இடைக்கால அறிக்கையால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்?
யாழ்.நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் ஆறு பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து “இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களும்” எனும் அரசியல் கருத்தாடல் அரங்கை 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடாத்தின. அதில் பங்கேற்று கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் ஆற்றிய உரையே இது.
சிலர் உங்களுடைய காதுகளில் பூ வைக்கிறார்கள். சிலர் தமிழ் சமூகத்தில் அறிவுஜீவிகள் இல்லை என்கிற மன நிலையோடு பேசுகிறார்கள். சிலர் நீங்கள் ஒரு முறை முழுமையாக வாசித்துவிட்டு பேசுங்கள் என்கிறார்கள். நான் இந்த அறிக்கையின் முழுமையான அம்சங்களையும் வாசித்து விட்டேன். அதில் கணிசமானவை கட்சிகள் மீண்டும் வைத்த அபிப்பிராயங்களே. இடைக்கால அறிக்கையில் சொல்லப்படுகின்ற அம்சங்களுடன் ஏனைய ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளுடைய அம்சங்களையும் சேர்த்து நாங்கள் பார்க்க வேண்டும். “இது ஒரு வரப்பிரசாதம். இதனை விட்டால் தமிழர்களுக்கு வேறு ஏதுமில்லை. இதுதான் மிகப் பெறுமதியானது. இதையும் தவறவிட்டீர்கள் என்றால் நீங்கள் எதனைப் பெறப் போகின்றீர்கள்?” என்கிற வாதம் எல்லாம் பொது வெளிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த அறிக்கைகளால் வடக்கு-கிழக்கில் வாழ்பவர்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? அல்லது இந்த அறிக்கைகளால் அவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் ஏற்படுமா? இவை பற்றி இங்கு கதைக்க விரும்புகின்றேன்.
இடைக்கால அறிக்கையை நிறைவு செய்வதற்கு சில உத்திகளை பிரயோகப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது இந்த அறிக்கை வடக்கு கிழக்குக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பொருந்தும் என சொல்கிறார்கள். சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் களத்தில் இந்த அறிக்கை அவசியம் என சொல்கிறார்கள். அதனுடைய நிறைவேற்றம் எல்லோருக்கும் தேவையானதென சொல்கிறார்கள். இது ஆட்சியாளர்களுக்கு தேவையானதாக இருக்கின்றது.
ஆலோசனை அறிக்கைகளில் உள்ள மாகாணசபை சார்ந்த விடயங்களை முதலில் பார்ப்போம். மாகாண சபையினுடைய அதிகார அளவீட்டில் மாற்றங்கள் பிரேரிக்கப் பட்டுள்ளன. ஆளுனர்களுக்கு வழங்கப்பட்ட எல்லையில்லா அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் அதற்குப் பதிலாக ஜனாதிபதியிடம் அந்த அதிகாரங்கள் இந்த வரைபினுடாக வழங்கப்படுவதைக் காணமுடிகின்றது. அதே போன்று மாகணசபை அதிகாரப்பட்டியல் மத்திய அரசாங்க அதிகாரப்பட்டியல் சார்ந்திருக்கக் கூடிய உரையாடல்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த வரைபுக்குள்ளே இவை தொடர்பான நிரல்கள் எதுவுமே தரப்படவில்லை.
வடக்கு-கிழக்கை பொறுத்தவரையில் கடல் தனித்துவமானது. கடலும் கண்டமேடைகளும் கரையோரங்களும் அது சார்ந்த பொருளாதார வலயமும் முக்கியமானது. கடலின் கரையோரப்பகுதிகளிலிருந்து ஏறக்குறை 200 கடல் மைல் தூரம் வரையான பகுதிகள் சார்ந்தும் இந்த வரைபு அதிகமான கவனம் செலுத்துகின்றது. வரைபுக்குள் இருந்து சில அம்சங்களை குறிப்பிட்டுக் காட்ட வேண்டும்.
