யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா




"செய் அல்லது செத்து மடி." யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில்
 பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது.  இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார்.

பாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த சமூகத்துக்கு தான் கற்றுக் கொண்ட விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தன்னைப் போல பல முயற்சியாளர்களையும் உருவாக்கி விடுவதிலும் அக்கறையுடன் இருக்கிறார். பாடசாலையில் உயர்தரப் படிப்பை முடித்துவிட்டு எலக்ரோனிக் எஞ்சினியரிங் படித்துள்ள இவர் இயந்திரங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருக்கிறார்.


இவரது பண்ணை அலுவலக கதவில் தொங்குகின்ற அந்த வாசகத்துக்கு ஏற்ப செயலிலும், சொல்லிலும் வேகமும் விவேகமும் தெரிகிறது. எந்த விடயத்தை எடுத்தாலும் அதனை திறம்பட அர்ப்பணிப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் பாலமுருகன் என இவரது பணியாளர்களே புகழாரம் சூட்டுகின்றனர். நஞ்சில்லா உணவை நோக்கிய பயணத்தை தான் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மூலம் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் பாலா. அந்த இலக்கை அடைவதற்காக உறுதியூடன் பயணித்தும் வருகின்றார்.


முழுக்க முழுக்க அவரது சொந்தப் பணத்தில் முறையான அனுமதிகளை எல்லாம் பெற்று தொடங்கப்பட்ட பண்ணைக்கு இன்று நெருக்கடியாக வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் உள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி.    இயற்கை வழி விவசாயத்துக்கு சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தடைக்கல்லாக இருப்பதாக பாலா முறையிடுகிறார். சில பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் “உற்பத்திகளை முடக்க வந்த அரசின் கூலிப்படைகள்" என கடுமையான விமர்சனத்தினையும் முன்வைக்கிறார்.


பறவை, மிருகக் கழிவுகளை தோட்டத்தில் கொட்டி செய்யப்படும் இயற்கை முறையிலான விவாசாயத்தை சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குப்பை விவசாயம் என கேலி செய்வதாகவும், குறித்த விவசாய செய்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதாகவும் இவர்களின் இத்தகைய செயலால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். தான் இவர்களின் அநீதியை எதிர்த்து போராடி வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

பப்பாசி செய்கையை வெற்றிகரமாக இயற்கை விவசாயம் மூலம் செய்து சாதித்திருக்கிறார் பாலா. பன்றிக்கழிவுகளை மட்டும் இட்டு ஒரு மரத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பப்பாசிக் காய்களைப் பறித்திருக்கிறார்.அதே போல் பன்றிக்கழிவுகளை மாத்திரம் இட்டு நட்ட நாட்டு மிளகாய் நல்ல விளைச்சலை கொடுத்திருக்கின்றது. அதனை விவசாய திணைக்கள அதிகாரிகளே பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

கோழிப்பண்ணையையும் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார். வடமாகாணத்தின் சிறந்த கோழிப்பண்ணையாளர் விருதும் வடமாகாண சபை ஊடாக இவருக்கு கிடைத்துள்ளது.

விவசாய ஆராய்ச்சிகளுக்கு என்றே வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை செலவழித்து வருகிறார். அதில் பல நல்ல முடிவுகளையும் பெற்றிருக்கிறார். அடுத்து வரும் வருடங்களில் பல பரீட்சார்த்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக கூறுகிறார்.

இதையெல்லாம் தாண்டி மாடு, ஆட்டுக்கு தேவையான தானியக் கலவை தீவனத்தை இயற்கை முறையில் பரீட்ச்சார்த்த முறையில் உற்பத்தி செய்து வருகிறார். அதற்கான இயந்திரங்களையும் இவரே வடிவமைத்துள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் இவரது மாட்டுத்தீவனத்தினை விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். சோளம், கடலைக் கோதுகள், எள்ளுப் பிண்ணாக்கு உள்ளிட்ட பல தானியங்களை குறித்த தீவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.   ஒரு மணித்தியாலத்துக்கு 500 இலிருந்து 700 கிலோ தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.

 8 பரப்பு நிலத்தில் தூறல் நீர்ப்பாசன கட்டமைப்பை ஏற்படுத்தி co-3 வகை புல்லை வளர்த்து அதில் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டேன். மாடு வளர்ப்பதற்கு முதல் புல்லு வளர்க்க வேண்டும். என்னால் ஒரு கிலோ புல்லை 2 ரூபாவுக்கு உற்பத்தி பண்ண முடியும். அதனை 10 ஏக்கரில் மேற்கொண்டால் குறைந்தது 100 மாடுகளை வளர்க்க முடியும் .

மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் இயந்திரம் இயங்குவதற்கு அண்ணளவாக மணித்தியாலத்துக்கு 100 ரூபாய்கள் செலவாகிறது. இதையே மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்  மூலம் செய்தால் 20 ரூபாவிற்குள் தான் செலவாகும். இங்கு பெரிதாக எந்த விவசாயியும் மின்சார மோட்டரைப் பாவிப்பதில்லை. விவசாயிகள் ஆராய்ச்சியில் இறங்கவேண்டிய நேரம் இது.

சுகாதாரப் பரிசோதகர்களுக்கு எது நல்லது? எது கூடாது? எது மக்களுக்கு அவசியமானது என்கிற விடயங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் மாட்டெரு இருக்கும், கோழி எரு இருக்கும், இலைதழைகள் இருக்கும். இவை எல்லாம் இருக்கும் எருவை மண்ணில் பரவி விட்டால் சூரிய ஒளிபட்டு மண்புழுக்கள் உருவாகி மண்ணை மிருதுவாக்கும். ஆனால் இந்த அதிகாரிகளோ குப்பைகளை வெளியில் போடாமல் மூடி விடச் சொல்கிறார்கள். அவர்களுக்கு முதலில் இயற்கை விவசாய முறைமையை சரியாக விளங்கப்படுத்த வேண்டிய தேவை சம்பந்தப்பட்ட துறைக்கு இருக்கிறது.


நுளம்பை உண்ணும் பூச்சியினங்கள் அழிக்கப்பட்டமையும் தான் நுளம்புப்பெருக்கம் அதிகரித்தமைக்கு ஒரு காரணம். அதீத இரசாயனப் பாவனைகளால் தும்பி போன்ற பூச்சியினங்கள் அழிந்து போயுள்ளன.     குளமும், குட்டையும் இருந்தால் அதற்குள் கப்பீஸ் ரக மீனை விட்டாலே போதும் அங்கு நுளம்புக் குடம்பிகளே உருவாகாது.   நான் அதனை நடைமுறை அனுபவத்தில் கண்டுள்ளேன். இங்கு பண்ணையில் ஒரு சிறிய குட்டையை உருவாக்கி அதில் பெரிய மீன்கள் வளர்த்தேன். அப்போது நுளம்புப் பெருக்கம் குறைவாக இருந்தது. எப்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கட்டளையிட்ட படி அதனை மூடினேனோ அன்றிலிருந்து நுளம்புப் பெருக்கம் அதிகரித்து விட்டது.

நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு விவாசாயிகளின் கைகளில் தான் உள்ளது.   விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதனை அதிகாரிகளும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயி ஒருவர் பொருளை தான் நினைத்த மாதிரி சந்தைப்படுத்த  முடியாது. அதற்கு பிரதேச சபைகள்> நகர சபைகள் தடையாக உள்ளன. விவசாயிகள் சில அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரலை உயர்த்தாவிட்டால் விவசாயம் எங்கள் பிரதேசத்தில் நிலைத்து நிற்காது.  இவ்வாறாக கூறி முடித்தார் பாலா.


இவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குள் குறித்து தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் அவர்களிடம் வினாவினோம். ஒரு சில சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு  இயற்கை விவசாயம், அசோலா வளர்ப்பு முறைகள் தொடர்பில் சரியான விளக்கங்களும் இல்லாமல் இருக்கலாம். இப்படியானவர்களுக்கு சரியான தெளிவூட்டல்களை செய்யும் கருத்தமர்வுகளை எதிர்காலத்தில் நிச்சயமாக சுகாதாரத் திணைக்களம் செய்யும். தோட்டங்களில் இயற்கை கழிவுகளை கொட்டிச் செய்யும் விவசாயத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. சீமெந்து தொட்டி கட்டி அதற்குள் இயற்கை (கோழி, பன்றி) கழிவுகளை விட வேண்டும்  என்கிற நிபந்தனையும் கிடையாது.

இதையும் தவிர சுகாதாரப் பிரிவினர் குடிசைக் கைத்தொழில்களையும் நசுக்குகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். குடிசைக் கைத்தொழில்கள் இடம்பெறும் வீடுகளில் நிலத்தில் மாபிள் பதிக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை. உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்தால் போதுமானது. எங்களுடைய உள்ளூர் உற்பத்திகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

எமது சுயபொருளாதாரத்தை வளப்படுத்தும் முதுகெலும்புகளான இப்படியான இளைஞர்களை தட்டிக் கொடுத்து முன்னேற்ற வேண்டியது எம் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இல்லாவிடின் நாளை அனைத்துக்கும் இன்னொருவரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது.

                                    தொடர்புக்கு: பாலமுருகன் - 0777 048 972

 துருவன் 
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்


1 comment:

  1. இயற்கை எப்போதுமே ஒரு மருந்து என்பது தான் உண்மை

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.