இயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி தமிழர் தாயகம்
இயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி எல்லோரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. நம் முன்னோர்களின் பாரம்பரிய விவசாயத்தை நோக்கி நகர வேண்டிய காலம் வந்துவிட்டது. இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆகிறான். அதனால் அவனுக்கு கூடுதல் சமூகப் பொறுப்பு உள்ளது. வருங்கால இளைய தலைமுறைக்கு இப்பூமியை பசுமை நிறைந்ததாக விட்டுச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது.
அதீத செயற்கை உரப் பாவனை மற்றும் கிருமி நாசினிப் பாவனையால் பல்வேறு விதமான புதிய புதிய நோய்கள் எல்லாம் மக்களைத் தாக்குகின்றன. குறிப்பாக புற்றுநோய்கள் இதனால் ஏற்படுகின்றன என்பதனை மருத்துவ ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நிலம், நீர், காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றின் முலம் இயற்கை வழங்குகிறது. இதுவே பயிர் வளர்சிக்கு போதுமானது. பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் இடத்து அல்லது பூச்சிகளின் தாக்கம் இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒழிக்க பஞ்ச காவ்யா போன்ற இயற்கை முறையிலான கிருமி நாசினிகளே உள்ளன. இயற்கை உரம், இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி, இயற்கை பூச்சி விரட்டி, மற்றும் இயற்கை நுண்ணுயிர் உரம் ஆகியவற்றின் மூலம் இயற்கை விவசாயம் செய்து சத்தான உணவுப் பொருள் உற்பத்திகளை அதிகரிக்க முடியும்.
கடந்த வருடங்களில் வலிகாமத்தில் உள்ள நிலத்தடி நீரில் கழிவோயில் கலந்த பிரச்சினை எழுந்த போது குறித்த நீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்த போது அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. அங்கு எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் அதிகம் நைத்ரேட் என்கிற இரசாயனம் கலந்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதற்கான காரணம் எம் விவசாயிகளின் அதீத செயற்கை உரப் பாவனைகளே ஆகும். அளவுக்கதிகமான உரப்பாவனையால் பஞ்சாக இருக்க வேண்டிய நிலம் கல்லாக மாறிவிட்டது. விவசாயியின் உற்ற நண்பர்களாக விளங்கும் மண்புழுக்களை அழித்து விட்டன.
இயற்கை விவசாயத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது செயற்கை விவசாயம். செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள். போதை விரைவில் மறைந்துவிடுகிறது. மறுபடியும் போதை வேண்டுமானால், குடிகாரன் மீண்டும் குடிக்க வேண்டும். செயற்கை உரமும் இப்படியே விரைவில் வேலைசெய்து அழியும். அதனால், ஆண்டுதோறும் நிலத்துக்குச் செயற்கை உரத்தை இட வேண்டும்.
அடிக்கடி இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெட்டுப்போகிறது. பிறகு அது விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை.
செயற்கை விவசாயத்தில் வேதியியல் (ரசாயனம்) முறையில் உணவு பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தரமான பொருள் உற்பத்தி செய்யமுடியாது. இரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர்கொள்ள இயற்கை விவசாயம் ஒரு பதிலாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் வாழும் இயற்கை விவசாயியான திரு சுபாஷ் பலேகர் சுலபமான ஒரு பதிலை வைத்து இருக்கிறார்.
இதற்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்று பெயர். காரணம் எவ்வித செலவுமில்லாத விவசாயம். விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் சேர்த்து அவர் இந்த தொழில்நுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார்.
அவர் கூறுகிறார் “விவசாயத்திற்கு இடு பொருள் விலைகள் (உரங்கள், பூச்சி கொல்லிகள்) ஏறிக்கொண்டே போகின்றன. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியில் இருந்து ஒரு இடு பொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏக்கர் விவசாயம் செய்ய முடியும், ஒரு விதமான இடுபொருளும் வாங்காமல். மாட்டு சலம், சாணி, போன்றவையே போதும்”
இது எப்படி முடிகிறது? அவர் கூறுகிறார் “பயிர்கள் தமக்கு தேவையானவற்றில் 2வீதத்தை மட்டுமே உரங்களிலிருந்து எடுத்துக் கொள்ளுகிறன. மற்ற 98வீதத்தை காற்று, நீர், மற்றும் சூரிய வெளிச்சம் இருந்து எடுத்து கொள்ளுகிறன. இந்த மாற்றதை செய்வது மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் தான். ஆனால் இவை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளால் கொல்லப்படுகின்றன.
