தமிழ்த் தலைமைகளின் தந்திரோபாயங்கள் தான் என்ன?
‘ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்;’ எனும் தலைப்பில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில்; “புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அமெரிக்க இந்திய சீன நலன்களை விளங்கிக் கொள்ளல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் ஆற்றிய உரைவருமாறு:
அரசியல் களம் என்பது ஒரு வகையில் தந்திரமானது தான். வடக்கு-கிழக்கில் பூர்வீகமாக வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய தந்திரம் பற்றித்தான் நாங்கள் இன்று உரையாட வேண்டும். சர்வதேச மட்டத்தில் இயங்குகின்ற ஒவ்வொரு அரசுகளுக்குப் பின்னால் அந்தந்த அரசுகளினுடைய நலன்கள் முதன்மையானது. அதையாரும் மறுத்துவிட முடியாது. இதில் இந்தியர்கள் ஒரு வடிவம், சீனர்கள் ஒரு வடிவம், அமெரிக்கர்கள் ஒரு வடிவம் என்று எதுவுமே கிடையாது. எல்லோருமே ஒரே தளத்தில் இருந்து இயங்குபவர்கள்.
தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு வாக்கெடுப்பிற்கு விடப்படுமாக இருந்தால் எவ்வகையான உணர்வுகளோடு தமிழ் மக்கள் அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். அதற்கான உரையாடலுக்காகவே தமிழ் மக்கள் பேரவை இந்த அரங்கை தயார் செய்திருந்தது. அந்த வகையில் சர்வதேசம் இந்த யாப்பு உருவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கை ஆராய்வோம்.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த அரசியல் யாப்புகளுடைய உருவாக்கத்தின் பின்னால் நிறைய அரசியல் நகர்வுகள், நிறைய தந்திரங்கள் கையாளப்படுகிறது. அமெரிக்க இந்தியக் கூட்டும் சீனாவும் ஒரே மூலோபாயத்தோடு இயங்குகின்றன. இலங்கை ஒரு மூலோபாய நிலையத்தில் இருக்கின்றது என்பது தான் அதற்கான உண்மைக் காரணமாகும். இந்த மூன்று சக்திகளின் மூலோபாயங்களுக்கும் பின்னால் இருக்கின்ற ஒரு முக்கிய அம்சம் இந்து சமுத்திரத்தின் மையத்தில் இலங்கை அமைந்திருப்பது தான். இந்த சக்திகள் இனப்பிரச்சனையையும் அரசியல் யாப்பையும் ஒன்றாக முடிச்சுப் போட்டு வைத்திருப்பதற்குப் பின்னால் உள்ள காரணம் தங்களுடைய போக்குவரத்தையும், பாதுகாப்பையும் சார்ந்திருக்கக் கூடிய அம்சங்களையும் பொருளாதார நலன்களையும் நிறைவேற்ற இலங்கையை ஒரு மையமாக வைத்து கையாளுதல் தான்.
இலங்கையின் இப்போதைய ஆட்சியாளர்கள் மிகச் சிறந்த தந்திரோபாயத்தில் வல்லமை உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை குற்றம் சாட்டுவதற்காக நான் இந்த உரையை உங்களுக்குத் தரவில்லை. அல்லது இந்த பிராந்திய சர்வதேச சக்திகளை குற்றம் சாட்டுவதற்கு நான் இங்கே இந்த உரையைத் தரவில்லை. நான் இங்கே இந்த உரை தருவது சர்வதேசம் எந்த மூலோபாயங்களின் கீழ் இயங்குகிறது அவற்றைக் கையாளக் கூடிய வகையில் என்ன தந்திரோபாயங்களை தமிழ்த் தலைமைகள் கொண்டிருக்கின்றன என்பதைக் கேள்விக்குட்படுத்தவே. நான் இந்த உரையைத் தருகிறேன்.
