இடைக்கால அறிக்கை சூழ்ச்சிகள்
ஆறு பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து “இடைக்கால அறிக்கையும் தமிழ்மக்களும்" எனும் அரசியல் கருத்தாடல் அரங்கை 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ். நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் நடாத்தின. அதில் பங்கேற்று அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய உரை வருமாறு,

1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட சூழலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார்தாசனும் உரையாற்றினார். அந்த உரையின் ஓரிடத்தில் பின்வரும் தொனிப்பட பேசினார். “நாங்கள் சுண்டு விரலில் காயம் என்று மருந்தைக் கேட்க அவன் பெருவிரல் காயத்துக்கு மருந்தை தந்துவிட்டு அந்த விரல்களுக்கு மட்டுமல்ல எல்லா நோய்களுக்கும் இதுதான் மருந்து என்று சொல்லப் பார்க்கிறான்.”

இது கால்நூற்றாண்டுக்கு முன்பு சொல்லப்பட்டிருக்கிறது. கால்நூற்றாண்டுக்கு பின்னரும் இலங்கை  அப்படித்தான் இருக்க விரும்புகிறது.  இடைக்கால அறிக்கை எனப்படுவது இலங்கைப் பிரச்சனையை அதற்கான தீர்வை முழுத்தீவுக்கும் என்கின்ற ஒரு பரிமாண நிலையில் வைத்துத் தான் அணுகப் பார்க்கின்றனர்.  ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியாகவே அமைய வேண்டும்.

இனிமேலும் ஒரு இனப்படுகொலை நேரடியாகவோ மறைமுகமாகவோ நடக்காது என்ற உத்தரவாதம் பெற்ற ஒரு தீர்வுதான் தமிழ் மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பானதாக இருக்க முடியும்.

அப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது ஒரு பரிகார நீதியை. ஆனால் உலக சமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கியது நிலைமாறுகால நீதியை.  அதிலும் கூட அந்த நிலைமாறுகால நீதியை நிறைவேற்றுவதற்காக 31.01.2015 ஆம் ஆண்டு  தீர்மானத்தில் அரசாங்கம் ஒப்புக்கொண்ட 25 பொறுப்புக்களில் ஒன்று தான் அரசியலமைப்பை மாற்றி எழுதுவது. அதாவது இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியாக இருந்திருக்க வேண்டும். 
ஆனால் இனப்படுகொலைக்கு எதிரான நீதியானது அதாவது இனப்படுகொலை நடந்ததா இல்லையா என்பது பற்றிய விசாரணைகளிலிருந்து இனப்பிரச்சனைக்கான  தீர்வு பிரிக்கப்பட்டுவிட்டது.  பிரிக்கப்பட்டு நிலைமாறுகால நீதிச் செயன்முறைகளின் கீழ் அது யாப்பு உருவாக்க பொறிமுறைக்குள் உள்ளடக்கப்பட்டுவிட்டது.  இங்கேயே அடிப்படை பிழைத்துவிட்டது.  இனப்படுகொலைக்கு எதிரான நீதியாக இருக்கவேண்டிய தீர்வு யாப்பு உருவாக்க பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டது.  யாப்பு உருவாக்கத்திலும் கூட இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது  பத்தோடு பதினொன்றாக மாற்றப்பட்டு விட்டது. நிறைவேற்று அதிகாரம்பெற்ற ஜனாதிபதி முறைமையை நீக்குவது, தேர்தல் முறைமையை மாற்றுவது அதோடு சேர்த்து தேசிய பிரச்சனைக்கு தீர்வைக் காண்பது என்று மூன்றிலொன்றாக குறுக்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில்தான் யாப்பு புதிதாக எழுதப்பட்டு வருகின்றது.  புதிதாக எழுதப்பட்ட யாப்புக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  அந்த தீர்வு தமிழ் மக்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.  அனைத்து சமூகங்களுக்குமாக வழங்கப்படுகிறது. இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு அதன் மீது தான் கண்டுபிடித்திருக்கப்பட வேண்டும்.  பதிலாக அது ஒரு யாப்பு உருவாக்க செயற்பாடாக சுருக்கப்பட்டு விட்டது. 

