வெகுஜன அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மாற்றுத் தலைமையும்





எமது நீண்டபோராட்ட வரலாற்றில் வெகுஜன அமைப்புக்களின் பாத்திரம் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய காலத்தில் தொழிற்சங்கங்களாகவும் பல்வேறு கட்சிகளின் முன்னணி அமைப்புக்களாகவும் வெகுஜன அமைப்புக்கள் இருந்து வந்தன.  ஆயுதப் போராட்ட காலங்களில் பல வெகுஜன அமைப்புக்கள் ஆயுதக்குழுக்களின் தொடர்ச்சியாகவும் அவற்றின் ஆளுமைக்குட்பட்டவையாகவும் இருந்து வந்துள்ளன. அதேவேளை, மிகச் சொற்பமான வெகுஜன அமைப்புக்களை சுயாதீனமாகவும் இயங்கியும் வந்தன. ஆயுதப் போராட்ட காலங்களில் வெகுஜன அமைப்புக்களின் பாத்திரங்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமையானது எமது நீண்டகாலப் போராட்டத்தை வலுப்படுத்த தவறியது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கபட்ட பின்னர் எமது சமூகத்தில் காணப்பட்ட உடனடியான தேவைகள் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி பல அமைப்புக்கள் தோற்றம் பெற்றன.  எமது மிக நீண்ட தேசியப் போராட்டத்தில் மக்கள் மீண்டும் தன்னியல்பாக இவ்வாறான அமைப்புக்களை தோற்றுவிப்பதானது ஒரு வகையில் எமது கடந்த காலப் போராட்டத்தின் வறட்சியை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அதேவேளை, மக்களே அனைத்துப் போராட்டத்தின் அடிப்படை இயங்கு சக்தி என்பதனை மீளவும் நிரூபித்து நிற்கின்றது. இது வரவேற்கப்பட வேண்டியது.  இவ்வாறான மக்கள் அமைப்புக்களில் சில தொழிற்சங்கங்களாக தமது மக்களின் தொழில்சார் பிரச்சனைகளைக் கையாள்வதில் கவனம் செலுத்துகின்றன. மேலும் சில கிராம ரீதியான அமைப்புக்களாக உருவாகி தமது கிராம முன்னேற்றத்தை முன்னெடுக்கின்றன.  மேலும் சில அமைப்புகள் தொண்டு நிறுவனங்களாக தம்மை வடிவமைத்து செயலாற்றி வருகின்றன. அத்தோடு சில மதங்கள் சார்ந்த அமைப்புக்களும் தோற்றம் பெற்றன.   மேலும் சில அமைப்புக்கள் மக்களின் அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஒரு வெகுஜன திரள்ச்சியை நோக்கி செயற்பட்டு வருகின்றன.  இவற்றுள் குறிப்பிடக் கூடியவை தமிழ் சிவில் சமூக அமையமும் தமிழ் மக்கள் பேரவையுமாகும்.

தமிழ் சிவில்  சமூக அமையம் வடக்கு கிழக்கில் வாழும் சமூக ஆர்வலர்களால் 2010 இல் ஆரம்பிக்கப்பட்டது.  போரின் பின்னர் எமது மக்கள் படும் துயரங்களை இலங்கை அரசுக்கும் உலகிற்கும் எடுத்துச் சொல்வது இதன் பிரதான நோக்கமாக இருந்தது.  இத்துயரங்களுக்கு தீர்வாக எமது மக்கள் வேண்டி நிற்பது என்ன என்பது தொடர்பாக ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முனைந்து செயற்பட்டு வருகிறது.  அதனைச் சுற்றி சாதாரண மக்களை அணி திரட்டவும் அதற்காகப் போராடவும் இவ்வமைப்பு முயற்சிக்கின்றது.  போரிற்குப் பின்னால் நிலவிய இராணுவ அடக்கு முறைக்காலத்தில் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய சமூக ஆர்வலர்களைக் கொண்ட அமைப்பாக இருப்பதனால் சாதாரண மக்கள் மத்தியில் இதன் வீச்சும் பங்களிப்பும் ஒரு வகையில் மட்டுப்பட்டதாகவே இருந்தது.

