இழந்த கல்வியை மீட்டெடுப்பதற்கான பரிகாரநடவடிக்கைகள்
இந்தவிடயம் தொடர்பாக அதிபர்கள் முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளை விளங்கிக் கொள்வதற்கு பரிகாரக் கல்வி என்றால் என்ன என்பதைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்

“எதிர்பார்த்த தேர்ச்சியை மாணவர் அடையாதவிடத்து அதற்குத் தடையாக இருக்கும் காரணங்களை அறிந்து மாணவரது இடர்ப்பாட்டை நிவர்த்தி செய்து, குறித்த தேர்ச்சியை அடைந்து கொள்வதற்கு ஆசிரியர் திட்டமிட்டு மேற்கொள்ளும் மாற்றீட்டுக் கற்பித்தல் அணுகுமுறையே பரிகாரக் கல்வியாகும்.”

இன்று வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்விப் பெறுபேற்றில் ஒரு தேக்க நிலையைச் சந்தித்து வருகிறார்கள்.  அதற்கு அவர்கள் பாடரீதியாகச் சில தேர்ச்சிகளில் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதே காரணம். இதனை மாணவர்களின் விடைத்தாள்களைப் பகுப்பாய்வு செய்த பொழுது அறியக்கூடியதாக இருந்தது. அவ்வாறான மாணவர்களிடையே இருக்கக் கூடிய இடர்ப்பாடுகளை இனங்கண்டு அவற்றை விரைவாக நீக்குவதற்கான குறுங்காலச் செயல்திட்டம் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனூடாக மாணவர்களின் சித்தியின்மை வீதத்தைக் குறைத்து அவர்களில் பெரும்பாலானவர்களின் சித்தி வீதத்தை உயர்த்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த பல வருடங்களாக வட மாகாணம் கல்வி அபிவிருத்தியில் பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு மட்டங்களிலும் கல்வித்துறை சார்ந்தவர்கள் மற்றும் கல்வி மீது அக்கறை கொண்டவர்கள் ஒவ்வொருவரும் தமது கவலையைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு துரிதமாகச் செயற்படுத்தக்கூடிய வகையில் இலகுவான பரிகார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இவை வலயக்கல்வி அலுவலகங்களினூடாக பாடசாலைகளில் செயற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதற்கென கடந்த காலப் பரீட்சைப் பெறுபேறுகளும் முதல் இரண்டு தவணைகளுக்கான பரீட்சை வினாத்தாள்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அப்பகுப்பாய்வின் அடிப்படையில் என்னென்ன பரிகார நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற இலக்கை முன்வைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டன.  வடக்கு மாகாணத்தில் உள்ள பன்னிரண்டு வலயங்களிலும் உள்ள அதிபர்களை நேரடியாக அந்தந்த வலயங்களுக்கே சென்று சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டன.  பரிகார நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தற்போது பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டை மதிப்பீடு செய்யவதற்காக கடந்த இரு தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இது போன்ற ஒரு களநிலைப் பகுப்பாய்வு வடமாகாணத்தில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று அதிபர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆசியா பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த ஆலோசகர் திரு. சுபாஸ்கரன் அவர்களால் க.பொ.த. சாதாரணதரப் பெறுபேற்றை உயர்த்துல் என்ற குறிக்கோளை முன் வைத்து, இந்தப்பகுப்பாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய ஒவ்வொரு பாடசாலையிலும் 2017 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒவ்வொரு மாணவரினதும் தற்போதைய நிலை பகுப்பாய்வு செய்யப்பட்டது. இப்பகுப்பாய்வில் இவ்வருடம் சித்தியெய்தத் தவறப் போகும் மாணவர்கள் யார் யார் அவர்கள் எத்தனை புள்ளிகளினால் அந்த வாய்ப்பை இழக்கப் போகின்றனர் என்ற விபரங்கள் திரட்டப்பட்டன. அவ்வாறான மாணவர்களில் ஒவ்வொரு பாடரீதியாக 14மூற்கும் 34மூ  வீதத்திற்கும் இடையிலான புள்ளிகளைப் பெறுகின்ற மாணவர்கள் யார் யார் என்ற விபரங்கள் ஒவ்வொரு அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களை எவ்வாறு மேலும் ஒரு சில புள்ளிகளை பெறச் செய்து சித்தியடையச் செய்யலாம் என்ற ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை சரியான முறையில் அதிபர்கள் நடைமுறைப்படுத்தினால், சித்தியெய்தத் தவறும் மாணவர்களின் வீதத்தைக் குறைத்து சித்திவீதத்தை அதிகரிக்க முடியும் என்கிற  நம்பிக்கை ஒவ்வொரு அதிபரிடமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த இரு தவணைப் பீட்சைகளினதும் விடைத்தாள்களைப் பகுப்பாய்வு செய்ததில் சித்தியெய்தத் தவறும் சித்திக்கான புள்ளிகளைப் பெறக்கூடிய விளிம்பில் உள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.  அவர்கள் சித்தி எய்துவதில் இடர்ப்பாடு அடையும விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவை தொடர்பாக பரிகாரக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அறிவுரைப்பு வழிகாட்டல்களில், பாடரீதியாக கூடிய நிறைகளைக் கொண்ட (weightages) தேர்ச்சிகளில் அதிகளவிலான பயிற்சிகளையும் பின்னூட்டல்களையும் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இதனால் மாணவர்களின் சித்திமட்டம் உயரக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகும்.  உதாரணமாக விஞ்ஞான பாடத்தில் மாணவர் “அமுக்கம்” என்ற தேர்ச்சியில் குறைவான அடைவைக் கொண்டிருந்தால் அந்தத் தேர்ச்சி தொடர்பாக எளிமையான பயிற்சிகளில் இருந்து கடினமான பயிற்சியை நோக்கிய செயலட்டைகளைத் தயாரிக்க வேண்டும்.  இவ்வாறான பயிற்சிகளையும் பின்னூட்டல்களையும் மேற்கொள்ளும் பொழுது, மாணவர்கள் விருப்பத்துடன் செயலாற்றுவர். அந்தத் தேர்ச்சியில் உயர்ந்த மட்டத்தை அடைந்து கொள்வர்.