ஒரு சமாதான உடன்படிக்கை செய்யப்படாமலேயே ஒரு யாப்பு உருவாக்கம் நடந்து கொண்டிருக்கின்றது.   இப்பொழுது வந்திருப்பது ஒரு இடைக்கால அறிக்கை.  முதல்நிலை அறிக்கை. இது இறுதி அறிக்கை அல்ல. இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு அடுத்து அது எப்படியாகுமென்று எங்களால் இப்பொழுது சொல்ல முடியாது.  ஆனால் அரசாங்கத்தை பொறுத்தவரையில் அரசாங்கம் இந்த யாப்பு உருவாக்க பொறிமுறையை நிலைமாறுகால நீதியின் கீழ் தான் ஒப்புக்கொண்ட வீட்டு வேலையை செய்கின்ற ஒரு அலுவலாகத்  பார்க்கின்றது.  உலக சமூகத்திற்கு  வீட்டு வேலையை செய்திருக்கிறேன் பார் என்பதைக் காட்டுவதற்காக செய்யும் ஒன்றாகத்தான் இந்த யாப்பு உருவாக்க முயற்சிகள் பெருமளவில் காணப்படுகின்றன.

நடந்து முடிந்த பட்ஜெட் விவாதத்தின்  போது நாடாளுமன்றில் யார் யார் பார்வையாளர்களாக பங்கு பற்றினார்கள் என்று பார்த்தால் தெரியவரும்.  இந்த அரசாங்கம் உலக சமூகத்திற்கு தான் சில வீட்டு வேலைகளை செய்திருப்பதாக காட்டப் பார்க்கின்றது.  அப்படி ஒரு வீட்டு வேலையாக இந்த இனப்பிரச்சனைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட்டுள்ளது.  அதாவது இனப்படுகொலைக்கெதிரான நீதியைக் கேட்ட மக்களுக்கு அது ஐநா வுக்கு செய்கின்ற வீட்டு வேலையாக சுருக்கப்பட்டு விட்டது . 
இந்த நிலையில்  இடைக்கால அறிக்கை வந்துவிட்டது.  உண்மையில் இடைக்கால அறிக்கை பற்றி  தமிழ் மக்கள் மத்தியில் கணிசமான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  அது சாதாரண மக்களுக்கு சென்றடைந்ததா இல்லையா என்பது தெரியாது.  ஆனால் தமிழ் ஊடகங்களில் கணிசமானளவு கட்டுரைகள் வந்திருக்கிறன.  இது தொடர்பில் பல கூட்டங்கள்,  உரையாடல்கள் நடந்திருக்கின்றன.  இப்படிபட்ட கூட்டங்களில் அரசியல் ஆர்வம் உள்ளவர்கள்  மத்தியில் உரையாடல்கள் நடந்து வருகின்றன.
 
நான் இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது என்ற விடயத்துக்குள் அதிகம் இறங்காமல்  வேறு ஒரு கோணத்தில் இருந்து இடைக்கால அறிக்கையை அணுகப் போகின்றேன். இந்த இடைக்கால அறிக்கை  மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் சிங்கள  அரசியல் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பதை பார்ப்போம்.  அரசுத் தலைவர்கள் உட்பட அதாவது பிரதமர் ரணில்விக்ரமசிங்க உட்பட டொக்டர் ஜெயம்பதி, டிலான் பெரேரா, அமைச்சரவை பேச்சாளர்கள் உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பதை  தொகுத்து பார்ப்போம். 

அவர்கள் சொல்ல வருவது இது தான் நீங்கள் பயப்பட வேண்டாம் சிங்கள மக்களே.  நாங்கள் சமஸ்டிக்கு போகமாட்டோம்.  அது ஒற்றை ஆட்சி மாத்திரம் தான்.  சும்மா வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளதே தவிர ஒற்றையாட்சி மாற்றப்படாது. பௌத்தத்திற்கு வழங்கப்பட்ட முன்னுரிமை எந்த வகையிலுமே நீக்கப்படாது. 

