சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்



யாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார். எங்கள் தேசத்தின் வளங்களை உச்சமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்புடையவர். புதிய விடயங்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். அவரது அனுபவமும், வயதும், பக்குவமும் அவர் பேச்சில் தெரிகிறது. Nutri food packers எனும் நிறுவனத்தை கிளுவானை வீதி, கோப்பாய், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகிறார்.



தொழில் முயற்சியாளர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் சொல்வதைக் கேட்போம். நான் பிறந்த மண்  கொல்லங்கலட்டி தெல்லிப்பளை. காங்கேசன்துறை இராணுவமுகாமுக்கு அருகில் எங்களது வசிப்பிடம் அமைந்திருந்த காரணத்தினால் 1990 இலேயே வீட்டை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 1995 வரையும் வலிகாமம் மேற்கு பகுதிகளான சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேசங்களில் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தோம். பின்னர் 1995 இல் குடாநாட்டு இடப்பெயர்வு. அதனைத் தொடர்ந்து 2009 வரையும் வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வந்தோம். யுத்தகாலத்துக்கு முந்தைய என்னுடைய கடந்த காலத்தில் அரியாலையில் உள்ள  பழவகைகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் உற்பத்தித்துறை சார்ந்த பொறுப்பில் வேலை செய்தேன். பின், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையிலும் கடமையாற்றினேன். அதன் பிற்பாடு இடப்பெயர்வுடன் வன்னியில் சிறுவர் பாதுகாப்பு  நிறுவனமொன்றில் மாவட்ட முகாமையாளராகவும் கடமையாற்றினேன்.



இறுதியுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் திரும்பிய பிற்பாடு கடந்த கால அனுபவங்களையும் வைத்து நாங்கள் ஏன் சொந்தமாக தொழில் தொடங்கக்கூடாது என்கிற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு எனது மகளும் உதவிக்கரமாக இருந்தார்.



எனது மகளுடன் இணைந்து ஒரு குடும்ப வியாபாரம் போல் தான் சிறு உற்பத்தி முயற்சிகளை  2015 நவம்பரில் ஆரம்பித்தோம். பழங்கள், மரக்கறிகளை நீரகற்றி உலர்த்தி பதனிடும் முறையை நாங்கள் கையாள்கின்றோம். இப்பொழுது முருங்கை இலை மா, இராசவள்ளி மா, பாவற்காய் வற்றல், பாவற்காய் வடகம், வேப்பம்பூ வடகம் ஆகியவற்றை தயாரித்து வருகிறோம். இவற்றைப் பொதி செய்து  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம்.  2016 இல் இடம்பெற்ற யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் எமது உற்பத்திப் பொருட்களை பார்வைக்கு வைத்து இருந்தோம். அந்த நேரத்தில் தான் ஏற்றுமதிக்கான சில தொடர்புகளும் கிடைத்தன. நேரடியாக ஏற்றுமதியில் ஈடுபடாவிட்டாலும் ஏனைய முகவர்கள் ஊடாக ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றோம்.



