அரசியல் கைதிகள் போராட்டம் இனி?




அரசியல் கைதிகள் என்று எவருமே இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என்று தொடர்ச்சியாக கூறி வந்த அரச தரப்பு இப்போது உண்மையை நாடாளுமன்றில் ஒத்துக் கொண்டுள்ளது. கடந்த 07.11.2017 செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் உடையாற்றிய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள 17 அரசியல் கைதிகளே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் அரசு உத்தியோகபூர்வமாக அரசியல் கைதிகள் என்கிற வார்த்தையை உச்சரித்துள்ளது.

அரசின் நிலைப்பாட்டு மாற்றம் தொடர்பிலும், அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பிலும்  “அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம்” எனும் அமைப்பின் ஏற்பாட்டாளர்  அருட்தந்தை சக்திவேல் நிமிர்வுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நீதி அமைச்சர் 17 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளதாக கூறியுள்ளார். நாடாளுமன்றில் நீதி அமைச்சர் இவ்வாறு கூறும் போது எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு “17 இல்லை 132 பேர் இருக்கிறார்கள்" என அதனை மறுத்து ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை.    மஹிந்த இருக்கும் வரை பயங்கரவாத தடை சட்டத்துக்கு கையை தூக்கிய டக்ளஸ் தேவானந்தாவே அரசியல் கைதிகள் தொடர்பிலான கேள்வியையும் நாடாளுமன்றில் முன்வைத்தார். அப்போதே நீதியமைச்சர் இவ்வாறு கூறினார். அச்சமயத்தில் கூட டக்ளஸ் தேவானந்தா உண்மையான அரசியல் கைதிகள் எண்ணிக்கை இதுவல்லவே என மறுத்து கூற முன்வரவில்லை.



ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாங்கள் பெற்றுக் கொண்ட தகவலில் 132 அரசியல் கைதிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசிடமே அரசியல் கைதிகள் தொடர்பில் இரட்டை நிலைப்பாடு உள்ளமை தெளிவாகிறது. மூன்று அரசியல் கைதிகளதும் போராட்டம் உச்சநிலைக்கு வந்த போது அதனை எங்கள் ஆட்களே சிதைத்து விட்டார்கள் என்பதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அரசியல் கைதிகளது போராட்டம் முடித்து வைக்கப்பட்ட நிலை தொடர்பில்  பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் ஆகியோர் மீது விமர்சனங்கள் உள்ளன. அரசியல் கைதிகளது விடயம் தொடர்பில் பேசுவதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும், சிவாஜிலிங்கத்துக்கும் ஜனாதிபதி தனித்தனியே அழைப்பு விடுக்கிறார். இந்த இரண்டு தரப்பும் தனித்தனியே அழைத்தமையை ஏன் ஏற்றுக் கொண்டார்கள்?  ஜனாதிபதியை சந்திக்க ஏன் தனித்தனியே போனார்கள்?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தை அங்குள்ள 19 அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தான் ஒருங்கமைத்து இருந்தார்கள். ஜனாதிபதியை சந்திக்கச் சென்றவர்கள் ஏன் இந்த அமைப்புக்களோடு சந்தித்து பேசவில்லை? இதன் மூலம் இவர்கள் தங்கெளுக்கென்று தனியான நிகழ்ச்சி நிரல்களை வைத்து அரசியல் கைதிகள் விடயத்தில் பொறுப்பின்றி செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் வாசலைப் பூட்டும் முடிவை திடீரென எடுக்கின்றார்கள். இதனைக் கூட யாரிடம் கலந்தாலோசித்து அவர்கள் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. வாசலைப் பூட்டும் நிலை தொடருமாக இருந்தால் மாணவர்கள் கைது செய்யப்படும் நிலை ஒன்று இருந்தது.

கடந்த 04.11.2017 சனிக்கிழமை அரசியல் கைதிகளின் போராட்டத்தை முடித்து வைக்க அங்கஜனும், சிவாஜியும் சேர்ந்து ஒன்றாகப் போகிறார்கள். இவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தான் என்ன?



“போராடிய எல்லா அமைப்புக்களுக்கும் நன்றி கூறுங்கோ.... தொடர்ந்து எமக்கு விடுதலை கிடைக்கும் வரை எல்லா அமைப்புக்களையும் ஒன்று சேர்ந்து போராட சொல்லுங்கோ  பாதர்"  என்று உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்ட அன்று அரசியல் கைதிகள்  என்னிடம் கூறினார்கள்.  அவர்கள் ஒன்று சேர்ந்து போராடச் சொல்லியதன் அர்த்தம் இங்கே அமைப்புக்களிடையில் சிதைவில்லாமல், ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்கிற உண்மையை வலியுறுத்த வேண்டிய தேவையை அவர்கள் உணர்ந்து இருக்கலாம்.

