பிடலை வாழவைத்த முருங்கை; அதன் பயனை உணர்வார்களா எம் மக்கள்?
சாதாரணமாக ஒவ்வொருவர் வீட்டுக் கோடிகளிலும், வெறும் காணிகளிலும் முருங்கை மரத்தை நாட்டி வைத்திருப்போம். அதன் மூலம் ஆகக் கூடிய பயன்களாக நாம் முருங்கைக்காய் கறியையும், இலை வறையையும் தான் செய்து நாங்கள் சாப்பிட்டிருப்போம். ஆசியாவிலிருந்து உலகெங்கும் பயணிக்கும் முருங்கையை இலவசமாக பெறும் நம் மக்கள் அதன் பெறுமதியை உணராமை தான் வேதனையளிக்கிறது.
இதனை எல்லாம் தாண்டி முருங்கை மரத்தின் சகல பகுதிகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மருத்துவ பொக்கிஷத்தை எங்கள் கோடிகளில் வைத்துக் கொண்டு அதன் முழுமையான பயன்களை நாம் அறியாது இருப்பது தான் வேதனையானது. எத்தனையோ நோய்களுக்கு முருங்கை சிறந்த தீர்வைக் கொடுக்கிறது.
பிடல் காஸ்ரோவை நோயிலிருந்து காப்பாற்றிய முருங்கை
மறைந்த கியூபத் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு பிடல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்து வந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ உரையாற்றியுள்ளார். அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை மரத்தை வளர்க்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குக் காரணம் முருங்கை இலையில் பொதிந்து கிடக்கும் 46 வகையான எதிர் ஆக்சிகரணிகள் (Anti oxidant), 36 தாபிதங்களை (காய்ச்சல்) நீக்கும் வேதி பொருட்கள், வைட்டமின்கள், 18 வகை அமினோஅமிலங்கள், கனிம உப்புகள் ஆகியவையே.
வறுமை செல்வம் என்று பார்க்காமல் கண்ணில் தென்படும் உயிரை எல்லாம் காப்பாற்றியது முருங்கை. முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும். ஆங்கிலத்திலும்கூட, தமிழ் பெயராலேயே அழைக்கப்படும் சிறப்பையும் கொண்டிருக்கிறது.
காஸ்ட்ரோ மட்டுமில்லை, முருங்கையால் உலக நாடுகள் பெற்ற பயன்கள் ஏராளம். உலகில் மிகவும் வறுமையான நாடுகள் பட்டியலில் உள்ளது ஹையிட்டி. அங்கு 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2012 இல் ஏற்பட்ட கடுமையான சூறாவளியால் அந்நாடு மோசமான வறுமையின் பிடியில் தள்ளப்பட்டது. பச்சிளங் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிக்கு உள்ளானார்கள். கடைசியில் முருங்கை இலைப்பொடியை தொடர்ந்து உட்கொண்டதால், அந்நாட்டு மக்கள் உயிர் பிழைத்தார்கள். இதனால் ஹையிட்டி அரசு ஒவ்வோர் ஆண்டும் யூன் 5-ம் தேதியைத் தேசிய முருங்கை நாளாகக் கொண்டாடி வருகிறது.
1997-ம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் சேர்ச் ஓஃப் வேர்ல்ட் சேர்வீஸ் நிறுவனம் முருங்கையிலை மாவை உணவாக வழங்கியபோது, அவர்கள் ஆரோக்கியம் பெற்றார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தினமும் ஆறு மேசைக்கரண்டி முருங்கை இலைப்பொடியை வழங்கியபோது, அவர்களும் ஆரோக்கியமான நிலையை அடைந்தார்கள். இது தொடர்பாக Lowell J Fugile என்பவர் ஆய்வு மேற்கொண்டு முருங்கையைப் பற்றி 'The miracle tree; The multiple attribites of Moringa' என்று விரிவான நூலையே எழுதியுள்ளார். இந்த ஆய்வில் பல விஷயங்கள் தெரியவந்தன.
செனகல் நாட்டில் ‘முருங்கை மருத்துவர்’ என்றும், ‘அது இருந்தால் மரணம் இல்லை’ என்றும் சொல்கிறார்கள். இந்தப் பெருமைகள் அனைத்தையும் உடைய முருங்கையின் பயன்களை நாம் உரிய வகையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரப்பதம் – 75.9மூ
புரதம் – 6.7மூ
கொழுப்பு – 1.7மூ
தாதுக்கள் – 2.3மூ
இழைப்பண்டம் – 0.9மூ
கார்போஹைட்ரேட்கள் – 12.5மூ
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் – 440 மி.கி
பொஸ்பரஸ் – 70 மி.கி
அயம் – 7 மி.கி
வைட்டமின் சி -220 மி.கி
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்
நோய் தீர்க்கும் முருங்கை
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை இலையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் இலை.
சத்து நிறைந்த முருங்கைக் காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு பத்தியத்தில் முதலிடம் வகிப்பது முருங்கைக் காயாகும். பாலூட்டும் தாய்மார் முருங்கை இலையை நன்றாக சாப்பிடுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்துவது அனைவரும் அறிந்ததே. இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளது. முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், இரத்த சுத்தி ஏற்படும். எலும்புகளையும் வலுப்படுத்தும்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும் தன்மை இதற்கு உண்டு.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்காய் கை கண்ட மருந்து.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல சத்து மருந்துகள் செய்ய பயன்படுகிறது. இளநரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் முருங்கை இலைக்கு உண்டு என்கிறார்கள் சித்த வைத்தியர்கள்.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து எண்ணெய் தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.
மணிகண்டன்
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-
Post a Comment