இனப்பிரச்சினை என்றால் என்ன?


ஆறு பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து “இடைக்கால அறிக்கையும் தமிழ்மக்களும்" எனும் அரசியல் கருத்தாடல் அரங்கை 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ். நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் நடாத்தின. அதில் பங்கேற்று அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் ஆற்றிய உரையே இது,

தமிழ்மக்களின் நலன்களிலிருந்து இந்த இடைக்கால அறிக்கையை பரீட்சிக்க வேண்டும்.  அப்பரீட்சைக்கு உரிய அளவுகோள் என்ன என்ற கேள்வி முதலாவதாக வருகின்றது.  என்னைப் பொறுத்தவரையில் அதன் அளவு கோல்  தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் தான். தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை இந்த இடைக்கால அறிக்கை எந்தளவிற்கு பூர்த்தி செய்கின்றது என்பதைத்தான் உண்மையில் நாங்கள் பரிசீலிக்க வேண்டும்.

அப்பொழுது தான் எங்களுக்கு அடுத்த கேள்வி வருகின்றது. இந்த அபிலாசைகளில் அதாவது இந்த அளவு கோலில் எவை உள்ளடக்கப்பட  வேண்டும்? ஏனென்றால்  அளவுகோலின் உள்ளடக்கம் என்னவென்று தெரிந்தால் தான் பரீட்சையை முழுமையாக நடத்த முடியும்.  அதாவது இடைக்கால அறிக்கையை முழுமையாக பரிசீலிக்க முடியும்.

ஆகவே தமிழ் மக்களுடைய அபிலாசைகள் எவ்வாறு உள்ளது என்பதை முதலில் வரையறுப்போம். பின்னர் அந்த அபிலாசைகள் இந்த இடைக்கால அறிக்கையில் உள்ளதா எனப் பரிசீலிப்போம்.  ஆகவே இந்த அபிலாசைகளுடைய உள்ளடக்கம் என்னவென்று விளங்கிக் கொள்வோம். அதனூடகத்தான் நாங்கள் இனப்பிரச்சனை என்றால் என்ன என்பது பற்றிய தெளிவுகளை நாம் பெறமுடியும்.

இனப்பிரச்சனை என்றால் என்ன? பலருக்கு இது பற்றிய விளக்கம் தெரியாது.  இன்று அரசியல்வாதிகளுக்கு கூட இது பற்றிய முழுமையான விளக்கம்  இல்லை என்று தான் கூற வேண்டும்.

தமிழ் மக்கள் ஒரு தேசமாக, தேசிய இனமாக இருக்கின்றனர். அந்த தேசமாக, தேசிய இனமாக இருப்பதை அழிப்பதுதான் இனப்பிரச்சனை. ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தை தாங்குகின்ற தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றுடன் மக்கள் கூட்டத்தையும் சேர்ப்பது வழக்கம். இந்த ஐந்தும் அழிக்கப்படுவதுதான் இனப்பிரச்சனை. ஏன் அவர்கள் அழிக்கிறார்கள்? அவர்கள் நினைக்கிறார்கள் இந்த இலைங்கைத்தீவு சிங்கள பௌத்த  இனத்துக்கு மட்டும் உரியது என்று. தமிழ் மக்கள் ஒரு தேசமாக தேசிய இனமாக இருப்பது என்பது சிங்கள பௌத்த இனத்திற்கு மட்டும் இலங்கை சொந்தம் என்ற கருத்துக்கு மாறானது. ஆகவே தமிழ் மக்கள் ஒரு தேசமாக தேசிய இனமாக இருப்பதை அழிக்க வேண்டும். அப்படி அழிப்பதென்றால் அந்த தேசத்தை தேசிய இனத்தை தாங்குகின்ற தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பவற்றை அழிக்க வேண்டும். இதுதான் இனப்பிரச்சனை.

ஆகவே இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இந்த அழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதுவல்லாத  எந்த ஒரு தீர்வுமே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையமாட்டாது. இதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வை நாம் எப்படி வரையறுப்பது? கோட்பாட்டு ரீதியாகப் பார்க்கும் பொழுது நான்கு விடயங்கள் முக்கியமானவை.

