ஆசிரியர் பார்வைஆசியாவின் நீண்ட போராட்டம் 

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வவுனியாஇ கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற போராட்டங்களில் பங்கேற்ற காணாமல்      ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குறிப்பாக தாய்இதந்தையர் முதுமை காரணமாக இறக்கும் சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன. சாட்சிகள் இவ்வாறு இறந்து கொண்டிருக்கும் நிலை ஆபத்தானது. இந்நிலை தொடருமானால் சில வருடங்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இயற்கையாக இறக்கும் தருணங்களின் பின்னர் இந்தப் போராட்டங்களும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விடும். உறவுகளால் குளிர், மழை, வெயில், உட்பட தங்களது முதுமை நிலையையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக ஆசியாவின் நீண்ட போராட்டமாக முன்னெடுத்து செல்லப்படுகின்றமை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில்   எங்களது அரசியல் தலைமைகளுக்கு கிஞ்சித்தேனும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் போதியளவு தூர தரிசனம் இருப்பதாக தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாத்திரமே மேற்படி போராட்டங்களில் பங்குபற்றி வருகிறார்கள். ஏனைய மக்கள் குறித்த போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்த இதழில் உள்ள கட்டுரையொன்றில் இப்போராட்டங்களை ஒருங்கிணைக்க மாகாணசபை போன்ற தமிழரின் அதிகார அமைப்பு பயன் பட வேண்டும் என பிரேரிக்கப்படுகிறது.  இப் பிரேரணையின் சாத்தியப்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட வேண்டும். வெறுமனே மத்திய அரசு இடும் கட்டளைகளை நிறைவேற்றத் தான் மாகாண அரசு உள்ளதா? தமிழ் மக்களின் ஒரு பகுதியினரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தப் போராட்டங்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர வேண்டியது அம்மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மாகாணசபையின் கடமையில்லையா?

ஏற்கனவே இலங்கையில் இரகசிய சிறைக்கூடங்கள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் சிறையிலிருந்து வெளியான கைதியொருவர் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு கொடுத்துள்ளது. சிறையில் சுயநினைவற்ற நிலையில் பல அரசியல் கைதிகள் இருப்பதாக அவர் கூறிய தகவல் உறவுகளை நிலைகுலைய வைத்துள்ளது.

ஜனாதிபதியும்இ பிரதமரும் உறவுகளுக்கு உரிய பதிலை வழங்காத நிலையில், இராணுவத்திடம் உத்தரவின் பேரில் கையளிக்கப்பட்டு காணாமல் போனோரின் நிலை தொடர்பில் சிறீலங்கா அரசு உரிய பதிலை வழங்கியே ஆக வேண்டும்.

எத்தனை காலத்துக்கு தான் சர்வதேசத்தை ஏமாற்றப் போகிறது சிறீலங்கா அரசு? 

 செ.கிரிசாந்
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.