13 இற்கு வயது 30



சரியாக 30 வருடங்கள் கடந்துவிட்டன. 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து. 1987 நவம்பரில் நிறைவேறிய இந்தச் சட்டம்தான் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு - தமிழ் மக்களுக்கு அரசாங்கம் தந்த ஒரேயொரு அதிகாரப் பகிர்வு. ஆனால் இது விரும்பாச் சட்டம். இந்தச் சட்டத்தை வழங்க அரசாங்கமும் அதனை உருவாக்கிய சிங்கள மக்களும் விரும்பவில்லை. சொற்ப அதிகாரங்களை ஏற்பதற்கு தமிழர்களும் விரும்பவில்லை. ஆனால் பெரும்பான்மை இனமோ, தமிழர்களுக்கு இவ்வளவு அதிகாரங்களா...? என்று ஆத்திரப்பட்டனர். தமிழர்களோ இவ்வளவுதானா அதிகாரங்கள்...? என்று தொய்ந்து போயினர். உண்மையில் 13 இன் மூலம் அரசு மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிரவில்லை மாறாக பரவலாக்கமே செய்தது. அதுவும் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்ல நாட்டின் முழு மாகாணங்களுக்குமே.

தங்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திய தமிழர்களோ தனிநாடே தீர்வு என்றார்கள். நாட்டில் அமைதியையும் - சமாதானத்தையும் நிலைநிறுத்த வேண்டிய அரசோ கடமையை மறந்து, இனவாதம் பிடித்து - தமிழர் இரத்தம் கேட்டு நின்றது. உரிமைகளுக்காக ஆயுத வழியை நாடியவர்களையும் - இனவாதம் பிடித்து இரத்தவெறி கொண்டு நின்ற அரசாங்கத்தையும் விலக்குப் பிடிக்க வந்தது இந்தியா. இரு தரப்பாரையும் பேச வைப்பதில் தோற்றுப் போனது. தன்னைப் “பெரிய அண்ணன்”  என்றெண்ணி அதே பாணியில் நடக்க முற்பட்டு, எதைப் பற்றியும் கவலையின்றி தான்தோன்றித்தனமாக தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்தது. குறைந்த பட்சம் சுயாட்சி – சம~;டியைக்கூட அது பெற்றுக் கொடுக்க முயலவில்லை. மாறாக தான் பெற்றுத் தருவதை தமிழர்கள் மறுப்பின்றி ஏற்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றது.

இலங்கையின் ஆட்சியாளர் போக்கையோ, கடந்த கால இனவெறி செயல்களையோ, அரசமைப்பு  சாசனத்தையோ அது ஆராய முற்படவில்லை - குறைந்தபட்சம் பார்க்கத்தானேனும் விரும்பவில்லை. இதேபோன்று போராட்ட அமைப்புகளின் விருப்பத்தையோ அன்றி தமிழ் மக்களின் விருப்பையோ, கருத்தையோ அறிய விரும்பவில்லை. “நான் சொல்வதைக் கேட்டால் போதும்” என்று பெரிய அண்ணனாகவே நடந்தது. விளைவு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் எவருக்கும் பிடிக்காத - எவருமே விரும்பாத 13 இன் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பல விருப்பமின்மைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் தமிழர் விரும்பிய ஒரு விடயம் நடந்தேறியது. அது வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு.

வடக்கு - கிழக்கு இணைப்புக் குறித்து நாம் என்னதான் மகிழ்ச்சியடைந்தாலும் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதி நிலப் பரப்பு  புத்தளம் மாவட்டம் தனித்துப் போய் - எமது கையை விட்டுப் போனது. காலதி காலம் நடத்தப்பட்ட - திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகத்தை கூறுபோட்ட பேரினவாதிகளுக்கு இது வாய்ப்பாக அமைந்தது. அவர்களுடன் நம் சகோதர இனத்தவர்களான முஸ்லிம்களும் இணைந்து புத்தளத்தை கூறுபோட்டனர். தமிழர் தாயகத்தின் பெரும் தேசம் ஒன்றை நாம் மறக்கவும் - இழக்கவும் காரணமாக அமைந்ததும் இந்த 13 ஆம் திருத்தச்சட்டம்தான்.

