மலையகத் தேசியம்: நிலஉரிமையும் ஆக்கிரமிப்பும்


             



இன்று இலங்கையில் வாழுகின்ற இனக்குழுமங்களை எடுத்துக்கொண்டால் சிங்களவர்கள். இலங்கைத்தமிழர்கள், இலங்கை சோனகர்கள் (முஸ்லீம்கள்), மலையகத்தமிழர்கள் (இந்திய வம்சாவழித் தமிழர்கள்) ஆகிய இனக்குழுமங்களே பெருமளவில் அறியப்பட்டதாக இருக்கின்றன. ஆனால் பேகர், மலே, இலங்கையிலுள்ள ஆபிரிக்க சமூகமான கபீர் இனம், பரதர், கொழும்பு செட்டி, குறவர், மற்றும் இலங்கையின் சுதேச குடிகளான வேடுவர் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை.

மேற்குறிப்பிட்ட இனக்குழுமங்களில் வேடுவர் இனமே இலங்கையின் சுதேச இனமாகும்.  ஏனைய அனைத்து இனங்களும் வேறு நாடுகளிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களாவர்.  சிங்களவர் வட இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம் பிரதேசத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்கள்.  இலங்கைத் தமிழரில் வடபுலத்திலுள்ளவர்கள் தென்னிந்தியாவின் சேரநாட்டிலிருந்தும், கிழக்கு மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ளவர்கள் சோழநாட்டிலிருந்தும் வந்தவர்களாவர்.  இலங்கை சோனகர்களில் பெரும்பாலானோர் துருக்கியிலிருந்து வந்து இலங்கையின் கரையோரங்களில் குடியேறியவர்கள்.  மலையகத் தமிழர் தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, வடார்க்காடு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆங்கிலேயரினால் அழைத்துவரப்பட்டு இலங்கையில் மலையகப் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டவர்கள்.

ஐரோப்பியர் இலங்கையர்கள் கலப்பில் உருவானதேபேகர்(பறங்கியர்) இனமாகும்.  மலே இனத்தவர் இந்தோனேசிய ஜாவா தீவிலிருந்தும், பரதர்கள் தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்தும் வந்தவர்களாவர்.  இந்திய செட்டி சமூகத்தின் வழித்தோன்றல்களே கொழும்பு செட்டிகளாவர்.  ஆபிரிக்க மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்தவர்களே இலங்கை வாழ் ஆபிரிக்க சமூககமான கபீர் இனத்தவர். குறவர் (நாடோடிகள்) இனத்தவரும் தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்களே.

சிங்களவர், இலங்கைத்தமிழர் முஸ்லிம்கள், மலையகத்தமிழர் ஆகிய இனங்கள் இன்று எண்ணிக்கை அடிப்படையில் முதன்மை பெறும் தேசியங்களாக கணிக்கப்படுகின்றன.  இலங்கையிலுள்ள ஏனைய இனங்களை போன்றே சிங்கள இனம் தவிர்த்து இலங்கைத்தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர் ஆகிய இனங்கள் தமது இருப்பு தொடர்பில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். 

ஒரு தேசியத்தின் இருப்பானது பொதுப்பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொது மொழி, பொதுக்கலாசாரம் என்பவற்றினால் கட்டியெழுப்பப்படுகின்றது.  இதனடிப்படையில் பார்க்கும் போது மலையகதேசியமும் இந்த நான்கு அடிப்படை தூண்களினாலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  ஆனால் இன்று மலையகதேசியத்தின் அனைத்து அம்சங்களும் சவாலுக்கு உட்பட்டு வருவதனை அவதானிக்கலாம்.  குறிப்பாக பொது நிலம் படிப்படியாக அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றது.

நிலம் தேசியத்தின் உயிர்நாடியாகும்.  நிலம் இருந்தால் ஏனையவற்றை காலப்போக்கில் உருவாக்கிக்கொள்ளலாம்.  நிலம் இல்லாவிடின் ஒன்றுமே இல்லை என்ற நிலைதான். மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்பதற்கு அப்பால் இந்த மலையக மண்ணை வளப்படுத்தியவர்கள். எனவே இந்த மண்ணின் உரிமைக்குரியவர்கள்.

சர்வதேசரீதியாக அவதானிக்கும் போது பேரினங்கள் ஏனைய தேசிய இனங்களையும், சிறு இனக்குழுமங்களையும் ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பிரதான ஆயுதம் நிலமாகும்.  நிலத்தொடர்ச்சி இல்லாமற் செய்தல் அல்லது நிலத்தொடர்ச்சியின் அளவை குறைத்தல் என்ற செயற்பாட்டின் ஊடாக இதனை செய்ய முயற்சிக்கின்றன.  இதனை நிலப்பறிப்பு அல்லது ஆக்கிரமிப்பு எனவும் கொள்ளலாம்.   

