விக்கினேஸ்வரனின் எதிர்காலம்



வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் காட்டியுள்ளார்.  மீண்டும் முதலமைச்சர் வேட்பாளாராக தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்துவதற்கான சாத்தியம் குறைவு என்று கூறியுள்ளார். அவ்வாறு அழைக்காத பட்சத்தில் ஒரு மாற்று அணியை உருவாக்கி மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராக தான் தயார் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கும் படி தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரனை பல காலமாக வருந்தி அழைத்திருந்தனர். இப்பங்காளிக் கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அடக்கம். மாற்று அணியொன்றை உருவாக்கி இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன என்று கூட்டமைப்புக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை நிறையவே இருந்தது. ஆனால் அதற்கு முதலமைச்சர் எந்தவொரு சாதகமான பதிலையும் வழங்கவில்லை.

2017 ஆம் ஆண்டு ஆனி மாதமளவில் வட மாகாண சபையில் அவர் மீது தமிழரசுக் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்து வடமாகாணமெங்கும் மக்கள், முக்கியமாக  இளைஞர்கள்,  கொதித்து எழுந்தனர்.   அவர்கள் நடத்திய பேரணியின் இறுதியில் தனது  இல்லத்தில் அவர்களைச் சந்தித்த முதல்வர் “நான் உங்களுடன் இருப்பேன்” என  வாக்குறுதி வழங்கினார்.  மாற்று அணிக்குத் தலைமை தாங்க வரும் படி அப்பொழுது இளைஞர்கள் விடுத்த கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.  மாற்று அணியை உருவாக்குவதற்காக கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை அவர்  தவற விட்டார்.

அண்மையில் உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்தன.  அதற்கு தமிழ் மக்கள் பேரவையின் ஆசியை வேண்டி நின்றன.  உண்மையிலேயே மறைமுகமாக அவர்கள் வேண்டியது தமிழ் மக்கள்  பேரவையின்  இணைத்தலைவரான முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையையே.  அப்பொழுதும் மாற்று அணிக்குத் தலைமை தாங்க கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தவற விட்டார்.

அது மட்டுமல்லாமல் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் பேரவையூடாக ஒரு கட்சி சார்பற்ற மக்களின் தலைமை உருவாகுவதற்கான சந்தர்ப்பத்தையும் தவற விட்டார்.  தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை செல்வாக்குச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டது.

எமது  தேசத்தின்  விடுதலைக்கான போராட்டத்தில் இது போன்ற அரிய சந்தர்ப்பங்கள் அரசியல் கட்சிகளுக்கும் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தன.  அப்போதிருந்த தலைமைகள் அச்சந்தர்பங்களின் தார்ப்பரியத்தைப் புரியாமலும் ஒரு தொலைநோக்கப் பார்வை இல்லாமலும் அவற்றைத் தவற விட்டன.  அதனால் எமது இனம் இழந்த இழப்புக்கள் சொல்ல முடியாதவை.  முதல்வர்  விக்னேஸ்வரனும் தனக்குக் கிடைத்த மூன்று அரிய சந்தர்ப்பங்களையும் இதே போன்று தவற விட்டுள்ளார். அவற்றை சரிவரப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் அரசியல் விற்பன்னம் அவரிடம் இருக்கவில்லை. அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு தனக்கு சந்தர்ப்பம் வழங்கப் போவதில்லை என்ற தொலைநோக்குப் புரிதலும் இருக்கவில்லை. துணிச்சலாக முடிவெடுக்கும் தன்மையும் அவரிடம் இல்லை.  அதே வேளை இன்று வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் ஆட்சி மாற்றம் தொடர்பாக ஒரு நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை எழுந்துள்ளது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் ஒரு அணி எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த முடியும் என்பது கேள்விக் குறியே. இதுமுதல்வர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல. ஆழமான அரசியல் முன்னனுபவம் இல்லாமையால் எழும் குறைபாடு தொடர்பான விமர்சனம்.

தேர்தல்களில் தமக்கு ஏற்பட்ட முன்னேற்றங்களை வைத்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாமே ஒரு மாற்றுத் தலைமை என கருத முற்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்னொரு மாற்று அணி அல்லது மாற்றுத் தலைமையின் தோற்றம் தமிழ் மக்களை மேலும் பிளவு படுத்தவே செய்யும். அது சிங்கள அரசாங்கத்துக்கு மேலும் வாய்ப்பாகப் போய்விடும்.  தமிழ் தேசியத்தை வலுவாக ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று தாமே மக்களின்  ஏகபோக  பிரதிநிதிகள்  என்று  நிரூபிக்கும் வரை இக்கட்சிகளின் கோரிக்கைகள் அந்தக் கட்சி நலன் சார்ந்த கோரிக்கைகளாகவே பார்க்கப் படும்.  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதவிடத்து சிறி லங்கா அரசும் சர்வதேசமும் தம்மோடு ஒத்துப் போகும் கட்சிகளுடன் பேசிக் கொண்டு ஒரு  தீர்வுத்திட்டத்தை எம்மக்கள் மீது திணிப்பதற்கு முற்படும்.  இதையே நாங்கள் இன்று நடைமுறையில் காண்கிறோம்.