தமிழ் மக்களை ஒரு தேசமாக ஒரு தேசிய இனமாக முதலில் அங்கீகரிக்க வேண்டும். தேசமாக தேசிய இனமாக அங்கீகரிக்கும் போது தான் அந்த தூண்கள் பாதுகாக்கப்படும். இவைகள் பாதுகாக்கப்படும் போதுதான் இனப்பிரச்சனையும் ஒரு தீர்வை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆகவே தமிழ் மக்களை ஒரு தேசமாக ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். அது கோட்பாட்டில் மிக முக்கியமான அம்சம்.

அந்த தேசத்திற்கும் தேசிய இனத்திற்கும் தன்னைத் தானே ஆட்சி செய்கின்ற இறைமை அதிகாரம் இருக்கின்றது. ஆகவே அந்த இறைமையை அங்கீகரிக்க வேண்டும்.

ஒரு தேசிய இனத்திற்கு இறைமை அதிகாரம் இருக்கின்றபோது அது தன்னுடைய தலைவிதியை தானே நிர்ணயிக்கக்கூடிய சுயநிர்ணய உரிமையை  பெற்றிருக்கின்றது. ஆகவே சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

தேசத்தை அங்கீகரித்து, இறைமையை அங்கீகரித்து, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தால் அந்த சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆட்சிப் பொறிமுறையை  உருவாக்கவேண்டும். அந்த ஆட்சிப் பொறிமுறை என்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

 இங்கு நாங்கள் கேட்கும் தனிநாட்டுக்கோரிக்கையை சர்வதேச சக்திகளோ, பிராந்திய சக்திகளோ அங்கீகரிக்கவில்லை. அவர்களுடைய பூகோள நலனுக்கு அது எதிரானது. சரி, நாங்கள் அதை விட்டுவிட தயாராக இருக்கின்றோம். ஆனால் இலங்கைத்தீவு என்ற அந்த அதிகாரக் கட்டமைப்புக்குள் நாங்கள் ஒரு தேசமாக தேசிய இனமாக இருப்பதற்குரிய வழிவகைகளும் ஏற்பாடுகளும் இருக்கின்றதா? அப்படி இருக்கின்ற பொழுது தான் நாங்கள் தனிநாட்டுக்கோரிக்கையை கைவிடுவதற்குரிய சூழல் உருவாகும். அந்த அடிப்படையில்தான் இலங்கை என்ற அரச அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு வரவேண்டுமென்றால் சம~;டி வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

சம~;டி என்பது ஒரு அரசினுடைய அதிகாரங்களை மத்திய அரசும் மாநில  அரசும் பங்கிட்டுக் கொள்கின்ற ஒரு ஆட்சி பொறிமுறை. அதை ஒரு தேசிய இனத்தினுடைய பார்வையில் சொல்வதென்றால் ஒரு தேசிய இனம் தனியான நலன்களை தனியாகவும், கூட்டான நலன்களை கூட்டாகவும் பார்க்கின்ற ஒரு பொறிமுறை. ஆகவே இந்த பொறிமுறையுடன் கூடிய ஒரு ஆட்சிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பதே கோட்பாட்டு ரீதியில் முக்கியமான விடயமாகும்.  இதற்கு எப்படி யாப்பு வடிவம் கொடுப்பது? யாப்பு வடிவம் கொடுக்கின்ற பொழுது என்னென்ன விடயங்கள் அதில் பிரதானமாக உள்ளடக்க வேண்டும்?  இவை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

 இந்த மாதிரியான விவகாரங்களை உலகளவில் எப்படி தீர்த்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமாத்திரமல்ல எங்களுடைய கடந்த கால அனுபவங்கள் என்ன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த அனுபவங்களிலிருந்து எப்படி நாங்கள் எங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

நான்கு விடயங்கள் பிரதானமானவை. அதில் முதலாவது விடயம், அந்த ஆட்சிப் பொறிமுறைக்கான அதிகார அலகு. இங்கே ஆட்சிப் பொறிமுறைக்கான அதிகார அலகு என்பதில் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு தாயகம் என்பதை எங்களால் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது.  தமிழ் மக்கள் தங்களுடைய கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு இந்த வடக்கு-கிழக்கு இணைந்த ஒருமைப்பாடு என்பது மிகவும் அவசியமானது. அது இல்லாமல் நாங்கள் கூட்டுரிமையையோ, கூட்டிருப்பையோ கூட்டடையாளத்தையோ பேணமுடியாது. இது மிக முக்கியமான அடிப்படையான விடயம். இது பேரம்பேசலுக்கான விடயமல்ல. இதை பேச்சு வார்த்தை மேடையிலெல்லாம் பேரம்பேசலுக்கு வைக்க முடியாது. ஏனென்றால் இவை அடிப்படை உரிமை. அடிப்படையான விடயங்களை ஒருபோதும் பேரம் பேச முடியாது. வடக்கு கிழக்கு இணைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. 