இதே போன்று கடந்த 5 வருட பொதுப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற வினாக்கள் தொடர்பாக விடயத்திறன் அட்டவணைக்கு (table of specification) அமைய பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் எந்தத் தேர்ச்சியில் அதிகளவிலான வினாக்கள் இடம்பெறுகின்றன என்பதையும், எவ்வாறான வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும் வினைத்திறன் மிக்க ஓர் ஆசிரியர் அறிந்து கொள்வார். அதற்கமைய இனங்காணப்பட்ட சில தேர்ச்சிகளில் மட்டும் பயிற்சிகளை வழங்கும் பொழுது, மாணவர்களிடையே விரைவான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை நான் அனுபவபூர்வமாக அறிந்திருக்கின்றேன்.இதற்கான சில குறுங்காலச் செயல் திட்டங்களைச் செயற்படுத்துவது தொடர்பாகவும் அதிபர்களுக்கு மிகவும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போதைய கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் நேரடியாகவே சம்பந்தப்பட்ட அதிபர்களைச் சந்தித்துள்ளார். நீண்ட நேரம் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளார். ஆனால், அவரது பதவிக் காலம் என்பது மிகவும் குறுகியது. அவருக்குப் போதிய கால அவகாசம் இல்லாத போதிலும் இந்த ஆண்டில் ஏதாவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் தோன்றியுள்ளது. தற்போதைய கல்வி அமைச்சர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக இருந்தவர். அந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டு நான்கு வருடங்களுக்கு முன்னரேயே இந்தப் பொறுப்பை அவரிடம் வழங்கியிருந்தால் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எல்லா மட்டங்களிலும் அரசியல் தலையீடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கல்வியிலும் கூட அது செல்வாக்கைச் செலுத்துகின்றது. வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கும் கடந்த நான்கு வருடங்களாகப் பதவிகளைக் குறிவைத்துப் பாரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.  இதனால் எமது மக்களினதும் பிரதேசத்தினதும் அபிவிருத்திகளும் தடைப்பட்டுக் கொண்டே வருகின்றன.

