கிழக்கு மக்களின் பூர்வீகமும் காணிப் பிரச்சனைகளும்.

இலங்கையில் கிழக்கு மாகாணம் சமூக ரீதியில் பல பிரத்தியேகப் பண்புகளைக் கொண்டு விளங்குகின்றது. இம்மாகாணத்திலுள்ள திருகோணமலைஇ மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் பல பொதுப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றுள் பிரதானமானது காணிப் பிரச்சனைகளாகும்.

வரலாற்றுப் போக்கில் பார்க்கும்போது ஓரளவுக்காவது நிரூபிக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளின்படி இம் மாகாண நிலப் பரப்புக்குள் வாழ்ந்து வந்த பிரதான மக்கட் தொகுதியினர் தமிழர்களேயாவர். ஆனால் நீண்ட வரலாற்று ஓட்டத்தில் மிகப் பிந்திய காலங்களில் முஸ்லிம்  மற்றும் சிங்கள மக்கள் இங்கு குடியேற்றப்பட்டனர். பல்வேறு முரண்பாடுகள்இ ஒத்திசைவுகள் மற்றும் தொடர்புகளின் பின்னர் ஒன்று கலந்து தற்போது ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

நீண்ட காலம் தமிழ் மக்களின் பூர்வீக பூமியாகவே கிழக்கு மண் காணப்பட்டது. கணக்கெடுப்புகளின்படி கி.பி.15ஆம் நூற்றாண்டுவரை பெரும்பான்மைத் தமிழர்களுடன் ஒருசில அரேபிய வழிவந்த சோனக மக்களும் பல்வேறு தொடர்புகளின்  நிமிர்த்தம் குறைந்தளவு சிங்கள மக்களுமே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். பௌத்த மதத் தமிழர்களும் கணிசமானளவு இருந்தனர். இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பௌத்த தொல்லியல் அடையாளங்கள் பௌத்தமத தமிழர்களுடயவையேயாகும்.

15 ஆம் நூற்றாண்டின் பின்னர் போர்த்துக்கேயருடன் ஏற்பட்ட வர்த்தகப் போட்டி காரணமாக புத்தளம் போன்ற மேற்குக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் போர்த்துக்கேயரால் பாதிக்கப்பட்டு கண்டி மன்னனிடம் தஞ்சமடைந்தனர். பின் கண்டி மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டு கிழக்கில் ஆட்சி செய்த தமிழ் சிற்றரசர்களின்  நிலப் பிரதேசங்களில் அவர்கள் குடியேற்றப்பட்டனர். இங்குள்ள முஸ்லிம்கள் வாழும் ஊர்களின் பெயர்கள்  இறுதியில் “குடி” என அமைந்திருப்பது அவைகள் குடியேற்றங்கள் என்பதற்கு நல்ல சான்றாகும். அதன் பின்னர் அவர்கள் சில தமிழ் சமூகக் குழுக்களுடன் தொடர்புபட்டு ஒற்றுமையாக வாழ்ந்தனர். அதனால் “குடி” எனப்படாத தமிழர் கிராமங்களிலும் அவர்கள் நிலை கொண்டனர்.

இதுபோலவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் சிங்கள மக்கள் இங்கு குடியேற்றப்பட்டு வருகின்றனர். திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதேச எல்லையோரங்கள் ஊடாக சிங்கள குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1961 இல் மட்டக்களப்பிலிருந்து அதன் இயற்கை வளங்கள் அடங்கிய தென்பகுதி பிரிக்கப்பட்டது. தென் மாகாணத்திலுள்ள சிங்களப் பகுதிகள் சில அதனுடன் சேர்க்கப்பட்டு சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் தமிழ் முஸ்லிம் மக்களுடன் சிங்கள மக்களும் கிழக்கு மாகாணத்தில் பிரதான சமூகமாக மாறினர்.