“13 ஐ ஏற்று ஆயுதங்களை கீழே வையுங்கள்” என்ற தருணத்தில்தான், தமிழ் மக்களின் விடியலுக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் - அதன் விளைவான 13 ஆம் திருத்தச் சட்டத்தையும் ஏற்க மறுத்தனர். இதையடுத்து தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டதும் - மிரட்டப்பட்டதும் - அவர் இலங்கை மீண்டு, சுதுமலைப் பிரகடனத்தை வெளியிட்டதும், அமைதிப் படை ஆக்கிரமிப்பு படையாக மாறி புலிகளை அழிக்கிறோம் என்று மக்களை கொன்று குவித்ததும், பின்னர் புலிகளிடம் அடிவாங்கி இழப்புகளை சந்தித்து தோல்வியுடன் இந்தியா திரும்பியதும் வரலாறாகின.

எமது இந்த வீரவரலாறின் ஊடேதான் இன்னொரு கறைபடிந்த வரலாறும் எழுதப்பட்டது. இந்தியாவின் - றோவின் செல்லப்பிள்ளைகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகள் 13 ஐ ஏற்றன. அவை ஈ.என்.டி.எல்.எவ். கட்சியாக மாறி தேர்தலில் போட்டியிட்டு - சொற்ப வாக்குகளுடன் வடக்கு - கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது. புலிகளின் அழைப்பை ஏற்று பெருவாரியான மக்கள் வாக்களித்திருக்கவில்லை. இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் வரதராஜப்பெருமாள் பொறுப்பேற்றார். 13 மாத ஆட்சியில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை - சுருங்கக்கூறின் மத்திய அரசை மீறி துரும்பைக்கூட அசைக்க இயலவில்லை. இறுதியாக எதுவும் இல்லாமலே அவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளிடம் போரில் தோற்று, நாட்டை விட்டு வெளியேறிய இந்திய இராணுவத்துடன், ஈ.என்.டி.எல்.எவ்வினரும் வெளியேற்றப்பட்டார்கள். பின்னாளில் - போர் முடிவுக்கு வந்த சமயத்தில் நாடு திரும்பிய வரதராஜப்பெருமாள் “வடக்கு - கிழக்கு மாகாண சபைக்கு கால்துடைப்பத்தைக் கூட வாங்க முடியாத நிலையே இருந்தது” என்றார்.

உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திய தமிழ் மக்களுக்கு 2002 நம்பிக்கை அளிக்கும் ஆண்டாக இருந்தது. புலிகள் - அரசாங்கம் சமாதானப் பேச்சு ஆரம்பமானது. மீண்டும் 13 ஐ நடைமுறைப்படுத்துவது குறித்து யோசித்தது அரசு. புலிகள் அதைத் தொடவேயில்லை. புலிகள் சுயாட்சி குறித்து மட்டுமே சிந்தித்தனர் - பேசினர். அதிகாரம் எதுவுமே இல்லாத வெற்றுக்கோதான 13 ஐ பெற புலிகள் தயாரில்லை. 2005 இல் தீவிர பேரினவாதியான மஹிந்த ராஜபக்~ ஆட்சியைக் கைப்பற்றினார். 2006 நடுப்பகுதியுடன் சமாதானப் பேச்சு முடிவு கட்டப்பட்டது. இதேகாலப் பகுதியில் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. வடக்கு, கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது மட்டுமல்ல மக்களுக்கும் விரோதமானது என்று கூறி அடிப்படை உரிமைகள் மீறலின் கீழ் உயர்நீதிமன்றில் வழக்குத் தொடுத்தது.

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பார்களே, அதுபோல்தான் இங்கும் நடந்தது. “மக்களின் விருப்பை - ஆதரவைப் பெறாத வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தவறானது” இப்படி இனவாதத் தீ கனன்று கொண்டிருந்த வேளையில் - இனவாத ஆட்சியாளர்களின் உயர்நீதிமன்றும் தனது தீர்ப்பை வழங்கியது. சமாதானத்தின் மீது இருந்த துளியளவு நம்பிக்கையும் தமிழருக்கு இல்லாமல் போனது - போகச் செய்யப்பட்டது. இத்தனைக்கும் இந்திய அரசோ, சர்வதேசமோ கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை. மாறாகப் பேரினவாத அரசாங்கத்தைப் பலப்படுத்தின. மீண்டும் மேகங்கள் கருக்கொண்டன. தொடர்ந்தது போர். 2009 மே 19 ஆம் நாளுடன் எமது ஆயுத பலம் மௌனிக்கப் பட்டது. எமது பேரம் பேசும் பலமும் அன்றுடன் இல்லாது போனது. இதனிடையே 13 பிளஸ் என்று அதிகாரங்களைக் கேட்டோம். தோற்றவர்களின் குரல் வென்றவர்களுக்குக் கேட்குமா? ஒருபோதும் கேட்பதில்லையே.
13 ஐயே மறுப்பவர்கள், 13 பிளசுக்கு சம்மதிப்பார்களா என்ன?