நீங்கள் பயப்பட வேண்டாம் பௌத்த குருக்களே நாங்கள் எல்லாவற்றையும் எழுதிவிட்டு உங்களிடம் வந்து காட்டிவிட்டுதான் முடிவெடுப்போம். நீங்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் சிங்கள மக்களை பாதுகாக்கவேண்டும்  உங்களை கை விடுவோமா? விடமாட்டோம்.   நீங்கள் பயப்பட வேண்டாம் சிங்கள மக்களே வடக்கு கிழக்கை இணைக்க முடியாது. ஏனென்றால் இரண்டு மாகாணமும்  சேர்வதற்கு  முஸ்லிம்கள் விடமாட்டினம்.  கிழக்கில் தமிழ் மக்கள் கிட்டத்தட்ட சிறுபான்மை. ஒரு வாக்களிப்புக்கு போனால் வாக்களிப்பு தோற்றுவிடும். எனவே தமிழ் மக்களே இணைய விரும்பவில்லை என்று வரும்.  வடக்கு-கிழக்கு இணைவுக்கு கிழக்கு விரும்பவில்லை என்று வரும். ஆனபடியால் பயப்பட வேண்டாம் சிங்கள மக்களே வடக்கு-கிழக்கு இணையாது.

பெரிய மீன் சின்ன மீன்களை சாப்பிட சின்ன மீன்கள் போய் கேட்டுதாம் ஏன் எங்களை சாப்பிடுகிறாய்,  எங்களை நீ சாப்பிடக்கூடாது என்று. பெரிய மீன் சொல்லிச்சுதாம் அப்படியென்றால் நீங்களும் எங்களைச் சாப்பிடுங்கோ என்று. இது  மாவோ சேதுங்  சொன்ன கதை. எப்படி  பெரிய மீனை சின்ன வாயாலை சாப்பிடுறது?  இரண்டு மாகாணங்களும் விரும்பினால் இணையலாம் என்று சொன்னால் கிழக்கில்  இனவிகிதாசாரம் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் மட்டும் தனியே நிற்பார்கள். முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் இணைந்துவிட்டால் வடக்கு கிழக்கு இணையாது.  அதை ஒரு தேர்தல் மூலம் நாங்களே எழுதிக் கொடுத்ததாக இருக்கும்.  ஆகவே நீங்கள் பயப்பட வேண்டாம் சிங்கள மக்களே வடக்கு கிழக்கு இணையாது.  நீங்கள் பயப்பட வேண்டாம் சிங்கள மக்களே பௌத்தத்துக்கு  வழங்கப்பட்ட முதன்மை நீக்கப்படமாட்டாது, ஒற்றையாட்சி நீக்கப்பட மாட்டாது, சமஸ்டி கிடைக்காது, வடக்கு-கிழக்கு இணைக்கப்பட மாட்டாது. 

இது மட்டுமல்ல இதைவிட முக்கியமான விடயமொன்று கூறப்பட்டது. அது என்னவென்றால் திருமதி சந்திரிக்கா காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வு வந்த பொழுது அன்று பம்மிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று மகிந்தவுடன் நிற்கிறார்கள்.  ஆனால் இவர்கள் ஏற்றுக்கொண்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்பது கிட்டத்தட்ட கூட்டாட்சி என்கிறார்கள். அது கூட்டாட்சி இல்லை என்பதும் ஒரு விடயம். ஆனால் “அன்று அத்தீர்வை ஏற்றுக்கொண்ட நீங்கள் இன்று கூட்டாட்சி இல்லை என்று சொல்லும் இத்தீர்வுக்கா பயப்படுகிறீர்கள்?   திருமதி சந்திரிக்காவின் காலத்தில் இதைவிட அடர்த்திகூடியதை ஏற்றுக் கொண்ட நீங்கள் இன்று இத்தீர்வை எதிர்த்து நிற்கிறீங்கள். இதில் ஒன்றுமில்லை இதைப்போய் எதிர்த்து நிற்கிறீங்களே" என்று சொல்கிறார்கள்.  இதைவிட மேலை போய் ஒருத்தர் சொல்கிறார்  “பௌத்தத்தை  முதன்மையாக ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொண்ட ஒரு தமிழ் தலைவர் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வரமாட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்." அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டார் என்றால் தமிழ் மக்கள் எந்தளவிற்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் என்பதனை அவர் சிங்கள மக்களுக்கு மறைமுக சொல்லுகிறார். தமிழ் மக்கள் மிகவும் விட்டுக்கொடுத்துப்பெற்ற ஒரு தீர்வாக இதுதான் அமைய முடியும் என்பதனை அவர் மிகவும் மறைமுகமாக சொல்லுகிறார். ஆக மொத்தம் சிங்களவர் மத்தியில் உள்ள கடும்போக்காளர்களும் மென்போக்காளர்களும் லிபரல்கள்  என்று சொல்லுகின்ற அனைவரும் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் என்ன பேசினார்கள் என்று பார்த்தால் ஒன்று தெரிய வரும்.  அவர்கள் எல்லோருமே சிங்கள பொது சனங்களையும் மகாசங்கத்தையும் சமாதானப்படுத்த பார்க்கிறார்கள். அதாவது ஒரு பெரும்பான்மை இனத்தை சமாதானப்படுத்த பார்க்கிறார்கள். ஒரு பெரும்பான்மை இனத்தின் பயத்தைப் போக்கப் பார்க்கிறார்கள்.  ஒரு பெரும்பான்மை இனத்திற்கு நம்பிக்கை ஊட்டப் பார்க்கிறார்கள். இது  புரு~ன் அடிக்கிறார் என்று சொல்லி  நீதி கேட்ட மனைவிக்கு மனைவியின்  அச்சத்தையே போக்காமல் புரு~னைப் பார்த்து நீ பயப்படாதை அது சண்டை வாறதுதான் உனக்கு ஒன்றும் நடக்காது என்று சொன்னமாதிரி இருக்கு.