அரசியல் கைதிகளை பொறுத்தவரையில் அவர்கள் போராட வேண்டிய உச்ச கட்ட போராட்டத்தை நடாத்தி முடித்து விட்டார்கள். இனி போராட்டம் வெல்வது தமிழ்மக்களின் கைகளிலேயே தான் உள்ளது. ஆனால், தமிழ் மக்களின் அரசியல் சிதைவுநிலையில் தான் உள்ளது.     பகட்டு நட்சத்திர அரசியல்வாதிகளையும், புல்லுருவிகளையும் இனம்கண்டு அகற்றினால் மட்டும் தான் நாங்கள் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.

2009 வரையும் வடக்குக்கு வராத தெற்கு அரசியல்கட்சிகளான ஜேவிபி, சோலிச முன்னணி உட்பட பல கட்சிகள், அமைப்புக்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளன.     இதற்கு காரணம் தமிழ் மக்களின் அரசியல் சமூகம் ஒரு முதிர்ச்சி நிலைக்கு வரவில்லை. அப்படி இருந்தால் அரசியல் ரீதியாக எங்களால் ஒரு தடுப்பரண் அமைக்க முடியும். இந்த ஓட்டைகளை நாங்கள் அடைத்தால் தான் அரசியல் கைதிகளின் விடுதலையும் சாத்தியமாகும். எங்களின் அரசியலையும் தொடர முடியும்.



எந்த முடிவும் கிடைக்காமல் இந்தப் போராட்டம் சதி முயற்சி ஒன்றின் மூலமே முடித்து வைக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.  அரசியல் கைதிகள் போராட்டம் திடீரென முடித்து வைக்கப்பட்டமை பற்றியும் கடந்த ஒரு மாதமாக இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் இந்த தமிழ் சமூகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுடன் தங்களது செயற்பாடுகளை முடக்கி விடுகிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அரசியல் கைதிகளை தமிழ் சமூகமாகிய நாம் தான் ஏமாற்றி விட்டோம் என்றார்.


தேவையற்ற அரசியல் தலையீடுகள் தான் எங்களை இந்த நிலைக்குத் தள்ளின

இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் வ.அனுராஜ் அவர்களிடம் மாணவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் கேட்ட போது,



உடனடியாக இந்த போராட்டத்தை நாங்கள் முடித்து வைக்க வேண்டி இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இக்கட்டான நிலைக்குச்  சென்ற அரசியல் கைதிகளின்  உடல்நிலையே ஆகும். ஒருவரின் உடல்நிலை பயங்கரமான நிலைக்கு சென்றுவிட்டது.  அதனை விட அவர்களின் உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் நிலைக்கு சென்று விட்டது.  அரசாங்கமும் உடனே தீர்வு தருவதாக இல்லை. அந்த நேரத்தில் யாராவது ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாக இருந்தால் நாங்கள் அவர்களுக்காக போராடுவதில் என்ன பிரயோசனம்? அந்த அடிப்படையில் தான் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. நாங்கள் தொடர்ந்தும் பல போராட்டங்களை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பேரணிகளையும் நடாத்தவுள்ளோம்.

பல்கலைக்கழக வாயிலை பூட்டுவது என்று எடுத்த முடிவு பல்கலைக்கழகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் தானே. இதில் பொது அமைப்புக்களையும் சேர்த்து முடிவெடுத்தால் பிரச்சினை வேறு விதமாக திரும்பியிருக்கும். அதனை தவிர்க்கவே விரும்பினோம்.
சில பொது அமைப்புக்கள் சில அரசியல் கட்சிகளைச் சார்ந்து உள்ளன.  சில பொது அமைப்புக்களும், அதில் அங்கத்தவர்களாக உள்ளவர்களும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டங்களை ஒழுங்குபடுத்தி உள்ளனர். ஒரு சில கட்சிகளை அவர்கள் தூக்கி வைக்கின்றனர்.   சில அமைப்புக்கள் சார்ந்தவர்களின் கருத்துக்கள் கட்சிகளுக்கு சார்பாக உள்ளனவே தவிர, நோக்கத்தை நிறைவேற்றுவதில் அல்ல.  அதனால் சில பொது அமைப்புக்களுடன் நாங்கள் இணைந்து செயற்படுவது என்பது சில கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதான விம்பத்தை வெளியில் ஏற்படுத்தும். அது சமூகத்தில் எம் மீதான பார்வையையும் போராட்டத்தின் நோக்கத்தையும் திசை திருப்பும்.  பொது அமைப்புக்கள் என்பது எந்தப் பக்கமும் சாராமல் சீரிய வழியில் செயற்பட வேண்டும். அப்போது தான் அவற்றுடன் இணைந்து செயற்பட முடியும்.