போர் முடிந்த கையோடு கிழக்கில் தேர்தலை நடத்தியது. தமிழரின் துரோகப் பட்டியலில் இடம்பிடித்த பிள்ளையான் என அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற தனது செல்லப்பிள்ளையை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்து அழகு பார்த்தது. ஆனால் அவர்களுக்கும் சில சலுகைகளை வழங்கியதே தவிர அதிகாரங்களை வழங்கவில்லை. 13 இல் கூறப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களையும் மறுத்தது.

நிறைவேற்று அதிகாரம் - சர்வதிகார பாணி அதிகாரத்தில் இருந்து மஹிந்த ராஜபக்~வோ அல்லது நல்லாட்சி நாயகனாகக் காட்டிக் கொள்ளும்  மைத்திரிபால சிறிசேனவோ இறங்கி வரவில்லை. கிழக்கு மாகாண சபையில் வெறுமனே பதவிக் கதிரைகளில் அமர்ந்தே காலத்தை தள்ளினர். உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை - சாதிக்க விடவும் இல்லை.

கிழக்கில் இருந்த சார்புநிலை வடக்கில் தமக்கு இல்லை என்பதால் தேர்தலை இழுத்தடித்தது மகிந்த அரசாங்கம். இந்திய - சர்வதேச அழுத்தங்களால் 2013 இல் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தியது. அதற்கு முன்னதாக தமிழரை மிரட்டவும் - அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஆளுநராக்கியது. எதிர்பார்த்ததுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றது. சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானார். முன்னாள் நீதியரசரான அவருக்கே தண்ணி காட்டியது அரசாங்கம். 13 இன் அரசியல் - சட்ட சூட்சுமங்கள் நீதியரசராக இருந்தவருக்கே புரியாத புதிரானது. ஆளுநரும் வடக்கு பிரதம செயலரும் சேர்ந்து முதலமைச்சருக்கும் - வடக்கு மாகாண சபைக்கும் எப்படி முட்டுக்கட்டை போடலாம் - தொல்லைகள் கொடுக்கலாமோ அப்படி எல்லாம் கொடுத்தார்கள். பிரதம செயலரை மாற்றுமாறு கேட்டு முன்னாள் நீதியரசரே நீதிமன்றை நாடினார். ஆனாலும் பலன் பூச்சியம்தான்.

வெறுமனே கழிந்தது காலம், மத்தியில் ஆட்சியும் மாறியது. இனி மாநிலத்தில் காட்சிகள் மாறும் என்று எண்ணியவர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. தமிழரசுக் கட்சியின் புண்ணியத்திலும் ஆட்சியேறிய ஐ.தே.க. தேசிய அரசாக மலர்ந்தது. ஆளுநர் மாறினார். மத்திய அரசுக்கு பொழுது போகாத சமயங்களில் வட மாகாண சபைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி அங்கு நடந்த கூத்துக்களை ரசித்தது. மாகாண சபை ஆட்சியில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதை கைகொட்டி ரசித்தது. இப்போது புதிய அரசமைப்பு குறித்துப் பேசப்படுகின்றது. இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? என்பது சந்தேகமே. ஆனால் 13 இற்கு சாவுமணி அடிக்கப்படும் என்பதே உண்மை.

இனப் பிரச்சினை தீர்வுக்காக வந்த 13 ஆம் திருத்தச் சட்டம் 30 ஆண்டுகளை கடந்து விட்டபோதும். பாதிக்கப்பட்ட சிறுபான்மைக்கு ஒருபோதும் நன்மைகள் கிட்டவில்லை. கிடைத்தவைகளும் நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாகவும் - பேரினவாதத் தீயிலும் சிக்கி எட்டாது போயின. மாறாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் இனவாதம் கக்கி பதவிகளைக் கைப்பற்றவும், வருங்கால அரசியல்வாதிகளை வளர்க்கும் பயிற்சி களமாகவும் மாற்றிக் கொண்டது. கடந்த 30 ஆண்டுகளில் முழுமையாக அமுலாகாது - குறுகிய காலமே அதிகாரப் பரவலாக்கம் மூலம் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. 13 இன்று முதிர்கன்னியாகி சேடம் இழுத்துக் கொண்டிருக்கிறது.