உதாரணத்திற்கு சில சர்வதேச அனுபவங்களை குறிப்பிடலாம்.  பாலஸ்தீன பூமியை ஊடறுத்து உருவாக்கப்பட்ட யூத குடியேற்றங்களினால் இன்று பாலஸ்தீன பூமி முழுமையாக துண்டாடப்பட்டுள்ளது.  பாலஸ்தீனத்தில் மிஞ்சிய பகுதிகளான காசாவும், மேற்கு கரையும் நிலத்தொடர்பற்ற இரு முனைகளில்  உள்ளன.  மக்களும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.  இதே போன்று பிலிப்பைன்ஸில் மிந்தானோ பகுதியில் இடம்பெறும் கிறிஸ்தவ குடியேற்றங்களும், கோசாவாவில் அல்பேனியரின் இடத்தை சேர்பியர்கள் ஆக்கிரமிப்பதும் ஒடுக்கு முறையின் வெளிப்பாடுகளே! ஜம்மு-கா~;மீரில் முஸ்லிம்களின் நிலப்பகுதியில் இந்துக்களை குடியேற்ற எடுக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளும் தேசிய இனப்பிரச்சினையை ஒடுக்க பிரதான கருவியாக நிலப்பறிப்பு, ஆக்கிரமிப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான சிறந்த சர்வதேச உதாரணமாகும்.

இலங்கையின் வடக்கு-கிழக்கு அனுபவங்களும் இதையே எங்களுக்கு உணர்த்துகின்றன.  சுதந்திர இலங்கையின் முதல் குடியேற்றமான கல்லோய திட்டம் தென்பகுதி சிங்கள பிரதேசம், கிழக்குடன் இணையும் இடத்திலேயே மேற்கொள்ளப்பட்டது.  பிறகு திட்டமிட்ட முறையில் வடக்கும்கிழக்கும் இணையும் பகுதியில் வில் வடிவில் பல குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது.  தென்னிலங்கை அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மை கொண்ட இனவிரோத சிந்தனையின் அடிப்படையில் குடியேற்றப்பட்ட அனைவருக்கும் சலுகைகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டன. ஒன்றும் அறியாதவர்களும் அரசியல் கைதிகளும் இனவிரோத போதை ஊட்டப்பட்டவர்களுமான சிங்களவர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இதனூடாக முல்லைத்தீவு-திருகோணமலை மாவட்டங்களில் தமிழரின் நிலத்தொடர்ச்சி பாதிக்கப்பட்டது.  வடக்கு-கிழக்கின் தமிழரின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதில் இந்த குடியேற்றங்கள் பிரதான இடம் வகித்தன.

குடியேற்றங்களை உருவாக்கி நிலத்தொடர்ச்சியினை ஊடறுத்து, பிறகு அப்பகுதியில் பொருளாதாரத்தின் பலப்படுத்தவது ஊடாக பேரின அரசியலை பலப்படுத்தல் என்ற தொடர்நிகழ்ச்சி திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.  சுதந்திரகாலத்தில் ஒரு சிங்கள தேர்தல் தொகுதி கூட கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஆனால் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு ஊடாக 1959இல் அம்பாறை தொகுதியும், 1977இல் சேருவல தொகுதியும் உருவாக்கப்பட்டன.  இதே போன்று திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் இன்று சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டு 10இற்கு மேற்பட்ட பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் சில சிங்களப் பிரதேசங்களை, தமிழர் பிரதேசங்களுடன் இணைப்பதனூடாகவும் பேரின ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது.  மொனராகலை மாவட்டத்தின் பதியத்தலாவை பிரதேசம் கிழக்கின் அம்பாறையுடன் இணைக்கப்பட்டது.  திருகோணமலை-முல்லைத்தீவு இடையிலான தென்னைமறவடி(தமிழர்பிரதேசம்) இப்போது சிங்களவர் அதிகமாகவுள்ள அநுராதபுரம் மாவட்ட பதவிசிரிபுர உதவி அரசாங்க பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வெலிஒயா(மணலாறு என்ற தமிழ் பிரதேசம் வெலிஒயா ஆக்கப்பட்டது)  உதவி அரசாங்க பிரிவு என்பனவும் சிறந்த உதாரணங்கள் ஆகும்.  பேரின குடியேற்ற பிரதேசத்தின் எல்லைகளை விஸ்தரித்தல் மற்றமொரு உத்தியாகும்.  மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம், சிலாபத்துறை என்பன இன்று இந்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