ஆனால் தமிழ் மக்கள் பேரவை போன்ற ஒரு கட்சி சாரா வெகுஜன அமைப்பினூடாக ஒரு தலைமையைக் கட்டியமைத்து அதனூடாக நம் கோரிக்கைகளை முன்வைப்போமானால்அக்கோரிக்கைகள்கட்சிசார் அரசியல் பேரங்களுக்கு அப்பால் பட்டவை.  அதனாலேயே தமிழ் மக்களின் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க வேண்டியது தமிழ் மக்கள் பேரவை அல்லது  அது போன்ற  வெகுஜன அமைப்புக்களே என்று நாம் கருதுகிறோம்.

ஒரு புறத்தில் தமிழ் மக்களின் நிர்க்கதியான நிலை கண்டு முதல்வர் விக்னேஸ்வரன் மனங்கலங்குவது தெரிகிறது.  இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கினால் தமிழ் மக்கள் நட்டாற்றில் விடப் பட்டு விடுவார்களே என்ற அவரின் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சட்ட வல்லுனர் என்ற முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலால் தமிழ் மக்கள் சட்ட ரீதியாக அடையப் போகும் பின்னடைவுகளை அவரால் எதிர்வு கூறி புரிந்து கொள்ள முடிகிறது.  அதனாலேயே தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அறிக்கை விடுகிறார். மேடைகளில் பேசுகிறார். சர்வதேச பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார். செயற்பாடுகளை மேற்கொள்கிறார். இவ்வாறான சூழலில் அரசியலை விட்டு விலகியிருக்கக் கூடாது என்ற அவரது நல்லெண்ணம் புரிகிறது.  தனக்கிருக்கும் அங்கீகாரத்தையும் பிரமுகர் அந்தஸ்த்தையும் பயன் படுத்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் புரிகிறது. ஆனால் இவை மட்டுமே அரசியலில் மாற்றுத் தலைமையை நிறுவ போதுமானவை அல்ல.

இன்னொரு புறத்தில் முதல்வர் விக்னேஸ்வரனின் சித்திரை திருநாள் கேள்வி பதிலில் இன்னொரு கருத்தும் இங்கு கவனிக்கப் படவேண்டியது.  தான் பதவிகளைத் தேடிப் போவதில்லை எனவும் பதவி தன்னைத் தேடி வந்தது எனவும் கூறியுள்ளார். அப்படியாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு அழைத்தால் அவர் அதனை ஏற்றுக் கொள்வார் எனவே படுகிறது.  அவ்வாறெனின் அவர் கோடிட்டுக் காட்டிய மாற்று அணி உருவாகாது. அப்படியானால் ஒருவிதத்தில் இதுவும் தேர்தல் நோக்கிய அரசியல் சதுரங்கமாகவே படுகிறது.  முதலமைச்சர் கூறும் மாற்று அணி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்தவித சமரசமும் இன்றி முன்னிறுத்தும் என்ற நம்பிக்கை போய் கூட்டமைப்புடனான பேரத்துக்கு உதவும் என்ற நிலைக்கு சுருக்கப் பட்டு விட்டது. முதல்வரின் மாற்று அணி பற்றிய முன்மொழிவு கூட கூட்டமைப்பை நோக்கி அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு தந்திரமாக இருக்குமானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இல்லையென்றால் தேர்தல்களை முன்னிட்டு மட்டுமே தமிழ் தலைவர்கள் மாற்றுத் தலைமையைப் பற்றி சிந்திப்பது தமிழ் அரசியலின் சாபக்கேடாக வந்து விட்டது எனலாம்.

மேலும், முதலமைச்சராக விக்னேஸ்வரனின் நிர்வாகத் திறமையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பல தரப்புக்களாலும் பல்வேறு தடவைகளிலும் முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்டன.  முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதில் இவர் காட்டிய அசமந்தப் போக்கு இவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கே இட்டுச் சென்றது.  இந்த நிலையில் இவர் இன்னொரு தடவையும் முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் பழைய குறைபாடுகளை நீக்கி வினைத்திறனுடன் செயற்படுவார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.  அதாவது மாகாணசபையின் நிர்வாகத்தை நவீனமயப் படுத்தி அடுத்த படிநிலைக்கு ஏற்றுவார் என்பதற்கான சாத்தியங்கள் காணப்படவில்லை.

அதேவேளை இனிவரும் முதலமைச்சர் தமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்றால் மட்டும் போதாது.  இனிவரும் முதலமைச்சர் காணாமல் போனோரைத் தேடும் போராட்டத்துக்கு வெறுமனே ஆதரவு வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு இருந்து விட முடியாது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கையாள வேண்டிய தேவையுள்ளது. காணிவிடுவிப்பும் முக்கியம்.  இப்பிரச்சனைகளை மாகாணசபை ஒரு நிறுவன ரீதியில் கையேற்க வேண்டும்.  போராடும் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தர தனது நிறுவனத்தைப் பயன் படுத்துவதற்கு எதிர்கால முதலமைச்சர் தயங்கக் கூடாது. இவ்வாறான துணிச்சலான முடிவை எடுக்கக்கூடியவர் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னும் நிரூபிக்கவில்லை.