இரண்டாவது தமிழ் மக்கள் தங்களுடைய சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கக்கூடிய சுயாட்சி அதிகாரங்கள் அவர்களுக்குத் தேவை. ஏன் இந்த சுயாட்சி அதிகாரங்கள் தேவை என்றால் இரண்டு காரணங்களுக்காக எங்களுக்குத் தேவை. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் அவர்களுக்கு பிறப்பாலே அந்த உரிமை இருக்கின்றது என்பது ஒரு காரணம். 

நீண்ட கால இனஅழிப்பு காரணமாக தமிழ் மக்கள் 50 வருடம் பின் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இந்த 50 வருட இடைவெளியை நிரப்ப வேண்டுமென்றால் தமிழ் மக்களுக்கு நிறைய அதிகாரங்கள் தேவையாக இருக்கின்றது. ஆகவே சுயாட்சி அதிகாரங்கள் இல்லாமல் ஒரு போதுமே தமிழ் மக்கள் தமிழ் மக்களாக இருக்க முடியாது என்ற நிலைமை இரண்டாவது காரணம்.


இனப்பிரச்சனைத் தீர்வுக்கான யாப்புருவாக்கத்தில் மூன்றாவது முக்கியமான விடயம் கூட்டும் பகிர்வும் என்ற தத்துவம். ஒரு இலங்கை என்ற அரச அதிகாரக் கட்டமைப்புக்குள்  விவகாரங்களை கையாளுவது  என்றால்  பகிர்வு மட்டுமல்ல கூட்டிலே எங்களுக்கு எவ்வளவு பங்கிருக்கின்றது என்பது முக்கியம். அதாவது தமிழ் மக்கள் மத்திய அரசிலே ஒரு தேசிய இனமாக பங்கு கொள்வதற்குரிய வாய்ப்பும் பொறிமுறையும் இருத்தல் வேண்டும். அந்த வாய்ப்பும் பொறிமுறையும் இல்லாமல் எதுவுமே நடக்காது. மத்திய அரசை ஒரு சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்த அதிகாரப் பகிர்வை வழங்கினாலும் அது ஒரு போதுமே நடைமுறைக்கு வரப்போவதில்லை.

நான்காவது முக்கிய விடயம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பு. எங்களுக்கு இது தொடர்பான நீண்ட வரலாற்று அனுபவங்கள் இருக்கின்றன. ஒரு கையால் கொடுக்கப்பட்டு மறு கையால் பறிக்கப்பட்ட அனுபவம். இது சோல்பரி யாப்பிலுள்ள  29 ஆவது பிரிவு தொடக்கம் தமிழ் மொழி அரசகரும மொழி ஊடாக வடக்கு-கிழக்கு பிரிப்பு வரை எங்களுக்கு கிடைத்த வரலாற்று அனுபவம். அவர்கள் யாப்பிலே ஒழுங்காக எழுத மாட்டார்கள். எழுதியதை நடைமுறைப்படுத்தவும் மாட்டார்கள். அது ஒரு அரசியல் பிரச்சனையாக வந்தால் அதனை அடுத்த யாப்பின் மூலம் அல்லது நீதிமன்றத் தீர்ப்புக்களின் மூலம் அதனை இல்லாது செய்துவிடுவார்கள். இதுவே வரலாறாக இருக்கின்றது. இந்த அபாயத்திலிருந்து எப்படி எங்களை பாதுகாப்பது?. ஆகவே அந்த யாப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களைப் பாதுகாக்கும் பொறிமுறை இருக்க வேண்டும். அந்தப் பொறிமுறை இல்லாது எமக்கு எந்தவித நன்மையும் புதிய யாப்பினால் கிடைக்காது.