சர்வதேச மற்றும் இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழர்களின் ஒடுக்கு முறைகளை ஒத்ததாகவே இலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழும் மலையகத்தமிழர் மீதான ஒடுக்கு முறையும் காணப்படுகின்றது.  மலையகத்தின் முதலாவது திட்டமிட்ட பேரின குடியேற்றம் (அல்லது நில ஆக்கிரமிப்பு) சுதந்திரத்திற்கு முன்னரே கேகாலை மாவட்டம் வெற்றிலையூரில் மேற்கொள்ளப்பட்டது.  இன்று அந்த ஊரின் பெயரே “புலத்கோபிட்டிய” என மாற்றப்பட்டுள்ளது.  இவ்வாறு தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பின் விளைவு இன்று மலையகத் தமிழர் நுவரேலியா மாவட்டத்திலும், பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளிலுமே (ஹல்துமுல்ல, பசறை, லுணுகலை, அப்புத்தளை) செறிவாக வாழும் நிலை காணப்படுகின்றது. 

இவ்வாறு திட்டமிட்ட பேரின குடியேற்றங்கள் மலையகத் தமிழரின் நிலப்பிரதேசத்தினை சிதைக்கின்ற பிரதான வழிமுறையாக அதிகார தரப்பினால் செய்யற்படுத்தப்படுகின்றது.  1971இல் தென்னிலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடுத்து 1972ஆம் ஆண்டுகாணி உச்ச வரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.  இதனூடாக பெருந்தோட்ட காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதோடு பெருமளவிலான காணி சிங்களவர்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது.  இவ்வாறே உசவசம, நட்சா திட்டங்கள் மூலமும் மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களில் பெருமளவிலான தோட்டகாணி திட்டமிட்ட முறையில் சிங்களவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. மலையக சிறுநகரங்களுக்கும் தோட்டங்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்டு வருகின்ற திட்டமிட்ட பேரினகுடியேற்ற கிராமங்களும் மலையகத் தமிழரின் நிலத்தொடச்சியை பெரிதும் பாதித்துள்ளன.  மேலும் ஒரு சிறந்த உதாரணமாக ஹட்டன் பகுதியில் தியகலைக்கும் மஸ்கெலியா-நல்லதண்ணிக்கும் இடையிலான மலைத்தொடரில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட பேரின குடியேற்றத்தையும் குறிப்பிடலாம். 

இவ்வாறே சட்டவிரோத குடியேற்றம் (மலையகத்தின் பிரதான பாதைகளின் இருமருங்கிலும் உருவாகி வருகின்ற குடியேற்றங்கள்) கைத்தொழில் குடியேற்றங்கள், அபிவிருத்தி திட்டங்களுடனான குடியேற்றங்கள் குறிப்பாக நீர்த்தேக்கங்களை அண்மித்து உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றங்கள்(கொத்மலை குடியேற்றம், விக்டோரியா குடியேற்றம்) தோட்டங்களுக்கு அண்மித்த இடங்களிலும், அபிவிருத்தி செய்யப்படும் பிரதான பாதையின் நெடுகிலும் உருவாக்கப்பட்டு வரும் சிறு பௌத்த விஹாரைகளும் அதை சூழ முளைவிடும் குடியேற்றங்களும், சிங்கள விவசாயக் குடியேற்றங்கள்(நுவரேலியா மாவட்டம் போபத்தலாவை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கால்நடைப்பண்ணையும், அதனை சூழ சிங்களவர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பெரியளவிலான விவசாய குடியேற்றங்கள்) எனத்திட்டமிட்ட பேரின குடியேற்றங்கள் மூலம் மலையகத் தமிழர்களின் வாழ்வாதார பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 

மேலும் தோட்டங்கள் பராமரிப்பின்றி தரிசு நிலங்களாக்கப்பட்டு பின்னர் அவை சிங்களவர்களுக்கு துண்டுகளாக பிரித்துக்கொடுக்கப்பட்டு மலையகத் தமிழரின் நிலத்தொடர் ஆக்கிரமிக்கப்படுகின்றது.  கண்டி பள்ளேகலை தோட்டம், வலப்பனை பிரதேசத்திலுள்ள எலமுள்ள, வத்துமுள்ள, கொச்சிக்காய் தோட்டம் என்பன இதற்கான அண்மைக்கால சிறந்த எடுத்துக்காட்டாகும்.  இதேபோன்று பெருந்தோட்டங்கள் சிறுசிறுதுண்டுகளாக துண்டாடப்பட்டு சிங்களவர்களின் கைகளில் (சிறுதேயிலை உற்பத்தியாளர்கள்) கொடுக்கப்படுவது ஊடாகவும் மலையகத் தமிழர்களின் நிலம் திட்டமிட்ட வகையில் பறிக்கப்படுகின்றது. 

