி என்பனவும், தொழில் சாராத தெய்வங்களாக கந்தசாமி, மாடசாமி, மதுரை வீரன், காளிராமர், சந்திமுனி, முச்சந்தி முனி, எல்லை முனி, இரட்டை கல்முனி, காட்டு முனி, மகா முனி, காட்டேறி அம்மன், முனீஸ்வரன், வன்னடியான், வண்ணாத்திக் கோட்டை, உத்திரை காளி, வீரமாகாளி, மஞ்சள் காளி, வட பத்திரகாளி, பத்திரகாளி, இருளாய், ஆண்டிசாமி, பூச்சி அம்மா, சங்கிலி கருப்பன், கருப்பன சாமி, முன்னடியான், ஆண்டி அப்பர், பிள்ளையார், இடும்பன், வைரவர், சென்டாகட்டி, நொண்டி அப்புச்சி, காமாச்சி, துர்க்காதேவி, மஞ்சள் சாமி, வன தேவதை, பட்டமரத்தான் போன்ற தெய்வங்களும் உள்ளன. மேலும் வனத்து சின்னப்பர், சின்னப்பர், பெரியப்பர், வால்ராசா, காட்டு சின்னப்பர் என்பனவும் தொழில் தெய்வங்களாக உள்ளன.


மேலும் மலையகத்தில் காணப்படுகின்ற குடும்பம் பற்றிய எண்ணக்கரு, திருமண முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், பாரம்பரிய மருந்துகள், மற்றும் நோய் பற்றிய எண்ணக்கரு, சமூக ஒருங்கிணைப்பில் ஆடைகளின் பங்கு, மரபு வழிக்கல்வி மற்றும் பாரம்பரிய தொழிற்பயிற்சிகள், இலக்கியம், வெகுசன தொடர்புகளின் பங்கு என்பனவும் மலையகத் தமிழரின் பண்பாட்டை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உளவியல் விடயத்திலும் பண்பாட்டிற்கும் முக்கிய பங்கு உண்டு.  உதாரணமாக மலையகத்தில் காணப்படுகின்ற சாமி பார்த்து நூல் கட்டுதல், திருஷ்டி கழித்தல் (திட்டிசுத்துதல்) என்பன சரிபிழை என்பதற்கு அப்பால் அது ஒரு பண்பாடாகவே காணப்படுகின்றது.

ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் முழுமலையகமும் திறந்த வெளிசிறைக்கூடமாக காணப்பட்டது.  எந்தவொரு விடயமும் பெருந்தோட்ட உற்பத்தி முறையை பாதிக்கக் கூடாது என்பதில் ஆங்கிலேயர்கள் கவனமாக இருந்தனர்.  இதற்காக தோட்டத் தொழிலாளர்கள் வெளித்தொடர்புகளிலிருந்து விலக்கியே வைக்கப்பட்டனர்.  மேலும் மதச் சுதந்திரம் வழங்குவதனூடாக வெளியுலகத் தொடர்பை குறைக்கலாம் என்பதனாலும், அது உற்பத்தி முறையை பாதிக்காது என்பதாலும் மதச்சுதந்திரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த மதச் சுதந்திரத்தை மலையக மக்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.  இதனூடாக மலையகத் தமிழரின் நம்பிக்கைகள் ,சடங்குகள் , விழாக்கள், பண்டிகைகள், கூத்துக்கள், கலைகள், இலக்கியம், பொழுது போக்கு நடவடிக்கைகள், விளையாட்டுக்கள், கிரியைகள் போன்றவை தொடர்ந்தும் பேணுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டன.  இதனால் மலையகத் தமிழ் மக்களுடைய தனித்துவமான பண்பாட்டுப் பாரம்பரியம் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கான ஏற்ற சூழல் அமையப்பெற்றது.

மலையகப் பண்பாட்டிற்கான நெருக்கடிகள்

இந்த சாதகமான சூழல், சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்தில் குறிப்பாக  1972 ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை தேசிய மயமாக்கப்பட்ட பின் படிப்படியாக மாற்றம் காணத் தொடங்கியது.  ஒரு சமூகத்தினுடைய அடையாளமும், இருப்பும் பண்பாட்டில் தான் பிரதானமாக தங்கியுள்ளது.  இதனால் தான் அடக்கு முறை ஆட்சியாளர்களினால் பண்பாட்டை திட்டமிட்டு அழிப்பதனூடாக ஒரு இனத்தை அழிக்கலாம் என்ற எண்ணப்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது.  மலையக வரலாற்றிலும் இந்த நிலையை அவதானிக்கலாம்.

கூட்டிருப்பு தான் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது என்ற வகையில் கூட்டு வாழ்க்கை இருக்கும் வரையில் தான் தனித்துவமான பண்பாட்டை பேணமுடியும்.  அந்த வகையில் மலையகப் பண்பாட்டு வளர்ச்சிக்கான ஏற்ற சூழல் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் திட்டமிட்ட வகையில் இல்லாது செய்யபபட்டது.  இதன் தொடர்ச்சியாக இன்று மலையகத் தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.