முருங்கையினுடைய எல்லாப் பகுதிகளுமே அதிகளவு ஊட்டச் சத்து நிறைந்தவையாகும். எங்களின் எல்லோரின் வீடுகளிலும் முருங்கை மரம் இருக்கிறது.   பெரும்பாலும் முருங்கை காயைத் தான் கறித் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் முருங்கை இலையின் மகத்துவத்தை பெரிதாக யாரும் உணரவில்லை. நாங்கள்   முருங்கை இலைகளை Yarl herbs export என்கிற நிறுவனத்திடமிருந்து  கொள்வனவு செய்து உலர்த்தி பதனிட்டு மாவாக்கி சுகாதாரமான முறையில் பொதியிட்டு சந்தைப்படுத்துகிறோம்.   வெளிநாடுகளில் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது.  புட்டு, இடியப்பம் அவிக்கும் மாவுடன் முருங்கை இலை மாவையும்  கலந்து விநியோகிக்கும் திட்டம் ஒன்றை நிறுவனமொன்று இங்கு ஆரம்பிக்க இருக்கிறது. ஆப்பிரிக்காவில் குழந்தைகளின் போசனைப் பெறுமானத்தை அதிகரிக்க கோதுமைமாவுடன், முருங்கை இலை மாவைக் கலந்து உபயோகப்படுத்துகிறார்கள். முருங்கை இலையில் புட்டு அவிக்கும் நடைமுறை இங்கே நிறைய காலமாக   இருக்கிறது. அன்னியச் செலாவணியை பெருமளவில் ஈட்டக் கூடிய ஒரு தொழில் துறையாக வளரக் கூடிய சாத்தியத்தை இது கொண்டுள்ளது. இது தொடர்பில் எங்களது விவசாய திணைக்களங்களோ சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களோ அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இன்னும் இங்கு ஏராளமான உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றன. அதன் மூலம் எம்மக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.



பாகற்காயை வற்றல் போட்டு பெருமளவு ஏற்றுமதி செய்ய முடியும். இவற்றுக்கு வெளிநாடுகளில்  நல்ல மதிப்பு உண்டு. கடந்த வருடம் சந்தையில் நியாயமான அளவு பாகற்காய்களை 60 ரூபாவிற்கும் 80 ரூபாவிற்கும் இடையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.    ஆனால் இம்முறை எதிர்பார்த்த உற்பத்தி இல்லாமையால் சந்தையில் பாவற்காய் விலை சராசரியாக 160 ரூபாயாக இருந்தது. இதனால் பாவற்காயை உலர்த்தி பெறும் வருவாயை விட பாவற்காயை கொள்வனவு செய்யும் விலை அதிகமாக இருந்தமையால் இந்த ஆண்டு பாவற்காயை கொள்வனவு செய்ய முடியவில்லை.  இதனால் தொடர்ச்சியாக உலர்த்த்துவதற்கு பாவற்காயை பெற்றுக் கொள்வது சிரமமாக உள்ளது. தொடர்ச்சியான கிடைப்பனவு இல்லாதது எமது தொழிலுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. பருவகாலநிலை மாற்றம், வரட்சி, பீடைகளின் தாக்கம் காரணமாக விவசாய பொருள் உற்பத்தி இவ்வாண்டு  வீழ்ச்சி அடைந்துள்ளது.



வேப்பம்பூ வடகம் போன்ற  பாரம்பரிய உணவுவகைகளையும் தயாரித்து வருகிறேன்.  பாகற்காய் வடகத்தை இங்கே அறிமுகப்படுத்தி அது நல்ல சந்தை வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளது.  மோர்மிளகாய்க்கும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு மிளகாயின் விலை மிகவும் உச்சமாக இருந்தபடியால் மோர்மிளகாய் உற்பத்தி செய்ய முடியவில்லை.
பொலிக்னைட் சீட்டினால் (வெப்பத்தை விரைவாக கடத்தி தக்க வைத்திருக்கும் ஒரு வகை மேற்கூரை) சுற்றி மூடப்பட்ட அறையில் வைத்து தான் முருங்கை இலைகள், பாவற்காய்கள், இராசவள்ளிக்கிழங்குகள்  உலர்த்தப்படுகின்றன. சூரிய சக்தியின் மூலம் இவற்றை திறம்பட உலர்த்த முடியும்.

இப்பொழுது எங்கள் தொழிலில் உள்ள பிரதான சவால், உற்பத்தி மூலப் பொருட்களை தடையற்ற விதத்தில் தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை உருவாக்குவது தான். வரட்சியுடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டு மரக்கறி உற்பத்திகள் குறிப்பாக பாவற்காய் உற்பத்தியை மேற்கொள்ளும்  நோக்கில் பசுமைக் குடில்களை அமைத்துள்ளேன். கிளிநொச்சியில் 2 ஏக்கர் காணியை வாங்கி அங்கும் பயிரிடும் நோக்கில் உள்ளேன்.