இந்த அடிப்படையில் இடைக்கால அறிக்கையை பார்ப்போம். கோட்பாட்டு ரீதியாக தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அங்கீகாரம் அங்கு இல்லை. தமிழ் மக்களுக்கு தேசிய இனம் என்ற வகையில் இருக்கின்ற இறைமை அங்கீகாரம் இல்லை. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை. அந்த சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய சம~;டிப் பொறிமுறை இல்லை. ஆகவே கோட்பாட்டு ரீதியாக எவையுமே இல்லை என்பதுதான் இங்கு முக்கியமான விடயம்.

கோட்பாட்டுரீதியாக ஒற்றையாட்சி அரசு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒற்றை ஆட்சி கோட்பாட்டுக்குள் ஒரு நிர்வாகப் பரவலாக்கம் செய்யப்படலாமே ஒழிய  ஒரு போதுமே அதிகாரப்பகிர்வை செய்ய முடியாது. ஒற்றையாட்சிக்கும் சம~;டி ஆட்சிக்கும் இடையில் என்ன வேறுபாடு?  ஓர் அரசினுடைய ஆட்சி செய்யும் அதிகாரம் ஒரேஒரு அரசாங்கத்திடம் வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால் அது ஒற்றையாட்சி. மாறாக ஓர் அரசினுடைய ஆட்சி செய்கின்ற அதிகாரம் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கம் என்ற இருவகை அரசாங்கங்களிடம் பகிரப்பட்டிருக்குமாக இருந்தால் அது சம~;டி ஆட்சி. ஆகவே ஒற்றையாட்சி அரசினுள் ஒரு போதுமே அதிகாரப்பகிர்வை செய்ய முடியாது.

இங்கு சொற்களால் ஏமாற்றுகின்ற முயற்சி இடைக்கால அறிக்கையில் பிரேரிக்கப்பட்டு இருக்கின்றது. சிங்களத்திலே    ஏக்கிய ராஜ்ஜிய தமிழில் ஒருமித்த நாடு.  ஏக்கிய ராஜ்ஜிய என்கிற சிங்கள சொல்லின் தமிழ் மொழி பெயர்ப்பின் உண்மையான அர்த்தம் ஒருமித்த நாடா?  இது எந்தவகையான மொழி பெயர்ப்பு?   சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற ஒரு மொழிபெயர்ப்பு.

ஓற்றையாட்சிதான் என்று சிங்கள மக்களுக்கு சொல்லப் படுகிறது. ஒருமித்த நாடு என்பதன் மூலம் சம~;டி ஆட்சி இங்கே இருக்கிறது என்று தமிழ் மக்களுக்குச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரேரணையில் தமிழ் மக்களுடைய அபிப்பிராயம் எந்த வகையிலும் கருத்துக்கு எடுக்கப்படவில்லை. வெளிப்படுத்தல் குழுவில் சம்பந்தனும் சுமந்திரனும் தான் இருந்திருக்கிறார்கள். இரண்டுபேரும் இந்த அடிப்படை விடயம் தொடர்பில் வாயே திறக்கவில்லை. வடக்கு-கிழக்கு இணைப்பு என்கிற விடயம் தொடர்பாகவோ அல்லது சம~;டி ஆட்சி முறை தொடர்பாகவோ அவர்கள் வாயே திறக்கவில்லை. தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக பின்னிணைப்புக்களில் மாத்திரம் அதனைச் சேர்த்திருக்கின்றார்கள்.

ஆனால் அது  பற்றிய உரையாடல்கள் தொடங்கியிருக்க வேண்டும். அந்த உரையாடல் எதுவுமே நடக்காத நிலைமையைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். இந்த நிலைமை மாற வேண்டுமாயின் இலங்கை அரசினுடைய கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டும். இப்பொழுது இருக்கின்ற ஒற்றைத்தன்மைக்கு பதிலாக பன்மைத் தன்மைக்கு மாற்றப்பட வேண்டும். சிங்களத் தேசியம் இலங்கைத் தேசியமாக மாற்றப்பட வேண்டும். பல்லின, பல்சமய, பல்சமூக அடையாளங்கள் அரச அதிகார கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுமே இடைக்கால அறிக்கையில் இல்லாத நிலைமையைத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