ஆனால் இந்த விடயத்தில் ஒரு பாடசாலையை உயர்த்தவதும், அதனை வீழ்ச்சிப் போக்குக்குக் கொண்டு செல்வதும் அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்களின் கைகளிலேயே நூறுவீதமும் தங்கியிருக்கின்றது. அவர்கள் தாமும் சிறப்பாக இயங்கி தமது ஆசிரியர் குழுவினரையும் வினைத்திறனுடன் இயங்கச் செய்யும் பொழுது அந்தந்தப் பாடசாலைகளின் கல்வி அடைவ மட்டம் உயரும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் முதலில் கல்வித் தர வீழ்ச்சி தொடர்பான வலிகளை அதிபர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அப்பொழுது தான் அதற்கான பரிகார நடவடிக்கைகளையும் அவர்களே முன் வந்து மேற்கொள்வார்கள்.

1990 காலப்பகுதிகளில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்த காலத்தில் பல அதிபர்கள் பாடசாலைகளைப் பொறுப்பேற்று நடத்தினார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் பொழுது எவ்வித கற்றல் வளங்களோ அல்லது பௌதீக வளங்களோ இருக்கவில்லை. எழுதுகருவிகள,; நூல்கள், ஆய்வுகூட உபகரணங்கள் கூட வடபகுதிக்கு எடுத்துச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. குண்டு வீச்சுக்கள் எறிகணைத் தாக்குதல்களின் மத்தியில் ஆசிரியர்களும் மாணவர்களும் அச்சத்துடன் பாடசாலைக்கு வந்து போனார்கள். ஆனால், க.பொ.த. சாதாரணதரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தோம். அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்புக்களும் அதிகரித்திருந்தன. எமது அந்த முயற்சியில் ஒவ்வொரு ஆசிரியரும் யுத்தங்களிடையே அச்சத்தின் மத்தியில் பிள்ளைகளின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இதனால் கல்வி அடைவில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. அன்று வடமாகாணம் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்தது. அப்பொழுது வகுப்பறையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் காணப்பட்டது. அப்பொழுது எங்களுக்கு வெளியில் இருந்து வந்து எவரும் ஆலோசனைகள் வழங்கவில்லை. ஆனால் இன்று எல்லா வசதிகளும் உள்ள நிலை காணப்படுகிறது. குறிப்பாக தற்போது 14 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் போதிய ஆசிரிய வளம் உள்ளது. கல்வித்தர உள்ளீட்டுக்காக அரசாங்கம் வளங்குகின்ற பெருமளவு பணம், ஆய்வுகூட உபகரணங்கள், கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் கட்டிட வசதிகள் என்பன தாராளமாகஉள்ளன. இந்த நிலையில் எங்களுடைய கல்விப்பணிப்பாளர்களும் அதிபர்களும் இன்னும் சிறப்பாகச் செயலாற்றி இருக்க முடியும். இந்த விடயத்தில் ஒரு சிறந்த ஆளுமையுள்ள அதிபர் தானே தனது கல்லூரியில் ஆசிரியர்களுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கித் தனது பாடசாலையின் தரத்தைத் தானே உயர்த்தமுடியும். ஆனால் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் அதிபர்களின் பங்கேற்பும் குறைவாக இருப்பது தான் கவலையைத் தருகின்றது.