 2015 ஆம் ஆண்டு புதிய ஆட்சி தெற்கில் அமைந்தது. அதனையடுத்து இனப்பிரச்சனைக்குத் தீர்வாக புதிய யாப்பு உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.  இவ்வேளையில் இனப்பிரச்சனைக்கான தீர்வில் தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன என்பதை வலியுறுத்தும் பிரதான நோக்கத்துடன் தமிழ் மக்கள் பேரவை 2016 ஆம் ஆண்டு உதயமானது.  தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் ஆர்வலர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சேர்ந்து இதனை ஆரம்பித்தனர்.  ஆரம்பம் முதல் கொண்டு இவ்வமைப்பு எந்தவகையிலும் அரசியல் கட்சியாக அல்லாமல் மக்கள் அமைப்பாக செயலாற்றும் என்கிற உடன்பாட்டுடன் இயங்கி வருகின்றது.

சம காலத்தில் இயங்கி வந்த தமிழ் சிவில் சமூக அமையமும், தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழ்மக்களுக்கான நிலையான அரசியல்தீர்வைக் கோரி இணைந்து செயற்பட்டு வருகின்றன.  இவை தமிழ்மக்களின் அரசியல்தீர்வு தொடர்பாக கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பல கவனஈர்ப்பு போராட்டங்களையும் எழுச்சிகளையும் நிகழ்த்தின.

தமிழ் மக்கள் பேரவையில் பல மக்கள் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. அத்தோடு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பல துறை சார்ந்த புத்தியீவிகளும் இதனுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர். எனினும் கட்சிகளின் செயற்பாடுகளும் ஒன்றோடு ஒன்று எவ்வாறு உறவுகளைப் பேணிக்கொள்ளும் என்று தெளிவான வரையறைகளைக் கொண்ட ஒரு யாப்பை தமிழ் மக்கள் பேரவை உருவாக்கவில்லை.

அடிப்படையில் ஒரு வெகுஜன அமைப்பானது சமூகத்தில் இருக்கக் கூடிய சமூக சக்திகளை கொண்டதாக அமைய வேண்டும். இதில் குறிப்பாக ஈழத்தமிழர் மத்தியில் இருந்து வரக் கூடிய சாதியம், பிரதேசவாதம், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மதவாதம் போன்ற விடயங்களை ஒரு நீண்ட நோக்கில் எதிர்கொள்ளக் கூடிய திட்டமிடல் இருக்க வேண்டும்.  இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தமிழ்மக்கள் பேரவை சரியான திட்டமிடல்களை செய்கின்றதா என்பதில் கேள்வியே எஞ்சி நிற்கிறது. 

தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் உரையாடல்களை நடத்தி அவர்களது கருத்துக்களைக் கேட்டு அவை தொடர்பான விவாதங்களை நடத்தி ஒரு தொலைநோக்குள்ள தேசிய நலன் சார்ந்த ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுவே இவ்வமைப்பின் செயற்பாட்டு எல்லையுமாகும்.  அதை மீறி ஒரு கட்சியாகவோ அல்லது நேரடியாக ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு அமைப்பாகவோ அது மாறுமிடத்து அது தன் இருப்பிற்கான நியாயத்தன்மையை இழந்துவிடும். மாறாக தமிழ்பேசும் மக்களின் நியாயமான அரசியல், சமூக, பொருளாதார  கோரிக்கைகளை அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்கின்ற சரியான சக்திகளை அடையாளம் கண்டு ஆதரிக்குமாறு கோரலாம்.

வெகுஜன அமைப்புக்கள் கட்சி சார்ந்தோ குழுசார்ந்தோ இருப்பது ஏனைய நாடுகளுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். ஆயுதக் குழுக்களையே சாதியுடனும் பிதேசத்துடனும் அடையாளப்படுத்திய வரலாற்றைக் கொண்ட சமூகச் சூழலில் தோற்றம் பெறும் வெகுஜன அமைப்புக்கள் தமது செயற்பாட்டு எல்லைகளை சரிவர வகுத்து கொள்வது முக்கியம்.

