தாயக மக்களும் புலம்பெயர் தமிழர்களும்
வெள்ளையர்கள் வருகைக்குமுன் தனி இராட்சியங்களாக இருந்தபோது சுதந்திரமாக தம்மைத் தாமே ஆண்டு வந்த ஈழத்தமிழர்கள் வெள்ளையர்கள் தமது இலகு நிர்வாகத்திற்காக முழு இலங்கையும் ஒன்றாக இணைத்த போது ஈழத்தமிழர்களின் பிரச்சனை ஆரம்பமானது. தமது பாதுகாப்பிற்காக பிரித்தாளும் யுக்தியை கடைப்பிடித்த வெள்ளையர் நிர்வாகத்தை இலகுவாக்க விசுவாசம் என்ற போர்வையில் அடிவருடும் குணமுள்ள தமிழர்களுக்கு உயர் பதவிகளை வழங்கினார்கள். அந்தப் பதவிகளை பெற்ற தமிழர்கள் தமக்கு கீழே வேலை செய்த பெரும்பான்மையினரான சிங்களவர்களை அவமதித்தமை சிங்களவர்களுக்கு தமிழர்கள் மேல் வெறுப்பையும் சிங்களத் தலைவர்களிடம் இனவாதத்தையும் தூண்டியது. வெள்ளையர்களுக்கெதிராக உருவாக்கப்பட்ட தேசியகாங்கிரசின் ஆரம்பத் தலைவராக சேர்.பொன் அருணாசலம் இருந்த போதும் அவர் நாளடைவில் விலகிச் செல்வதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்த போது சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான இடத்தை அன்றைய தமிழ்த் தலைவர்கள் விட்டுக் கொடுத்து விட்டார்கள்.
தமிழர்கள் தமக்கு சம உரிமை வேண்டுமென்று சாத்வீக போராட்டம் செய்து அதிலும் பலனில்லாது போக வட்டுக்கோட்டையில் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என முடிவெடுத்தார்கள். இதை உற்றுக் கவனித்த இந்தியா அப்போதிருந்த தமிழ்த் தலைமையூடாக ஆயுத போராட்டத்தை உருவாக்கியது. கூடவே சிறு சிறு குழுக்களாக பிரித்து 30க்கும் மேற்பட்ட விடுதலை அமைப்புக்களை உருவாக்கிஎவரும் பெரிதாக வளரமுடியதாபடி அவர்களுக்குள்ளேயே மோதல்களையும் உயிர்ப் பலிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இப்படியான இந்தியாவின் சூழ்ச்சியிலிருந்து தப்பி வந்ததுதான் ஒழுக்கமும் செயற்திறனும் கொண்ட புலிகள் இயக்கம். 30 ஆண்டுப் போரட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்ப்பலிகளையும் கோடிக்கான பொருளாதார நட்டங்களையும் இலட்சக்கணக்கில் மக்கள் தமது வாழ்விடத்தைவிட்டு இடம் பெயரவும் நாட்டை விட்டே ஓடவும் செய்தது.
இன்று புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்கள் மூழ்கின்ற கப்பலிலிருந்து தப்பியோடி வந்த எலிகளைப் போன்றோர். வசதி படைத்தவர்கள் வந்துவிட்டார்கள். வசதி இல்லாதவர்கள் ஆசையிருந்தும் வெளியே போக முடியாமல் ஆசையை இன்னும் மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். வெளிநாடு வந்தவர்கள் பலர் போராட்டம் செய்ய விடுதலை அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தார்கள். அங்குள்ள தமது உறவுகளுக்கும் செய்தார்கள். தமக்கு தனி நாடு வேண்டும் என்பதற்காக கொடுத்தார்கள் என்பதைவிட எம் மக்கள் அங்கே உயிருக்காக அங்கும் இங்கும் ஓடுகையில் நாம் வேறு தேசங்களுக்கு வந்து பயமற்ற வாழ்க்கையை வாழ்கிறோமே என்ற குற்ற உணர்வின் உறுத்தல் என்றே சொல்ல வேண்டும். இல்லையென்றால் இங்கே வாழும் இளஞ்சிறார்கள் 80 வீதமானோர் தமிழே பேசமுடியாதவர்களாய் இருப்பார்களா? தாய்மண்ணில் எங்கள் பலம் இல்லாது ஆக்கப்பட்டபின் புலம்பெயர் தமிழர்கள் பல அமைப்புக்களாக தாங்கள் தான் தாயக மக்களின் அவலங்களை போக்க வல்லவர் என கூறிக்கொண்டு தங்களுக்குள் முரண்டுபட்டுக் கொண்டு நிற்கிறார்கள். ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியே தமக்கென ஒரு கொள்கையோடு செயற்படலாம். ஆனால் தாயக மக்கள் என்ற பொது நோக்கோடு செயற்படும்போது தமது வேற்றுமைகளை மறந்து ஒருமித்து நிற்கவேண்டாமா?