வடமாகாண முதலமைச்சராகி தொடர்ந்தும் அதன் செயற்பாடுகளை மத்திய அரசாங்கம் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் வெறும் ஒரு நிர்வாக இயந்திரமாகத் தொடரும் முதலமைச்சர்தமிழ் மக்களுக்கு தேவை இல்லை.  அந்த நிறுவனத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன் படுத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய முதலமைச்சரே தேவை. மேலே உள்ள பந்தியிற்கூறப்பட்ட முக்கியமான பொறுப்புக்களையும் கையேற்று வினைத்திறனுடன் செயலாற்றக் கூடிய தலைமயின் கையில் அப்பதவியை ஒப்படைப்பதே இன்றைய தேவை.அவ்வாறு செயலாற்றக் கூடியவராக இதுவரை பதவி வகித்த முதல்வர் காணப்படவில்லை.  இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதுடன் தமது அரசியல் கடமை முடிந்து விட்டது என மாகாணசபை நின்று விட்டது.இனப்படுகொலையின் தொடர்ச்சியாக இன்றும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தலைமையேற்க தவறி விட்டது.  அந்த தீர்மானத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளுடன் ஒரு நிறுவன ரீதியான அரசியல் நடவடிக்கைகளை வடமாகாண சபை எடுக்கவில்லை.

அதேவேளை, வடமாகாண முதலமைச்சர்  பதவியைத் தாண்டிய  கடமைகளை செய்யக்கூடயவராக நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தைத் தாண்டி கிழக்கு மாகாணத்திலும் அபிமானம் பெற்ற தலைவராக விக்னேஸ்வரன் திகழ்கிறார்.  தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பவராகவும் அதனூடாக மக்களை வசீகரிப்பவராகவும் அவர் இருக்கிறார்.எனவே தந்தை செல்வா போல முதல்வர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ஒன்று திரட்டக் கூடிய குறியீடாகத் திகழ்கிறார். அதனை அவர் தமிழ் மக்களை ஒன்று படுத்தப் பயன்படுத்த வேண்டும். இன்னொரு அணியை ஏற்படுத்திப் பிளவுகளை ஏற்படுத்தப் பயன் படுத்தக் கூடாது.

தமிழ் மக்கள் பேரவையை பரந்து பட்ட மக்கள் இயக்கமாக வளர்க்கப் போவதாக முதல்வர் கூறியுள்ளார். தனது தலைமையில் அதனைச் செய்வதே தமிழ் தேசத்துக்கு மேலும் அவர் செய்யக்கூடிய உன்னத மான பணியாகும். வடமாகாணம் தாண்டி கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் தமிழருக்கு கட்சி பேதத்தைத் தாண்டி தமது தலைமையை வழங்க வேண்டும். அவர் தனது செயற்பாடுகளை அடுத்த மேல் படிநிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவர் ஆரம்பித்த தமிழ் மக்கள் பேரவையை வலுவான பரந்து பட்ட மக்கள் இயக்கமாக  கட்ட வேண்டும். அந்த மக்கள் இயக்கத்தின் ஊடாக தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும்மக்களின் அபிலாசைகள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு உள்ளது என ஏற்கனவே கண்டுள்ளோம்.

முற்போக்கான உலகநாடுகளில் இளந்தலைவர்கள் தலைமைப் பதவிகளை ஏற்று அந்நாடுகளின் போக்கை புதிய திசைகளுக்கு திருப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.  கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்சின் இமானுவல் மக்றோன் போன்ற இளந்தலைவர்கள் துணிச்சலாக முடிவுகளை எடுக்கிறார்கள்.  அரசியல் ரீதியாக ஆபத்துக்கள் இருந்த போதும் சிரியாவிலிருந்து பெருந்தொகை அகதிகளைக் கனடாவில் குடியேற்றினார் ஜஸ்டின். சிரியாவில் அரசாங்கம் செய்யும் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா.வில் ரஷ்யா பங்கு பற்றாத ஒரு விசேட குழுவை உருவாக்கப் போவதாக கூறியுள்ளார் இமானுவல்.  இவ்வாறான துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய இளந்தலைவர்களே இன்று வடமாகாணத்துக்குத் தேவை. இளந்தலைவர்களே அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அடிக்கடி கோருவது போல “தமிழினத்தின் அரசியலை நவீனமயப்படுத்தும்” வல்லமை கொண்டவர்கள்.

2017 ஆனி மாத நிமிர்வு இதழில் தமிழ்த் தேசியத்தின் குறியீடென முதல்வர் விக்னேஸ்வரனை விழித்திருந்தோம்.  அதையே இப்பொழுதும் மீளவும் உரக்கவும் சொல்கிறோம்.  தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் திரட்டக் கூடிய குறியீட்டை கட்சி அரசியலுக்குள் மூழ்கடித்து விடக்கூடாது.

நிமிர்வின் பார்வை
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.