 அதேவேளை வெகுஜன அமைப்புக்களில் இணைந்துள்ள கட்சிகளும் குழுக்களும் வெகுஜன அமைப்புக்களின் தனித்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக வெகுஜன அமைப்பின் செயற்பாட்டு எல்லையை மீறிய எதிர்பார்ப்பு  அதன் அழிவிற்கே வித்திடும்.  வெகுஜன இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் அல்ல.  அவை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வைப் பெற்றுத் தரப் போவதில்லை. அவை ஒரு கருத்துருவாக்கத்துக்கும் அதனைச் சூழ மக்களைத் திரட்டுவதற்கு மட்டுமே பயன்படும். அக்கருத்துருவாக்கத்தால் எட்டப்படும்  தீர்வுக்காகப் போராட வேண்டியது அரசியல் கட்சிகளே.

பொதுவாக வெகுஜன அமைப்புக்களில் கூட்டுத் தலைமை காணப்படும்.  அரசியல் கட்சிகளில் தனிமனித ஆளுமைகளே தலைமையில் செல்வாக்குச் செலுத்தும்.  இதனையே ஈழத்தமிழர் போராட்டவரலாற்றிலும் காணலாம். அந்த வகையில் ஈழத்தமிழர் போராட்டத்தில் மக்கள் வேண்டி நிற்பது என்ன என்பதையும் அதை அடைவதற்காக செயற்படுத்தப்படக்கூடிய தொலைநோக்கு திட்டம் என்ன என்பதையும் கொண்ட ஒரு கருத்துருவாக்கத்துக்கு வெகுஜன அமைப்புக்களும் அக்கருத்தை முன்வைத்து போராட்ட வடிவங்களைத் தீர்மானித்து அதனை வென்றெடுப்பதற்கு கட்சிகளும் இருப்பதே நம் சூழலுக்கு அமைவானதாகும். குறிப்பாக முள்ளிவாய்க்காலின் பின்னரான இன்றைய நிலையிலும் மக்கள் அமைப்புக்கள் சுயாதீனமானவையாக பலம் பெற வேண்டும். இதுவே அனைத்துக்குமான முன் நிபந்தனையாக அமைகின்றது.

இந்த வகையில் எமது போராட்ட சூழலில் வெகுஜன அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும்  தமது செயற்பாட்டு வெளிகளை தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். அவை தனியாகவும் அவசியமானவற்றில் இணைந்தும் செயற்படுவதாக அமைவதே உகந்தது. ஆனால் தமிழ் மக்கள் பேரவையினதும் அதில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளினதும் செயற்பாடுகள் இக்கோட்பாட்டுக்கு எதிரானவையாகவே அமைகின்றன. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பத்திலிருந்தே திட்டமிடலிலும் செயற்பாட்டிலும் இவ்வரையறைகளை உருவாக்காமை அரசியல் கட்சிகளிடம் அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியமைக்கான காரணங்களாக அமைகின்றன. 

இதன் ஒரு அங்கமே தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்கள் பேரவையை ஓர் எதிர்க்கட்சியாகப் பார்க்க முற்பட்டமையாகும். தமிழ் மக்கள் பேரவையின் கருத்துருவாக்கம் தனது எதிர்க்கட்சிகளைப் பலப்படுத்துகிறது என தமிழ் அரசுக் கட்சி அஞ்சுகிறது. தாம் செய்ய நினைக்கும் இணக்க அரசியலுக்கு அக்கருத்துருவாக்கம் இடையூறு ஏற்படுத்துகிறது என எண்ணுகிறது.  மறுபக்கத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவக் கட்சிகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலான நீண்ட காலத் திட்டமிடல் இல்லாது இருக்கின்றன. வெறுமனே தமிழரசுக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க தமிழ் மக்கள் பேரவையை பயன்படுத்தலாமென எண்ணுகின்றன.

