மாவீரர் நாள்: முதலில் சரியான ஒழுங்கமைப்பு தேவைதமிழர் தாயகத்தில் இடம்பெறும் நினைவு கூரல்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், மாவீரர் நாளும் முக்கியமானவை.

தமிழர்களுக்கான தேசம் ஒன்றை அமைக்கும் பெருங்கனவுடன் வித்தாகிப் போன ஆயிரமாயிரம் இளையோரின் கல்லறைகளுக்கு தீபமேற்றி மலர் தூபி வழிபடுவதையும் தாண்டி அன்று தமிழ் மக்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் நாளாகவும் அந்த நாள் அமைய வேண்டும்.

தாயகக் கனவோடு பல்வேறு அமைப்புக்களிலும் இணைந்து விடுதலைக்காகப் போராடி தம் தலைமைகள் விட்ட தவறுகளால் வீழ்ந்து போன மாவீரர் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக இது அமைய வேண்டும்.  இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இன்றும் உணர்வு பூர்வமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவை ஒருபுறமிருக்க, எமது விடுதலைக்காக மாய்ந்து போன இவ்வீர மறவரின் நினைவுநாளை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதைப் பற்றி ஆராய்வதே இப்பத்தியின் நோக்கம். 

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல், அதிகார மையமொன்று வலுவாக இல்லாததன் எதிர் விளைவை இந்த நினைவு கூரல்கள் 2009 க்குப் பின் நன்றாகவே வெளிப்படுத்தி வருகின்றன. தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் புனரமைக்கப்படுவதில் கூட சில அரசியல் கட்சிகளிடையே நடக்கும் போட்டிகளைப் பார்த்து மாவீரர் குடும்பங்களை  சேர்ந்தவர்களும் தமிழ் மக்களும் விரக்தியடைந்துள்ளனர்.  மாவீரர் தியாகங்களை சில அரசியல்வாதிகள் தங்களுக்குள் பங்கு போடுவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரே நாட்டில் நான்கு இடங்களில் எட்டு அமைப்புக்களால் நடாத்தப்படும் சூழல் உள்ளது. தாயக விடுதலைக்காக போராடியவர்கள் இன்றும் இந்த மண்ணில் நிர்க்கதியாக உள்ள நிலையில் ஆடம்பரங்கள், இதற்காக செலவழிக்கப்படும் பெருந்தொகைப் பணம் என்பன முன்னாள் போராளிகளையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

 "நினைவு கூர்தலை எப்படி ஒழுங்கமைப்பது என்பது தொடர்பில் அரசியல்வாதிகளிடம் சரியான திட்டமிடல் இருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் வெகுசனப் போராட்டங்கள் அல்லது வெகுசன  நிகழ்வுகள் தொடர்பில் எந்தவொரு தமிழ்க்கட்சியிடமும், எந்தவொரு தமிழ் சிவில் அமைப்பிடமும் சரியான தரிசனம் இல்லை எனலாம். இதில் வயதால் இளையதும் ஆகப் பிந்திய அமைப்புமாகிய  தமிழ் மக்கள் பேரவையும் தன்னிடம் அப்படிப்பட்ட வெகுசன அரசியலுக்கான தரிசனம் எதுவும் இருப்பதாக இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை."

நினைவு கூர்தல் தொடர்பில் தனது கடந்த கட்டுரையொன்றில் அரசியல், சமூகஆய்வாளர் நிலாந்தன் கூறிய மேற்படி விடயங்கள் அப்படியே இங்கே சரியாக பொருந்துகிறது.

நினைவு கூரல்களை கட்சி சார்பின்றி நடாத்த பொது அமைப்புக்கள் ஒன்று கூடி ஒரு சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். நினைவு கூரலுக்கென ஓர் அமைப்பை நிறுவ வேண்டும். அந்த அமைப்பினூடாக நினைவேந்தல்களை ஒழுங்கமைப்பது தான் சிறப்பானதாக இருக்கும்.

நினைவு கூரல் திட்டமிடல் தொடர்பில் ஏற்கனவே நிமிர்வு இதழில் எழுதியிருந்தோம். தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் தொடர்பாக நமது கட்சிகளிடையே கொள்கை முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் எமது இனத்தின் விடிவுக்காக பல்வேறு ஆயுதப் போராட்டக் குழுக்களில் ஏதோவொரு நம்பிக்கையைத் தம் மனத்தில் சுமந்து கொண்டு இணைந்து தம் இன்னுயிரை ஈர்ந்தவர்கள் மாவீரர்கள். அவர்களை கட்சி முரண்பாடுகளையும் குழு முரண்பாடுகளையும் கடந்து நினைவுகூருவதே நாம் செய்ய வேண்டிய கடமையாகும். இதற்கு சரியான திட்டமிடலை மேற்கொளவது மிக மிக முக்கியமானது.

செ.கிரிசாந்-
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.