ஈழத்தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை - பகுதி 02
பெண் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பெண்களுக்கான வாக்குரிமைக்கான போராட்டம் ஒரு முக்கியமான ஆரம்பப் புள்ளியாகும். வாக்குப்பலத்தால் பெண்களும் ஒரு நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதற்கு உரித்துடையவர்கள் ஆகிறார்கள். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் பெண்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஆணாதிக்க அரசியல்வாதிகளை எண்ண வைப்பது பெண்களுக்கு உள்ள வாக்குரிமை.
பெண்களுக்கான வாக்குரிமை இலகுவில் கிடைத்த ஒன்றல்ல. பல நீண்டகாலப் போராட்டங்களின் விளைவாகவே அது அடையப்பட்டது. ஆனால் இந்த உரிமை குறிப்பாகத் தமிழ்ப் பெண்களால் உரியமுறையில் பயன்படுத்தப் படுகிறதென கூறமுடியாது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பிலிருந்து பிரச்சார நடவடிக்கைகள் உள்ளீடாக பெண்கள் இரண்டாம் பட்சமாகவே நடத்தப் பட்டனர். தேர்தல் சட்டத்தின் படி 25 வீதமான ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டும் அவர்களின் பிரதிநிதித்துவம் அந்த அளவிற்கு எட்டப் படவில்லை. பெண் வேட்பாளர்கள் இரண்டாம் நிலைப்பட்டியலில் சேர்க்கப் பட்டனர். சில பெண் வேட்பாளர்கள் பயமுறுத்தப்பட்டனர். சிலர் சமூகவலைத்தளங்களினூடக பாலியல் ரீதியில் கேலி செய்யப் பட்டனர். இந்த நிலை இனியும் தொடராமல் இருக்க வேண்டுமாயின் தமிழ் பெண்கள் அரசியல் விழிப்படைய வேண்டியது அவசியம். தமது வாக்குரிமையை தமது விடுதலைக்குப் பயன் படும் வகையில் உபயோகிக்க வேண்டும்.
ஈழத்தமிழ் பெண்களின் முன்னேற்றப் பாதையில் பிரதானமான கட்டமாக பார்க்கப்படும் காலப்பகுதி பிரித்தானியர் ஆட்சிக் காலமாகும். பிரித்தானியர் இலங்கையினை ஆட்சி செய்த காலப்பகுதியினுள் எமது தனித்துவம் அவர்களால் பறிக்கப்பட்டதெனபல குறைகளை அவர்களின் மீது சுமத்துகின்றோம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் பெண்கள் வீறு கொண்டு எழுந்த காலம் பிரித்தானியர் காலமே. தமிழ் சமுதாயத்தை பொறுத்தவரையில் உரிமை, சமத்துவம், சுதந்திரம் என்பவை வெறுமனே ஆண்களுக்கு மட்டும் உரியது என பார்க்கப்பட்டதை கடந்த பகுதியில் தெளிவுபடுத்தி இருந்தோம். ஆனால் அவை அனைத்தும் ஆண்களைப் போல பெண்களும் அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்த்தி அதற்கான போராட்டங்களை முன்னெடுத்த காலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலமாகும்.
குறிப்பாக சமுதாயம் என்பது பல சிறு குழுக்களைக் கொண்ட கூட்டமைப்பாகும். இந்த சமுதாய கூட்டமைப்பினுள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என சகல தரப்பினரும் சமமாக நடாத்தப்படல் வேண்டும். இத்தகைய நடுநிலைமைய வென்றெடுப்பதற்காக பெண்கள் தாமாகவே முன்வந்து தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வாய்ப்பானது தமிழ் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் பிரித்தானியர் ஆட்சியின் போதே கிடைக்கப்பெற்றது.
இலங்கையை பிரித்தானியர் தமது ஆட்சியிக் கீழ் 1796-1948 வரை வைத்திருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவர். அக்கால கட்டத்தில் பிரித்தானியாவில் பெண்கள் தமது வாக்குரிமையை பெற்றெடுப்பதற்கு பல போராட்டங்களை செய்தனர். இருப்பினும் உலக வரலாற்றினை பொறுத்தவரையில் 1789 ஆம் ஆண்டு ஜீன் 14 ஆம் திகதி பாரிசில் பிரெஞ்சுப்புரட்சியின் போது பெண்கள் முதல் முதலாக போர் கொடி உயத்தினார்கள். இச்சந்தர்ப்பத்தில் தான் “பெண்களும் ஆணுக்கு சமமாக உரிமைகளை பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் அடிமைகளாக நடாத்தப்படுவதில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று பெண்கள் சார்பான மேன்மையை வலியுறுத்தி பல பெண்கள் போராடினர்.”