இந்தியர்களாக இருக்கலாம், அமெரிக்கராக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். உலகத்திலுள்ள எல்லோருக்கும் தங்களுடைய தேசம், தங்களுடைய தேசியம், தங்களுடைய நலன்களே மிக முக்கியமானதாகும். பிரித்தானியப் பிரதமர்இங்கு வந்த போது எங்களுடைய மக்களின் குடில்களில் இருக்கின்ற சோற்றுப் பானைகளை திறந்து பார்த்தமை என்பது அவர்களுடைய நலன் பாற்பட்ட அரசியலே ஆகும். எங்கள் மீதான பற்றுதலோ அல்லது எங்கள மீதான அனுதாப அரசியல் அல்ல என்பது என்னுடையவாதம்.
இலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேச நாடுகள் ஒரு தொடுகையியல் கொள்கையை (Touching Policy) வைத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வைத்தால் தான் அவர்கள் கூறுகின்றபோது நீங்கள் வாக்களிப்பீர்கள். ஏனென்றால் அமெரிக்கா பின்னால் இருக்கின்றது, இந்தியா பின்னால் இருக்கின்றது. ஆகவே நிச்சயம் இதில் ஒரு மாறுதல் வரும் என்ற எண்ணம் உங்களிடம் எழும். அதுக்காகவே இனப்பிரச்சனையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலே சர்வதேச நாடுகள் எல்லாவற்றினுடைய தந்திரமாகும்.
இதில் சீனர்கள் கொஞ்சம் குறைந்த தளத்திலே இயங்குகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையினுடைய நிலங்கள் வர்த்தக நோக்கில் குத்தகைக்கு கிடைக்குமானால் போதுமானது. அதனால் அவர்கள் உள்நாட்டு அரசியலில் அதீத கரிசனை கொள்வதில்லை. அமெரிக்கர்கள் 1970களில் 1980களில் என்ன கொள்கையை கொண்டிருந்தார்களோ அதே கொள்கையையே சீனர்கள் இப்பொழுது பின்பற்றுகின்றார்கள். அவர்களும் 2050 ஆம் ஆண்டிற்கு பின் வேறு கொள்கைக்கு வருவார்கள். இது தொடர்பில் இலங்கையில் இருக்கின்ற சீனத் தூதுவருடைய கருத்துக்கள் உங்களுக்கு ஒரு பதிவாக இருக்குமெனக் கருதுகிறேன்.
இன்றைய இலங்கைச் சூழலில் நேரடியான தலையீட்டையோ, அல்லது பகுதியளவான செல்வாக்கையோ அல்லது எங்கள் மீதான ஒரு தொடுகையோ இந்தியர்கள், அமெரிக்கர்கள் கொண்டிருப்பது என்பது அவர்கள் கடந்த காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட அரசியலின் அறுவடைகள் தான். இந்து சமுத்திரத்தினுடைய மையம் என்பதும் இந்து சமுத்திரத்தினூடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பிற்கான போட்டிதான் இங்கே இருக்கின்ற சர்வதேச அரசியல்களம் என்று நினைக்கிறேன்.
இலங்கையின் இனப்பிரச்சனையுடைய தீர்வாக அரசியல் யாப்பை அவர்கள் ஒரு காலத்திலும் கருதவில்லை. இலங்கையினுடைய ஆட்சிமாற்றத்தை வலிந்து முதன்மைபடுத்துகின்ற போது அவர்கள் ஏற்படுத்திக கொண்ட மாறுதல் என்பது நிலையானதாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு நெருடல் வருகின்றது. சீனர்களை தென்னிலங்கை சக்திகள் கைவிடுவதற்கு தயாராக இல்லை. சீனர்கள் இந்த உலகப் பொருளாதாரத்தில் முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறார்கள். சீனர்களைக் கையாள்வதில் ராஜபக்ஸ அரசாங்கத்திற்கும், மைத்திரிபால அரசாங்கத்திற்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. இருவருக்குமே சீனர்கள் அவசியமானவர்கள். சீனர்களுடைய பொருளாதார உத்திகள், பொருளாதார உதவிகள் அவசியமானவை. ஆகவே இந்த அடிப்படையில் பார்த்தால் இப்பொழுது இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஒரு முடிவெடுத்துவிட்டார்கள். அண்மையில் அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸினுடைய பயணம், இந்திய வெளிவிவகார அமைச்சருடைய பயணம், இந்துசமுத்திர மாநாடு தொடர்பாக அலிஸ் வெல்ஸ் ஆற்றிய உரை ஆகியவற்றை அவதானிப்போம். 2015 ஆம் ஆண்டுகளில் அப்போதைய வெளிவிகார இராஜாங்க செயலாளராக செயலாற்றிய ஜோன் கெரி குறிப்பிட்ட அதே வார்த்தைகளை மீளவும் அலிஸ்வெல்ஸ் இப்போதும் குறிப்பிட்டுவிட்டுச் செல்கின்றார்.