ஐங்கரன்
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

2 comments:

  1. 13V rl;l jpUj;jk; cjthJ vd;w fl;Liuahsupd; thjk; mgj;jkhdJ. 13V ,y; ,izg;ghl;rpf;Fupa mk;rq;fs; epiwa cz;L. ,e;jpa khepyq;fSf;F ,Uf;fpw mjpfhuq;fSf;F xj;j mjpfhuq;fs; khfhz rigf;F cz;L. epiwNtw;W mjpfhuk; MSeH ifapy; nfhLf;fg;gl;lJ xd;Wjhd; Fiw. Mdhy; eilKiwaay; MSeH Kjyikr;rupd; MNyhridg;gbNa elf;f Ntz;Lk;. tl khfhz rig epUthfj;ij jdJ jpwikapd;ikahy;jhd; tpf;Nd];tud; mijf; Fl;br; Rtuhf;fpdhH fy;tp> Rfhjhuk; Nghd;wit 90 tpOf;fhL khfhz rigf;F cupaJ. fhzp> nghyP]; mjpfhuk; eilKiwg;gLj;jg;gl;lhy; 99tpOf;fhL ,izg;ghl;rp jkpoUf;Ff; fpilf;Fk;. ,e;jpah ,jpy; jiyaplhtpl;lhy; xw;iwahl;rpapd; fPo;j;jhd; jkpoHfs ,g;NghJk;; ,Ue;jpUg;ghHfs;. ,uhrgf;r Ml;rpapy; 13 V ia mfw;w Kad;whHfs; vd;gJ epidT $uj;jf;fJ. ,d;W $l fhzp rk;ge;jkhd kj;jpa murpd; rl;lq;fSf;F khfhz rigfspd; MjuT Njit. xU khfhz rig vjpHj;jhYk; kj;jp;a muR rl;lk; ,aw;w KbahJ. gpd;Ndhf;fpg; ghHf;Fk; NghJ 13V ia jkpoH jug;G Vw;Wf; nfhz;L mjidg; gad;gLj;jpf; nfhz;L mLj;j fl;lj;Jf;F efHe;jpUf;f Ntz;Lk;. 13V ia md;iwa jkpoH tpLjiyf; $l;lzp epuhfupj;jJ mwpT Ghtkhd nray; my;y. czHTghHkhd KbT.

    ReplyDelete
  2. 13ஏ சட்ட திருத்தம் உதவாது என்ற கட்டுரையாளரின் வாதம் அபத்தமானது. 13ஏ இல் இணைப்பாட்சிக்குரிய அம்சங்கள் நிறைய உண்டு. இந்திய மாநிலங்களுக்கு இருக்கிற அதிகாரங்களுக்கு ஒத்த அதிகாரங்கள் மாகாண சபைக்கு உண்டு. நிறைவேற்று அதிகாரம் ஆளுநர் கையில் கொடுக்கப்பட்டது ஒன்றுதான் குறை. ஆனால் நடைமுறையயல் ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும். வட மாகாண சபை நிருவாகத்தை தனது திறமையின்மையால்தான் விக்னேஸ்வரன் அதைக் குட்டிச் சுவராக்கினார் கல்வி, சுகாதாரம் போன்றவை 90 விழுக்காடு மாகாண சபைக்கு உரியது. காணி, பொலீஸ் அதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 99 விழுக்காடு இணைப்பாட்சி தமிழருக்குக் கிடைக்கும். இந்தியா இதில் தலையிடாவிட்டால் ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தமிழர்கள இப்போதும்; இருந்திருப்பார்கள். இராசபக்ச ஆட்சியில் 13 ஏ யை அகற்ற முயன்றார்கள் என்பது நினைவு கூரத்தக்கது. இன்று கூட காணி சம்பந்தமான மத்திய அரசின் சட்டங்களுக்கு மாகாண சபைகளின் ஆதரவு தேவை. ஒரு மாகாண சபை எதிர்த்தாலும் மத்தி;ய அரசு சட்டம் இயற்ற முடியாது. பின்னோக்கிப் பார்க்கும் போது 13ஏ யை தமிழர் தரப்பு ஏற்றுக் கொண்டு அதனைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்க வேண்டும். 13ஏ யை அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்தது அறிவு பூர்வமான செயல் அல்ல. உணர்வுபூர்வமான முடிவு.

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.