கிழக்கு மாகாணம் முதன்முதலாக கோல்புறூக் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது  1 அக்டோபர் 1833 இல் உருவாக்கப்பட்டது. இது தற்போது கிட்டத்தட்ட 9996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்  கொண்டது. அதில்  நீர்ப்பரப்பு 635 சதுர  கிலோமீட்டர். இலங்கையில் 2 வது பரப்பளவு கூடிய மாகாணமாகத் திகழ்கின்றது. ஆனால் ஆரம்பத்தில்  இதனிலும் குறைவான பரப்பளவையே இது கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட எல்லை நிர்ணயங்களினாலேயே இதன் பரப்பளவு அதிகரிக்கப்பட்டது.

எனவே வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது இங்குள்ள காணி நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் போன்றன மிக நீண்ட காலம் தமிழர்களுக்கே பூரண உரித்துடையவையாக இருந்துள்ளன என்பது தெளிவாகின்றது. பிற்பட்ட காலங்களில் தான் அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய இனங்களுக்கும் உரித்தாகத் தொடங்கின. தமிழர்களுடைய நிலங்கள் மற்றும் வளங்கள் பெருமளவு பறிபோயினும் இன்றும் கிழக்கு மாகாண இன விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது பெருமளவான  நிலங்கள் தமிழர்களுக்கே உரித்தாகவுள்ளன. அதுவே இங்கு சமூக முரண்பாடுகளுக்கு முக்கிய காரணியாகவுமுள்ளது. 

எது எவ்வாறு இருந்தபோதிலும் சமகாலத்தில் மூவின மக்களும் கலந்து வாழும் பல்லினத் தன்மையான ஒரு வளம் மிக்க மாகாணமாகவே கிழக்கு மாகாணத்தை நாம் அறிமுகப்படுத்தலாம். இங்கு அனைத்து இனங்களும் நெடுங்காலமாக ஒற்றுமையுடனே வாழ்ந்து வந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர். “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தத்துவத்தைக் கடைப்பிடித்து சீரும் சிறப்புமாக வாழ்வது  இங்குள்ள அனைத்து இன மக்களினதும் கடைமையுமாகும்.

அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் புதிதாக காணிப் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன. தமிழர்களின் நிலங்களை முஸ்லிம் மக்கள் ஆக்கிரமிக்கின்றனர் எனவும் தமிழ் முஸ்லிம் மக்களின் நிலங்களை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கின்றனர் எனவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கான உண்மையான நியாயபூர்வமான காரணங்களை நாம் ஆராய வேண்டும். உண்மையில் திட்டமிட்ட வகையிலோ இயற்கையான முறையிலோ கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இனவிருத்தி ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது அண்மைக் காலமாக திடீரென்று அதிகரித்துள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இதனை முஸ்லிம் புத்தி ஜீவிகள் பலரும் கூட சுட்டிக் காட்டியுள்ளனர். இவ் விடயத்தை தவறென்று கூறி அச் சமூகத்தின் மீது மற்றைய இனங்கள் காழ்ப்புணர்ச்சி கொள்ளவும் முடியாது. அது அவர்கள் சமூகம் சார்ந்த விடயம்.

ஆனால் முஸ்லிம்களுடைய மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்கனவே குறைந்த நிலப் பரப்பில் வாழ்ந்த அம் மக்களுக்கு மேலும் காணிகள் தேவைப்படுகின்றன. அவ்வாறான நிர்ப்பந்தத்திற்குள் அவர்கள் தள்ளப்படுகின்றனர். அது அவர்களின் பிழையுமல்ல. இதன் காரணமாக அவர்கள் தமிழர்களிடம் இருந்து சட்ட பூர்வமாக காணிகளை வாங்குகின்றனர். தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசங்களில் இருக்கும் அரச காணிகளை சுவீகரிக்கின்றனர். இடப் பற்றாக்குறை காரணமாக அரசாங்க ஒத்துழைப்புடன் வயல் நிலங்களையும்இ குளங்களையும் மற்றும் நீர்நிலைகளுள்ள பிரதேசங்களையும் நிரப்பி குடியிருப்புக்களை அமைக்கின்றனர். இதற்கு உதாரணமாக அக்கரைப்பற்று வட்டமடு மேய்ச்சல் தரை விடயத்தையும்இ கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தையும்இ அம்பாறை மாவட்டங்களில் பெருமளவு வயல்களையும்இ குளங்களையும் மண்ணிட்டு நிரப்பி குடியிருப்புக்களை ஏற்படுத்துதலையும் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் தமிழர் பிரதேசங்களை ஊடுருவும் திட்டங்களையும் குறிப்பிடலாம்.

