தமிழினப் படுகொலைக்கான நீதி ஒருநாள் கிடைத்தே தீரும்
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி ஒருநாள் கிடைத்தே தீரும். அந்த நீதி நாளை கிடைக்காவிட்டாலும் காலப்போக்கில் உலகில் மாற்றங்கள் ஏற்படும் போது கிடைக்கும். புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமிழர்களாகிய நாம் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளாது விட்டாலும் சர்வதேச சட்டம் எமக்கு அரணாக அமையும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தமர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு 16.01.2018 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் 'வடக்கு-கிழக்கு தமிழர் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்' எனும் தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டம் மிக கொடுமையாக இருக்கலாம். நன்மையாகவும் இருக்கலாம். எம்மைப் பொறுத்த வரையில் இலங்கை சட்டம் தமிழ் மக்களுக்கு அதிக கொடுமைகளை விளைவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மிகக் கொடுமையான சட்டங்களே தமிழ் மக்கள் மீது ஏவி விடப்பட்டுள்ளன.
முதல் சட்டம் குடியுரிமை சட்டம், அந்தச்சட்டத்தை இயற்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலர் உதவியாக இருந்தனர். அது பெருமைக்குரிய விடயமல்ல. அந்த தீமை நம்மை தற்போது சூழ்ந்துள்ளது. 1956 சிங்களம் மட்டும் என்றும், பௌத்த மதம் முதன்மையானது என்றும் ஆக்கப்பட்டன. அதற்கு எதிராக நாம் செய்த முயற்சிகள் வன்முறையால் முறியடிக்கப்பட்டன.
1948 ஆம் ஆண்டு உலக யுத்தம் முடியும் போது மாறுதல் ஏற்பட்டது. சர்வதேச சட்டமானது தேசங்களுக்கு இடையே மட்டுமல்லாது தனிமனித உரிமைகளைக் காக்கும் சட்டமாக மாறியது. மாபெரும் மாற்றம் சட்டத்தில் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக சர்வதேச சட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. பல சாசனங்கள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன. 7 சாசனங்களில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
சர்வதேச சட்டம் இலங்கை சட்டத்துக்குள் உள்வாங்கப்படும் என உயர் நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன. அதை எமக்கு அரணாக எவ்வாறு மாற்றலாம் என நாம் சிந்திக்க வேண்டும்.
அடுத்து. சர்வதேச சட்டத்திற்குள் நல்லாட்சி அரசு ஏற்படுத்துவதற்கான நெறிமுறைகள் உள்ளன. அதாவது சிறுபான்மைக்கு அதிகாரம் வழங்கப்படுதல், போர்க்குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஓர் அங்கமாகத் தான் அதிகாரப் பகிர்வை பற்றிக் கூறுகிறார்கள். அந்த முயற்சியில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும்.
அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் முன்னைய காலங்களிலும் எடுக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் தமிழருக்கு சலுகை அளிக்கும் போது சிங்கள பௌத்த பேரினவாதம் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதேபோல இப்போதும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற கருத்தை நாம் கவனிக்க வேண்டும். இலவு காத்த கிளபோல் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறக் கூடாது.
இது வந்தால் நன்று. வராவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பொருத்தமானது சர்வதேச சட்டம் ஆகும். நாம் இந்த சட்டத்தைக் முதன்மைப் படுத்தி எமது உரிமைகளை அந்தச் சட்டத்தின் படி தெரிவித்து அவற்றை சர்வதேசத்தின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சர்வதேச சட்டம் எமக்கு அரணாக அமையும் எனத் தெரிவித்தார்.
தமிழர் வெளிநாடுகளில் அதிகமாக வசிக்கிறார்கள். அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற விரும்புகிறார்கள். எனவே வெளிநாட்டில் உள்ள தமிழ் மக்கள் எமக்கு ஒரு பலமாக இருக்கின்றனர். அவர்கள் சர்வதேசத்துக்கு எமக்காக அழுத்தம் கொடுப்பார்கள்.
அரசமைப்பு சட்டத்தில் அரசியல் புகுந்துவிடக்கூடாது. அது திசை திருப்பிவிடும். ஏகமனதாக இருந்து சர்வதேச சட்டத்தின் மூலம் எம் உரிமையை பெற வேண்டும். நடுவு நிலை உள்ள நீதிமன்று அமைத்து போர்க்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு பேராசிரியர் சொர்ணராஜா கூறினார்.
இவரது பேச்சைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில், 'சர்வதேச சட்டம் என்ன செய்யும்? நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டா?' எனக் கேட்கப்பட்டது.
சர்வதேச சட்டத்தில் தண்டணை விதிக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் அந்த நிலையில் மாற்றங்கள் பலவற்றை காண்கிறோம். இனப்படுகொலை செய்தவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டார்கள். போர்க்காலத்தில் சட்ட மீறல்கள் செய்தவர்கள் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்பட்டார்கள். இன்று அல்லது நாளை இவை நடக்காவிட்டாலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும் என்பதை உணர்ந்து அவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முழு சர்வதேச சமுதாயமும் இந்த அத்துமீறல்களை அவதானித்துக்கொண்டு இருக்கின்றது. அது எமக்கு பாதுகாப்பானது. இரண்டாவதாக இலங்கை அரசு எமக்கு குற்றம் இழைத்தால் அதற்கு தண்டணை அனுபவிக்க நேரும் என்ற பயம் உருவாகியுள்ளது அதுவும் பாதுகாப்பானது என பேராசிரியர் சொர்ணராஜா மேலும் தெரிவித்தார்.
நிமிர்வு தை 2018 இதழ்
Post a Comment