இயற்கையாக, மண்ணில் நுண்ணுயிரிகளை மீண்டும் கொண்டு வர, பசுஞ்சாணம் போதும். ஒரு கிராம் பசும் சாணம் ஐநூறு கோடி நுண் உயிரிகள் இருக்கின்றன. ஆகவே மண்ணை வளப்படுத்த பசுமாடுகள் போதுமென்பதே அவரின் கூற்று. மண்ணின் வளத்தை உயர்த்த, அவர் ஆறு ஆண்டுகள் பல விதமான ஆராய்ச்சிகளை செய்து உள்ளார்.
நம் முன்னோர்களும் விவசாயம் செய்வதற்கு தயாரான நிலத்தில் நூற்றுக்கணக்கான மாடுகளை பட்டி போட்டு அதன் சாணம், சலம் நிரம்பிய இடத்தை உழவு செய்து பயிரை வைப்பார்கள் அவை மூச்சாக வளருவதை சிறுவயதுகளில் பார்த்திருப்போம். அந்தப் பாரம்பரிய இயற்கை விவசாயம் இன்று வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மண்ணின் வளத்தையும் காத்து மக்களையும் காக்கின்ற இயற்கை விவசாய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இன்று நிற்கின்றோம். பல இளைஞர்கள் இன்று இயற்கை விவசாயம் செய்வதற்கு முன்வந்துள்ளார்கள். சமூக மாற்றமொன்று இடம்பெற்று வருவதனை கண்கூடாக காணக் கூடியதாக உள்ளது.
இந்த இடத்திலே இயற்கை விவசாயத்துக்கு மாறுவதில் உள்ள சிக்கல்களில் முதன்மையானதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இங்குள்ள விவசாய அதிகாரிகளில் பெரும்பாலானோர் செயற்கை உரம் மற்றும் கிருமிநாசினி கொம்பனிகளின் நேரடி முகவர்களாக இயங்கி வருகின்றனர். இப்படியானவர்கள் இயற்கை விவசாயத்துக்கு எதிரானவர்களாக உள்ளனர். செயற்கை மருந்து, உரப் பாவனைகளை விவசாயிகள் மத்தியில் அளவுக்கதிகமாக விதைத்த பெருமை இப்படியான சில அதிகாரிகளையும் சாரும்.
தற்போது தான் எம் பிரதேசங்களில் இயற்கை விவசாயம் தொடர்பிலான விழிப்புணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகின்றன. இயற்கை விவசாய விழிப்புணர்வுகளை பல்வேறு வழிகளில் ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து முன்னோடி இயற்கை விவசாயிகளை வரவழைத்து தமிழர் பகுதிகளில் இயற்கை விவசாய கருத்தரங்குகள் கனடாவை தளமாகக் கொண்டியங்கும் புதிய வெளிச்சம் அமைப்பினரால் நடாத்தப்பட்டன. இவை மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. பசுமையை, இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் தனி இதழின் அவசியம் ஒன்றும் இங்கே உணரப்பட்டுள்ளது. அப்படியான இதழ்களின் வருகையே விவசாயிகள் மத்தியில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி எம் தேசத்திற்கு ஏற்ற சரியான விவசாய முறையை நோக்கி நகரச் செய்யும்.
நஞ்சற்ற உணவை உண்பதற்காக இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதுடன் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என இந்த ஆண்டிலாவது உறுதியெடுத்துக் கொள்வோம்.
இயற்கை விவசாயம் ஒன்றுதான் எமது சமூகம் மேம்பட ஒரே வழியாகும் என்பதனை அனைவரும் உணரவேண்டும்.
துருவன்
நிமிர்வு மாசி 2018 இதழ்-
Post a Comment