நிகழ்வுகளில் மீதமாகும் உணவை எம்மிடம் ஒப்படையுங்கள்: கோருகிறது விண்மீன்கள் அமைப்பு


உலகில் தினமும் 85 கோடி மக்கள் பசியோடு படுக்கைக்கு செல்கிறார்கள். அதனைவிட மோசம், போர் ஓய்ந்த நம் தமிழர் பகுதிகளில் முழு நாளையுமே பட்டினியோடு ஏராளமானோர் கழிக்கின்றனர். இதனை கொஞ்சமாவது குறைக்கும் உன்னத நோக்கோடு இளைஞர்களின் பேராற்றலுடன் பயணிக்கிறது விண்மீன்கள் அமைப்பு.


உணவை வீணாக்காதீர்கள் என்கிற கோஷத்தோடு, பொது நிகழ்வுகளில் உணவு பழுதாகு முன் காலம் தாழ்த்தாது எம்மிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவற்றை கூடிய விரைவில் எடுத்துச் சென்று பசித்திருப்பவர்களிடம் வழங்கத் தயார் என்று துடிப்புள்ள இளைஞர் பட்டாளமே களமிறங்கியுள்ளது.அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புவிகரனுடன் பேசியபோது, எனது நண்பனின் தங்கச்சியின் திருமண வீட்டுக்கு சென்றிருந்த போது தான் இப்படி ஒரு ஐடியா தோன்றியது. அந்த திருமண நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட சாப்பாடுகள் மிஞ்சி விட்டன. மண்டபகாரர்களும் 3 மணிக்குள் பாத்திரங்களை எல்லாம் கழுவிக் கொடுத்து மண்டபத்தை விட்டு விட வேண்டும் என நெருக்கடி கொடுத்தார்கள்.  சாப்பாட்டை வீணாக்காமல் யாராவது பசியோடு இருப்பவர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என நினைத்து தேடினோம். இறுதியில் கன்னியாஸ்திரிகளால் நடாத்தப்படும் இல்லம் ஒன்றுக்கு சென்று வழங்கினோம்.ஏராளமான நிகழ்வுகளின் போது மீதமாகும் உணவை அநியாயமாக வெளியில் கொட்டுகிறார்கள். இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குழுவாக இயங்கி மீதமாகும் சாப்பாடுகளை பொதி செய்து உணவுக்காக கஷ்டப்படும் மக்களுக்கு ஏன் நேரில் கொடுக்கக்கூடாது, என்கிற எண்ணம் குறித்த நிகழ்வின் பின்பு தான் தோன்றியது. முதலில் நண்பர்களின் தொடர்புகளுக்கூடாக நிகழ்வுகளின் போது எஞ்சும் சாப்பாடுகளை வாங்கி பொதி செய்து ஏழை எளிய மக்களுக்கு நேரில் சென்று கொடுக்கும் பணியை கடந்த ஆறாம் மாதமளவில் வவுனியாவில் தொடங்கினோம். முதலில் வவுனியா நகரை சூழவுள்ள இடங்களில் உணவின்றி வாடும் ஆதரவற்றவர்கள், வயதானவர்கள் என்று தேடி தேடிச் சென்று உணவை வழங்கினோம். இந்தப் பணிக்கு நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.அப்போது தான் வவுனியாவில் மட்டும் இவ்வளவு உணவு மிச்சமாகிறது என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் எவ்வளவு உணவு மிச்சமாகும்? இதனை எப்படி வினைத்திறனுடன் செயற்படுத்துவது என்கிற கேள்வி எழுந்த போது ஒவ்வொரு பிரதேசத்திலேயும் இணைப்பாளர்களை வைத்திருந்து அவர்கள் மூலம் இந்த வேலையை இலகுவாக செய்து முடிக்கலாம் என்கிற எண்ணம் வந்தது. அதனடிப்படையில் கடந்த மாதம் நண்பர்களுடன் ஆலோசித்து பணமாக யாரிடம் இருந்தும் வாங்குவதில்லை என்கிற கொள்கையுடன் விண்மீன்கள் என்கிற தன்னார்வ அமைப்பை உருவாக்கினோம். அதனை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எங்கள் பணியை விஸ்தரித்த 3 நாட்களில் 5 இடங்களில் இருந்து சாப்பாடு எஞ்சியிருந்ததாக தகவல் வந்தது. அதனை இங்குள்ள குடிசை வாழ் மக்களுக்கு விநியோகம் செய்தோம். இப்போது பருவ மழை அடைமழையாக தொடர்ந்து வருவதால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் உள்ள முகாம்களின் குடிசைகளைச் சூழ வெள்ள நீர்தேங்கியுள்ளதால் அம் மக்கள் உணவுக்கும் வழியில்லாமல் உணவு சமைக்க விறகுக்கும் வழியில்லாமல் அல்லல்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு சமைத்த உணவை வழங்க வேண்டியுள்ளது. கிழக்குக்கும் எங்கள் பணிகளை விரைவில் விஸ்தரிக்கவுள்ளோம்.எமது இளம் சந்ததியினர் எம் இனத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறையின்றி திரிகிறார்கள் என்ற பலரது குற்றச்சாட்டுக்களைப் பொய்ப்பித்திருக்கிறார்கள் விண்மீன்கள் அமைப்பினர்.  இவ்வாறான சிறிய முயற்சிகளூடாக விதைக்கப்படும் மாற்றங்களே பின்னர் பெரிய அளவில் சமூகமாற்றத்துக்கு வழிகோலுபவையாக அமைந்ததை பல சமூகங்களின் வரலாற்றில் நாம் காணலாம்.  இவ்வமைப்பில் மேலும் பல இளைஞர்கள் இணைய வேண்டும்.  போரினால் அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் எம்மினத்தை மீண்டும் தூக்கி நிறுத்த இது போன்ற அமைப்புகள் வளர வேண்டும்.

வாழ்த்துக்கள்  நண்பர்களே...

தொடர்புகளுக்கு: 077 0763610, 0778480603
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.