ஒரு நாட்டில் இனப்பிரச்சனை இருந்தால் அதற்கு தீர்வு தேடும் போது பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் அச்சங்களைத்தான் தீர்க்க வேண்டும்.  சிறுபான்மை மக்களைத்தான் சமாதானப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தான்  நம்பிக்கை ஊட்டவேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கிறது?  பெரும்பான்மை மக்களின் பயத்தை போக்குவதற்காக தான் அனைவருமே கதைக்கிறார்கள்.  இதுக்கு பெயரா நல்லிணக்கம்? இதுக்குப் பெயரா நிலைமாறுகால நீதி? இல்லை இதில் நீதி இல்லை. 

திரும்பவும் மாவோவின் கதையை பார்க்கலாம்.  பெரிய மீனுக்கும் சின்ன மீனுக்கும் வழங்கப்படும் நீதி ஒன்றாக இருக்க முடியாது. பெரிய மீனின் அச்சமும் சின்ன மீனின் அச்சமும் ஒன்றல்ல.  பெரிய மீனைப் பார்த்து நீ பயப்படாதை... நீ பயப்படாதை நாடு பிரியாது, நீ பயப்படாதை... நீ பயப்படாதை வடக்கு-கிழக்கு இணையாது என்று சொல்கிறார்கள். ஆனால் சின்ன மீனைப் பார்த்து தைரியமூட்ட  யார் இருக்கினம்? ஒருத்தரும் இல்லை. இது தான் நிலமை.

சின்ன மீனை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு அரசியல்வாதி  ஒப்பீட்டளவில் பரவாயில்லாத உரையை ஆற்றினார்.  ஆனால் உரையாற்றப்பட்ட அந்த அரங்கிலேயே ரணில் விக்ரமசிங்க தெட்ட தெளிவாக சொல்கிறார் ஒற்றை ஆட்சிதான் என்று.  அந்த அமர்வு  முடிய வெளியில் வந்த தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் புளொட் இயக்கத் தலைவரான சித்தார்த்தன்  “நீங்கள் தானே ஆயுதம் ஏந்தின அமைப்பை பற்றி கூடக் கதைக்கிறனீங்கள். நீங்கள் ஒற்றை ஆட்சிக்கு எதிராக கேட்டிருக்கலாம் தானே?” என்று,  அதற்கு அவர் சொன்னாராம் “என்ன கேட்டு இருக்க வேண்டும்?” என்று. மற்றொரு உறுப்பினர் சித்தார்த்தனிடம் கேட்டாராம் “ஏன் நீங்கள் அதைப்பற்றி கதைத்திருக்கலாம் தானே?” என்று.  “என்னை இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் பேசவிடாதபடியால் நான் அதைப்பற்றி கதைக்கவில்லை” என்று சித்தார்த்தன் சொன்னாராம். மொத்தத்தில் ஒற்றையாட்சி தொடர்பாக பிரதமர் அழுத்தம் திருத்தமாக கதைத்துவிட்டுச் சென்றார்.  இதுதான் நிலவரம். எனவே இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை நாங்கள் தொகுத்துப் பார்த்தால் அதன் பின்பு முஸ்லிம் தலைவர்கள் கதைத்தது எல்லாவற்றையும் தொகுத்து பார்த்தால்   பெரிய மீனை பயப்படாதை பயப்படாதை என்று சொல்லுகின்ற நிலைமைதான் காணப்படுகின்றது.