சென்ற வருடம் வடமாகாண முதல்வர் வந்த போது கனடாவாழ் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் அனைவரும் நவக்கிரகங்கள் போல் ஆளுக்கொரு திக்காக நிற்கிறார்களேயொழிய ஒன்றிணைந்து முதல்வருக்கு பலம் சேர்க்க வேண்டுமென்று எண்ணவில்லை. இஸ்ரேல் உருவானபோது அதன் முதல் பிரதமர் கோல்டா மேயர் நாடுநாடாக சென்றபோது அனைவரும் ஒன்றுதிரண்டு நிதியை வாரி வழங்கினார்கள். ஆனால் கனடா வந்த முதல்வர் இங்குள்ள அமைப்புக்களை சந்திப்பது கூட தடுக்கப்பட்டது. அதை முதல்வரும் பாராமுகமாக ஏற்றுக்கொண்டார்.
தாயகத்தில் தற்போது வாழும் மக்களை நோக்கினால் உழைத்து முன்னேற வேண்டும் என்ற முனைப்பின்றி காலத்தை வீணே கடத்துவதை அவதானிக்க முடிகின்றது. அதற்கு தூபமிடுவதுபோல் புலம்பெயர் தமிழர்கள் தாயகம் செல்லும்போது தமது பகட்டை காட்டுவதும் தமது பணவலிமையை காட்டுவதும் அங்குள்ளவர்கள் தாங்களும் வெளிநாடு போயிருந்தால் செல்வந்தனாக மாறியிருப்பேன் என்ற எண்ணத்தை உருவாக்கி நாங்கள் எப்போ வெளிநாடு செல்வோம் என்ற கனவோடு வாழ வழிசெய்திருக்கின்றது.
புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் தான் தாயகமக்களின் பாதுகாவலர்கள் என நினைக்கின்றார்கள். தமது அரசியல் அபிலாiஷகளை அவர்களுக்கு திணிக்க முனைகின்றார்கள். சிறு சிறு புனரமைப்பு வேலைகளைச் செய்து கொண்டு தாம் தான் போரினால் பாதிப்புற்றோரை சுமப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்கி தாயகத்தில் வாழும் மக்களை பொருளாதார பலமுள்ளவர்களாக மாற்றவேண்டும் என சில புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் அதில் வேலைசெய்ய தேர்ச்சி பெற்ற தொழிலாளிகள் இல்லாது தத்தளிக்கின்றது. அந்த தொழிற்சாலைகளை இலாபகரமாக இயக்குவதற்கு தெற்கிலிருந்து சிங்களவரை அழைத்து வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.
வடக்கு கிழக்கு மாகாண அரசுகள் அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து அபிவிருத்திக்கும் வேலை வாய்ப்புக்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இப்போது புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் தாயகத்தின நினைவுகளோடு வாழும் கடைசிச் சந்ததி. அவர்கள்தான் தாயகத்தில் பிறந்து மற்றைய நாடுகளில் வாழ்பவர்கள். அதற்குப்பின் வருபவர்கள் தாயகத்தைப்பற்றி எண்ணியே பார்க்கப்போதில்லை. ஆகையால் தாயக மக்கள் புலம்பெயர் தமிழர்களை சரியான முறையில் பாவித்து தமது உழைக்கும் திறனை வளர்த்துக் கொள்ளN வண்டும். அதற்கான ஒழுங்கமைப்பை மாகாண அரசு செய்து கொடுக்க வேண்டும். அறிவுப் பரிமாற்றம் மூலம் புலத்தில் பெரிய நிறுவனங்களின் பொறுப்பாதிகாரிகளாகவோ அன்றி உரிமையாளர்களாகவோ வாழும் தமிழர்களை, துறைசார் வல்லுனர்களை அழைத்து அவர்களின் திறமைகளும் அறிவும் தாயகத்தில் அந்தந்த துறைசார்ந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க வழிசெய்ய வேண்டும். அதேபோல் பட்டதாரி மாணவர்கள் பலர் சென்று தமக்குள்ள திறமைகளை அங்குள்ள பட்டதாரி மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பதோடு தாயக மாணவர்களின் கலாச்சார விழுமியங்களை புரிந்து கொள்ள வழிசமைக்க வேண்டும். அதற்கூடாக தொழிலில் முனைப்பு காட்டுவோரை இனங்கண்டு அவர்களுக்கு 25 வீதத்தை மாகாண அரசு கடனாக கொடுத்து மிகுதி 75 வீதத்தை புலம்பெயர் மக்களின் நிதிப் பங்களிப்பாக உதவி கிராமங்கள் தோறும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் உடுப்பிட்டி மக்களால் 3 கோடி ரூபாக்கள் செலவில் ஒரு ஆடைத் தொழிற்சாலையை உருவாக்க முடியுமானால் கோப்பாய் மக்களாலும் தங்கள் ஊரில் ஒரு தொழிற்சாலையை உருவாக்க முடியும். கோண்டாவில் கொக்கிளாய் என ஒவ்வொரு ஊர் மக்களாலும் தங்கள் ஊர்களில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும்.
ஆனால் ஈழத்தமிழர்கள் எழுச்சி அடைய முடியாதிருப்பதற்கு ஒரே காரணம் அனைவரும் தமது அடையாளத்தை முன்னிறுத்துவதையும் தமது பலத்தை நிரூபிப்பதிலும் முயற்சி எடுக்கின்றார்களேயொழிய அனைவரும் சேர்ந்து செயற்பட தயாராக இல்லை. தனி ஒருவரால் அசைக்கவே முடியாத தேர் ஊர்கூடி இழுக்கும் போது சுலபமாக ஓடுகிறது.
வைரமுத்து சொர்ணலிங்கம்
நிமிர்வு தை 2018 இதழ்
Post a Comment