அதிகாரப் பரவலாக்கமும் போர்க்குற்ற விசாரணையுமே சமாதானத்திற்கு அடிப்படை – முதலமைச்சர்
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தை 16, 2018 இல் தமிழ்மக்கள் பேரவையின் வீரசிங்கம் மண்டப கூட்டத்தில் ஆற்றிய உரையில் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். நாம் பெற்ற அறிவை அனைவருடனும் பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற நோக்கில் கூட்டங்கள் கூடி எமது மக்களுக்கு புரிந்துணர்வையும் அரசியல் அறிவையும் புகட்ட துறைசார் நிபுணர்களை வேண்டி நின்றோம். மக்களிடம் இருந்து அரசியல் ரீதியாக அறியவேண்டியவை பல இருக்கலாம். எந்த தேர்தல் கட்சி பற்றியோ அவற்றின் கொள்கைகள் பற்றியோ செயற்பாடுகள் பற்றியோ விமர்சிப்பதற்காக நாம் இங்கு கூடவில்லை. உண்மையை விளங்கிக் கொள்ள கூடியுள்ளோம். உரிமைகள் கிடைக்குமா என்று கேட்கின்றோம். மக்களுக்கு அரசியல் பற்றிய அறிவும் புரிந்துணர்வும் இன்று அவசியமாகத் தேவைப்படுகின்றது.
அண்மைக் காலங்களில் பல முக்கிய மாற்றங்கள் சர்வதேச சட்டத்தில் ஏற்பட்டுள்ளன. பல நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் உலக மக்கள் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தின. இவற்றை அவதானித்த சட்ட வல்லுனர்கள் பலர் சர்வதேச சட்டத்தை விரிவாக்க வேண்டும் எண்ணினர். இதனாலேயே சர்வதேச சட்டம் இப்போது விரிவடைந்த நிலையில் உள்ளது. இதன் பிரதிபலிப்புதான் உலக குற்றவியல் நீதிமன்ற ஏற்பாடு. அதுமட்டுமல்ல நிலைமாற்றத்தின் போது பாதிப்புக்குள்ளான நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இப்பொழுது வலுவான கருத்துக்கள் தோன்றியுள்ளன.
நிலைமாற்றம் என்றால் என்ன? ஒரு நாட்டின் அரசியல் நிலையை யதார்த்த நிலையில் மாற்றம் ஏற்படுவதைத் தான் அது குறிக்கின்றது. ஒரு இருண்ட காலத்திலிருந்து வெளிச்சத்தை நோக்கி எட்டிப்பார்ப்பதையே நிலைமாற்றம் குறிக்கின்றது. எனவே நிலைமாறும் நாடுகள் நீதிக்கு உகந்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தான் நிலைமாற்ற நீதி முறைகளாவன. இதையே நிலைமாறுகால நீதி என்று கூறுவார்கள். கஷ;ட நிலையிலிருந்து ஒரு நாடு மீண்டு வரும்போது என்னென்ன நடவடிக்கைகளை நீதிக்கு உகந்ததாக அந்த நாடு எடுக்க வேண்டும் என்று சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்றதோ அவற்றையே நிலைமாறுகால நீதிப்பொறிமுறை என்று குறிப்பிடுகின்றது சர்வதேச சட்டம்.
யாரோ அடக்கி ஆளப்பட்டதனால் தான் அந்த நாட்டில் வன்முறை வெடித்திருக்க வேண்டும். அல்லது கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலைமாற்ற நீதிமுறைகள் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்தியுள்ளன. ஒன்று அதிகாரப் பரவலாக்கம், இரண்டாவது போர்க்குற்றவாளிகளைத் தண்டித்தல். இவற்றை சர்வதேச சமூகம் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றது. போரானது 2009 இல் முடிவிற்கு வந்திருப்பினும் இனப்பிரச்சனை அதனால் தீர்க்கப்படவில்லை. அதனால்தான் அதிகாரப்பரவலாக்கம் தேவையுடையதாகின்றது.