சின்ன மீனின் பயத்தைப் பற்றி யாரும் அக்கறைப்படுவதாக தெரியவில்லை. ஆனால் யாப்பு உருவாக்க பொறிமுறைகள் என்று வருகின்ற பொழுது உலகளாவிய அனுபவத்தை எடுத்துப் பார்த்தால் குறிப்பாக சோவித்யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் உருவாகிய குட்டிக் குட்டி நாடுகளின்  யாப்புக்களை மீள வரையும் போது அல்லது புதிதாக வரையும் பொறிமுறைகளின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால் அதற்கு முற்றிலும் மாறாகத் தான் இலங்கைத்தீவின் அனுபவம் காணப்படுகின்றது.  உதாரணமாக கிழக்குத் தீமோரிலை இந்த யாப்பு உருவாக்கத்திற்கான கலந்துரையாடல் போதியளவு நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது.  தென்னாபிரிக்காவிலும் இருக்கிறது ஆனால் பிரச்சனை என்னவென்று சொன்னால் அங்கெல்லாம் ஒரு விடயத்தை  யாப்பு உருவாக்கத்தில் திரும்பத் திரும்ப வலியுறுத்துவார்கள். அது என்னவென்றால் பெரும்பான்மை  வாதம் ஆதிக்கம் செலுத்தாத ஒரு நிலைமை யாப்பு உருவாக்கத்தில் இருக்க வேண்டும் என்பது தான். 

யாப்பு என்பது ஒரு நாட்டின் சட்ட முதுகெலும்பு. அப்படி பார்க்கும் போது சிறுபான்மை மக்களின்  உரிமை பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் அந்த மக்களின் அச்சங்கள் போக்கப்படும் விதத்தில்  எதனையும் செய்யும் போது பெரும்பான்மையினரின் பயம் என்று அவர்கள் கருதுவது  எதனையும் கருத்தில் எடுக்க முடியாது.  அப்படி எடுத்தால் சிறுபான்மை இனத்தவரின் அச்சங்களை தீர்க்க முடியாது.  இது உலகம் முழுவதுமே யாப்பு உருவாக்கப் பொறிமுறையில் நிபுணர்கள் கையாளும் ஒரு கண்டிப்பான ஒழுக்கம். சோவியத்யூனியனின் உடைவுகளுக்குப் பின் உருவாகிய குட்டிக்குட்டி நாடுகளில் உருவாக்கப்பட்ட புதிய யாப்புக்களின் போதெல்லாம்  இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினர், சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளை கொடுப்பதற்கு தடையாக இருக்கக் கூடாது. எனவே யாப்பு உருவாக்க பொறிமுறையில் பெரும்பான்மை வாதத்தை பலசந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் யாப்பு உருவாக்கத்தின் உலகளாவிய அனுபவம் ஆகும்.

கடந்த எட்டாண்டுகளாகவும் அதற்கு முன்னரும்  இலங்கைத்தீவு  இறந்த காலத்தில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான்  நிரூபித்திருக்கின்றது.  இப்பொழுது இந்த இடைக்கால அறிக்கையின் விடயத்திலும் அதற்கு பிந்தி வரும் விவாதங்களின் போதும் அது தான் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.  அதாவது கெடுபிடிப் போரின் பின்னரான உலக சூழலில்  புதிய யாப்புக்கள் உருவாக்கப்பட்ட பொழுது பின்பற்றப்பட்ட பல அறங்களையும் பல புனிதங்களையும் நாங்கள் கற்றுக் கொள்ளவேயில்லை. இதனால் தான் எப்பொழுதும் பெரும்பான்மை இனத்தவர்களின்  அச்சங்களை   எடுத்து அந்த பெரும்பான்மை இனத்தவரை சமாதானப்படுத்தும்  நிலை இன்று வரைக்கும் தொடர்கின்றது. பெரும்பான்மை இனத்தவர்களைப் பாதுகாக்கும், அவர்களின் பயங்களைப் போக்கும்  ஒரு  யாப்பு ஆகத்தான் இந்த யாப்பு இருக்குமென்றால் தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்ன செய்யப் போகிறோம்?