அக நெருக்கடிகள்

•நுகர்வு கலாசாரம் காரணமாக உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கலாசாரத்தை நோக்கி மலையக கலாசாரம் தள்ளப்படுதல்.

•பொதுவான இந்திய சினிமா போன்ற ஜனரஞ்சக கலாசாரம் மேலோங்கி வருவதனால் கூத்து, நாடகம் போன்ற மலையக கலாசார அம்சங்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டுள்ளது.

•தென்னிந்திய தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி நெடும்தொடர்கள் மக்களை நுகர்வு கலாசார ஆசைக்குள் வைத்திருப்பதனால் மலையக மக்கள் தங்கள் சுயகலாசார விழுமியங்களை பாதுகாப்பதிலிருந்து விலகிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

•இலங்கையில் காணப்படுகின்ற பெரும் ஊடக கலாசாரம் காரணமாக மலையக கலைஞர்களின் உழைப்பும், ஆற்றலும் சூறையாடப்படுகின்றது.

•சில கலாசார விடயங்களை சாதி சடங்குகளாக பார்க்கின்ற போக்கு காரணமாக அவைகள் அழிந்து வருகின்றன.

•கலாசாரத்தின் சில பிற்போக்கான கூறுகளினாலே ஒட்டு மொத்த கலாசாரத்தையே மக்கள் ஒதுக்குகின்ற நிலைமை.

•பெண் அடிமைத் தனம் மற்றும் சடங்குகளில் சாதிகள் வகிக்கும் பங்கு – உதாரணமாக மரண சடங்குகளில் பெண்களின் தாலியை கழற்றும் விடயம்.

•கூட்டு நிலையிலிருந்து தனிமனித பண்பாட்டு நிலைக்கு மாறுதல்; படித்த சிலர் சமூகத்திலிருந்து தங்களை துண்டித்து, தாங்கள் சமூகத்திற்கு ஏதோ செய்வதாக காட்டும் பண்பாட்டு நிலை.

•மலையகத்திலுள்ள கோவில்கள் பிரமாண ஆகம மயப்படுத்தப்படுதல்; இதனால் மலையகத்தமிழரின் குலதெய்வ வழிபாட்டு முறைகளை நாகரீகமற்றவையாக பார்க்க மக்களை தூண்டுதல்.

•குருஜீ, சாயிபாபா, அம்மா பகவான், சபரிமலை யாத்திரை என தொடரும் மாற்று வழிபாட்டு முறைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு திணிக்கப்படுவதனால் (இதை ஒரு புதிய நாகரீகமாக பார்க்கும் போக்கு) மலையகத்தமிழரின்சுயவழிபாட்டுமுறைகளைகேலிக்கூத்தாக்குதல்.

•இஸ்லாமிய மயமாக்கலும், கிறிஸ்தவ மதமாற்ற குழுக்களும் மதமாற்ற நடவடிக்கைகள் மூலம் மலையகத் தமிழரின் தனித்துவமானவை பண்பாட்டினை பொய்த் தன்மையானவை என போதிப்பதால் மலையகத் தேசிய இனம் அழிவை நோக்கி செல்கிறது.

•மலையகத் தோட்டங்களில் கோவில் திருவிழாக்களின் போது நிதி உதவிகளை செய்யும் கசிப்பு முதலாளிமார் மற்றும் ஏனைய சமூக விரோத சக்திகள் கசிப்பு மற்றும் சட்ட விரோத மதுபானம், போதைப்பொருள் என்பவற்றை விற்பதற்கான களங்களாக திருவிழாக்களை பயன்படுத்துவதால், திருவிழாக்களின் கலாசார மகிமை மழுங்கடிக்கப்படுகின்றது.

•மலையத்தில் மது, போதைப்பொருட்களை விநியோகிக்கும் சமூக விரோத சக்திகளின் சமூக விரோத செயற்பாடுகளினால் இளைஞர், யுவதிகளின் சிந்தனை சக்தி மழுங்கடிக்கப்படுகின்றது.

•தேர்தல் காலங்களில் மலையகத்தில் மேற்கொள்ளப்படும் மதுபான விநியோகமும் பண்பாட்டு ரீதியான ஒரு ஒடுக்கு முறையேயாகும்.  இதனூடாக மலையக மக்களை சிந்திக்கவிடாமல் தடுக்கப்படுகிறார்கள்.  சிந்தித்தால் தான் பகுத்தறிவு வளர கேள்வி கேட்கும் நிலையும் வளரும், இதனைத் தடுப்பதற்காகவே மதுபான விநியோகம் செய்யப்படுகிறது.

•இந்திய சார்புடைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும், சலுகைகளையும் அதிகாரங்களையும் மட்டுமே எதிர்பார்ப்பாக கொண்ட மலையக அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் மலையக மக்களை தேசிய இனமாக சிந்திப்பதற்கோ, வளர்வதற்கோ இடம்கொடுப்பதில்லை.

புற நெருக்கடிகள்

•மலையகத் தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை பேணுவதற்கும், வளர்ப்பதற்கும் அரசாங்க உதவிகள் கிடைக்கப் பெறுவதில்லை.