குறிப்பாக கண்டமேடை, சுரங்கங்கள், காணிகள் ஆள்புல நீர்ப்பரப்புக்கள், சமுத்திரத்திலுள்ள கனிய வளங்கள், பிரத்தியேக பொருளாதார வலயங்கள் தொடர்பான உரிமைகள் அனைத்தும் குடியரசுக்கு உரித்துடையன என கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கரையோரம் வருகின்ற துறைமுகம் பற்றி எந்த உரையாடல்களும் இந்த வரைபில் தரப்படவில்லை. இது தொடர்பிலான உரையாடல்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை வரைந்த வரைபில் இது சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்தியிருந்தது. இவை அனைத்தும் தமிழ் மக்கள் பேரவையினுடைய வரைபிலே தமிழர்களது வடக்கு கிழக்கு மாகாண அரசிற்கு உரித்துடையவை என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டிருந்தது. அதற்கு முற்றிலும் மாறாக அவை குடியரசுக்கு உரித்துடையது என்று வரைபில் கூறப்படுகின்றது.
ஏன் நான் அதனை முதன்மைப்படுத்துகின்றேன் என்றால் இன்று ஏறக்குறைய முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்தினுடைய எல்லை வரையும் இந்திய மீனவரின் தலையீடு இருக்கிறது. அது ஒரு புறம் இருக்க பெரும்பான்மை இனத்தினுடைய தலையீட்டுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராகவும் எங்களுடைய கடல் வளங்களைப் பாதுகாத்தல் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக இந்தியாவில் இருக்கின்ற சென்னைத்துறைமுகம் அந்த மாநிலத்துக்குரித்துடையது . அதனுடைய வளங்கள் அதனுடைய வருமானங்கள் அனைத்துமே தமிழ்நாடு மாநில அரசுக்கு உரித்துடையது. மாநில அரசுக்குரிய இந்த உரிமை அரைகுறை சமஸ்டி
அடுத்து முக்கியமானது அரச காணிகள் பற்றிய விடயம். அரச காணிகளில் குடியேற்றம் என்பது ஒரு பிரதான பிரச்சனை. முதலாவது பிரச்சனை, அரச காணிகள் மத்திய அரசுக்கு உரித்துடையது என்று இடைக்கால அறிக்கை பிரேரணைகளில் தெளிவாக சொல்லப்படுகின்றது. இரண்டாவது அக்காணிகளில் குடிப்பரம்பலினுடைய அதிகாரம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பது தொடர்பில் மூன்று விடயங்கள் பிரதானமாக சொல்லப்படுகின்றன.
1. அந்தக் குடிப்பரம்பலை தீர்மானிப்பதில் அந்த பிரதேச வாழ் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்.
2.பிரதேசத்திலே காணி அற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படல்.
3. வடக்கு-கிழக்கு அப்பாற்பட்ட அல்லது அந்தந்த மாகாணங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற ஏனைய பெரும்பான்மை இனங்களுக்கு அரச காணிகளை வழங்குவதற்குரிய முடிவு எடுப்பது மத்திய அரசுக்கு உரித்துடையது.
இவற்றில் முதல் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. ஆனால் மூன்றாவது பிரேரணை வடக்கு கிழக்கு குடிப்பரம்பலில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இது ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் பறிக்கின்ற செயற்பாட்டுக்கு சிறந்ததோர் உதாரணம்.
அடுத்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை தீர்மானிப்பது தொடர்பிலான விடயத்தைப் பார்ப்போம். இதனை ஒரு அரசியல் நாடகம் என்றே சொல்லலாம். வடக்கு கிழக்கு ஒரே மாகாணமாக இருப்பதை தீர்மானிப்பதற்கு உரிய உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று இதில் சொல்லப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் பெருமளவிற்கு தமிழர்கள் அல்லாதவர்கள் இப்போது பெரும்பான்மை அல்லது சமவலுவுடையவர்களாக மாறியிருக்கிறார்கள். 2020 ற்கு பிறகு இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக மூன்றில் இரண்டு பங்கு இருப்பார்களென்று அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கில் தமிழர்களின் நீண்ட அரசியல் இருப்புக்குரிய கோரிக்கை எவ்வாறு கையாளப்படலாம் என கருத்தில் எடுக்கப்படவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பை சிக்கலுக்குரிய ஒரு விடயமாக மாற்றுவது இந்த வரைபை மேற்கொண்டவர்களின் நோக்கமாகத் தெரிகிறது.