இப்போராட்டமே பெண்கள் தம் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான முதலாவது போராட்டமாக அமைந்தது எனலாம். இப் போராட்டத்தின் வேகம் பல நாடுகளிற்கு ஒரே காலகட்டத்தில் கொண்டு செல்லப்பட்டது. இதனால் பலநாடுகளில் வாழும் பெண்களும் தமது ஆதரவை இதற்கு தெரிவித்ததுடன், தமது நாடுகளிலும் “பெண்கள் உரிமைக்கான போராட்டத்தினை வலுப்படுத்த வேண்டும்” என்ற யதார்த்தத்தினை உணர்ந்து கொண்டனர்.
இவ் வரலாற்றுப் புரட்சியின் அடுத்த கட்டம் இங்கிலாந்தில் ஒலித்தது. அதாவது பிரெஞ்சு புரட்சி என்பது அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த ஒரு பன்முகப்படுத்தப்பட்ட புரட்சி ஆகும். ஆனால் இதன் அடுத்த கட்டமாக இங்கிலாந்தின் பெண்கள் அமைப்புக்களால் “பெண்களுக்கு சுதந்திரம், சமத்துவம், போன்றவற்றை வழங்குவதற்கு முன்னர் அவர்களுக்கு வாக்குரிமையை வழங்குங்கள். ஏனெனில் வாக்குரிமை என்ற ஓர் ஆயுதம் பெண்கள் சார்ந்த சகல ஒடுக்கு முறைகளையும் வெல்வதற்கு உதவும்” என்பதனை 20 ஆம் நூற்றாண்டில் வெளிப்படுத்தினர். இதனால் இங்கிலாந்தில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இவ்வமைப்பிற்கு பெண்கள் வாக்குரிமை போராளி என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டது.
இங்கிலாந்தில் 1918 பங்குனி மாதம் நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டமூலத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அதுவும் சில தகைமைகளக் கொண்ட பெண்களுக்கே இது வழங்கப்பட்டது. ஆண்களைப் பொறுத்தவரை எல்லா 21 வயதிற்கு மேற்பட்ட எல்லா ஆண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இவ்வாறான பாரபட்சம் இருந்த போதிலும் இச்சட்டமூலம் பெண் வாக்குரிமைப் போராளிகளால் பெரும் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவெனில் அதே ஆண்டு கார்த்திகை மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பாராளுமன்ற உறுப்பினராகலாம் என சொல்லப் பட்டதுஇ ஆனால் அவர்கள் 31 வயது வரை வாக்களிக்க முடியாது. இறுதியில் 1928 ஆம் ஆண்டிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாக்குரிமை வழங்கப்பட்டது.
இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட இப்போராட்ட வடிவம் பிற்பட்ட காலத்தில் இலங்கை உட்பட பிரித்தானியர் ஆட்சி செய்த சகல நாடுகளிற்கும் பரவியது. இதன் தாக்கத்தின் விளைவாக இலங்கையிலும் பெண்கள் தமது வாக்குரிமையை வென்றெடுக்க முன்வந்தனர். இவ் முன்வருகை தமிழ் சமுதாயத்தின் பழமைசார் கருத்துக்களை புறம்தள்ளி வாக்குரிமை விடயத்தில் ஆரோக்கியமான சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு காரணமாயிற்று. காரணம் பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட அரசியல் சார் விடயங்களில் எல்லா சாதியினரும் உள்நுழைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தினால் இதுவரை தமிழ் சமுதாயத்தில் சாதி ரீதியாக காட்டப்பட்ட அடக்கு முறை ஓரளவு தளர்வடையத் தொடங்கியது.
வாக்குரிமையில் மட்டுமல்ல, பெண்களும் ஆண்களைப் போல கல்வி கற்பதிலும், அரச தொழில்களில் ஈடுபடுவதற்கும் ஆர்வம் உள்ளவர்களாக மாறினர். இவ்வார்வம் ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்கவும், ஏனையவர்களுடன் சமமாகப் பழகவும் ஏற்புடையோர் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது. இச்சிந்தனை சமத்துவம் என்ற சொல்லினை தமிழ் சமுதாயத்தில் ஓங்கி உரக்க செய்தது எனலாம்.
