சிங்களமயமாகும் முல்லைத்தீவு
வடக்கு மகாணத்தில் உள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவுமாவட்டத்தில் திட்டமிட்டமுறையில் மிகவேகமான சிங்கள குடியேற்றங்கள், கடல்வள சுறண்டல்கள், படையினரின் நிலஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் என்பனவற்றால் அங்கு தமிழர்களின் இருப்பே எதிர்காலங்களில் கேள்விக்குள்ளாகியுள்ளது.
முல்லைத்தீவுமாவட்டத்தில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்கின்றநிலையில் இங்குநிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கைஅறுபதுஆயிரம். இதைபார்த்தால் இரண்டுபொதுமக்களுக்குஒரு இராணுவம் இருப்பதாகப் புலப்படுகிறது. எமதுநாட்டில் மொத்த இராணுவம் இரண்டு இலட்சத்துநாற்பத்து மூன்றாயிரம் உள்ளனர் என புள்ளிவிபரங்கள் மூலம் அறியலாம். அப்படிப் பார்த்தால் மொத்த இராணுவத்தில்25 சதவீதமானணவர் முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ளனர். இது இராணுவம் வசிக்கும் மாவட்டமா மக்கள் வசிக்கும் மாவட்டமா என்றசந்தேகம் எழுகின்றது.
இம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் ஒவ்வொருநாளையும் அச்சத்துடன் கழிக்கிறார்கள். மக்கள் கூடும் இடங்கள், பாடசாலை, சந்தைகள், பொது கூட்டங்கள், வீதிகள் எனஎல்லா இடங்களிலும் பாதுகாப்புபடையினரின் பிரசன்னம் காணப்படுகிறது. மக்களின் எல்லா செயற்பாடுகளிலும் இராணவத்தின் நிழல் படிந்திருக்கின்றவேளையில் தமிழ் மக்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும்? அவர்கள் தமது கருத்துக்களை எவ்வாறு வெளிப்படையாகத் தெரிவிக்கமுடியும்? இது இயல்புவாழ்க்கையில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்துஅதற்குள் இராணுவகாவலரண்கள், விளையாட்டு மைதானங்கள், பௌத்தவிகாரைகள், இராணுவ நினைவு சின்னங்கள், கட்டிடங்கள் என அமைத்து உல்லாசம் அனுபவிக்க தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம்? முல்லைத்தீவில் சிலகிராமங்களில் மக்கள் தொகை மிகக்குறைவு ஒருவீட்டிலிருந்து மற்றய வீடு நீண்ட தூரத்தில் இருக்கும். அதிக இராணுவபிரசன்னம் உள்ளதால் தமது ஒவ்வொருநாளையும் மிக பய உணர்வோடு கழிக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் சிங்களஆட்சியாளர்கள் முல்லைத்தீவை இலக்கு வைத்து பல்வேறு தந்திரவேலைகளை செய்துவருகிறார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. மகிந்த காலத்தில் நடந்த நிலஅபகரிப்பு நல்லாட்சி காலத்திலும் தொடர்கிறது. முல்லைமாவட்டத்தின் கொக்குளாய்இ கொக்குதொடுவாய்இ கருநாட்டான் கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2156 ஏக்கர் நிலம் மகாவலி எல் வலயம் என்றபெயரில் அபகரிக்கப்பட்டது. அதேபோன்று வெலிஓயா என்றபிரிவுடன் ஒட்டிசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட ஒதியமலை பிரதேசத்தின் தனிக்கல் என்ற கிராமமும் அபகரிக்கப்பட்டது. இவை ஒருவரும் இலகுவில் மறந்துவிட முடியாதசெயல்கள்.
இந்நில அபகரிப்புக்கள் இன்றுமட்டும் நடப்பவைஅல்ல. இது சுதந்திரம் அடைந்து குறுகிய காலத்திலிருந்தே சிங்களஆட்சியாளர்களால் அரங்கேற்றப்பட்டது. 1948 ஆம் ஆண்டு கல்லோய திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அன்றைய சிங்கள ஆட்சியாளரில் இருந்து இன்றைய சிங்களஆட்சியாளர்கள் வரை ஒரே நிலைபாட்டிலேயே இருக்கிறார்கள். சிங்களவரின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதி லேயே குறியாக இருக்கிறார்கள். இவ்வாறான செயல் ஒரு இனத்தை அடிமையாக்கி இன்னொரு இனம் எழுச்சி பெறுவது என்பதையே காட்டி நிற்கிறதது. பின் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்? இதுவும் ஒருவகையான இனவழிப்புசெயல் என்றே கருதலாம்.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்களமக்களுக்காக 'ஹிபுல் ஓயா' எனும் பெயரில் பாரிய நீர்பாசனதிட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் நடவடிக்கை எடுக்கப் படுகின்றது. 115 வது வடமாகாண சபை அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்த விடயங்கள் இவை. சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா நீர்பாசனத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இப்பகுதி தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களான மண்கிண்டிமலை, ஆமையான் குளம், முந்திரிகைகுளம், சிலோன் தியேட்டர், கென்பண்ணை, வெடிவைத்த கல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தநிலங்கள் ஆகியவை கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
யுத்தத்தில் தமிழ் மக்கள் உயிர் இழப்புக்களையும், பொருளாதார இழப்புக்களையும் கண்டனர். பலர் காணமல் ஆக்கப் பட்டனர்.அவர்களைத் தேடும் போராட்டம் முடிவில்லாமல் தொடர்கிறது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாது சிறைகளின் வாழ்கின்றனர். இந்த வேதனையையும் இழப்பையும் சந்தித்த மிகக்குறுகிய காலத்தில் இந் நில அபகரிப்பு நடைபெறுவது 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்ற செயல்'ஆகும்.
தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஒருபக்கம் அபகரிக்கப் பட்டுக் கொண்டு இருக்க இன்னொரு பக்கம் கடல் வளங்களும் சூறையாடப்படுகின்றன. இங்கு தொழில் செய்யும் தமிழர்களுக்கே கரைவலைப்பாடுகள் இல்லாதநிலையில் மகாவலி எல் வலயதிட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள கொக்குளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணி, நாயாறுஆகிய இடங்களில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மேலும் 15 சிங்களமீனவர்களுக்கு கரைவலைப்பாடுகளை வழங்க சிபார்சு செய்யுமாறு மகாவலி எல் வலயதிட்ட முகாமையாளர் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். ஏற்கனவே பேரளவான சிங்கள மீனவர்களுக்கு கரைவலைப்பாடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக சிங்களவர்களுக்கு மேலும் கரைவலைப்பாடுகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கரைவலைப்பாடுகள் தொடர்ச்சியாக வழங்கப்படுமானால் தமிழர்களின் வாழ்வாதாரமும், பூர்வீக நிலங்களும் பறிபோய் எமது சமூகம் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
தமிழர்களின் நிலங்கள் பலவழிகளில் சுரண்டப்படுகிறது. இதை எவரும் நிராகரிக்க முடியாது. வடக்கு கிழக்கின் பல பகுதிகள் விழுங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இதற்கு முல்லைத்தீவும் மிச்சமில்லை. யுத்தம் முடிந்து குறுகிய காலத்தில் இம்மண்ணில் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் மிகவும் கச்சிதமாக இடம் பெறுகின்றன. இவற்றை எமது தமிழ் அரசியல்வாதிகள் கண்டும் காணமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியவிடயம்.
ஒரு வருடத்திற்கு மேலாக கேப்பாபுலவு மக்கள் மழைஇ வெயில்இ பனி எனப்பாராது சிறுவர் முதல் வயது போனவர்கள் வரை தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காகப் போராடி வருகிறார்கள். ஒரு நாட்டில் உள்ள படையினர் தமது நாட்டு மக்களுடைய காணிகளை அபகரித்து அவற்றில் மக்கள் வாழ விடாமல் வைத்திருப்பது எந்தவிதத்தில் நீதி ஆகும்?
கேப்பாபுலவில் 181 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசம் உள்ளன. இவை 104 குடும்பங்களுக்குரிய பூர்வீகவநிலங்கள். இப்பகுதிக்குள் மக்களுக்குச் சொந்தமான பாடசாலை, முன்பள்ளி, இந்துஆலயம், கிறிஸ்தவ தேவாலயம் என்பன உள்ளன. இந்நிலங்களை விடுவிப்பதற்கு பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. மக்கள் கவனயீர்ப்பு பேரணிகளை முன்னெடுக்கும் நேரங்களில் பொலிஸார், மற்றும் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றன. ஒரு பக்கம் கேப்பாபுலவு மக்ககள் நிலத்துக்காகப் போராடிக் கொண்டு இருக்கையில் இன்னொருபக்கம் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. வட்டுபாகலில் கோத்தபாய கடற்படை முகாமுக்காக இரு தடவைகள் 670 ஏக்கர் காணிகள் சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் மக்களால் முறியடிக்கப்பட்டன. ஒருபக்கம் நிலத்தை விடுவிப்பதாக கூறிக் கொண்டு இன்னொருபக்கம் நில அபகரிப்புக்கள் திட்டமிட்டமுறையில் தந்திரமாக இடம் பெறுகின்றன. சர்வதேசத்தின் முன் அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை விடுவிப்பதாக கூறிக் கொண்டு அதேவேளை காணி அபகரிப்புகளையும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இதை வைத்து பார்த்தால் எதிர்காலங்களில் வடக்குகிழக்கில் தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைக்கும் செயல் அரேங்கேறுவதைத் தெளிவாகவே காணலாம். இங்கு வாழும் தமிழர்கள் கல்வி, மொழி, பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம், நிலம் என்பவற்றை தொலைத்து நிர்கதியான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். போதைக்கும், வாள் வெட்டுக்கும் இளைஞர்கள் அடிமையாகி தமது எதிர்காலத்தையே குழி தோண்டிபுதைக்கிறார்கள். இதுவே சிங்களஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும். அவர்களின் திட்டமிட்டசெயல் அழகாகநடைபெறுகிறது. எமது இனத்தின் பண்பாடு, வரலாறு, கலைகள், பாரம்பரியம், நிலங்கள், தனித்துவம் என்பவற்றை தற்போதைய இளைஞர்கள் பாதுகாக்கத் தவறினால் எதிர்காலம் எவ்வாறு செல்லும் என சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
பானு
நிமிர்வு சித்திரை 2018 இதழ்
Post a Comment