அருட்தந்தை சக்திவேல் இந்தப் போராட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலான பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் தந்துள்ளார். தொடக்கம் முதல் இந்த நிமிடம் வரை தொடர்பில் இருந்து வருகிறார். நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அமைப்புக்கள், புத்தியீவிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அருட்தந்தை சக்திவேல் மற்றும் துறைசார் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், அமைப்புக்களின் தலைவர்களுடன் நேரிலும் தொலைபேசி மூலமும் பேசி பல்வேறு அபிப்பிராயங்களையும் பெற்றிருக்கிறோம்.

சில அரசியல் கட்சிகள் நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு இடையில் நுழைந்து தாங்கள் செய்வதாக காட்டிக் கொள்வது எங்களுக்கு பிடிக்கவில்லை.  தேவையற்ற அரசியல் தலையீடுகள் தான் எங்களை இந்த நிலைக்கு தள்ளின. மற்றும்படி பொது அமைப்புக்களும் தேவை, புத்தியீவிகளும் தேவை இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை என்றார்.

இறுதி நோக்கத்தை அடையும் வரை எல்லோரும் இணைந்து செயற்படுவது தான் ஆரோக்கியமானது.

எமது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு போராட முன்வருபவர்களில் பெரும்பாலோனோர் ஏதோ ஓரு கட்சியிலோ அல்லது அமைப்பிலோ முன்னர் செயற்பட்டவர்களாகவோ அல்லது தற்போது செயற்படுபவர்களாகவோ இருப்பது தவிர்க்கமுடியாதது.  ஆனால், ஏனையோர் சமூக அக்கறை இன்றி அல்லது போராட்டத்தில் நம்பிக்கை இழந்து இருக்கும் போது அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் போராட முன்வருபவர்கள் இவர்களே. துரதிஷ்டவசமாக இவர்களிடமுள்ள தனிமனித குறைபாடுகள் காரணமாக அறிந்தோ அறியாமலோ தாம் சார்ந்த அமைப்புக்களை முன்னிறுத்த முற்படலாம். அல்லது எமது மக்களிடமுள்ள குழுவாத மனப்பான்மை காரணமாக இவர்கள் கலந்து கொள்ளும் போராட்டங்களை ஒரு குழுவுடன் தொடர்புபடுத்தி அப்போராட்டத்தை முத்திரை குத்தி புறக்கணிக்கும் போக்கும் எம்மக்களிடம் காணப்படலாம்.



இந்த நிலை மாற பல ஆண்டுகள் எடுக்கும். அதுவரை எமது போராட்டங்கள் இந்த குழுவாதத்தால் சிதறடிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ளவதற்கு எம்மினத்துக்கு திராணி இல்லை. பேரினவாத அரசு எம்மக்கள் மீது எல்லையற்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட முன்னிற்கிறது. அதற்கு எதிராக எம்மைப் பாதுகாத்து நிற்கும் வேலிகள் இப்போராட்டங்களே.  ஓட்டை விழுந்த பலமற்ற வேலிகளாக அவை இருப்பினும் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் எமது மக்களின் நலனுக்காக எஞ்சியிருப்பவை இவை மட்டுமே.  அவற்றையும் கட்சி அரசியலையும் குழுவாத அரசியலையும் காரணம் காட்டி சிதைந்து போக விடுவது கவலையளிக்கிறது.

போராட முன்வரும் சக்திகள் கட்சிவாதம்இ குழுவாதம் என்பவை எம்மக்கள் மத்தியிலுள்ள தீர்க்கப் படவேண்டிய பிரச்சனைகள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.  அவை தீர்க்கப்படும் வரை பொறுத்திருக்க முடியாது.  ஆனால், இப்பிரச்சனைகளை எவ்வாறு கையாளப் போகிறோம் என்பதை நன்கு திட்டமிட்ட பின்னர் போராட்டங்களை முன்னெடுக்க முடியும். ஒவ்வொரு போராட்டத்துக்கும் நன்கு கட்டமைக்கப்பட்ட தலைமைக்குழுவை உருவாக்க வேண்டும். அத்தலைமைக்குழு கட்சிகளும் அமைப்புக்களும் அவற்றைச் சார்ந்த நபர்களும் போராட்டத்தில் தமது நலன்களை முன்னிறுத்த இடங்கொடுக்காத வகையில் நடைமுறைகளை புத்திசாதுரியத்துடன் திட்டமிட வேண்டும். இது ஒன்றும் இயலாத காரியமல்ல.  போராட முன்வருபவர்கள் மக்கள் மீது தாம் கொண்ட பற்றினாலேயே போராட வருகிறார்கள். இவ்வுணர்வாளர்களைப் போற்றுவோம். நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட எமக்கு அவர்கள் சகலரையும் ஒன்றிணைக்கக் கூடியவாறு புத்திக்கூர்மையுடன் திட்டங்களைத் தீட்டி போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சகல திறமைகளும் உள்ளன. இதனை உணர்வாளர்களும், பல்கலைக்கழக மாணவர்களும், புத்தியீவிகளும் உணர வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை.   


துருவன்
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.