ஆசிரியர் பார்வை



வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர்வுமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.  ஒரு புறம் சாட்சிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகளில் ஐந்து பேர் முதுமை காரணமாகவும், நோய்கள் காரணமாகவும் இறந்திருக்கிறார்கள்.   மறுபுறம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய ஜனாதிபதியும் பிரதமரும் காணாமல் ஆக்கப்பட்டோர் என எவரும் இலங்கையில் இல்லை என வெவ்வேறு நிகழ்வுகளில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருக்கின்றனர்.

இன அழிப்பின் முக்கியமான வடிவங்களில் ஒன்று காணாமல் ஆக்கப்படுதல் ஆகும்.     அதுவும் பெற்றோரால், மனைவிமார்களால் இராணுவத்தினரிடம் நேரில் கையளிக்கப்பட்ட உறவுகளில் பலர் இன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைதொடர்பில் இலங்கை ஆட்சியாளர்கள் எவரும் பொறுப்புக் கூறும் நிலையிலில்லை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நியாயமான போராட்டங்களை மையமாக ஒருங்கிணைத்து அதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொறுப்பெடுத்து ஒற்றுமையாக அணிதிரண்டு போராட வேண்டியது அவசியமானதாகும்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்து விட்டன.  இனி மாற்றுத்தலைமை வேண்டும் என்ற கோசம் அடுத்த தேர்தல் வரை ஒலிக்காது. மாற்றுத்தலைமை வேண்டும் என கோசமிட்டவர்கள், தேர்தலுக்காக இரவுபகலாக ஓடி உழைத்தவர்கள் இனியாவது இந்த மக்களிற்கு தலைமை தாங்க முன்வர வேண்டும்.  கதிரைகளில் அமர்வதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விடமுடியாது என்பது வரலாறு எமக்குக் கற்றுத் தந்தபாடம். இம்மக்களுக்கு தலைமையேற்று அவர்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஆலோசனைகளிலும் செயற்பாடுகளிலும் இறங்க வேண்டும். இவ்வாறான போராட்டங்கள் ஏனைய நாடுகளில் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன அவற்றை எவ்வாறு எமது நாட்டு சூழலுக்கு ஏற்றவாறாக மாற்றலாம் அல்லது புதிய போராட்ட வழியைக் கண்டுபிடிக்கலாம் என்பவற்றைப் பற்றி ஆராயவேண்டும். இம்மக்களே இதனையும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்க முடியாது.

போர்க்குணம் கொண்ட இவர்கள் போராட தயாராக இருக்கிறார்கள். அதேவேளை இம்மக்களுக்கு ஆதரவாக சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் குரல்கள் கூடுதலாக எழத் தொடங்கியுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  அதனை எவ்வாறு இப்போராட்டத்துடன் இணைக்கலாம் என ஆலோசிக்க வேண்டும்.  ஜெனிவா கூட்டத் தொடர் நடக்கவிருக்கும் இக்காலத்தில் இப்போராட்டத்தின் குரல் தொய்ந்து போகாமல் காப்பது எங்கள் எல்லோரதும் கடமை.
தெற்கில் மஹிந்த ராஜபக்ச அலை மீண்டும் உருவாகியுள்ள நிலையில், ஏற்கனவே இவரது ஆட்சிக் காலத்தில் தான் கடத்தல்கள், காணாமல் போதல்கள் உச்சக் கட்டத்தில் இருந்தன.  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க இவர் முன்னெடுப்புக்களை தொடங்குவார் என்பது மடமைத்தனம். அதேவேளை மகிந்தபூதத்தைக் காரணம் காட்டி மைத்திரியை மேலும் பாதுகாக்க மேற்குலகமும் அதனோடு இணங்கிப் போகும் உள்ளூர் அரசியல் தலைமைகளும் முற்படும்.  இவ்வாறான ஒரு சூழலில் இந்த மக்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எவ்வாறு என எல்லா அரசியல் சக்திகளும் சிந்திக்க வேண்டும்.

ஒரு வருட நிறைவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கவலை, வெறுப்பு, விரக்தி ஆகியவற்றை ஒருங்கே காணக் கூடியதாக இருந்தது. அவர்கள் முன்வைத்த கோஷங்களும் இப்படித்தானிருந்தது. “சர்வதேசமே எமக்கு உள்நாட்டு பொறி முறையில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே இரகசிய முகாமிலுள்ள எமது உறவுகளை மீட்டுத் தா." நீதிகிடைக்குமா?

ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாவதுஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது நிமிர்வு. தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில்  வலுவான கட்டுரைகளையும், வாதங்களையும் முன் வைத்து தமிழ்மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கியிருக்கிறது.

தமிழ் மக்களின் அரசியலில் அக்கறை செலுத்தும் அதே வேளை எமது சுய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பிவரும் எம்மவர்களையும் நேரடியாக இனம் கண்டு அவர்களுடனான உரையாடல்களை முன்வைத்து எழுதப்படும் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. வாசகர்களாகிய உங்களின் ஆதரவுடன் இன்னும் நிமிர்வோம்.

செ.கிரிசாந்
நிமிர்வு மாசி  2018 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.