ஒருசில தனிநபர்கள் தான் தமிழர்களின்  மயானங்களையும்இ ஏனைய  பொதுக் காணிகளையும் அபகரிக்க முற்படுகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாக மட்டக்களப்பு முறாவோடையில் தமிழ்ப் பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானம் ஒன்றையும்இ அம்பாறை அட்டப்பள்ளம் எனும் தமிழ்க் கிராமத்தின் சுடுகாட்டு நிலத்தையும்இ பெரியநீலாவணை கிராமத்தின் சுடுகாட்டு நிலத்தையும் மற்றும் கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலய மடத்து வளவையும் (இன்றும் வழக்கு விசாரணை நடந்துகொண்டுள்ளது) முஸ்லிம் இனத்தைச் சார்ந்த தனியார்கள் அபகரிக்க முற்பட்டுள்ளமையைக் கூறலாம். இன்னும் இதுபோன்று பல ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. முன்னமே ஆயிரக் கணக்கான தமிழர் காணிகள் இவ்வாறு பறிபோயுமுள்ளன.

இதுபோல் கிழக்கில் முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புகளும் மெல்ல மெல்ல நடைபெறாமல் இல்லை. அம்பாறையில் தீகவாபியை அண்டிய பிரதேசங்களிலும்இ மல்வத்தை பொத்துவில் போன்ற பகுதிகளிலும் மற்றும் திருகோணமலையின் எல்லைப் பகுதிகளிலும் அரசாங்கத் திட்டங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன. அண்மையில் அம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசலும் வர்த்தக  நிலையங்களும் சேதமாக்கப்பட்டமை இந்தப் பின்னணியிலேயாகும். அதுபோல் பல முஸ்லிம் கிராமங்களை அபகரிக்கும் திட்டங்களும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அம்பாறை  நிருவாகப்  பிரிவின்  உயர் பதவிகளில் சிங்கள இனத்தவரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளால் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒருவிதமான அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. எங்கே தங்கள் பூர்வீக நிலங்கள் பறிபோய் கிழக்கில் தங்களின் இருப்புக்கே ஆபத்து வந்துவிடுமோ என அவர்கள் பயப்படுகின்றனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனால் சில நேரங்களில்  இனங்களுக்கிடையே முறுகல் நிலைகள் ஏற்படுகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பின்புலமாக அவர்களின் அமைச்சர்களும்இ பிரதி அமைச்சர்களும் மற்றும் உயர் பதவிகளிலுள்ள அரச உத்தியோகத்தர்களும் உள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரையில் உள்ளூர் அரசியல் வாதிகளைத் தவிர மேல்மட்ட அரசியல்வாதிகள் எவரும் இப்பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லை.

உண்மையில் இங்கு வாழும் மூவின மக்களில் எந்தக் குறிப்பிட்ட ஒரு மக்களின் மீது மட்டும் நாம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. இப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அரசாங்கங்களின் கொள்கைகளிலும்இ சட்டங்களிலும் மற்றும் அமுலாக்கலிலும் காணப்படும் பாரிய குறைபாடுகளும் பக்கச் சார்புகளுமேயாகும். மக்கள் நலன் கருதி பக்கச் சார்பற்று முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை அரசாங்கங்களின் தவறாகும்.

எனவே இனிவரும் காலங்களிலாவது கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் “நிலைத்திருக்கும் அபிவிருத்தி” அதாவது எதிர்கால சந்ததிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அபிவிருத்தி என்பதை நோக்காகக் கொண்டு சட்டங்களை இயற்றி உரியவாறு அமுல்படுத்துவதுடன் இங்கு வாழும் சகல மக்களும் மற்றைய இனங்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இன வேறுபாடுகளையும் வன்முறைகளையும் களைய வேண்டும். அப்போதுதான்  ஒரு சுபீட்சமான கிழக்கு தேசத்தில் நாம் வாழலாம்.

சுந்தர்-
நிமிர்வு  பங்குனி2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.