தமிழ் பெண்கள் வெறுமனே மேற்கத்தைய கல்வியில் நாட்டம் உடையவராக இருக்கவில்லை. மேற்கத்தைய நாகரிகத்தினையும் பார்த்து பழகிக்கொள்ள முற்பட்டனர். இம்மாற்றம் தமிழ் சமுதாயத்தில் பெண் அடக்குமுறைக்கு எதிரான போரை முன்னெடுக்க பெரிதும் உதவியது எனலாம்.
“ஆணுக்கு பெண் சரி நிகர் சமன்” எனும் பாரதி வரிகளை பிரித்தானியர் காலத்தில் தான் எமது சமுதாயம் உணர்ந்து கொண்டது எனலாம். இருப்பினும் பெண்களுக்கு 1930இல் டொனமூர் அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட வாக்குரிமை சாதாரணமாக கிடைத்த ஒன்றல்ல. ஏனெனில் தமிழ் சமுதாய சிந்தனைகளில் மூழ்கி இருந்த பலர் இவ் வாக்குரிமையை பெண்களுக்கு சுலபமாக வழங்கி விடவில்லை.
1922ல் எழுதப்பட்ட “எங்கள் தேசிய வாழ்க்கையில் பெண்களுக்கான இடம்” என்ற கட்டுரையில் வாக்குரிமைக்கான போராடும் பெண்களை பார்த்து ஆண்கள் ஓர் சொற்றொடரை அடிக்கடி பாவிப்பது வழக்கமாயிற்று. “அன்புக்குரிய பெண்கள் வீட்டு வேலையை விட்டு விட்டு ஏன் வாக்கு போட போக வேண்டும்” என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. மறுபுறம் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் “நாங்கள் பெண்களை தனியாக விட்டு விட வேண்டும்;. அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் அவர்கள் வீட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும். கடவுளின் ஒழுங்கு எந்த விதத்திலும் குலைக்கப்படக் கூடாது. அது சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.
இவ்விருவரின் கருத்து பெண்களை வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்க வேண்டும். அவர்களுக்கு எந்த உரிமைகளும் கிடைக்க கூடாது என்பதனை வலியுறுத்துவதாக அமைகின்றது. எனக்கு ஒன்று விளங்கவில்லை. எது கடவுளின் ஒழுங்கு? பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்பது கடவுளின் கட்டளை. அக்கட்டளையையும் மூட நம்பிக்கையும் உடைத்தெறியும் வகையில் பெண்களிற்கு கிடைத்த வாக்குரிமை பெண்களின் வாழ்க்கைக்கு வலுவூட்டியது. எந்த தமிழ் சமூகம் பெண்ணுக்கு முட்டாள், வாக்களிக்க தெரியாதவள் என்று நாமம் சூட்ட நினைத்ததோ, அதே சமூகத்தில் இன்று தமிழ் பெண் இமாலய வெற்றியுடன் பயணித்து கொண்டிருக்கின்றாள் என்பதனை எவரும் மறக்க கூடாது.
ஆனால் தமிழ் சமுதாயத்தில் எல்லோரும் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதை தடுக்க முன்வரவில்லை. குறிப்பாக அக்காலத்தில் (பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில்) வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய சட்டசபை உறுப்பினர் எல்.ரத்தினம் தனது கருத்தை பின்வருமாறு கூறினார். “ஏன் நாங்கள் இலங்கையிலுள்ள பெண்களை அடிமைகளாகவோஇ அல்லது அரை அடிமைகளாகவோ பாவிக்க வேண்டும். அவர்களுக்குரிய வாக்குரிமையைக் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர வேண்டும். அவர்கள் தங்கள் வாக்கை நியாயமாகவே பாவிப்பர்”எனக்கூறினார்.
எமது தமிழ் சமுதாயத்தில் பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக வாக்குரிமை எனும் ஆயுதத்தை கையில் ஏந்தி அதனை அற வழியில் உபயோகித்து வெற்றி அடைந்தனர். இவ் வெற்றியால் தமிழ் பெண்கள் மத்தியில் சமுதாயம் பற்றிய சிந்தனை வேர்கொண்டு வளர்ந்தது. கல்வி, வாக்குரிமை இரண்டையும் பெற்ற பெண்கள் பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் தமது இனவிடுதலைக்காக போராட தொடங்கினர்.
(ஆயுத போராளியான தமிழ் பெண்கள் அடுத்த அத்தியாயத்தில்)
செல்வி. டினோசா இராஜேந்திரன்
உதவி விரிவுரையாளர் - வரலாற்றுத்துறை
யாழ். பல்கலைக்கழகம்
நிமிர்வு பங்குனி2018 இதழ்
Post a Comment