உண்மையில் அவற்றை கொண்டுவர வேண்டுமென்றால் அரச அதிகார அமைப்பு பன்மைத்தன்மையுள்ளதாக மாற்றப்பட வேண்டும். ஒற்றையாட்சி கட்டமைப்பு சிங்கள தேசத்திற்கு உரியதே தவிர பல்லினங்களுக்கு உரிய ஒன்று அல்ல. இங்கே அவரவர் மதத்தை பொறுத்தவரைகூட பல்மத தன்மை வாய்ந்த இலங்கையின் நிலைமையை மாற்றப் பிரேரிக்கப்படுகிறது.  பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் முதன்மை ஸ்தானமும்  வழங்கி அதனை பாதுகாக்க வேண்டியது அரசினுடைய கடமை என்று கூறப்படுகிறது.  சிங்கள தேசத்தில் பௌத்த மதம் அரச மதமாக இருக்கின்றதோ அல்லது முதன்மை மதமாக இருக்கின்றதோ என்பது பற்றி எமக்கு ஆட்சேபனை கிடையாது. ஆனால் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பௌத்தமதத்தை முதன்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்களுடைய தலைவர்களே கூறியிருக்கிறார்கள் என்று சொன்னால் நாங்கள் எந்த இக்கட்டான நிலையில் இருக்கின்றோம் என்று கவனிக்க வேண்டியுள்ளது.

“பௌத்தமதத்தை முதன்மை மதமாக வடக்கு-கிழக்கில் ஏற்றுக் கொள்வதற்கு எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம்”  என சுமந்திரன் நேரடியாகவே கூறியிருக்கின்றார். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் எடுத்த முடிவா? அல்லது  தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவா? இவ்வாறு முக்கியமான விடயங்கள் தொடர்பாக மேலெழுந்தவாரியாக தாங்கள் நினைத்த மாதிரி  கருத்துக்களை சொல்லக்கூடிய அதிகாரம் இங்கே இருக்கின்றதா? அப்படியாயின் மக்கள் ஆணை என்ன, மக்களுடைய அபிப்பிராயம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.

தேசியக் கொடி பல்லினக் கொடி என்கிறார்கள்.  தமிழ் மக்களை அரச அதிகாரத்திலிருந்து அகற்றுகின்ற கொடிதான் தேசியக் கொடி. ஆகவே பல்லினத்தன்மையுள்ளதாக மாற்ற வேண்டுமென்றால் தேசியக் கொடியில் எல்லா இனத்துக்குமான சமத்தவத்தை வழங்க வேண்டும். இவையெல்லாம் சிங்கள தேசத்தின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதோடு தொடர்புடைய விடயம்.  ஆனால் இதை மாற்றுவதற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை.

வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லீம் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்கிற கருத்து உண்டு.  முஸ்லிம் மக்களுடன் இது தொடர்பான முறையான உரையாடல்கள் இடம்பெற்றனவா?  முறையான உரையாடல்கள் நடைபெறாமல் அவர்களுடைய எதிர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி நீங்கள் இந்த முடிவுக்கு வர முடியும். இப்பொழுது இருக்கும் யதார்த்தத்தில் முஸ்லிம் மக்கள் வரவில்லை அவர்களுக்கு ஆர்வம் இல்லையென்று வைத்துக்கொள்வோம். அப்படியாயின் தமிழ் மக்களுக்கு இணைப்பு தேவையில்லையா? அப்படி முஸ்லிம் மக்கள் இணைப்புக்கு தயார் இல்லை என்று சொன்னால் அதற்கு மாற்றுவழி என்ன? மாற்றுவழியைப் பற்றி யோசிப்பதில்லையா?  இந்த மாற்று வழிதொடர்பான சர்வதேச அனுபவம் ஒன்றும் எங்களுக்கு இல்லையா? ஏன் நாங்கள் கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களை நிலத்தொடர்ச்சி அற்ற வகையிலாவது  வடக்குடன் இணைக்கின்ற மாற்று யோசனையை நாம் முன்வைக்க முடியாது. இந்தியாவில் பாண்டிச்சேரி மாநிலம் இருக்கின்றது. பாண்டிச்சேரியும் காரைக்காலும் தான் தமிழ்நாட்டிலே இருக்கின்றது. ஏனாம் என்ற பகுதி ஆந்திராவில்  இருக்கின்றது. மாசி என்ற பகுதி கேரளத்திலே இருக்கின்றது. நான்கு பகுதிகளையும் நிலத்தொடர்ச்சியற்ற வகையில் இணைத்து பாண்டிச்சேரி மாநிலத்தை உருவாக்கினார்கள். ஆகவே வடக்கு-கிழக்கு இணைப்பு சரிவரவில்லை என்றால் நாங்கள் மாற்று யோசனைக்கு போக வேண்டும்.  ஏனென்றால்  கூட்டுரிமையை, கூட்டடையாளத்தை, கூட்டிருப்பை நாம் பாதுகாக்க வேண்டும்.