இவ்வாறாக தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் விடயங்களை முன்வைத்து தோற்றம் பெறும் வெகுஜன அமைப்புக்களும், இயங்கி வரும் அரசியல் கட்சிகளும் ஒரு தேசமாக சிந்திக்க வேண்டிய விடயங்களை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிந்திக்கவும் செயற்படவும் முனைவதைக் காண்கிறோம். இவ்வாறான நடவடிக்கைகள் உருப்பெற்று வந்த மக்கள் அமைப்பின் திரட்சியை பலவீனப்படுத்துவதுடன் மீண்டும் ஒரு தேசமாக பலம் பெறாமல் எம்மை நாமே சிதைப்பதாக அமையும். இது எமது கடந்த கால தியாகம் நிறைந்த போராட்டத்தின் அடைவுகளை பலப்படுத்துவதற்கு மாறாக பலவீனப்படுத்தவே செய்யும்

 மேற்சொன்ன நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அமைந்ததே கடந்த கார்த்திகை மாதம் நடந்த நிகழ்வுகள். நடக்கவிருக்கும்உள்ளுராட்சி  தேர்தலை எதிர்கொள்வதில் தமிழ் மக்கள் பேரவையினுள் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள்  தாம் உருவாக்கும் கூட்டுக்கு தமிழ்மக்கள் பேரவை நேரடியாக ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டப் பயணத்தில் தமது பாத்திரம் என்ன, பலம் என்ன, தமது செயற்பாட்டு எல்லை என்ன என்பவை பற்றித் தமிழ் மக்கள் பேரவை தெளிவைக் கொண்டிருக்கவில்லை.  ஒரு வெகுஜன அமைப்பைத் தமது அரசியல் இலக்குகளுக்காக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தெளிவு கட்சியினருக்கு இருக்கவில்லை.  இறுதியில் எல்லாத் தரப்பினருமே தம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டனர்.

மாற்றுத்தலைமை வேண்டும் எனக் கோரியபோதிலும்   உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பு வரும் வரை ஈ.பி.ஆர்.எல்.எவ்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியிருக்கவில்லை.  தேர்தல் வந்தவுடன் மட்டும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளான  தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம்   இணைந்து மாற்று அரசியல் கூட்டை  உருவாக்க முயற்சித்தனர். அடிப்படையில் எமது தேச அரசியலில் மாற்றுத்தலைமையை உருவாக்க முற்பட்ட இக்கட்சிகள் வெறுமனே தேர்தல் என்றவுடன் மட்டும் கூட்டுருவாக்கத்தை ஏற்படுத்த முனைந்தமை தற்செயலல்ல. மாறாக அரசியல் தலைமைகள் என்று சொல்லக் கூடியவர்களின் அரசியல் வறுமையே காரணம். தேசத்தின் விலைமதிப்பற்ற வளங்களை இழந்து உருவாக்கிய எமது தேச அரசியலை மலினப்படுத்தும் செயற்பாடாக இது அமைந்தது. 

மாகாண சபைத் தேர்தலில் நீதியரசர் விக்னேஸ்வரனை களமிறக்கிய தமிழ் அரசுக் கட்சி இன்று அவரை வெளியேற்ற பகீரதப் பிரயத்தனப்படுகிறது.  அதேபோல் இன்று தேர்தலை மட்டும் முன்வைத்து மாற்றுத்தலைமையை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் தமிழ் மக்களை மேலும் பிளவு படுத்துவதிலேயே கொண்டுவந்து விட்டுள்ளன.  மொத்தத்தில் தேர்தலை மட்டும் முன் வைத்து எந்தவிதமான தொலைநோக்கு அரசியற் பார்வையின்றி ஏற்படுத்தப்படும் கூட்டுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுத் தரப்போவதில்லை. இவை தமிழ்மக்களை மேலும் மேலும் குழப்பி பிளவுபடுத்தி விரக்தியடையவே செய்யும்.

இந்த நடவடிக்கைகளில் பங்காளியாக இணைந்ததன் மூலம் தமிழ் மக்கள் பேரவை தன்னுடைய இருப்புக்கான நியாயத்தன்மையில் பலமிழந்து விட்டது.  இந்நிலை மீண்டும் ஈழத்தமிழர் போராட்டத்தில் வெகுஜன அமைப்புக்கள் மற்றும்  அரசியல் கட்சிகள் தொடர்பிலான முழுமையான புரிதலை வேண்டி நிற்கிறது.

