அரசியலமைப்பு உருவாக்கத்தில் மக்கள் ஒதுங்கியிருக்க முடியாதுதமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியான போராட்டத்தின் ஊடாகவே எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில் ஒரு சிலரிடம் மட்டும் இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை ஒப்படைத்து விட்டு மக்கள் ஒதுங்கி இருக்க முடியாது. சட்டம், ஒழுங்கு, கல்வி, மீன்பிடி, விவசாயம், கூட்டுறவு போன்ற விடயங்கள் இடைக்கால அறிக்கையில் முற்று முழுதாக மௌனிக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் சட்டத்துறை தலைவருமான குமாரவடிவேல் குருபரன் தை 16, 2018 இல் தமிழ் மக்கள் பேரவையின் வீரசிங்கம் மண்டப கூட்டத்தில் ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சிக்கான குணாம்சங்களையே கொண்டிருக்கின்றது. காரணம் ஒற்றையாட்சிக்கானபிரதான குணாம்சமான இறைமை பகிரப்பட முடியாது அல்லது பாரதீனப்படுத்த முடியாது என்ற குணாம்சம் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவ்வறிக்கையின் பின்னூட்டங்களில்  ஸ்ரீலங்காசுதந்திர கட்சி உள்ளிட்டன சிங்களத்தில் ஏக்கிய இராஜ்ய என்பது சரியாக குறிப்பிட்டிருக்கும் நிலையில் அதற்கு சரியான தமிழ் சொல் ஏன் குறிப்பிடப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளன. இந்தவகையில் இடைக்கால அறிக்கைக்கு கருத்துக்களை வழங்கிய கட்சிகளின் கருத்துக்களைப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளே இந்த ஏக்கிய இராஜ்ய என்ற சொல்லை தமிழில் ஒருமித்த நாடு என இடைக்கால அறிக்கையில் இடம்பெற செய்திருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண பிரதான பங்கு வகித்தார்.   1987 ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒற்றையாட்சிக்கு கொடுக்கப்பட்ட வரையறையை இடைக்கால அறிக்கை தாண்டவில்லை என இவர் கூறியுள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும்போது ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்தியிருக்கின்றோம் எனக் கூறியிருக்கிறார்.

இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கத்தை பார்த்தால் அரச காணிகளை தேவைப்படும் போது மாகாண அரசாங்கம் மத்திய அரசிடம் கேட்டு பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு மறுத்தால் 3பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி அதன் முன் சென்று கேட்கலாம். அங்கேயும் மறுக்கப்பட்டால் அரசியலமைப்பு நீதிமன்றுக்கு போகலாம் என கூறப்பட்டுள்ளது.  ஆனால் தேசிய பாதுகாப்பு விடயங்களுக்காக மாகாணங்களுக்கு சொந்தமான காணியை மத்திய அரசு மாகாணத்தின் அனுமதியை பெறாமலேயே எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை பொறுத்தளவில் இன்றுள்ள பிரச்சினை காணிகள் தேசிய பாதுகாப்பின் பெயரால் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் செல்வதேயாகும். மேலும் சட்டம் ஒழுங்கு, கல்வி போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இடைக்கால அறிக்கையில் ஒன்றும் சொல்லப்படவில்லை.

இந்நிலையில் நான் முன்னர் ஒரு தடவை கூறியதை போன்று போண்டாவை ஒருவருக்கு போண்டா என்றும் மற்றவருக்கு வாய்ப்பன் எனவும் கூறி கொடுப்பதாகவே இந்த      இடைக்கால அறிக்கை உள்ளது. அதற்காக இந்த இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றில்லை. உள்ளடக்கம் வாசிக்கப்பட்டு உண்மையை மக்கள் அறிய வேண்டும். மேலும் அரசியலை ஒரு சிலருடைய கைகளில் கொடுப்பதை நாங்கள் நிராகரிக்க வேண்டும். அந்த பணியை இங்குள்ள சிவில் சமூகங்கள் கையிலெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தொகுப்பு- தேனுகா
நிமிர்வு  தை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.