ஆகவே 2015 ஆம் ஆண்டுகளிலிருந்து 2017 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஒரே ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனர்களை வைத்துக் கொண்டு ஒரு கையாளுகை அரசியலை இங்கே நடத்துவோம் என்று அமெரிக்கர்களும் இந்தியர்களும் முடிவெடுத்து விட்டார்கள் என்பதுதான் அது. தென்னிலங்கை அரசியலின் பயணம் ஏறக்குறைய இந்த நோக்கத்திற்கு இசைவு பெறக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. ஒரே உறையில் இரண்டு வாள்கள் உறங்காது என்றார் கருணாநிதி. இலங்கையைப் பொறுத்தவரையில் மூன்று வாள்கள் ஒரே உறையில் உறங்கி தூங்கி உறவாடி தங்களுடைய அரசியல் நலன்களைச் சாத்தியப்படுத்துகின்றன. ஒன்று அமெரிக்கர்கள், இந்தியர்கள் அடுத்தது சீனர்கள். இவர்களுக்கிடையில் மோதல் இருக்கின்றது என்பது உண்மை. இன்று இருக்கின்ற இந்த அரசியல் களம் என்பது ஒரு மென்அதிகாரத்தளத்தில் இருந்து பிரயோகப்படுத்தப்படுகின்றது. ஆகவே அவர்கள் மோதுவதைவிட மூவரும் தங்களுக்குள்ளே அரசியலை கையாளுகின்ற ஒரு உத்தியை இலங்கையில் ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் ஒரு அறுவடை அல்லது ஒரு அம்சம்தான் இந்த புதிய அரசியல் யாப்பினுடைய உருவாக்கம்.
ஆகவே நிச்சயம் இந்தியர்கள் 13ஆவது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயாராகவில்லை. சீனர்கள் இலங்கையில் இருக்கின்ற எல்லாக் களங்களையும் சரியான வடிவத்திற்குள் கையாள்வது என்பதை விடுத்து தங்களுடைய அரசியல் இலாபம் மட்டும் போதுமானதாக இருந்தால் சரி என்று இருக்கிறார்கள். அது ராஜபக்ஸவாக இருக்கலாம், மைத்திரிபாலவாக இருக்கலாம் ரணில் விக்ரமசிங்கமாக இருக்கலாம் என்பது சீனர்களுடைய எண்ணம். இந்தியர்களைப் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டிற்கு பிந்திய காலப்பகுதியில் சீனாவோடு 99 வருட ஒப்பந்தம் செய்த பிற்பாடு அவர்களுடைய புலமையாளர்களும் அவர்களுடைய புலனாய்வுப்பிரிவினரும் பெருமளவிற்கு அதிருப்தியடைந்துள்ளார்கள். இலங்கை அரசுமீது சில நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே இந்த அடிப்படையில் தான் 13 ஆவது திருத்த கோட்டைக் கடப்பதா இல்லையா என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். எது எவ்வாறெனினும் இன்றைய இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவின் பின்புலத்தில் அல்லது அமெரிக்காவினுடைய உறவாடலினூடாகவே இலங்கையினுடைய அரசியலை கையாள விரும்புகிறார்கள் என்பதே நிதர்சனமாகும்.
தொகுப்பு-விக்னேஸ்வரி
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-
Post a Comment