அரசியல் யாப்பு உருவாக்கப்படும் ஒரு மிக முக்கியமான  காலகட்டம் இது. இச்சூழலில் இவ்வாறாக மக்களை மேலும் பிளவுபடுத்துவதும் விரக்தியடையச் செய்வதுமான நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஆரோக்கியமானதாக அமையாது. மேலும் உள்ளுராட்சித் தேர்தலை சந்திப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டின் பெயரான தமிழ்த் தேசியப் பேரவை மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கக் கூடும். தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய பேரவை போன்ற சொற்பதங்களுக்கிடையிலுள்ள குழப்பத்தைத் தெளிவிக்க போதிய காலமெடுத்து போதிய விளக்கத்துடன் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படாதிருக்கும் வரை  தமிழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கைச்  சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத நிலை நிலவக் கூடும்.

ஆக இன்று உருவாக்கப்பட்டிருக்கும் இச்சூழலுக்கான, குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையை வலுவிழக்கச் செய்வதற்கான பொறுப்பை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள்  பொறுப்பேற்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவை போன்ற வெகுஜன அமைப்பின் உள்ளே அரசியல் கட்சிகள் மற்றும் அதனுடனான வேலைத்திட்டங்கள் தொடர்பான உரிய பொறிமுறைகளை உருவாக்கத் தவறிய தமிழ் மக்கள் பேரவையினரும் இவ்விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. 

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை செயற்பாட்டு ரீதியில் முதன்மைப்படுத்த வேண்டிய அரசியல் யாப்பு விடயத்தில் தான்  முன்வைத்த உத்தேச தீர்வுத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பரந்துபட்ட விவாதங்களை தொடர்ச்சியாக நடாத்த வேண்டும். உத்தேசத் தீர்வுத்திட்டத்துக்கும் அரசு வெளியிட்ட இடைக்கால அறிக்கைக்கும் உள்ள முரண்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.  இவை தொடர்பாக ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தி இறுதி நகலைத் தயார் செய்ய வேண்டும். அடுத்து அந்த உத்தேச தீர்வுத்திட்டத்தை முன்வைத்து அரசியல் கட்சிகள் தமது செயற்திட்டங்களை வகுத்து அதனை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அரசியல் கட்சிகள் வழிதவறும் பட்சத்தில்  வெகுஜனங்களின் ஆதரவை தமிழ் மக்கள் பேரவை திரட்டி அவர்களின் கோரிக்கையை கட்சிகளுக்கு தெளிவுபடுத்த   வேண்டும்.

இன்று எம் மக்கள் எதிர்நோக்கியுள்ள மிக சிக்கலான சூழலில் மாற்றுத்தலைமை தொடர்பாக சிந்திப்பதும் செயற்படுவதும் என்பது மிகவும் பொறுப்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கொடுத்த ஆணையைப் புறக்கணித்து இன்று அது இணக்க அரசியலை நடத்துகிறது.  கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு தலைமை உருவாக வேண்டும் என பலகாலமாக தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவக்கட்சிகளிடமிருந்து பலமான கோசங்கள் எழுந்து வந்துள்ளன.  அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியல் சரிவராது என்பதை சரியாக உய்த்துணர்ந்து அதற்கு மாற்றாக தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்து பல அறிக்கைகளை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டார்.  பல செயற்பாடுகளையும் மாகாண சபையினூடாக முன்னெடுத்தார். இதனால் இவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

 மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் செயல்முறைப் போக்கில் முதல்வர் விக்கினேஸ்வரன் போன்ற வசீகரம் கொண்டவர்கள் பலமாக அமைவார்கள். மாற்றுத் தலைமைக்கு தலைமை தாங்கும் படி முதல்வர் விக்னேஸ்வரனை தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ கட்சிகள் வலிந்து அழைத்தன. தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ அரசியல் கட்சிகள் மாற்றுத்தலைமைக்கான கட்டுமானங்கள் வேலைத்திட்டங்கள் என்பற்றை முறையாக முன்வைக்கவில்லை. பேரவையில் அங்கம் வகித்த அமைப்புக்கள் புத்தியீவிகளிடமும் ஒரு வெகுஜன அமைப்புக்கு அவசியமான கட்டுமானங்கள் வேலைத்திட்டங்கள் என்பன முன்வைக்கப்படவில்லை. இவை அனைத்தையுமே ஒரு மாற்றுத்தலைமையூடாக குறுக்குவழியில் அமைத்துவிடலாம் என்ற சிந்தனைப் போக்கின் விளைவுகளாகவே இந்த நிகழ்வுகள் அமைந்தன.