அடுத்து அரசாங்கப் பொறிமுறை தொடர்பான பிரேரணையைப் பார்ப்போம். அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது சர்வதேச மட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற சொல்லாடல்களை பயன்படுத்துவது முக்கியமானது. “எக்கிய ராஜ்ஜிய” என்ற சொல்லே சர்வதேச சொல்லாடல் கிடையாது. இரண்டாவது சபை என்கிற விடயமும் வெறும் சபையாகவே இருக்கிறது. இந்தச்சபை நியதிச் சட்டங்களையோ அல்லது சட்டங்களையோ திருப்பி அழைக்கலாமே தவிர அதை நிராகரிக்க முடியாது என்று வரைபில் சொல்லப் பட்டுள்ளது. மாகாணத்திலிருந்து 45 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் 10 உறுப்பினர்கள் என்று 55 பேர் இச்சபையில் இருப்பார்கள். 55 பேரிலையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்குக்கு விரோதமாக இடம்பெறுகின்ற எந்த நடவடிக்கைக்கு எதிராகவும் வடக்கு கிழக்கிலிருந்து செல்கின்ற இரண்டாவது சபை உறுப்பினர்கள் எந்தத் தீர்மானமாத்தையும் எடுக்க முடியாத ஒரு நிலையுள்ளது. இதைப் பார்க்கும் போது தனிச்சிங்கள மத்திய சபையினுடைய நினைவுதான் இங்கே வருகிறது. ஆகவே அந்த அடிப்படையில் இரண்டாவது சபைக்கான பிரேரணை பெருமளவிற்கு மிக மோசமான ஒரு பலவீனம் என்றே சொல்ல வேண்டும். நான் அதிகாராப்பரவலாக்கம் செய்திருக்கிறேன். அதிகாரப்பரவலாக்கத்திற்குரிய கட்டமைப்பை இரண்டாவது சபையினூடாகத் தந்திருக்கிறேன் என்று வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம்.
கடந்த அரசியல் யாப்பு வரைபுகளில் இல்லாத ஒரு அனுபவத்தினை இந்த அரசியல் யாப்பு தந்திருக்கின்றது என்கிற ஒரு வாதம் எல்லோராலும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது 1972 லையோ 1978 லையோ இல்லாதவாறு இம்முறை எமது உள்ளீட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாகச் சொல்லப் படுகிறது. இந்த வாதங்களுக்கு ஊடாக எங்களுடைய தனித்துவம், எங்களுடைய அங்கீகாரம், எங்களுடைய விருப்பு என்பவற்றைஇல்லாமல் செய்வதற்கான ஒரு காரணியாக இந்த வரைபு அமைந்துவிடக்கூடாது.
தமிழ் சமூகத்தில் ஒரு மாறுதல் வர வேண்டும். ஒரு இலக்கை அடிப்பாதையாக கொண்டு ஒரு கட்சி, அமைப்பு, தேசிய இனம் செயற்படவேண்டிய காலப்பகுதி இது. எங்களிடம் தோடம்பழம் இருக்கிறது சுளை உனக்கு, தோல் எனக்கு என்கிற மாதிரியான உரையாடல்கள் தான் இன்று வரையும் இருக்கிறது.
நிச்சயமாக குறிப்பிடுகின்றேன் ஏக்கிய ராஜ்ஜிய என்கிற சொல்லுக்குள்ளே ஒரு சமஸ்டியுமில்லை. அல்லது சமஸ்டிக்குரிய எந்த மாயமந்திரமும் கிடையாது. அது வெறுமனவே ஒற்றையாட்சியை பலப்படுத்துகின்றது என்பதை நான் சொல்லவில்லை. அந்த அரசியல் யாப்பை வரைந்த ஜெயம்பதி விக்ரமரட்ண அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சமஸ்டி இதற்குள் இருக்கிறது என்று தென்னிலங்கைக்கு சொன்னால் அவர்கள் இந்த அரசியல் யாப்பை நிறைவு செய்ய விட மாட்டார்கள்.
அரசியல் யாப்பு வரைவிற்காக நான்கோ அல்லது ஐந்து வருடங்களோ எடுங்கள். தமிழ் மக்களின் பிரச்சனையை சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்துவதும் சிங்கள மக்களுக்கு நிலைமையைப் புரிய வைப்பதும் இந்த அரசாங்கத்தினுடையதும், ஆட்சியாளர்களினதும் பொறுப்பு.
துருவன்
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-
Post a Comment