13ஆவது திருத்தச்சட்டம் அதிகாரப்பரவலாக்கத்தை ஏற்படுத்தியேயுள்ளது. ஆனால் அது பெரும்பான்மையினரின் பெரும் தயவை முன்வைத்தே ஆக்கப்பட்டுள்ளது. அதனால்தான் 1992ஆம் ஆண்டின் 58ஆவது இலக்க சட்டம் மூலம் மாவட்ட செயலாளர் அதிகாரங்களை திரும்ப பெற்றுக் கொண்டார்கள். வேறு நபர்களுக்கு கொடுத்தார்கள். ஒற்றையாட்சி என்னும் போது முன்னர் கொடுத்த அதிகாரங்களை பறித்து இவ்வாறான சட்டங்களை கொண்டு வரலாம். காரணம் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பெரும்பான்மையினரின் கைவசமே தொடர்ந்து இருக்கும்.
மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழ் இருந்த மாவட்ட செயலர்கள் திடீரென்று அந்த சட்டத்தின் மூலம் மத்திக்குரியவர்களாக மாறிவிட்டார்கள். இதனால் இன்று வடமாகாணத்தில் இரட்டை நிர்வாகம் நடைபெற்று வருக்கின்றது. ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண உறுப்பினர்களின் நிர்வாகம், மற்றையது மத்திய அரசின் முகவர்களின் நிர்வாகம். இங்கு இரு முகவர்களும் சேர்ந்தும் சேராமலும் அவர்கள் நிர்வாகத்தை நடாத்தி வருக்கின்றார்கள். ஆளுனர் மத்தியின் முகவர். அரசாங்க அதிபர்களும் அவர்களின் முகவர்களே.
அதிகாரப்பரவலாக்கம் என்ற போது நாம் எதிர்பார்த்தது நம்மை நாமே ஆண்டு வருவதைத்தான். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கம் என்ற போர்வையில் எமக்கு கிடைக்கப் போவது மத்தியின் ஊடுருவல்கள் தான். அது தான் தற்போதைய நிலை. இவ்வாறு ஊடுருவல்கள் தொடர்ந்திருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படப் போகின்றவர்கள் போருக்கு முன்னர் பாதிக்கப்பட்ட அதே மக்கள் தான். இதனால் தான் ஒற்றையாட்சியை களைந்து சமஷ;டி ஆட்சியை நிலைநிறுத்த வேண்டுமென்று கேட்டு வருகின்றோம்.
இடைக்கால வரைபுகள் ஒற்றையாட்சியிலேயே மையமாகக் கொண்டு வரையப்பட்டதனால் தான் சர்வதேச நாடுகள் போதிய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். சர்வதேச சட்டம் எதிர்பார்க்கும் சில விடயங்களுக்கும் நாம் எதிர்பார்க்கும் சில விடயங்களுக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளன. சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்றதை தான் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளன.
ஆர்ஜென்ரீனா சர்வாதிகாரத்திலிருந்து வெளியில் வந்த போது யூகோஸ்லாவியா, ருவன்டா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போர்களிலிருந்து அவை விடுபட்டபோது நிலைமாற்ற நீதிமுறைகள் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் நிபந்தனைளை விதித்தன. உலக குற்றவியல் மன்றத்தை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் கரிசனை காட்டின. ஆகவே சர்வதேச சட்டம் நிலைமைக்கு ஏற்றவாறு, சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல் அடைந்து வந்துள்ளது. எனவே தான் சர்வதேச சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிலைமாற்று நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப்பரவலும் போர்க்குற்ற விசாரணையும் எமக்கு முக்கியமாக ஆகியுள்ளன. இரண்டையும் தட்டிக்கழிக்கவே இலங்கை அரசாங்கம் முற்பட்டுள்ளது.
ஒற்றையாட்சியால் எமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் பறிபோகப்போகின்றன. படைகள் எம் மாகாணங்களில் தொடர்ந்தும் நிலைத்து நிற்கப்போகின்றன. எமது காடுகளின் வருமானங்கள் அவர்களின் கைவசம் செல்ல இருக்கின்றன. மகாவலி சட்டத்தின் கீழ் மேலும் மேலும் வெளியிலிருந்து மக்களை எமது மாகாணத்தில் கொண்டு வந்து குடியேற்ற இருக்கின்றார்கள். சுற்றுலாத்துறையை தமக்கு சாதகமாக வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முன்னேற்றம் என்ற போர்வையில் எமது காணிகளை சுவிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இன்னும் பலதையும் கூறலாம்.