போதிய அரசியல் முன்னனுபவம் இல்லாத நிலையிலும் பல சவால்களுக்கும் மத்தியில் வடமாகாண முதலமைச்சராக  தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் தனது பலத்தையும் பலவீனத்தையும் நன்றாகப் புரிந்து கொண்டவராவார். முதலமைச்சரான பின்னர் கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் பெற்றுக் கொண்ட அரசியல் அனுபவங்களினூடாக தமிழர் அரசியல் தளத்தில் தனது செயற்பாட்டு எல்லைகளை நன்கு விளங்கிக் கொண்டவர்.  தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளக முரண்பாடுகள் இவருக்குப் பல சவால்களாக இருக்கின்றன.

மாற்றுத்தலைமை வழங்க வேண்டிய இக்கட்டான தருணத்தில் முதுகெலும்பில்லாமல் தமிழ் மக்களை கைவிட்டு விட்டார் என்ற கேலியும் குற்றச்சாட்டும் அவர்மீது உள்ளன. இவ்வாறான ஒரு சிக்கலான நிலையில் அவரை மாற்றுத் தலைமையை ஏற்கும்படி அழைத்த கட்சிகளே தேர்தலை முன்னிட்டு தம்முள்ளேயே சண்டைபிடித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையைப் பார்க்கும் போது அவர் அன்று எடுத்த முடிவு சரி என்றே எண்ணத்தோன்றுகிறது.

இவற்றையெல்லாம் விட முக்கியமான யதார்த்தத்தை தமிழ் மக்கள் பேரவை போன்ற வெகுஜன  அமைப்போ தமிழ் மக்களின் அடிப்படை அரசியலை தொடர்ந்து பேசி வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகளோ புரிந்து கொள்ளத்தவறிவிட்டன.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் நலன்களிலிருந்து விலகி இணக்க அரசியலுக்கு உடன்பட்ட காலத்திலேயே மாற்றுத்தலைமைக்கான களம் உருவாகிவிட்டதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் காணிவிடுவிப்புக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தன்னெழுச்சியுடன் போராடும் மக்கள் மத்தியிலிருந்தே இந்த மாற்றத்தலைமை வரமுடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

பல்வேறு அரசியல் கட்சிகளும் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைக@டாக நமது பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றன.  அம்முயற்சிக்கு பலம் சேர்ப்பதற்காக தேர்தல்களில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றுவதை நோக்கி தமது அரசியலை நடத்துகின்றன.  ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பதும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு பலமளிப்பதும் மேற்குறித்த போராடும் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களே.  இந்த மக்களின் போராட்டங்கள் இடைவிடாது இன்றும் தொடர்வதாலேயே  எமது பிரச்சனையானது  யுத்தத்தின் பின்னும் தீர்க்கப்படவில்லை என்று சர்வதேச முற்போக்கு சக்திகளுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.  தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தார்மீக பலமாக இருப்பது இப்போராட்டங்களே. ஆகவே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் நமது போராட்டத்தை இன்னொரு வடிவில் முன்னெடுத்துச் செல்லும் இம்மக்களுடன் இணைந்து ஒரு அரசியல்கட்சியானது மாற்றுத்தலைமையொன்றை உருவாக்கியிருக்க முடியும்.

