ஜெருசல நகர அறிவிப்பும் அரபுலகத்தின் கொதிநிலையும்



புராதன நகரம் ஒன்றுக்கான உரிமை கோரும் அரபு-இஸ்ரேலிய அரசியல் தலைமைகளின் மோதல் தொடர்கிறது. அரபு-இஸ்ரேல் முரண்பாட்டின் மூலவேராக ஜெருசலம் நகரத்தினை அடையாளமிட முடியும். வரலாற்றுக் காலம் முதல் அந்த நகரத்திற்கான போராட்டம் நிகழ்ந்து கொண்டே வந்தது. அதற்கு தற்காலிக இணக்கம் எட்டப்பட்ட போதும் இஸ்லாமியரும் யூதர்களும் நகரத்தின் பேரால் மீளவும் மோத ஆரம்பித்துள்ளனர். ஜெருசலம் நகரம் இஸ்ரேலினுடையதென்பதை அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்த பின்பு அரபு உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. அவற்றை அவதானிப்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப்பின் அறிவிப்பு வெளியான மறுகணம் அரபு நாடுகளில் போராட்டங்கள் ஆரம்பித்தன. ஜெருசலம் இஸ்லாமிய, யூத, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளரின் புனித நகரமாக அமைந்திருந்தது. 1967 இல் கிழக்கு ஜெருசலத்தினை யூதர்கள் கைப்பற்றினார்கள். அந்தக் கைப்பற்றலுக்கு உலகத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியானதை அடுத்தே அந்நகரம் யூதர்களுக்கு உரியதென்ற உணர்வு யூதர்களுக்கு அதிகரித்துள்ளது. 'இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜெருசலம் இஸ்ரேலிய தலைநகர் என்ற உண்மையை பலஸ்தீனர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றார். மேலும் 'ஜெருசலம் மூவாயிரம் ஆண்டு இஸ்ரேலின் தலைநகராக உள்ளது. ஜெருசலம் வேறு எந்த மக்களது தலைநகரமாகவும் இருந்ததில்லை. இந்த உண்மையுடன் பலஸ்தீனர்கள் விரைவில் உடன்பட்டால் நாம் சமாதானத்தை நோக்கி நகரலாம்' என்றார். இன்னோர் சந்தர்ப்பத்தில் பிரதமர் நெதன்யாகு குறிப்பிடும் போது 'இந்த நாள் வரலாறு சிறப்பு மிக்க நாள். இஸ்ரேல் ட்ரம்புக்கு நன்றியுடையதாக இருக்கும்' என்றார். 'இது யூதர்களின் கனவு. அவர்களது நம்பிக்கையினதும், பிரார்த்தனையினதும் மையம்' என்று இஸ்ரேலிய பிரதமர் குறிப்பிட்டார். அறிவிப்பு வெளியானதும் அமெரிக்க நட்பு நாடுகள் கூட எதிரான கருத்து நிலையை முன்னெடுத்தன. குறிப்பாக அங்கு வரும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் சுடரை அணைத்து போராட்டம் நடாத்தினர். ட்ரம்ப்பின் உருவப்படத்தினை தீ மூட்டி எரித்தனர். பின்னர் ஜெருசலம் பலஸ்தீனர்களின் இதயம் என கோஷம் எழுப்பினர். ரமல்லா நகரில் திரண்ட இஸ்லாமியர்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காஸா மேற்குகரை பகுதிகளிலும் போராட்டம் தொடர்ந்தது. லெபனால், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளிலும் மக்கள் திரண்டு போராட்டம் நடாத்தி வருகின்றனர்.