நடக்கப் போகும் உள்ளுராட்சித் தேர்தல் ஒரு பலப்பரீட்சையாக அமையும்.  அது வெறுமனே SLFP  ஐ மேலும் உடைக்கும் தேர்தலாக மட்டும் அமையப் போவதில்லை.  அப்படி உடைக்கலாம் என்ற ஒரு துணிச்சலில் தான் UNP தேர்தலுக்குத் தயாராகின்றது. ஏனென்றால் முந்தி ஒரு பயம் இருந்தது மகிந்த வருவார் என்று. இப்பொழுது என்ன யோசிக்கிறார்கள் என்றால் மகிந்தவும்  மைத்திரியும் பிரிந்து இருக்கும் வரை அது UNP க்கு சாதகமாகவே  அமையும். எனவே தமிழ் முஸ்லிம் வாக்குகளை வைத்துக் கொண்டு திரும்பவும் பெரும்பான்மையைப் பெறலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  இந்த அடிப்படையில் SLFP மேலும் உடையும் என்பதை நம்பித்தான் அவர்கள் உள்@ராட்சி தேர்தல் விடயத்தில் கொஞ்சம் உற்சாகமாக காணப்படுகின்றார்கள். SLFP உடையாது என்று நம்பினால் கடைசி வரைக்கும் தேர்தலுக்கு வரமாட்டார்கள்.

சரி வருவார்கள் என்று வைத்துக்கொண்டால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அந்த தேர்தல் இடைக்கால வரைவின் பின்னான தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறும் ஒரு தேர்தலாகவே அமையக்கூடும். இடைக்கால வரைவை ஏற்றுக் கொண்டீர்களா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டி வரும். அந்த தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒர் ஒத்திகையாகத்தான் பெரும்பாலும் இருக்கும். அந்த ஒத்திகை பின்னர் நிறைய விடயங்களுக்கு ஒரு கட்டியமாக அமையும். எனவே தமிழ் மக்கள் அதிலே எடுக்கின்ற  முடிவு முக்கியமானது. தமிழ் மக்கள் அதிலே எடுக்கப்போகும் முடிவுதான் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதன் அடுத்த கட்டத்தை  தீர்மானிப்பதாக அமையும். எனவே அது வெறும்உள்ளுராட்சி சபை தேர்தலாக மட்டும் அமையாது. அது தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை வெளிக்காட்டும் தேர்தலாக அமையும்.

 உள்ளுராட்சி சபைத் தேர்தல் என்பது  உள்ளுருக்கானது. அதில் உள்ளுர்விசுவாசங்களுக்கு ஓர் முக்கிய இடம் இருக்கும். ஆனால், இனப்பிரச்சினை தீவிரமடைந்த பின் இலங்கையில் நடந்து வருகின்ற எல்லாத் தேர்தல்களின் போதும் பேசுபொருளாக இனப்பிரச்சினை அமைவது உண்டு. இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கும் இத்தகைய காலகட்டத்தில், அந்த இடைக்கால அறிக்கைக்காக தமிழரசுக் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆகக் கூடிய விட்டுக் கொடுப்புக்களை செய்திருக்கின்றன.   தமிழ் தலைவர்கள் யாருமே விட்டுக் கொடுக்காத அளவுக்கு விட்டுக்கொடுத்த கடைசி தலைவர் சம்பந்தன் என்றும் அப்படி ஒரு தமிழ் தலைவர் இனி வர மாட்டார் என்றும்  டிலான் பெரேரா அமைச்சரவையில் கூறுகிறார்.  அந்தளவிற்கு தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுத்து உருவாக்கிய இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இந்த விவாதம் உள்ளுராட்சி தேர்தல் களங்களில் நிகழும். தமிழரசுக் கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும்    நீங்கள் வழங்கப்போகும் வாக்குகள் இடைக்கால அறிக்கைக்கு வழங்கப்பட்ட ஒரு மறைமுக ஆணையாக அமையும். அது ஒரு விதத்தில் ஒத்திகை தேர்தலாகவும்  அமையும்.

பிறகொரு காலம் இடைக்கால அறிக்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய், அதை இறுதியாக்கி பின் அதனை யாப்பாக மாற்றி அதன் பின் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விட்டு அதன் பின் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கப் போகும் வாக்குகள் இடைக்கால அறிக்கைக்கு உரிய மக்கள் ஆணையாக வியாக்கியானம் செய்யப்படும். எனவே தமிழ் மக்கள் இதனை தீர்மானிக்க வேண்டும். எனவே தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது இடைக்கால அறிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறோமா இல்லையா  என்பதனை தீர்மானிக்க வேண்டும்.

எனவே இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து  முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

தொகுப்பு-விக்னேஸ்வரி
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.