இம்மக்களே போர்க்குணம் கொண்டவர்களாகவும் தியாகத்துக்கு தயங்காதவர்களாகவும் உள்ளனர்.  ஆனால், தேர்தல் கூட்டுக்களுக்காக மட்டும் நள்ளிரவுகளைக் கடந்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் பரபரப்பாக இயங்குவதனைக் கடந்த ஒரு மாதமாக பார்த்து வருகிறோம். ஒரு சாதாரண தேர்தலை எதிர்கொள்ள தனது ஒட்டுமொத்த வளங்களையும், ஆற்றல்களையும்  ஒருமுகப்படுத்தும் தமிழ் அரசியல்கட்சிகளால் மக்கள் போராட்டங்களை  ஏன் சரியாக ஒழுங்கமைக்க முடியவில்லை? குறைந்த பட்சம்   மக்கள் ஒழுங்கமைக்கும் போராட்டங்களுக்கு கூட போதிய ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை. ஜனநாயக ரீதியிலான தமது போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அரசியல் கட்சிகளை தமது தலைமையாக இம்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கம் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும் அவர்கள் ஒரே பார்வையையே கொண்டிருக்கிறார்கள்.  எனவேதான் அரசாங்கத்துடனும் கூட்டமைப்புடன் ஒரே பாணியிலேயே அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.  அதேவேளை தேர்தல் காலங்களில் மட்டும் தம்மை நோக்கிவரும் அரசியல் தலைமைகள் தொடர்பான கண்டனங்களை பல்வேறு  வழிகளிலும் வெளியிட்டு வருகிறார்கள்.

நடந்து முடிந்த மாவீரர்தின அஞ்சலி நிகழ்வுகளில் எம்மக்களின் மீள் எழுச்சியினூடாக அவர்கள் மாற்றுத் தலைமை ஒன்றை வேண்டி நிற்பதை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.   மக்கள் தாமாகவே ஒழுங்கமைப்புக்களை ஏற்படுத்தி அதி உன்னதமான தியாகங்களைச் செய்த குடும்பங்களின் உறுப்பினர்களை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தினர்.  இந்நிகழ்வுகளில் அரசியல் கட்சிகள் அனுசரணைப் பாத்திரத்தை வகித்தமையை தெளிவாக கண்டோம். இவ்வனுசரணை கூட வாக்கு கேட்கும் நோக்கத்திலேயே வழங்கப்படுகின்றது என்பதை இம்மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை.

 தமிழ் மக்கள் பேரவை எமது மக்களின் அரசியல் போராட்டப் பயணத்தில் ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்க நினைத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் காணிவிடுவிப்புக்காகவும் போராடும் மக்களை ஒருங்கிணைத்து ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். அவர்களினது போராட்ட சக்திகளையும் வளங்களையும் ஒன்றிணைக்கவும் பயன்படுத்தவும் கூடியதான ஒரு கருத்துருவாக்கத்தை வழங்க வேண்டும்.  அவர்களின் பின்னால் ஏனைய பரந்துபட்ட மக்கள் அணிதிரள உதவ வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.  தமிழ் மக்கள் பேரவை இந்நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குமென எதிர்பார்ப்போம். இப்போராடும் மக்கள் தமது வளங்களை ஒருமுகப்படுத்தி ஒரு அமைப்பாக ஒன்றிணைவார்கள் என எதிர்பார்ப்போம். ஏனைய பரந்துபட்ட தமிழ் மக்களைத் தங்களது போராட்டத்தில் இணைப்பதில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்ப்போம். காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்கான போராட்டம், அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டம், மற்றும் காணிமீட்புப் போராட்டம் என்பவற்றை உள்ளடக்கி எமது மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஒருமுகப்பட்ட ஒரு கருத்துருவாக்கம் இதனூடக நிகழ வேண்டும் என கோரிக்கை விடுப்போம்.

அதேவேளை அரசியல் கட்சிகள் தேர்தல் இலாபங்களை மட்டும் மையப்படுத்தும் அரசியலை விடுத்து எம்மக்களின் அன்றாடப் போராட்டங்களில் அரசியல் போராட்டங்களிலும் தொடர்ச்சியாகப் பங்கு பற்ற வேண்டும்.  மக்களே தன்னியல்பாக எழுந்து வரும் இன்றைய நிலையில் இப்போராட்டங்களுக்கு தலைமைப் பாத்திரத்தை ஏற்க முன்வர வேண்டும். அத்துடன் இப்போராட்டங்களுக்கு கோட்பாட்டுரீதியாகவும், மக்கள் நலனை முன்னிறுத்தும் பண்புகளைக் கொண்ட தலைமையாக அரசியல் கட்சிகள் வளர வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம்.

நிமிர்வின் பார்வை
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.