சமஷ;டி அரசியலின் கீழ் சுயாட்சி சுதந்திரம் அதிகாரப்பரவலாக்கம் எமக்கு கிடைத்தால் இவற்றை தடுத்து நிறுத்தலாம். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அவை தடுக்கப்பட முடியாது. இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் சம்பந்தமாக குருபரன் குறிப்பிட்டார். 'ஏக்கிய' என்று கூறாது 'எக்ஷத்' என்று குறிப்பிட்டிருக்கலாம். அதுவே 'ஒன்றிணைந்த' என்ற தமிழ் சொல்லுக்கு ஏற்ற சிங்களச் சொல்லு. அதைப்போடாது 'ஏக்கிய' என்று சொல்லுவது சிங்கள மக்களை ஏமாற்றப் பார்க்கும் விடயம் என்றுதான் நான் கூறுவேன். எம்மையும் ஏமாற்றி சிங்கள மக்களையும் ஏமாற்ற பார்க்கின்றார்கள்.
ஐக்கியநாடுகள் சபையில் தாமே முன்வந்து செய்வதாக ஏற்றுக் கொண்டவற்றை இங்கு செய்யபின் நிற்கின்றது எம் நாட்டு அரசாங்கம். அடுத்து போர்க்குற்ற விசாரணைகளில் நிலைமாற்று நீதிமுறைகளை ஐக்கியநாடுகள் வலியுறுத்துகின்றன. அதை தட்டிக்கழிக்கப் பார்க்கின்றது எமது அரசாங்கம். போரை அநியாயமான முறையில் வேண்டுமென்றே நடத்துவது போர்க்குற்றம். அடுத்து மனிதகுலத்திற்கு எதிராக செயற்படுவது போர்க்குற்றம். மூன்றாவது வேண்டுமென்றே இன அழிப்பில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றிலும் எமது அரசபடைகள் ஈடுபட்டிருந்தன. அக்குற்றவாளிகளை இனங்கான எமது மத்திய அரசாங்கம் பின் நிற்கின்றது. இனப்படுகொலை பற்றிய விளக்கமும் அண்மைக் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பர்மாவில் ரோஹிங்யா கொலைகள், ஈராக்கில் யசீதியரின் வன்புணர்வு நிகழ்வுகள் இனப்படுகொலையின் அம்சமே என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாம் முக்கியமான இரு விடயங்களை புரிந்து கொண்டுள்ளோம். முதலாவது சர்வதேச சட்டம் விரிவடைந்துள்ளது. எமது அல்லல்களும் அழிவுகளும் அதனுள் அடங்குகின்றன. அதன் அடிப்படையில் சர்வதேச சட்டத்தை ஒரு கேடயமாக ஏந்தி மத்திய அரசுடன் மோத முடியும் என்பது. அடுத்தது, இல்லாததை இருப்பதாகவும் கூறி இனிவரும் காலங்களில் இருப்பதையும் இல்லாது ஆக்க நாம் உடன்படக் கூடாது என்பதையும் அறிந்து கொண்டுள்ளோம். ஆகவே சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்ற நீதி முறைகளின் கீழ் முறையான அதிகாரப்பரவலாக்கத்தை முயன்று பெற நீங்கள் அனைவரும் முன் வரவேண்டும். நிலைமாற்று நீதிமுறைமைகளின் கீழ் போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கி குற்றவாளிகளை அடையாளம் காணவேண்டும். நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாக குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரைஅடையாளப்படுத்த வேண்டுமென்றே கேட்கின்றோம். எமது நெருக்குதல்கள் அந்தக் காவாலிகளை கடைத்தெருவிற்கு இழுத்துவரவேண்டும் எனக் கருதுகின்றோம்.
இவற்றை செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து தொடர்ந்து முன்னேற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன். எமது பார்வை சரியெனக் கருதும் யாவரும் எமது மக்கள் இயக்கத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
நிமிர்வு தை 2018 இதழ்
Post a Comment