இத்தகைய போராட்டங்களுக்கு பின்னால் தெளிவான அரசியலாக. அமெரிக்க எதிர்ப்புவாதம் மேலெழுந்துள்ளது. அமெரிக்காவின் பொருட்கள் மீதான தடையை நோக்கிய பிரகடனங்களும், கோரிக்கைகளும் எழுந்துள்ளன. லெபனான் வெளிவிவகார அமைச்சர் பாஸ்சில் ஜெருசலம் விவகாரத்தில் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார். எகிப்து நாட்டு தலைநகரில் கூடிய அரபுத் தலைவர்கள் அமெரிக்கா மீது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். லெபனான் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவுக்கு எதிராக தூதரக நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறினார். அரசியல் ரீதியில் விவாதத்தினை முன்னெடுத்தல் நிதி மற்றும் பொருளாதார ரீதியில் அமெரிக்க பொருட்கள் மீது தடையை விதிப்பது பற்றியும் அவர் உரையாடியுள்ளார். அரபு நாடுகளை கடந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தினை நிராகரித்துள்ளன. 15 பாதுகாப்பு சபை நாடுகளில் 14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. இத்தகைய அமெரிக்காவின் நடவடிக்கை பாதுகாப்புச் சபையின் முந்தைய தீர்மானத்திற்கு விரோதமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. கிழக்கு ஜெருசலமானது இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் பகுதி. ஒருங்கிணைந்த ஜெருசலம் நகரம் இஸ்ரேல்-பலஸ்தீன நகரமாக இருக்க வேண்டும் என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு என ஐ.நா தூதுவர் மாத்யு ரைக்ராப்ட் கூறுகின்றார். இவ்வாறே இதர ஐரோப்பிய நாடுகள் வெளிப்படையாக கண்டித்துள்ளன. இதே நேரம் அமெரிக்க ஐ.நா தூதரின் உரை ஐ.நா இஸ்ரேலிற்கு விரோதமாக செயற்படுகிறது என சாடியுள்ளார். அவரது உரையில் காத்திரமற்ற தன்மை காணப்பட்டது. ஜெருசல நகர அறிவிப்பு ஏற்படுத்திய குழப்பம் பலஸ்தீன பகுதியில் பாரிய போரட்டத்தினை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் சமாதானமாக தீர்த்துக் கொள்ளவும் அமெரிக்க துணை ஜனாதிபதி பென்ஸ் எடுத்த முயற்சிகளை பலஸ்தீன ஜனாதிபதி முகமட் அபாஸ் நிராகரித்துள்ளார். மறுபக்கத்தில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் காஸாப்பகுதியில் 25 பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். பரஸ்பர தாக்குதலுக்கான உத்திகளும் நியாயப்பாடுகளும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அடிப்படையில் ஜெருசல நகரம் மீதான அறிவிப்பு மேற்காசியாவில் ஓய்ந்திருந்த பலஸ்தீன - இஸ்ரேல் முரண்பாட்டினை மீள ஆரம்பிக்க வழி சமைத்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையான அப்பிராந்திய நாடுகளை குழப்ப நிலைக்கு தள்ளியள்ளது. கடந்த கால அமெரிக்க ஜனாதிபதிகள் பின்பற்றிய நிலைப்பாட்டினை டொனல்ட் ட்ரம்ப் கருத்தில் கொள்ள தவறியிருந்தார். அவரது பலவீனமான ஆளுமையும் அரசியல் தீர்மானங்களின் பலவீனமும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கேள்விக்குரிய தாக்கியுள்ளன. அவர் மீதும் அமெரிக்கா மீதும் அமெரிக்க நட்பு மேற்காசிய நாடுகளே விரோதப் போக்கினை வெளிப்படுத்தி வருகின்றன. அமெரிக்க பொருட்கள் மீது மேற்காசிய நாடுகள் தடைவிதிக்க ஆரம்பிப்பதென்பது பாரிய நெருக்கடியினை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தும். அதில் உலகம் ஒன்று திரண்டு காணப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராகவே உள்ளன.

 

மேற்காசிய நாடுகளின் எதிர்பினை அமெரிக்க இஸ்ரேல் கூட்டு பெரிதாக கொள்ளாது விட்டாலும் ஐ.நா.சபையும், ஐரோப்பாவும் எடுத்திருக்கும் முடிபு அமெரிக்கரை அதிகம் பாதித்துள்ளது. இது சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு எதிர்ப்புவாதம் வலுவடைவதால் அமெரிக்காவின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஈராக் யுத்தத்தின் போதும் மேற்காசிய நாடுகளில் அமெரிக்க பொருட்களுக்கு சில நாடுகளால் தடை விதிக்கப்பட்டது. அவ்வகையான நிலைப்பாடு இன்று மேலும் விரிவாகியுள்ளது. அதன் போக்கு அமெரிக்க - இஸ்ரேலியருக்கு பாதகமானதாகவே அமையும். மறுபக்கத்தில் அமெரிக்க - இஸ்ரேலியர் எப்படி உலகத்தை கூட்டாக கையாளும் திறனுடையவர்களாக உள்ளனர் என்பதனையும் கருத்தில் கொள்வது அவசியமானது. உலகத்தினை குழப்ப நிலைக்குள் வைத்திருக்க விரும்பும் யூதர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ட்ரம்ப்பின் நடவடிக்கை உலக விரோதமானதாக அமைந்தாலும் இலக்கினை அடைவதில் இருதரப்பினரும் சாதுரியமாக செயற்படுகின்றனர். இவர்களின் தந்திரங்களையும் மிரட்டல்களையும் அராஜகங்களையும் எதிர்கொள்ள நியாய சிந்தனை கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் இது. வெறுமனை கோசங்களுடன் நின்று விடாமல் அவற்றை செயல்வடிவமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். அனைத்துலகின் சமாதானத்திற்கு இது அவசியமானதாகும். 

கலாநிதி கே.ரி கணேசலிங்கம்
நிமிர்வு தை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.