மலையகத் தமிழர்களின் இனச்செறிவையும், இனப்பரம்பலையும், நிலத்தொடர்ச்சியையும் சிதைப்பதற்கு கையாளப்படுகின்ற மற்றுமொரு உத்திதான் சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை மலையகத் தமிழரின் பிரதேசத்துடன் இணைக்கும் முயற்சியாகும். உதாரணமாக கண்டி மாவட்டத்தின் சிங்களவர்கள் அதிகமாக வதியும் தொகுதிகளில் ஒன்றான ஹங்குரான்கெத்தவை மலையகத் தமிழர் செறிந்து வாழும் நுவரேலியா மாவட்டத்துடன் இணைத்த செயற்பாட்டை குறிப்பிடலாம்.  இது போன்றே நுவரேலியா மாவட்டம் மஸ்கெலியா தேர்தல் தொகுதியுடன் பல பேரின குடியேற்ற கிராமங்கள் இணைக்கப்பட்டன.  இதன் விளைவாகவே இன்று மஸ்கெலியா தேர்தல் தொகுதியுடன் இணைந்த பிரதேச செயலகமும், பிரதேசசபையும் ‘அம்பகமுவ’ என்ற ஒரு சிங்கள சிற்றூரின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.  இவ்வாறே இராகலை- உடபுஸ்ஸலாவை பிரதேசம் உள்ளடக்கிய வலப்பனை தேர்தல் தொகுதியுடன் தோட்டப்புறத்திற்கு வெளியில் இருந்து பல சிங்கள கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு உடபுஸ்ஸலாவை மலைத்தொடரின் மறுபுற பள்ளத்தாக்கிலுள்ள மலையகத் தமிழர் செறிந்து வாழும் தோட்டங்கள் பதுளை மாவட்ட ஊவாபரணகம தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றால் மலையகத்தமிழரின் இனப்பரம்பல் சிதைக்கப்பட்டு நிலத்தொடர்ச்சியும் சுருக்கப்பட்டுள்ளது.

மலையகத்தமிழரில் பெரும்பான்மையானோரின் வாழ்விட பிரதேசம் பெருந்தோட்டமாகும்.  ஆனால் தோட்டங்களிலுள்ள குடியிருப்புக்களுக்கான இடம் அவர்களுக்கு சொந்தமில்லை. காணிக்கான உரித்தும் அவர்களிடம் இல்லை.  இவ்வாறு சொந்த நில இருப்பு இல்லாததால் சொந்தமான வீடும் கட்ட முடியாதுள்ளது.  இவை இரண்டும் சேர்ந்து மலையகத் தேசிய இருப்பை ஆட்டம் காணச்செய்கின்றன.

இன்றைய நிலையில் மலையக மக்களுக்கு நிலமும் சொந்தமில்லை. சொந்த வீடும் இல்லை.  இருக்கின்ற வீடுகளும், வீட்டுக்குரிய அமைப்புடன் இல்லை.  அவை தற்காலிக கொட்டில்களே! இவையும் தொடர் கொட்டில் வீடுகளாகவே உள்ளன. இதனால் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு மலையகதேசிய இனம் முகம் கொடுத்துள்ளது.  குடும்பங்களுக்கு பிரச்சனை, கலாசார சீரழிவு, கல்வியில் பாதிப்பு, சுகாதார சீர்கேடு என்று இம்மக்கள் தங்கள் எதிர்காலத்தையே இழக்கின்றனர்.

இலங்கையிலுள்ள ஏனைய இனங்களுக்கு காணி உரிமையும், வீட்டுரிமையும் உள்ள நிலையில் மலையகத்தமிழருக்கு மட்டுமே இவை இரண்டும் இல்லாத நிலை.  இதனால் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பொருளாதார ரீதியாக வளர்ச்சிகுன்றியும், சுதந்திர தன்மையுடனான மனப்பாங்கு இன்றியும், நிலப்பற்றும் நாட்டுபற்றும் இல்லாத நிலையிலேயே இம்மக்கள் உள்ளனர். 

மலையகத் தமிழருக்கு நிலஉரிமையும், வீட்டுரிமையும் இல்லாத நிலையில் அவர்களின் கூட்டிருப்பும் குலைக்கப்படுகின்றது.  இதனூடாக மலையகத் தமிழரின் கூட்டுரிமைக்கான போராட்டமும் சிதைக்கப்படுகின்றது.  எனவே மலையகத் தமிழரின் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அவர்களின் நில உரிமையும், வீட்டுரிமையும் வென்றெடுக்கப்படல் வேண்டும்.

வோல்டர்டெரி-
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.