அந்த யோசனைகள் பற்றி மாற்று சிந்தனை பற்றி இவர்கள் கொஞ்சமாவது சிந்தித்தார்களா என்ற கேள்விகள் எல்லாம் இங்கு வருகின்றன. இன்றைய கிழக்கினுடைய நிலமை மிக மோசமானது. கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் என்பது சிங்களத் தரப்பிடமும் முஸ்லிம் தரப்பிடமும் தான் இருக்கின்றது. இந்த இரண்டு தரப்புமே தமிழ் மக்கள் மீது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்பு யுத்தம் தொடர்பாக ஒரு தற்காப்பு யுத்தத்தை நடாத்த முடியாத நிலை எங்கள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. கிழக்கை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டம்தான் கொஞ்சமாவது பலமான மாவட்டம்.  மட்டக்களப்பு மாவட்டம் பலமாக இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் எஞ்சியிருக்கின்ற தமிழ் பிரதேசத்தையாவது எங்களால் பாதுகாக்க முடியும். ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டம் தன்னையே பாதுகாக்க முடியாது திராணியற்று திண்டாடிக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். தமிழ் அரசியல் தலைவர்கள் கிழக்கை அப்படியே கைவிட்டு விட்டார்கள்.

சர்வதேச சக்திகள் எல்லாம் இனப்பிரச்சனையை வடக்கோடு மட்டும் முடக்கப் பார்க்கின்றார்கள். அவர்கள் கிழக்கை அதனோடு இணைத்தால் வடக்கு-கிழக்கை இணைப்பை  ஏற்றுக் கொள்வேண்டிவரும். ஏற்றுக்கொண்டால் முரண்பாடு வரும். எனவே அவர்கள் அதைப் பற்றி கதைப்பதே இல்லை. வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கிழக்குக்குப்  போவதில்லை. எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளும் கிழக்குக்கு வாங்கோ என்று கேட்பதில்லை. தாங்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போதும் கிழக்கு பிரதிநிதிகளை கூட்டிக்கொண்டு போவதில்லை. தாங்களும் கிழக்கைப் பற்றிக் கதைப்பதில்லை. மொத்தமாக கிழக்கை இருட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். ஆகவே தமிழ் சமூகத்தினுடைய முக்கியமான ஒரு மக்கள் கூட்டத்தை இருட்டுக்குள் வைப்பது எவ்வளவு தூரம் தார்மீக அறநெறிக்கு உட்பட்டது என்பதை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது மிக முக்கியமான விடயம். ஆகவே இந்த விடயத்தை நாம் கவனத்தில் எடுத்தே தீரவேண்டும்.



இங்கே வடக்கு-கிழக்கு இணைப்பு இல்லை. சுயாட்சி அதிகாரங்கள் இல்லை. மத்திய அரசுடன் கூட்டாக பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இல்லை. அதிகாரங்களுக்கான பாதுகாப்பு பொறிமுறைகள் எதுவுமே இல்லை. ஆகவே மொத்தத்தில் தமிழ் மக்களை நிராகரிக்கும் ஒரு அறிக்கையாகத்  தான் இந்த இடைக்கால அறிக்கையை பார்க்க வேண்டும்.  இடைக்கால அறிக்கையினுடைய இடம் குப்பைத்தொட்டி என்பதே என்னுடைய அபிப்பிராயம். அதை விட வேறு வழி இல்லை.

தொகுப்பு-தேனுகா
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.