மாற்றுத்திறனாளிகளுக்கு எதுவுமே தடையில்லை
யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேசமாற்றுத் திறனாளிகள் விழா மார்கழி 2 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிமுதல் யாழ். கிறீன் கிறாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. விழிப்புலனற்றோர் சங்கத் தலைவரும், சட்டத்தரணியுமான ஏ. எஸ். அற்புதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் தேசிய மட்டத்தில் கல்வி மற்றும் கலைத் துறைகளில் முதலிடம் பெறுபவர்களைக் கௌரவிக்கும் திட்டத்துக்கமைய இந்த வருடம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் மாற்றுத் திறனாளிகள் மட்டத்தில் நடாத்தப்பட்ட தனிப்பாடல், நாட்டார் பாடல் ஆகிய இரு போட்டிகளிலும் தேசியரீதியில் முதலிடம் பெற்ற யாழ். பல்கலைக்கழக மாணவி விக்னராசா விஜயலட்சுமி பிரதம விருந்தினரால் தங்கப் பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.
சுயதொழில் மூலம் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுடன்,வேறு பல மாற்றுத் திறனாளிகளையும் சுயதொழில் மேற்கொள்வதற்கு ஊக்குவித்த இரு சுயதொழில் முயற்சியாளர்கள் விசேடமாகக் கௌரவிக்கப்பட்டனர். ஆசைப்பிள்ளை மகேந்திரன், விஸ்வலிங்கம் கனகசபை ஆகியோருக்கு தங்கப் பதக்கம் அணிவித்து “சுயதொழில் முயற்சியாளர்-2017” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி விழாவின் போது சுன்னாகம் வாழ்வக இல்ல மாற்றுவலுவுடைய மாணவிகள் குழுநடனம் அரங்கேறியது. யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தினர் “திருந்திய உள்ளங்கள்" நாடகத்தைமேடையேற்றியும் அசத்தினர். அத்துடன் தனிநடனம், கிராமியப்பாடல், இன்னிசை அரங்கம், கவிதை உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்வுகளும் மேடையேறின. மாற்று வலுவுடையவர்களின் திறமைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. பார்வையாளர்கள் கலைநிகழ்வுகளை மெய்மறந்து இரசித்தனர். “திறமைகளுக்கு ஊனம் ஒரு தடையல்ல" என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வுகள் அமைந்திருந்தன.
“நவீன நகராக யாழ்ப்பாணத்தை மாற்றுவோம்” என்ற தொலைநோக்குச் சிந்தனையோடு யாழ்.மாநகர சபை பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நவீன நகரமாகப் பரிணமிக்கவுள்ள யாழ்ப்பாணத்தில் மாற்றுத் திறனாளிகள் மிக இலகுவில் சென்று வரக் கூடிய அமைப்புகள் உள்ளடக்கப் படவேண்டும். அவர்கள் பிறரின் உதவியின்றி சுயமாக செயற்பட உரிய வசதி வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என யாழ். விழிப்புலனற்றோர் சங்கத் தலைவரும், சட்டத்தரணியுமான ஏ. எஸ். அற்புதராஜ் தெரிவித்துளளார்.
புல துறைகளில் இலங்கை முன்னணியில் காணப்பட்டாலும் சைகை மொழியை ஒரு மொழியாக இலங்கை பிரகடனப்படுத்தவில்லை. செவிப்புலனற்ற எமது சகோதரர்கள் சைகை மொழியை ஒரு மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டுமெனக் கோரி போராடி வருகிறார்கள். ஆகவே, வடமாகாண சபை இத்தகைய பிரகடனத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்க விரும்புகின்றோம். நிறுவனங்கள் சார்ந்த அடையாள அட்டைகள் காணப்படுவதை விட மாற்றுத் திறனாளிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட சமூக திணைக்களத்தின் ஊடாக அடையாள அட்டை வழங்கப்படுவது எமது பல்வேறு செயற்பாடுகளுக்கும் உறுதுணை புரிவதாக அமையும் என ஏ. எஸ். அற்புதராஜ் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பல நூற்றுக் கணக்கானோர் மாற்றுத் திறனாளிகளாக எமது சமூகத்தில் மாறியிருக்கிறார்கள். தேசிய இனப் பிரச்சினை காரணமாகத் தோற்றம் பெற்ற இன விடுதலைப் போராட்டமே யுத்தப் பேரழிவுகளுக்குக் காரணம். இந்நிலையில் யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை முன்னேற்றும் பொது வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படாதது வேதனையான விடயம் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலயுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் தோற்றுவிக்கப்பட்டனர். இவ்வாறான மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கான பொது வேலைத்திட்டமொன்றில் ஈடுபட வேண்டிய தேவைப்பாடும், கடப்பாடும் அரசாங்கத்திற்குண்டு.
உடல் வலுமிக்கவர்கள் ஏதோவொரு வகையில் தங்களுக்கான வருமானத்தை ஈட்டக் கூடியவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட வேலைத் திட்டங்களை நாம் வழங்க வேண்டும்.
யாழ். விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் என்னுடன் கலந்துரையாடும் போது ஐந்து திட்டங்களை முன்வைத்திருந்தார். அந்த ஐந்து திட்டங்களும் ஆழமான சிந்தனைக்குட்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள். அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய தேவையிருக்கிறது. இவற்றில் மூன்று திட்டங்களை வடமாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் உதவியுடன் இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவாய்ப்புக் காணப்படுகின்றது.
பல அமைப்புக்கள் தோற்றம் பெறாமல் வடமாகாணம் தழுவிய முழுமையான அங்கத்துவத்தைக் கொண்டதொரு அமைப்பின் ஊடாக பல விடயங்களைச் செய்யக் கூடியதாக விருக்கும். புதிது புதிதாக அமைப்புக்கள் தோற்றம் பெறுவதை விட ஏற்கனவேயுள்ள அமைப்புக்களை வளப்படுத்துவது தான் இலகுவானது. மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் நாம் அறிந்து வைத்திருப்பதுடன் உணர்ந்துமுள்ளோம் என்றார் அமைச்சர்.
தொகுப்பு: செல்வநாயகம் ரவிசாந்
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-
Post a Comment