இவை எமது விவசாயிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நினைக்கிறேன். எவ்வளவுக்கெவ்வளவு தொழிநுட்பங்களும் இவ்வாறான முயற்சிகளும் பரவலடையுதோ அவ்வளவுகவ்வளவு எமது தேசத்தின் உற்பத்தி அதிகரிக்கும்.



சந்தை விலை ஏற்றத்தாழ்வு, பருவகாலம் சீரின்மை, நிலையான வழங்கல் இல்லாமை தான் எதிர்நோக்கும் பிரதான சிக்கல்களாக உள்ளன.  இஸ்ரேல் நாட்டவர்கள்  பாலைவனமே தங்களுக்கு ஒரு வளம் (desert is a resouree) என்கிறார்கள். விவசாய ஆராய்ச்சிகளும், விவசாய வணிகமும் ஒரே தண்டவாளத்தில் செல்லும் ரயில் மாதிரி கைகோர்த்து பயணிக்கும் போது தான் பொருளாதாரத்தில் மேன்மை நிலையை அடையலாம்.

ஆனால், இங்கு விவசாய ஆராய்ச்சிகள் ஒரு நிலையிலும் விவசாய வணிகமும், அபிவிருத்தியும் இன்னொரு நிலையிலும் உள்ளன. இங்குள்ள அரச நிறுவனங்கள் பெரிதாக விவசாய வணிகத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. அண்மையில் தாய்லாந்துக்கு சென்று வந்தேன். அங்கு பனம்பொருள் உற்பத்தி மிகவும் விஞ்ஞானபூர்வமான தயாரிப்புடன் மேற்கு நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதியாகிறது.  அதுவும் பனையில் இருந்து பலவகையான பொருட்கள். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தாய்லாந்தில் உள்@ர் மூலப்பொருட்களான மூங்கில்களை வைத்து பசுமைக்குடில்களை சிறப்பான முறையில் அமைத்து  உள்ளார்கள். இந்தியாவில் பசுமைக்குடில்களை அமைப்பதற்கு சவுக்கு மரத்தை பாவிக்கின்றார்கள்.

தென்னிலங்கையை பொறுத்தவரையில் ஒரு முயற்சியாளரின் வளர்ச்சிக்கு வங்கிகள், நிறுவனங்கள் என்று எல்லாமே நன்றாக துணை புரிகின்றன. எங்கள் பகுதிகளில் அந்த நிலை இன்னும் வரவில்லை. அவர்களோடு ஒப்பிடும் போது நாங்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றோம். பழ அபிவிருத்தி சபை சிறிமாவின் காலத்தில் இருந்தது. இங்கிருந்து மாம்பழங்களும் பெரும்தொகையில் ஏற்றுமதியானது. அந்த நிலை திரும்பவும் வர வேண்டும்.

எங்களது உற்பத்திப் பொருட்களை உள்@ரில் விநியோகம் செய்வது கொஞ்சம் கடினமாகவுள்ளது. எங்களுடைய பொருட்களின் விற்பனைக்கு யாழில் உள்ள TCT  நிறுவனம்  பெருமளவு உதவி செய்கிறது. எனது பொருளுக்கு மட்டுமல்ல உள்ர் உற்பத்தியாளர்கள் பலருக்கும் சந்தைவாய்ப்பை அந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

 எமது பிரதேசத்தில் கூட்டு முயற்சிக்கான பரந்த தளத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இளம் தொழில் முயற்சியாளர்கள் எம் பகுதிகளில் புதிதாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். சரியான விலையில் மூலப்பொருட்களை பெற்று தொடர்ச்சியாக உற்பத்திகளை மேற்கொள்ளும் நிலைக்கு நாங்கள் வளர வேண்டும். அப்போது தான் சர்வதேச சந்தையிலும் ஒரு ஸ்திரமான நிலையை தக்கவைக்க முடியும்.

                                                                                 தொடர்புக்கு-0766289170

தீசன்
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.