•கல்வியில் மலையகத் தமிழரின் வரலாறு, கலாசாரம் பற்றி பாடவிதானங்களில் கவனம் செலுத்தப்படவில்லை.
•மலையகத்தில் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்தும் கட்டாயக் கருத்துடைய பல அரச சார்பற்ற நிறவனங்களும் ஊக்கவிப்பதில் தீவிரமாக செயற்படுகின்றன.

•ஸ்ரீமா-சாஸ்திரி, ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தங்கள் மூலம் ஐந்து இலட்சம்  மலையகத் தமிழர்கள் கட்டாயத்தின் பேரில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட போது பல்துறை சார்ந்த கலைஞர்களும், புலமையாளர்களும் புலம்பெயர் நிலை ஏற்பட்டமை.

•பொருளாதார சூழல் காரணமாக கலைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிஇடங்களுக்கு வெளியேறுகின்ற நிலைமை காரணமாக மலையக கலைகளை வளர்க்க முடியாதுள்ளது.

•இலங்கையின் சிங்கள கிராமிய, நகர பண்பாட்டு கூறுகள் மலையக பண்பாட்டில் செலுத்தும் செல்வாக்கு.

•வன்முறைகளின் மூலம் புலமைசார் கலைஞர்கள் மற்றும் பண்பாட்டுக் காவலர்கள் மலையகத்தை விட்டு வெளியேறும் ஒரு சூழல் உருவாக்கப்பட்டது.

•ஜனநாயகம் என்ற போர்வையில் அரச அங்கீகாரத்துடனான (நேரடி-மறைமுக) பௌத்த விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் மலையகத் தமிழரின் கூட்டிருப்பு சிதைக்கப்படுகிறது.  உதாரணமாக காணி சுவீகரிப்பு, மற்றும் புதிய விகாரைகள், புத்தர் சிலைகளை நிர்மாணித்தல் மூலமாக ஒரு பயஉணர்வு ஊட்டப்பட்டு மலையகத்தேசிய இனம் அழிவை நோக்கி தள்ளப்படுகிறது.

பொதுவான நெருக்கடிகள்

•கலைகளை வளர்ப்பதிலும், காட்சிப்படுத்துவதிலும் ஏற்படும் பொருளாதார சுமை (செலவு) கலைகளின் வளர்ச்சியை பாதித்துள்ளது.

•சில அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மலையக பாரம்பரிய கலைகளை கலைஞர்களை அநாகரிகமாக பார்க்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது.

தீர்வுகள்

இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து மலையக கலாசார-பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதனூடாகவே எதிர்காலத்தில் மலையகத் தேசியத்தை பாதுகாப்பதுடன் அதை ஒரு வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லலாம்.  அதற்காக பின்வரும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் அவசியமாகும்.

•கலாசாரத்தை மீள் உருவாக்கம் செய்தல் வேண்டும்.  மீள் உருவாக்கம் செய்யும் போது கலாசாரத்தின் பிற்போக்கான (மோசமான) கூறுகளை நீக்கி, வேர்கள் அறாமல் மேலும் விருத்தி செய்தல் வேண்டும்.

•மலையக கலாசார பாரம்பரியங்களை வளர்ப்பதற்கான அரச உதவிகள் (அதிகாரம்) உறுதிப்படுத்தப்பட வேண்டும்.  அதுவரை உடப்பு பிரதேசத்திலுள்ளது போன்ற ஒரு சமூக அதிகாரமையத்தினூடாக கலாசார பாரம்பரியங்களை பாதுகாத்தல் வேண்டும்.

•மலையகத்திலுள்ள கோவில்கள் வெறுமனே வழிபாட்டு மையங்களாக மட்டும் இல்லாமல் ஒரு கலாசார மையமாகவும், சமூக நிறுவனமாகவும் மாற்றப்பட வேண்டும்.  அதனை கிறிஸ்தவ பௌத்த, இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் நாம் அவதானிக்கலாம்.

•மலையக கலை, கலாசார பண்பாட்டு காப்பகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

•கலாசாரத்தை பேணிபாதுகாப்பதில் பல்கலைக்கழகத்திற்கு, பாரிய பங்குண்டு, மலையகத்தில் பல்வேறு பிரதேசங்களிலுள்ளவர்களையும் வெளியிலுள்ளவர்களையும் ஒன்று சேர்க்க கூடிய விதத்தில் மலையகத்திற்கான பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

•மலையகத் தமிழ் மக்களை ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரித்தல் வேண்டும்.   முதலில் பல்வேறு சமூக மட்டங்களில் மலையக மக்களை தேசிய இனமாக அங்கீகரிக்கின்ற நிலை உருவாக வேண்டும்.

•மலையக மக்கள் சுயமாகவே தங்களை ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்துகின்ற சிந்தனை உருவாக்கத்தில் சமூக அமைப்புகள் ஈடுபட வேண்டும்.

•மேற்குறிப்பிட்டவற்றை நடைமுறைப்படுத்துவதனூடாகவே மலையகத்தமிழரின் கூட்டிருப்பை பேணி பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க முடியும்.  அதனூடாகவே மலையகத்தேசியத்தை பாதுகாக்க முடியும்.

வோல்டர் டெரி-
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.