அண்மையில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சருடன்,  வடக்கு மாகாணக் கல்விச் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து அதிபர்களைச் சந்திப்பதற்காகப் பெருமளவு முன்னாயத்தங்களுடன் வலயங்களுக்கே தேடிச் சென்றனர். ஆனால் ஒவ்வொரு வலயத்திலும் ஆகக்குறைந்தது பதினைந்து அதிபர்களாவது அந்தச் செயலமர்வில் கலந்து கொள்ளாது இருந்திருக்கின்றனர். ஏனெனில் அவர்களது பதவிகளை உறுதிப்படுத்துதல் மற்றும் சிங்கள மொழித்தேர்ச்சிகளில் சித்தி அடைதல் போன்றவற்றிற்கான வினைத்திறமைகாண் பரீட்சைக்காக அவர்கள் சென்றிருந்தனர். தொடர்ச்சியாக பதினெட்டு பாடசாலை வேலை நாட்களாக நடைபெற்ற சிங்கள மொழி வகுப்பிற்குச் சென்றமையால் மேற்படி கல்வி அமைச்சரால் ஒழுங்கு செய்யப்பட்ட அதிபர்களுக்கான செயலமர்வில் பங்கேற்க முடியவில்லை என்ற காரணம் கூறப்பட்டது. இத்தகைய ஆசிரியர்களுக்கு நன்மை பயக்கும் வகுப்புகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாடசாலை விடுமுறை நாட்களில் நடத்தியிருக்கலாம். இதனால் ஆசிரியர்களும் நன்மை அடைந்திருப்பர்; மாணவர்களும் பயனடைந்திருப்பர். இதனைப் பார்க்கும் பொழுது மாணவர்களைப் பணயம் வைக்கும் செயலமர்வுகள் அவசியமா என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இவ்வாறான நிலைமையில் நாங்கள் ஏன் கல்வித்தரத்தில் பின்னடைவைக் கண்டு கொண்டிருக்கின்றோம் என்பதற்கு எந்த வகை புறநிலை ஆய்வுகளையும் மேற்கொள்வது அவசியம் என்று நான் கருதவில்லை. அதிபர்கள் தங்களைத் தாங்களே சுய மதிப்பீட்டுக்குஉட்படுத்திப் பார்க்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களிடம் உள்ள பலம், பலவீனம், வாய்ப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் (SWOT analysis ) என்பவற்றை இனங்கண்டு தாங்களே அதற்கான தீர்வுகளையும் கண்டு கொள்ள முடியும்.

ஆசிரியர் வளப்பங்கீடு விடயத்தில் பொதுவாக அதிபரிகளினால் ஆசிரியர் வளப்பங்கீடு உரிய முறையில் பங்கிடப்படவில்லை. பாட அடிப்படையில் பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும். உரிய பாடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்படுவதுடன் சமமான ஆசிரியர் வளப் பங்கீடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கல்வி அமைச்சினால் திரட்டப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்கழி மாதத்திற்குள் இத்தகைய குறைபாடுகள் நீக்க்பபட்டு ஆசிரியர் பரம்பலைச் சீராக்க செயலாளரும் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விடயத்தில் அதிபர்களும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதும் அவசியமாகும். பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கதிகமாக ஒழிந்திருக்கின்ற    நிலையை மாற்றி அவர்களது விபரங்கள் உடனடியாகக் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். அவ்வாறு ஒவ்வொருவரும் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கினால் பாடசாலைகளில் நிலவுகின்ற பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும்.


தற்போது மாணவர்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருக்கின்றது. தாராளமாக 3வு என்று மாணவர்களைத் திசை திருப்பும் இலத்திரனியல் சாதனங்களான Tab, Television, Telephone என்பனவற்றின் பாவனைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் பாடசாலைக் கல்வியின் மீதான மாணவர்களின் அக்கறையும் குறைந்து கொண்டு வருவதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இவற்றின் பாவனையைப் பாடசாலை நேரங்களில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை புலம்பெயர்ந்த உறவுகளும் இங்கே தாயகத்தில் உள்ள தமது உறவுகளுக்குப் பணத்தை அனுப்பும் பொழுது தேவையும் அவசியமும் உணர்ந்து அனுப்பினால், இவற்றின் பாவனைகளைப் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.  அப்பொழுது மாணவர்களுக்குப் பாடசாலைக் கல்வியின் மீதான அக்கறையும், ஈடுபாடும் அதிகரிக்கும்.

வல்வை.ந.அனந்தராஜ்
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.